சென்னை ஐஐடி அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான முனைவர் ரமேஷ்-க்கு எதிரான நடவடிக்கைகளில், மோடி அரசின் உளவுத்துறை ஈடுப்பட்டுவருகிறது. முனைவர் ரமேஷ் அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது விரிவுரையாளராக (ஒப்பந்த அடிப்படையில்) பணியாற்றி வருகிறார். அவர் தொடர்பான விவரங்களைக் கொடுக்குமாறு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் உளவுத்துறை ஈடுபட்டு வருகிறது.

அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தின் மீதான தடையை எதிர்த்து 2015-ம் ஆண்டு தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்றன

பேராசிரியர் ஆனந்த் தெல்தும்ப்டே மீது UAPA சட்டத்தின் கீழ் பா.ஜ.க மோடி அரசு போட்டிருக்கும் பீமா கொரெகான் பொய் வழக்கில் சென்னை ஐஐடி APSC-யையும் சேர்ப்பதற்கு மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சியின் பகுதியே இந்த நடவடிக்கை. மோடி அரசு ஆட்சிக்கு வந்த உடனேயே சென்னை ஐஐடி-யில் இயங்கி வந்த APSC-க்கு ஐஐடி அங்கீகாரம் அளிக்க மறுத்ததையும் அதையொட்டி நாடு தழுவிய அளவில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக மோடி அரசு பின்வாங்கியதையும் அனைவரும் அறிவோம்.

இப்போது ஐஐடி APSC-க்கு நிதி அளித்து தொடங்கி வைத்ததாக ஆனந்த் தெல்தும்ப்டே மீது மகாராஷ்டிரா அரசு குற்றம் சாற்றியுள்ளது. இது அப்பட்டமான பொய். நாடு முழுவதும் உள்ள அம்பேத்கர் மற்றும் பெரியார் பெயர் கொண்ட அமைப்புகள் மீது தாக்குதல் தொடுப்பதற்கான முகாந்திரத்தை மோடி அரசு உருவாக்குகிறது என்றே நாங்கள் சந்தேகிக்கிறோம். அண்மையில் சென்னை பல்கலைக்கழகத்தில் இயங்கும் APSC-யில் செயல் வீரரான மாணவி ஒருவரை விசாரணை என்ற பெயரில் இரவு நேரத்தில் அவரது சொந்த கிராமத்திற்கு சென்று உளவுத்துறை அச்சுறுத்தியிருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து முற்போக்கு சக்திகளை வெளியேற்றி விட்டு அனைத்தையும் ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக மாற்றும் முயற்சியே இது. ஒரு புறம் அம்பேத்கரின் பெயரைச் சொல்லி தலித் மக்களை ஏமாற்றிக்கொண்டே மறுபுறம் அம்பேத்கரின் லட்சியத்தை அடைய போராடுகின்ற அனைவரையும் ஒடுக்கும் மோடி அரசின் இந்த சட்ட விரோதமான நடவடிக்கைகளை அனைவரும் கண்டிக்க வேண்டுமெனக் கோருகிறோம். அமைதி காப்பதற்கோ அலட்சியமாக இருப்பதற்கோ இது நேரம் இல்லை. வாயிற்படியில் நிற்கிறார்கள் பாசிஸ்ட்கள். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் எதிர்ப்புக் குரலை ஓங்கி ஒலிக்க வேண்டுமெனக் கோருகிறோம்.

தகவல் :
அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம்
ஐஐடி, சென்னை
தொடர்புக்கு : 94428 25539

இந்த அறிக்கையை பிடிஎஃப் வடிவில் டவுண்லோடு : ஆங்கிலம், தமிழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க