“அறிவிக்கப்படாத அவசர நிலை – அச்சமின்றி ஓரடி முன்னால்…” (ONE FEARLESS STEP AGAINST THE UNDECLARED EMERGENCY…) என்ற தலைப்பின் கீழ்,

  • “பீமா கொரேகான் பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட உரிமை செயல்பாட்டாளர்களை விடுதலை செய்”
  • “ஐ.ஐ.எம். பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டேவை கைது செய்யாதே”
  • “பாசிச ஊஃபா (UAPA) சட்டத்தை நீக்கு!” – ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் (PRPC) சார்பில் மதுரையில் பிப்.8,2019 அன்று வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டமும், கண்டனக் கூட்டமும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேரா. கிருஷ்ணசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். பேராசிரியர் முரளி தலைமை வகித்தார். அவர் தனது தலைமை உரையின் தொடக்கத்தில் தொழிற்சங்கவாதியும், வழக்கறிஞரும், பியூசிஎல் அமைப்பின் தேசியச் செயலருமான சுதா பரத்வாஜின் மகளின் கடிதத்தை படித்துக் காண்பித்தார். மேலும் அவர் பேசுகையில், மனித உரிமை செயல்பாட்டாளர்களின் கைது, ஊபா சட்டத்தில் சிறை ஆகியவை எல்லாம் எளிதில் கடந்து போகக் கூடியவை அல்ல. இந்தியா முழுவதும் போராடுகிறார்கள், நாமும் நமது குரலை எழுப்பினால்தான் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டேவையாவது காப்பாற்ற முடியும். எனவே தொடர்ந்து போராடுவோம் என்றார்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

அடுத்து உரையாற்றிய எழுத்தாளர் லிபி ஆரண்யா, மோடி ஆட்சியையும், ஹிட்லர் ஆட்சியையும் ஒப்பிட்டு விளக்கினார். பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே அவர்களின் சமூகப் பங்களிப்பு, குறிப்பாக ஏகாதிபத்தியம் குறித்தும், தலித், கம்யூனிச இயக்கங்களின் நிறை – குறைகள், இந்தியாவில் சமூக மாற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும்? ஆகிய அனைத்து குறித்தும் தெளிவான நிலைப்பாட்டை ஆனந்த் முன்வைத்துள்ளார். ஆனந்தின் இந்த அறிவுப்பூர்வமான பங்களிப்பு அரசை அச்சப்பட வைக்கிறது. அதேபோல் மக்களை ஆர். எஸ். எஸ். உணர்வுத்தளத்தில் இருந்து  திரட்டுகிறது. முற்போக்கு இயக்கங்கள் அறிவுத் தளத்தில் இருந்து திரட்டுகிறோம். மக்களை அவர்கள் நன்கு உள்வாங்கியுள்ளார்கள். அதையும் நாம் புரிந்து செயலாற்ற வேண்டும். மத அடிப்படைவாதத்திற்கு எதிராக நாம் அனைவரும், அனைத்து தலித், கம்யூனிச, பெரியாரிய இயக்கங்களும் இணைய வேண்டும்” என்றார்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

இறுதியாக உரையாற்றிய வழக்கறிஞர் வாஞ்சி நாதன், இடதுசாரி அறிவுஜீவிகள், ஜனநாயகவாதிகள், மனித உரிமை செயல்பாட்டாளர்களை மோடி அரசு கைது செய்வதற்கு மிகப்பெரிய சதிப் பின்னணி உண்டு. கடந்த அக்டோபர் 2015-ல் ராய்ப்பூரில் கூடிய ஆர். எஸ். எஸ் உள்ளிட்ட 35 இந்துத்துவா அமைப்புகள், தேசியம் – எதிர் – தேச விரோதம் என்ற கருத்தாக்கத்தை முன் வைத்து மோடி – பாஜகவை எதிர்ப்பவர்களை ஒடுக்க முடிவெடுத்தன. 2015-ல் டெல்லி தேர்தலில் தோற்றபின் எடுக்கப்பட்ட முடிவு  இது.

இந்தக் கருத்தாக்கம் முதலில் பிப்ரவரி 2016-ல் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலையில் அமல்படுத்தப்பட்டது. மாணவர் போராட்டத்தில் ஏபிவிபி அமைப்பின் மாணவர்களை வைத்து பாகிஸ்தான்,காஷ்மீர் விடுதலைக்கு ஆதரவாக கோசம் எழுப்ப வைத்து கண்ணையா குமார் உள்ளிட்டவர்கள் தேச விரோதிகள் எனப் பிரச்சாரம் செய்து சிறையில் அடைத்தனர். கர்நாடகாவில் திப்பு சுல்தான் விழாவில் கலவரம் செய்தனர். பசுப் பாதுகாப்பு என கொலைகள் செய்தனர். இந்துத்துவத்தை உறுதியாய் எதிர்த்தவர்களை சனாதன் சன்ஸ்தா மூலம் கொலை செய்தனர்.

இவர்களின் நோக்கம் நாம் மோடி அரசின் தோல்விகள் குறித்து பேசக்கூடாது என்பதோடு, மக்களுக்கு ஆதரவான அறிவுத்துறையினர் இருக்கவே கூடாது என்பதும்தான். ஹிட்லரும் இதைத்தான் செய்தான். தொடர்ச்சியாகப் பிரச்சனைகள் செய்து நம்மை களைப்படையச் செய்யும் உத்திகளைப் பயன்படுத்துகிறார்கள். நாம் சோர்ந்து விடக்கூடாது. அரசியலமைப்பு நிறுவனங்களே மோடியிடம் அஞ்சுகின்றன. பெரும்பான்மை சமூக நிலைப்பாடுகளுக்கு அரசியலமைப்பு இணங்கிச் செல்ல வேண்டும் என மிரட்டுகிறார்கள். அதுதான் சபரிமலை வன்முறை. எனவே இதனை எதிர்கொள்ள மக்கள், சிவில் சமூகப் போராட்டமே தீர்வு. நாம் மோடி-ஆர். எஸ். எஸ் கும்பலின் பயங்கரவாதத்தையும், அவர்கள்தான் மதரீதியாக நாட்டைப் பிளக்கும் பிரிவினைவாதிகள் என்பதையும் பிரச்சாரம் செய்ய வேண்டும். அவர்களை எதிர்வினைக்குத் தள்ள வேண்டும்” என்றார்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நிகழ்வின் இறுதியில் பேராசிரியர் சீனிவாசன், பேராசிரியர் ஆனந்த் கைதுக்கு பல்கலை, கல்லூரிப் பேராசிரியர்கள் குரல் எழுப்பாதது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி நன்றி சொன்னார்.

தகவல்: மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை

1 மறுமொழி

  1. ////ஏபிவிபி அமைப்பின் மாணவர்களை வைத்து பாகிஸ்தான்,காஷ்மீர் விடுதலைக்கு ஆதரவாக கோசம் எழுப்ப வைத்து ///// இதுக்கு ஏன் ஏபிவிபி அமைப்பு கோஷம் எழுப்ப வேண்டும் ??? உங்களை போன்ற இடதுசாரி (மக்கள்விரோத தேசவிரோத) அமைப்புகளின் வலைத்தங்கள் எல்லாவற்றிலுமே பாக்கிஸ்தான் ஆதரவு, காஷ்மீர் பிரிவினைக்கு ஆதரவாக பல கட்டுரைகள் முழக்கங்கள் உள்ளதே… அதற்கு எல்லாம் என்ன சொல்ல போகிறீர்கள் ???? உங்களின் இந்த ஈன செயல்களை ஏபிவிபி முழக்கமிட்டு தானா சதி செய்ய வேண்டும் ?

    இடதுசாரிகளின் தேசவிரோத கொண்டை மறைக்க முடியாத அளவுக்கு பெரிதாக உள்ளது…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க