என்.சி.ஆர்.பி-ன் தரவு: உண்மையான ‘’குஜராத் ஸ்டோரி’’

இப்படத்தை வைத்து மத பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி காலூன்றிவிடலாம் என கணக்கு போட்டிருக்கிறது. ஆனால் மதங்கள் கடந்து சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் கேரள மக்களிடம் காவிகளின் இம்முயற்சி மண்ணை கவ்வியுள்ளது.

“குஜராத் ஸ்டோரி” பெண்கள் மீது காவி கும்பலின் ‘அக்கறை’யின் உண்மை முகம் இது!

கேரளத்தில் மத வெறுப்பு பிரச்சாரத்தைத் தூண்டிவிட “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் பயங்கரவாதத்தின் உண்மையை வெளிகொண்டுவந்துள்ளது என ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க காவிக் கும்பல் பிரச்சாரம் செய்துவருகிறது. ஆனால், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான் பெண்களுக்கு பாதுக்காப்பு இல்லாத சூழல் நிலவுகிறது என அண்மையில் வெளியான தரவுகள் கூறுகின்றன.

வடஇந்தியாவை போல, தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க எளிதில் கால்பதிக்க முடியாத நிலையே நீடித்துவருகிறது. கேரளத்தில் ஊடுருவ தற்போது பாசிசக் கும்பல் “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தை கையிலெடுத்திருக்கிறது. இப்படத்தை வைத்து மத பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி காலூன்றிவிடலாம் என கணக்கு போட்டிருக்கிறது. ஆனால் மதங்கள் கடந்து சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் கேரள மக்களிடம் காவிகளின் இம்முயற்சி மண்ணை கவ்வியுள்ளது.

கேரளத்தைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்து-கிறித்துவ பெண்கள், கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டு, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாக இப்படத்தில் சித்தரிக்கப்படுகிறது.

படிக்க : மல்யுத்த வீரர்களுக்கு ஏன் இன்னும் நீதி கிடைக்கவில்லை! || தோழர் மருது

ஆனால், இத்தனை ஆயிரம் பெண்கள் பயங்கரவாத அமைப்புகளில் இணைந்ததற்கான எந்த அடிப்படை ஆதாரமும் அரசாங்கத்திடமில்லை என்பதிலேயே காவிகளின் பொய் மூட்டை அவிழ்ந்துவிட்டது. இவையன்றி, கல்வி அறிவில் முன்னேற்றம் அடைந்திருக்கும் கேரளத்தில், பெண்களை எளிதில் மூளைசலவை செய்யமுடியாது போன்ற கருத்துக்களும் சமூக வலைதளங்களில் பரவி காவிகளின் நச்சுப்பிரச்சாரம் பொதுவெளியில் முறியடிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மத பிரிவினைவாதத்தை ஏற்படுத்த வேலை செய்துவரும் காவிகள், இதற்கு முன்னரும் முஸ்லிம் ஆண்களால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என நீலிக்கண்ணீர் வடித்தது. லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்து பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் காதலித்து பெண்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து வருவதாக பிரச்சாரத்தை செய்தது. காவிக் கும்பலின் இப்பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும் இதேநேரத்தில், காவிகள் கொண்டாடும் குஜராத் மாநிலத்தின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

2022-இல் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் தரவுகளின்படி, குஜராத்தில் மட்டும் 41,621 பெண்கள் காணாமல் போயிருக்கிறார்கள். 2016-இல் 7,105 பெண்களும்; 2017-இல் 7712 பெண்களும்; 2018-இல் 9246 பெண்களும்; 2019-இல் 9268 பெண்களும்; 2020-இல் 8290 பெண்களும் காணவில்லை என தரவுகள் கூறுகிறது.

பணத்துக்காக கடத்தப்படும் பெண்கள் வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் தள்ளப்படுகிறார்கள்; பல பெண்கள் கூலி அடிமைகளாக்கி, பிற மாநிலங்களில் விற்றுவிடும் கோர சம்பவங்களும் குஜராத்தில் அரங்கேறியுள்ளது.

படிக்க : ஜி.எஸ்.டி வரி சாதனை அல்ல வேதனை | மக்கள் நேர்காணல்

இதுகுறித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் குஜராத் மாநில மனித உரிமை குழுவின் உறுப்பினருமான சுதிர் சின்ஹா, “காணாமல் போனவர்கள் குறித்த வழக்கு, கொலை வழக்கைப்போல பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஒரு குழந்தை காணாமல்போனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்காக ஆண்டுக்கணக்கில் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற வழக்குகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் போலீசு அலட்சியம் காட்டுகிறது” என குஜராத் மாநிலத்தின் உண்மை முகத்தைத் தோலுரித்து காட்டுகிறார்.

தற்போது கேரளத்தில் மதப் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த தி கேரளா ஸ்டோரியை கையில் எடுத்திருக்கும் காவிகள் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு மேற்கண்ட தரவே(குஜராத் ஸ்டோரி) துலக்கமான சான்று.

ஆதினி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க