சென்னை பல்கலை : இந்துத்துவ பாசிஸ்டுகளோடு APSC மாணவர்கள் நேருக்கு நேர் !

சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் அடிப்படை வசதி கேட்டு போராடுவதையே விரும்பாத பல்கலை நிர்வாகம், யாருடைய விருப்பத்தை நிறைவேற்ற இந்துமதவெறி கும்பலின் போராட்டத்தை அனுமதித்தது?

“திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” என்ற தலைப்பில் ஆய்வாளர் ஆ.பத்மாவதி எழுதிய நூலை பதிப்பித்ததற்காக சென்னைப் பல்கலைக்கழக சைவசித்தாந்த துறைத் தலைவர் பேராசிரியர் நல்லூர் சரவணனை, எச்.ராஜா உள்ளிட்ட இந்துத்துவ பாசிஸ்டுகள் மிரட்டியும் அச்சுறுத்தியும் வருகின்றனர். இந்த நிலையில் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கே வந்து முற்றுகையிட முயன்றனர்.

நேற்று மதியம் 2:30 மணிக்கு சிவனடியார்கள் போர்வையில் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார கும்பலைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டவர்கள் பல்கலைகழக வளாகத்திற்குள் நுழைய முற்பட்டனர். அவர்கள் நுழைவதற்கு வசதியாக பல்கலைக்கழக நிர்வாகமும் கேட்டை திறந்துவிட்டது. உள்ளே நுழைந்தவர்கள் சங்குஊதி போராட்டம் நடத்த முயன்றனர்.

மதவெறி கும்பல் வருவதை அறிந்த அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்ட மாணவர்கள் மற்றும் பல்கலைகழக மாணவர்கள் நுழைவு வாயிலிலே அவர்களை தடுத்து நிறுத்தி ”மதவெறி கும்பலே வெளியேறு” என்று முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். மதவெறி கும்பலை தடுக்க வேண்டிய காவல்துறையும் பல்கலைக்கழக நிர்வாகமும் மாணவர்களிடம் எகிறியது.

மாணவர்களின் உறுதியான எதிர்ப்பின் காரணமாக இந்துத்துவ கும்பல் பின்வாங்கியது, உடனடியாக சுதாரித்துக்கொண்ட காவல்துறை மாணவர்களின் எதிர்ப்பையும் மீறி, மதவெறி கும்பலில் நான்கு பேரை தேர்வுசெய்து துணைவேந்தரை சந்திக்க அழைத்துச் சென்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இதன் அடுத்தகட்டமாக மாணவர்கள் துணைவேந்தர் இருக்கும் நூற்றாண்டு கட்டிடத்தின் வாயில் கேட்டை மூடி, இந்துத்துவ பாசிஸ்டுகளை நுழையவிடாமல் போராட்டம் நடத்தினர் மாணவர்கள். இனி இந்துத்துவ கும்பல் வெளியேறுவதை தவிர வேறுவழியில்லை என்றான நிலையில், மதிப்பிற்குரிய பல்கலைக்கழக பதிவாளர் அவர்களே கீழே இறங்கி வந்து பாசிஸ்டுகளிடம் மனுவைப் பெற்றுக் கொண்டார்.

மனு கொடுத்த பின்னரும் போராடுவதற்காக காத்திருந்த மதவெறி கும்பல், மாணவர்களின் பின்வாங்காத போராட்டத்தைக் கண்டு அஞ்சி வெளியேறியது. சங்கு ஊதி வந்த இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கு, மாணவர்களின் போராட்டம் சங்காக அமைந்தது.

இந்த போராட்டத்தின் பின்னணியில் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் சில கேள்விகளையும் சந்தேககங்களையும் முன்வைக்க விரும்புகிறது.

1. மாணவர்கள் அடிப்படை வசதிகள் கேட்டு போராடினால் உடனடியாக தடுத்து நிறுத்தும் பல்கலைகழக நிர்வாகம், பேரா.சரவணணுக்கு எதிராக பல்கலைக்கழகத்தை முற்றுகையிடவந்த இந்து மதவெறி கும்பலுக்கு யார் உத்தரவின் பேரில் கதவை திறந்துவிட்டது…?

2. நாப்கின் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சனைகளுக்காக அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்ட மாணவர்கள் போராடியபோது, பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து கைது செய்து, போராடிய மாணவிகள் மீது ”நைட்டு கேஸ்ல வழக்கு பதிவேன்” என்று மிரட்டும் D6-அண்ணா சதுக்க காவல்துறையினர், பேராசிரியரை மிரட்டவந்த மதவெறி கும்பலை கைது செய்யாதது ஏன்..?

3. போராட்டத்திற்கிடையே மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட
D6-காவல்நிலைய ஆய்வாளர் சபாபதி, “அந்த ஆளு ஏன் மதத்தை பற்றி தப்பா எழுதனும்? அவங்க போராடுறது சரிதான்!” என்று இந்துத்துவ பாசிச கும்பலுக்கு வக்காலத்து வாங்கியதன் பின்னணி என்ன..?

4. பலமுறை அடிப்படைவசதி உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக பதிவாளரிடம் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்ட மாணவர்கள் கடிதம் அளித்தும் அவர்களை அழைத்து பேசாத நிலையில், முகம் தெரியாத மதவெறி கும்பலுக்காக பதிவாளர் கீழே இறங்கிவந்து மனுவைப் பெற்றதன் காரணம் என்ன..?

5. மாணவர்கள் அடிப்படை வசதி கேட்டு போராடுவதையே விரும்பாத பல்கலைக்கழக நிர்வாகம், யாருடைய விருப்பத்தை நிறைவேற்ற இந்துமதவெறி கும்பலின் போராட்டத்தை அனுமதித்தது..?

6. சென்னைப் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தன்றே, இந்துமதவெறி கும்பல் முற்றுகையிட வந்ததன் சூட்சமம் என்ன..?

இவண்:
அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் (APSC_UNOM),
சென்னைப் பல்கலைக்கழகம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க