குஜராத்தில் வதோத்ரா முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு உட்பட்ட ஹர்ணி என்ற இடத்தில் முதலமைச்சர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 462 வீடுகள் அடுக்குமாடி கட்டடங்களாக கட்டப்பட்டுள்ளது.
அவை அனைத்துமே குறைந்த வருவாய் பிரிவினருக்காக (Low income group) மானிய விலையில் அரசு கட்டிக்கொடுத்துள்ள வீடுகள்.
இதில் 461 வீடுகள் இந்துக்களுக்கும் ஒரு வீடு மட்டும் கடைநிலை அரசு ஊழியரான முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த விதவை பெண் ஒருவருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளாக இன்று வரையிலும் அந்த முஸ்லிம் பெண் தனது வீட்டில் குடியேற முடியவில்லை. மோட்நாத் குடியிருப்பு என்றழைக்கப்படும் அந்த குடியிருப்பில் உள்ள இந்து மத வெறியர்கள் திட்டமிட்டு அந்த முஸ்லிம் பெண் குடும்பத்தை கொலை மிரட்டலின் மூலம் குடியேற முடியாமல் தடுத்து வைத்துள்ளனர்.
வீட்டுக்கான விலையையும் கொடுத்துவிட்டு குடியிருப்புக்கான பராமரிப்பு செலவு என்று மொத்த தொகையாக ₹50 ஆயிரமும் செலுத்தி விட்டு வீட்டில் குடியேற முடியாத நிலையில் மதவெறி பாசிசக் கும்பலுக்கு எதிராக அரசின் பல தளங்களில் புகார் செய்துள்ளார். இதை கண்டு ஆத்திரமுற்ற இந்து மத வெறியர்கள் மோட்நாத் குடியிருப்போர் கூட்டுறவு சங்கம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு அந்த முஸ்லிம் பெண்ணுக்கான வீடு ஒதுக்கீட்டை சட்டபூர்வமாகவே ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றனர்.
1991 ஆம் ஆண்டே கலவரப் பகுதிகள் தடுப்புச் சட்டம் என்ற ஒரு சட்டம் போடப்பட்டுள்ளது. அகமதாபாத், வதோத்ரா, ராஜ்கோட், பரூச், ஆனந்த், கோத்ரா, பவா நகர் போன்ற பல மாவட்டங்களில் பதற்ற பகுதிகள் என்று அடையாளம் காணப்பட்ட இடத்திலெல்லாம் இந்த சிறப்புச் சட்டம் அமலில் உள்ளது. அந்த சட்டம் இந்த வதோத்ராவில் உள்ள மோட்நாத் குடியிருப்பு பகுதிக்கும் பொருந்தும்.
அதன்படி சம்மந்தப்பட்ட பகுதிகளில் மாற்று மதத்தினருக்கு சொத்துகள் வாங்கவோ விற்கவோ செய்யும்போது மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன்தான் நடைபெற வேண்டும் என்று உள்ளது. சட்டம் அவ்வாறு கூறும் பொழுது பதற்றம் நிறைந்த இந்தப் பகுதியில் ஒரு மதக்கலவரத்தை தூண்டிவிடும் வேலையை அரசே செய்திருக்கிறது. எனவே இதற்கு அரசு பொறுப்பேற்று அந்த ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோருகின்றனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் தங்கள் கோரிக்கையை ஏற்று அந்த ஒதுக்கீட்டை ரத்து செய்யாவிட்டால் முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் மேலும் டெல்லிக்கும் போராட்டத்தை விரிவுபடுத்துவோம் என்று அரசுக்கு சவால் விடுத்துள்ளனர்.
படிக்க: பிபிசி ஆவணப்படமும் குஜராத் படுகொலை குற்றவாளிகளும்
போராட்டக் குழு தலைவனாக சொல்லிக் கொள்ளும் ஜிதேந்திர பர்மர் என்பவனோ “அமைதியாக வாழும் எண்ணத்துடன் தான் அரசு குடியிருப்பில் இந்த வீடுகளை வாங்கினோம். இந்நிலையில் ஒரு முஸ்லிம் குடும்பத்தை கொண்டு வந்து இடையில் நுழைத்து அந்த அமைதியை கெடுப்பது அநீதி” என்கிறான். மேலும் “நாங்கள் ஒன்றும் இந்துக்களுக்கு மட்டுமே அரசு வீடு என்றோ முஸ்லிம்களுக்கு கொடுக்காதீர்கள் என்றோ கூறவில்லை. அவர்களுக்கு என்று உள்ள பகுதியில் அவர்களுக்கு கொடுங்கள் என்று தான் கூறுகிறோம். நாங்களும் அமைதியாக வாழ்வோம் அவர்களும் நிம்மதியாக வாழ்வார்கள் என்று தான் கூறுகிறோம்” என்று அமைதியான முறையில் விஷத்தைக் கக்குகிறான்.
மாவட்ட ஆட்சியரோ கையை பிசைந்து கொண்டு நாங்கள் எந்த பாகுபாடும் பார்த்து ஒதுக்கீடு செய்யவில்லை குலுக்கல் முறையில் தான் பயனாளிகளை தேர்வு செய்தோம் என்று அந்த கும்பலுக்கு பணிவுடன் பதில் அளிக்கிறார். ஏன் “அரசாங்கம் முறையாக செய்திருக்கிறது; போட்ட உத்தரவு போட்டது தான். ஒதுக்கீடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழவில்லை. எல்லோரும் ஒழுங்கு மரியாதையாக கலைந்து செல்லுங்கள். இல்லையெனில் போலீசை ஏவி அடித்து விரட்ட வேண்டி வரும்” என்று எச்சரிக்கவில்லை? மேலும் “6 ஆண்டுகளாக இந்த இஸ்லாமிய பெண்ணை குடியேற விடாமல் தடுத்து வந்தமைக்காக உரிய பிரிவுகளில் குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். நாளையே போலீசு பாதுகாப்புடன் அந்தப் பெண் குடியேற நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஏன் பேசவில்லை?
உரிமை கேட்டு போராடும் மக்களிடமெல்லாம் அதிகார வர்க்கம் இப்படி பேசித்தானே இதுவரை நாம் கேட்டிருக்கிறோம். ஏன் இந்த மதவெறி வன்முறை கும்பலிடம் மாவட்ட ஆட்சியரும் கார்ப்பரேஷன் ஆணையரும் பம்மிப் பம்மி பேச வேண்டும்? ஏனெனில் அங்கு சட்டத்தின் ஆட்சி என்று எதுவும் நடைபெறவில்லை. பெரும்பான்மை இந்து மதவெறி கும்பலின் ஆட்சி நடைபெறுகிறது என்பதை தான் இது காட்டுகிறது.
இஸ்லாமியர்களை தனி குடியிருப்பில் வைக்க வேண்டும் என்று பேசும் இந்து மத வெறி உயர் சாதி கும்பல், தாழ்த்தப்பட்ட சாதி மக்களை மட்டும் இந்து என்று சேர்த்தணைத்துக் கொள்ளுமா?
இவ்வளவு அப்பட்டமான சாதி மத வெறியை சட்டபூர்வமாக இயங்கும் அரசு என்றால் அங்கீகரிக்குமா?
இந்த கோரிக்கையை எழுப்புவது யார்?
மானிய விலையில் வீடு கிடைக்கிறதே என்று கந்து வட்டிக்கு கடன் பட்டு வாழ்நாளில் ஒரே ஒரு சொந்த வீட்டை பெரும் ஆவலில் இருக்கும் சாதாரண ஏழை மக்களா?
ஒரு விதவை பெண்ணால் எங்களின் அமைதி கெட்டு விடும் என்று அவர்களா கோரிக்கை வைக்கிறார்கள்?
பின்னாலிருந்து இயக்குவது இந்து மத வெறி உயர் சாதி கும்பல் என்பது ஆணையருக்கோ ஆட்சியருக்கோ தெரியாதா?
அவர்களெல்லாம் மக்களின் நல்வாழ்வுக்காக உயிரைக் கொடுக்கும் போராளிகளா?
படிக்க: என்.சி.ஆர்.பி-ன் தரவு: உண்மையான ‘’குஜராத் ஸ்டோரி’’
வானை நோக்கி ஒரு குண்டு சுட்டால் காக்கை கூட்டம்போல் பறந்து ஓடக்கூடிய பிழைப்பு வாத கும்பல் தான் என்பது போலீசு ஆணையருக்கு தெரியாதா என்ன?
இவர்கள் கூட்டாக ஒன்றிணைந்து சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவது என்று தங்கள் பதவிப்பிரமாணத்துக்கு உண்மையாக ஒரு கணம் நின்றால் இப்படிப்பட்ட ஒரு கும்பல் உருவாகாமலே தடுத்து விட முடியாதா? ஆனால் அதுவெல்லாம் அவர்களின் நோக்கம் அல்ல. சட்டப்படி அவர் ஆட்சியர், இவர் ஆணையர் என்று இருக்கிறார்கள். ஆனால், அமைச்சரவை உள்ளிட்ட அதிகார வர்க்கம் அனைத்தும் இந்து மத வெறிக்கு ஆட்பட்டு “தான் முதலாவதாக இந்து; அதன் பின்னர் தான் ஆட்சியர் ஆணையர் எல்லாம்” என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நாம் கவனிக்க வேண்டிய பிரச்சனை.
அவர்கள் மேற்கோள்காட்டும் கலவரப் பகுதியில் தடுப்புச் சட்டம் கூட என்ன சொல்லுகிறது. இரு வேறு மதத்தினர் இடையே சொத்து பரிமாற்றங்கள் நடக்கும் போது அந்த சொத்துகள் ஏதேனும் நிர்பந்தப்படுத்தி வாங்கப்படுகின்றனவா விற்பவருக்கு உரிய விலை தரப்படுகின்றதா என்பனவற்றைப் பற்றி ஆட்சியர் ஒப்புதல் பெற வேண்டும் என்பதைத்தான் கூறுகிறது. இப்போது 1991 ஆம் ஆண்டில் போடப்பட்ட அந்த சட்டம் எங்கே இருக்கிறது? 2002 குஜராத் முஸ்லிம் படுகொலைகளுக்குப் பிறகு அங்கு ஏது கலவரம்?
இந்து மத வெறியர்கள் தான் எங்கும் சுடுகாட்டு அமைதியை நிலைநாட்டி விட்டார்களே. ஆனால் இந்த குடியிருப்போர் நலம் காக்கும் சங்கி கூட்டம் இப்போது அந்த சட்டத்தை காட்டி ஒரு முஸ்லிம் குடும்பம் இங்கு குடி வந்து விட்டால் கலவரத்துக்கு வழி வகுத்து விடும் என்று அப்பட்டமான பொய்யை திணிக்கின்றனர்.
இந்நிலையில் தனி ஒரு இஸ்லாமிய பெண்ணுக்கு எப்படி நீதி கிடைக்கும்? யார் பெற்று தருவார்கள்? சாத்தியமே இல்லை. உழைக்கும் மக்களும், ஜனநாயகத்தை விரும்புவோரும் அறிவுத்துரையினரும், ஒடுக்கப்பட்ட சாதியினரும் சிறுபான்மை மதத்தினரும் ஒரு அமைப்பின் கீழ் திரண்டு ஒன்றிணைந்து தெருவில் இறங்கிப் போராடுவதன் மூலம் தான் நியாயத்தைப் பெற முடியும்.
மக்கள் தாங்கள் உழைக்கும் வர்க்கம், உழைப்பாளிகள் என்று உணர வேண்டும். சாதியும் மதமும் நமது அடையாளங்கள் அல்ல. அவை நம்மை பிரித்தாள விரும்பும் சுரண்டும் கூட்டத்தாரின் சதி என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அந்த ஒற்றுமை தான் உடனடியாக அரசை சட்டத்தின் வரம்பிலாவது நிறுத்தி வைக்கும்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube