Thursday, October 21, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க பார்ப்பன சிவச்சாரியர்களுக்கு ஆப்பு வைத்த போராட்டம்!

பார்ப்பன சிவச்சாரியர்களுக்கு ஆப்பு வைத்த போராட்டம்!

-

டலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருதகிரீஸ்வரர் கோவிலில் கடந்த 5 வருடங்களாக ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட விழாக்காலத்தின் போதும், தினசரி இரவு 8.30 மணி அர்த்த ஜாம பூஜையின் போதும் பழம்பெரும் இசைக்கருவிகளான உடன், கொம்பு, சங்கு, நெடுந்தாரை, எக்காலம், உடுக்கை  போன்ற கைலாய இசைக்கருவிகளை வாசித்து சிறுவர்கள் இளைஞர்கள் ஆன சிவனடியார்கள் இறைவனை வழிபட்டு வந்தனர்.

இந்த இசையின் காரணமாக இரவில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. சாதாரண உழைக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இது அர்ச்சகர்களான  கோயில் சிவாச்சாரியார்கள் கண்ணை உறுத்தியது. ஊர் பெரிய மனிதர்கள் சிலரின்  மூலம் கோயில் நிர்வாக அதிகாரியிடம்  அதிக சத்தமாக இருப்பதால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று கொடுத்த  புகாரின் மூலம் மேற்படி சிவனடியார்கள் இசைக்கருவிகளை வாசிக்க கூடாது என 13.07.2011 தடை விதிக்க பட்டது.

நிர்வாக அதிகாரியின் உத்தரவுக்கு எதிராக சிவனடியார்கள் விழுப்புரம் இணை ஆணையரிடம் முறையீடு செய்தனர். ஆறு மாதமாக சிவனடியார்கள் அலைந்தது தவிர  எந்த பலனும் ஏற்படவில்லை. மனம் தளராத சிவனடியார்கள் இறுதியில் மனித உரிமை பாதுகாப்பு மையத்திடம் வந்து சேர்ந்தனர். ஆறு மாதமாக கோயிலில் இசைக்காமல் சிவனடியார்கள் சோர்வுற்றுள்ளனர். மனுவைத் தூக்கிக் கொண்டு இனிமேலும் எங்களால் அலைய முடியாது. ஆருத்ரா தரிசனம் அன்று (08.01.2012) சாமி புறப்படும் முன்பு நாங்கள் வாசிக்க வேண்டும். காவல் துறை கைது செய்தாலும் பரவாயில்லை. நாங்கள் இறை தொண்டிற்காக சிறை செல்லவும் தயார்.  மனித உரிமை பாதுகாப்பு மையம் எங்களுக்கு பாதுகாப்பும் ஆதரவும் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஆதரவு கொடுத்தோம்.

நேற்று ஆருத்ரா தரிசனத்தின் போது சிவாச்சாரியார்கள் சாமி பல்லக்கை தூக்கி புறப்பட்டனர். சிவனடியார்கள்  இசைக்ருவிகளை வாசிக்க துவங்கியவுடன் ஆத்திமடைந்த சிவாச்சாரியார்கள் நடராஜர் சாமியை கோவில் உட்பிரகாரத்தில் செல்லும் வழியிலேயே அப்படியே கீழே இறக்கி வைத்து விட்டு, சிவனடியார்கள் வாசிப்பதை நிறுத்தினால்தான் சாமி புறப்பாடு என கூறி தரையில் அமர்ந்து கொண்டனர். சிவனடியார்களும் பல்லக்கு புறப்பட்டால் வாசிப்போம் என உறுதியாக நின்றனர்.

போலீசார், கோவில் நிர்வாக ஊழியர்கள், சிவாச்சாரியார்களுக்கு ஆதரவான ஜால்ராக்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் சிவனடியார்கள் பின்வாங்காமல் உறுதியாக இருந்தனர். நின்றிருந்த பொதுமக்கள் சிவனடியார்கள் வாசிக்கலாம் எனவும் பிரச்சனை வேண்டாம் சாமிக்கு வழிவிடுங்கள் எனவும் இரண்டாக பிரிந்தனர். பிரித்தது மனித உரிமை பாதுகாப்பு மையம். சுமார் இரண்டு மணி நேரம் நடராஜர் என்ன செய்வது என்று தெரியாமல் சிவாச்சாரியார்களுக்கு பின்பு பல்லக்கிலே காத்திருந்தார்.

அ.தி.மு.க நகர செயலாளர்கள் பா.ம.க கவுன்சிலர், ஒயின்ஷாப் ஓனர் ஆகியோர் சிவனடியார்களை பலவந்தமாக அப்புறப்படுத்த முயன்ற போது மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் புஷ்பதேவன், செந்தில், காசி விசுவநாதன், மற்றும் நிர்வாகிகள்  தடுத்தனர்.  வேடிக்கை பார்க்கும்  போலீசாரிடம் வாக்கு வாதம் செய்தனர். நிருபர்கள் புகைப்படம் எடுக்க முயற்சித்ததால் கைகலப்பு கட்டுப்பாட்டோடு நின்றது. திராவிட கழக நகர செயலாளர் இளந்திரையன் ஆகியோர் வந்தவேலை முடிந்ததா என அ.தி.மு.க வை கண்டித்தனர். சிவனடியார்கள் இசைக்கருவிகளை வாசிக்கவும் தங்களை பலவந்தமாக அப்புறப்படுத்திய அ.தி.மு.வினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெடுஞ்சாண்கிடையாக படுத்து போராட்டம் நடத்தினர். இச்சூழலில்தான் பல்லக்கு புறப்பட்டு சென்றது.

மனித உரிமை பாதுகாப்பு மையம், காவல் துறை அதிகாரியிடம் இசைக்கருவிகளின் மூலம் இறைவனை வழிபட யாருடைய அனுமதியும் தேவையில்லை. அதற்கு யாரும் தடையும் விதிக்க முடியாது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இதே கருவிகள் வாசிக்கப்படுகிறது அதற்கு அரசு சம்பளமும் கொடுக்கிறது. அதுபோல் சிதம்பரம் நடராஜர் கோவிலிலும் வாசிக்கப்படுகிறது. அங்கெல்லாம் பொதுமக்களுக்கு ஏற்படாத இடையூறு விருத்தாசலம் கோவிலில் மட்டும்  இடையூறு என்று நிர்வாக அதிகாரியின் உத்தரவு ஒருதலைபட்சமானது உள்நோக்கம் உடையது. சிவனடியார்கள் செய்வது தவறு என்றால் காவல் துறை கைது செய்யட்டும். அ.தி.மு.க வினர் தலையீடை அனுமதிக்க முடியாது  என வாதிட்டனர்.

அருகிலிருந்த சிவாச்சாரியார்கள்  இந்த கோயிலின் ஆகமபடி இந்த இசைகருவிகள் வாசிக்க கூடாது என வாதிட்டனர். ஆறு வருடங்களாக தடுக்காத ஆகமம் இன்று ஏன் தடுக்கிறது. நீங்கள் ஆகமத்தை மீறிவிட்டார்கள் என  புகார் கொடுங்கள் அதையம் பார்த்து விடுவோம் என வழக்கறிஞர்கள் பேசினர். காவல் துறையினரும், கோயில் நிர்வாகிகளும், சிவாச்சாரியார்களும் ஊர் முக்கியஸ்தர்கள் சிலரும், செய்வதறியாது நின்றனர். விழித்துக் கொண்ட காவல் துறை சிவனடியார்கள் பிரச்சனையை சுமுகமாக தீர்க்க உதவும் படி வழக்கறிஞர்களை கேட்டுக் கொண்டது. இசைக்கருவிகளுடன் சிவனடியார்களின் உள்ளிருப்பு போராட்டம் மனித உரிமை பாதுபாப்பு மையத்தின் ஆதரவுடன் இரவு 8.30 மணி வரை தொடர்ந்தது.

விருத்தாசலம் நகர் மன்ற தலைவர் அ.தி.மு.க வை சேர்ந்த ஆர்.டி.அரங்கநாதன் கோயில் நிர்வாகிகள், சிவனடியார்கள், என பல தரப்பில் பேசி இன்றைக்கு  வாசிக்க வேண்டாம்,  நாளை கோட்டாச்சியர் தலமையில் அமைதி பேச்சு வார்த்தை மூலம் முடிவு செய்வோம். மீறி இசைத்தால் கோயில் நிர்வாகம் எதிராக போகும் என எச்சரித்தார். அவர் ஒரு கோயிலுக்கு சொந்தக்காரர். அதோடு கரகாட்டம் ஆடும் பூசாரியும் ஆவார்.  சிவனடியார்களோ சிறுவர்களாக இருந்தாலும் இசைக்காமல் இங்கிருந்து போகமாட்டோம் என உறுதியுடன் வாசித்த பிறகுதான் கோயில் சாத்தப்பட்டது.

சிவனடியார்கள் மனித உரிமை பாதுகாப்பு மையம் இல்லையென்றால் எங்களை இன்று தூக்கி வெளியே போட்டிருப்பார்கள் என மனம் நெகிழ்ந்தனர். போராட்ட செய்தி கேள்விபட்டு அருகாமை ஊரில் உள்ள சிவனடியார்கள் 50 க்கும் மேற்பட்டோர் நேற்று  இரவு பூஜைக்கு வந்து சேர்ந்தனர். இறைவனை வழிபடும் உரிமையை போராடி பெற்ற மகிழ்ச்சியை அனைத்து சிவனடியார்கள் முகத்திலும் பார்க்க முடிந்தது. தொடந்து விருத்தாசலம் கோவிலில் இசை்கருவிகளை வாசிக்கும் உரிமையை நிலைநிறுத்திட  போராடும் சிவனடியார்கள் முதியவர்கள் அல்ல, இளைஞர்கள். எனவே விரைவிலேயே இந்தப் போராட்டம் வெற்றிபெறும்.

இந்த இசைக்கருவிகளை வாசிப்பதில் தலித், மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினர் உள்ளனர். இவர்களையும், இவர்களது இசைக்கருவிகளையும் பார்ப்பன சிவாச்சாரியர்கள் இழிவாகவும், மட்டமாகவும் கருதுவதில் வியப்பில்லை. ஏதாவது ஒரு சாக்கினைச் சொல்லி தடுத்து விடலாம், நடப்பது மயிலாப்பூர் மாமியின் ஆட்சி என்று அவர்கள் நினைக்க அது போலவே மாமியின் அடியாட்படையான அ.தி.மு.கவும் உதவிக்கு வந்தது. ஆனால் இளைஞர்கள் உறுதியாக இருக்கவே அந்த உறுதிக்குப் பின்னால் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் அரணாக இருக்கவே பார்ப்பன சூழ்ச்சி பலிக்கவில்லை.

ஆனால் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இந்த ஆத்திகர்கள் நாத்திகர்களின் உதவியை ஏன் நாடுகிறார்கள் என்பதிலிருந்தே இந்து மதம் என்பது பார்ப்பன ஆதிக்க சாதியினரது மதம் என்பதையும், இதே உதவியை ஆர்.எஸ்.எஸ் இடம் கேட்டால் கிடைத்திருக்காது என்பதையும் இங்கே பொருத்திப் பார்க்க வேண்டும்.

அந்த வகையில் ஒடுக்கும் இந்துக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் என்றால் ஒடுக்கப்படுபம் ‘இந்துக்களுக்கு’ நாம்தான் பாதுகாப்பு!

—————————-

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

– மனித உரிமைப் பாதுகாப்பு மையம், விருத்தாச்சலம்