பிபிசி செய்தி நிறுவனம், “India:The Modi Question” என்ற ஆவணப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட்டது. முதல் பாகம் ஜனவரி 17-ம் தேதியும், இரண்டாவது பாகம் 24-ம் தேதியும் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படம் குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 28 முதல் மார்ச் 2 வரை இந்து மதவெறியர்களால் நடத்தப்பட்ட கலவரத்தை பற்றியும் அதில் அன்றைய தேதியில் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மோடியின் பங்கு பற்றியும் பேசுகிறது. இதனால் பாசிச மோடி அரசு சமூக வலைதளங்களில் இந்த ஆவணப்படத்தை தடை செய்தனர். இதுவும் “கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்” என்று சனநாயக சக்திகளால் கண்டிக்கப்பட்டது.
இன்றைய காலகட்டத்தில், இப்படி ஒரு ஆவணப்படத்தை வெளியிடவும் அதன் மூலம் 2002 குஜராத் கலவரத்தை பற்றி பிரிட்டிஷ் அரசின் அயலுறவு அலுவலகம் தயாரித்த அறிக்கையை (கடந்த 20 ஆண்டுகளாக இப்படியொரு அறிக்கை இருப்பது கூட பொதுவெளிக்கு தெரியாது) பிபிசி நிறுவனம் வெளிக்கொண்டு வந்தது பற்றிய விவாதங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த ஆவணப்படமும் இந்த அறிக்கையும் இந்திய அரசு நிறுவனங்கள் ஒரு இனப்படுகொலையை செய்தவர்களை அது சார்ந்த வழக்குகளிலிருந்து விடுவிப்பதில் எந்த அளவு ஒத்திசைவோடு நடந்து கொண்டது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மேலும், இப்படி ஒரு இனப்படுகொலையின் போது குஜராத்தின் முதலமைச்சராக இருந்த ஒருவரை, 2014 நாடாளுமன்ற தேர்தலில் இந்திய ஊடகங்கள் எப்படி வளர்ச்சியின் நாயகனாக சித்தரித்து தனிப்பெரும்பான்மை வெற்றியை தேடித் தந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.
படிக்க : மோடியின் முகத்திரையை கிழிக்கும் பிபிசி ஆவணப்படம் | தோழர் அமிர்தா வீடியோ
2002 குஜராத் கலவரத்தை பற்றி அதை நெருக்கமாக இருந்து கவனித்த மனசாட்சியுள்ள சில பத்திரிகையாளர்கள், கலவரத்தின் போது நடத்தப்பட்ட கொடூரங்களை பற்றி இத்தனை ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வந்ததைவிட இந்த ஆவணப்படம் புதிதாக எதையும் சொல்லிவிடவில்லை. அந்த பத்திரிகையாளர்கள் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு வந்த சில விஷயங்களை ஆவணப்படம் மேலும் சில ஆதாரங்களுடன் விளக்குகிறது அவ்வளவே.
ஆவணப்படமும் அது வெளிக்கொண்டு வந்த அந்த அறிக்கையும் சொல்லும் சில எளிய உண்மைகள் இதுதான். “வன்முறையின் அளவு அறிக்கையிடப்பட்டதை விட அதிகமாக இருந்தது; இனப்படுகொலைக்கான அனைத்து அடையாளங்களும் இந்த கலவரத்தில் இருந்தது; இந்த இனப்படுகொலையை அரங்கேற்றும் பொருட்டு ஒரு முறையான வன்முறை பிரச்சாரம் நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டது; இந்தக் கலவரத்தின் நோக்கம் இந்து மக்கள் வாழும் பகுதிகளில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றுவதே; முஸ்லீம் பெண்களை பரவலாகவும் திட்டமிட்டும் பாலியல் பலாத்காரம் செய்வது கலவரத்தின் நோக்கமாக இருந்தது; வன்முறையைத் தூண்டுவதில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (VHP) அமைப்பை சேர்ந்த குண்டர்களின் பங்கு இருந்தது” என்பவைதான்.
மேலும், எவ்வாறாயினும், வி.எச்.பி குண்டர்கள் “தாங்கள் என்ன கொடூரங்கள் செய்தாலும் தண்டிக்கப்பட மாட்டோம் என்ற நிலையை மாநில அரசாங்கம் உருவாக்கி வைத்திருந்திருந்தது. அப்படி ஒரு சூழலை மாநில அரசாங்கம் உருவாக்கி வைக்காமல் இருந்திருந்தால், இவ்வளவு சேதத்தை ஒருபோதும் ஏற்படுத்தியிருக்க முடியாது” என்றும் “இதற்கு நரேந்திர மோடியே நேரடியான பொறுப்பு” என்றும் அறிக்கை உறுதிபடக் கூறுகிறது.
ஆனால், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் “மோடி அலை” உருவாக்கிய பத்திரிகைகள் இந்த கலவரத்தின் இரத்தக்கறை மோடியின் கரங்களில் இருப்பது பற்றி ஒரு செய்தி கூட வெளியிடவில்லை. அப்படியொரு சம்பவம் நடந்ததையே இந்த பத்திரிகைகள் மக்களின் கவனத்திற்கு கொண்டுவரவில்லை. அது ஏன் என்பது ஊர் அறிந்த ரகசியம். ஏனெனில், மோடி பிரதமராக வேண்டும் என்பதை இந்திய ஆளும் வர்க்கத்தின் பெரும் புள்ளிகள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்கள். குஜராத்தில் வணிகம் செய்வதை எளிமையாக்கியது, தொழிற்சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்தை எளிதாக்கியது மற்றும் தனியார் திட்டங்களைத் தடுக்கக்கூடிய அதிகாரத்துவ தாமதங்கள் ஆகியவற்றை ஒப்பீட்டளவில் குறைந்ததால், நிறுவனங்கள் மோடியை தங்களுக்கு சாதகமானவராக பார்த்தது.
இந்தியாவின் உழைக்கும் தொழிலாளர்களுக்கு எதிராக வர்க்கப் போரை நடத்துவதற்கும், இந்திய பெருமுதலாளிகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டு சேர்ந்து அதன் பெரும் ஆதாயங்களை அடைவதற்கும் தேவைப்படக்கூடிய ஒரு “பலமானவர்” என்று ஆளும் வர்க்கம் ஏற்றுக்கொண்ட பெரிய செயல்முறையின் ஒரு பகுதி தான் மோடி.
2012 ஆம் ஆண்டே மோடியை பாஜக அதன் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளராக அறிவிக்கும் முன்பே மோடி பிரதமர் வேட்பாளர் என்ற பிம்பம் ஊடகங்களால் முன்தள்ளப்பட்டது.
இன்று அப்பட்டமான மதவெறியோடு செயல்பட்டு வரும் மோடி, 2014 தேர்தலுக்கு முன்பு தன்னை மிதவாதியாக முன்னிறுத்த பல முயற்சிகளை மேற்கொண்டார். அவர் மத நல்லிணக்கத்தை மேம்படுத்த முயற்சிப்பது போன்று பாவனைகள் செய்தார். அவரது பேச்சுக்கள், இந்து மறுமலர்ச்சி என்பதாக இல்லாமல், வளர்ச்சி, முதலீடு போன்ற வார்த்தைகளை சுற்றியிருக்கும்படி பார்த்துக்கொண்டார். இவையெல்லாம் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட செய்திகளாக வளம் வந்தது.
மோடியிடம் கடினமான கேள்விகளைக் கேட்பதிலும், மோடி பேசும் வாய் வீச்சுகளை விமர்சன ரீதியாக ஆராய்வதிலும் ஊடகங்கள் அக்கறை காட்டவில்லை.
2002 குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு பற்றி ஊடகங்கள் கவலைப்படவில்லை; அவை கலவரம் பற்றிய விசாரணையின் செயல்முறையை கேள்விக்குள்ளாக்கவில்லை, குறிப்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவின் (SIT) பங்கு, மோடி கீழ் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுவதற்கு வழிவகுத்தது பற்றி ஊடகங்கள் எதுவும் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் இதே ஊடகங்கள் “பத்திரிகை சுதந்திரம்” பறிபோவதாக இப்போது கூப்பாடு போடுகிறது.
2002 குஜராத் கலவரத்திற்கு அப்போதைய முதல்வர் மோடி உடந்தையாக இருந்ததாகக் சொல்லப்படுவதை மறுப்பவர்கள், சில மாதங்களுக்கு முன்பு – குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது – இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா (மோடியின் நெருங்கிய கூட்டாளி) “2002ல், கலவரக்காரர்களுக்கு (இஸ்லாமியர்கள்), ஒரு பாடம் கற்பிக்கப்பட்டது. அவர்களால் மீண்டும் தலை தூக்க முடியவில்லை. இதனால் குஜராத்தில் நிரந்தர அமைதி நிலவுகிறது” என்று பெருமிதமாக சொன்னார். இது பகிரங்கமாக இஸ்லாமிய மக்களை மிரட்டும் தொனியில் இருந்தது.
இப்படி ஒரு உள்துறை அமைச்சர் பேசமுடியும் என்ற சூழல் இன்று நேற்று உருவாக்கப்பட்டதல்ல. கடந்த 20 ஆண்டுகளாக குஜராத் படுகொலைக்கு காரணமானவர்களை விடுவிப்பதில் இந்திய அரசின் ஒவ்வொரு உறுப்பும் எத்தனை முனைப்புடன் செயல்பட்டிருக்கிறது என்பதன் சாட்சியமாக இருக்கிறது அமித்ஷாவின் மிரட்டல் பேச்சு.
பிப்.27, 2002 அன்று இரவு மோடியின் இல்லத்தில் கூட்டப்பட்ட “அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில்” மோடியின் குஜராத் மாநில அரசாங்கத்தின் வருவாய்த்துறை அமைச்சரான ஹரேன் பாண்டயா மற்றும் துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் பட் ஆகியோர் கலந்துகொண்ட ஆதாரம் மிகவும் முக்கியமானது. “இந்த சந்திப்பு ஒரு தனித்துவமான நோக்கத்தைக் கொண்டிருந்தது” என்றும் “மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும். இந்துக்கள் “எதிர்வினை” ஆற்றும் வழியில் குறுக்கிடக்கூடாது” என்றும் மோடி கூடியிருந்தவர்களுக்கு அறிவுறுத்தினார். 2009-ல், சஞ்சீவ் பட் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும், ஹரேன் பாண்டயாவின் கூற்றை உறுதிபடுத்தும் வகையில் சாட்சியம் அளித்தார்.
ஆனால், 2003-ல் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார் ஹரேன் பாண்டியா. தற்போது சஞ்சீவ் பட் சிறையில் இருக்கிறார்.
இந்த வழியில்தான், 2002 நிகழ்வுகள் பற்றிய விசாரணையை இந்திய அதிகாரிகள் அதன் ஒவ்வொரு கட்டத்திலும் நீர்த்துப்போகச் செய்துள்ளனர். 2002-இல் கொடூரமாக கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டபோது, 21 வயது மற்றும் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பிளிகிஸ் பானோவைப் போலவே, பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் உறுதியான முயற்சிகளின் விளைவாக நடந்த சிலருக்கு தண்டனைகள் கிடைத்தது.
ஆனால் அதுவும் நிரந்தரமாக அல்ல. கடந்த ஆண்டு குஜராத் மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக, பிலிகிஸ் பானோவின் குடும்பத்தின் கொலையில் பங்கு வகித்ததற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரையும் மாநில அரசு வீரவணக்கத்துடன் விடுதலை செய்தது. அவர்கள் இன்று பிலிகிஸ் பானோ வன்கொடுமை செய்யப்பட்ட அதே தெருக்களில் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள்.
2002 படுகொலைக்குப் பொறுப்பானவர்களைக் காப்பாற்ற குஜராத்தில் உள்ள போலீசுத்துறை, நீதித்துறை மற்றும் அரசாங்க அதிகாரிகளின் முயற்சிகள் மிகவும் அப்பட்டமாக இருந்தன, இறுதியில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எவ்வாறாயினும், இந்தியாவின் உச்ச நீதிமன்றம், மோடியை இந்த வழக்கில் இருந்து விடுவித்ததன் மூலம் நீதித்துறை நன்மதிப்பிற்கு தகுதியற்றது என்ற பெயரை ஈட்டியது.
2002 குஜராத் கலவரத்தில் அகமதாபாத்தின் முஸ்லீம் சுற்றுப்புறத்தில் 68 பேருடன் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி ஜாகியா ஜாஃப்ரி அது பற்றி வழக்கு தொடர்ந்தார். அவரது சாவு முஸ்லிம் எதிர்ப்பு வன்முறை மற்றும் இனப் படுகொலை என்னும் பெரிய சதியின் அங்கம் என்ற வகையில் விசாரிக்கப்பட வேண்டிய வழக்கை பிப்ரவரி 28, 2022 அன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து மேலும் ஒருமுறை தனது மோடி விசுவாசத்தை காட்டியது.
படிக்க : பிபிசி வருமான வரித்துறை ஆய்வு: ஊடகங்களை முடக்க எத்தனிக்கும் பாசிஸ்டுகள்!
அவ்வாறு செய்ததன் மூலம், உச்ச நீதிமன்றம் மோடி, அமித்ஷா மற்றும் குஜராத் அதிகாரிகளை விடுவித்தது மட்டுமல்லாமல், அவர்களுக்கு “க்ளீன் சிட்” கொடுத்தது. அடுத்த நாள், இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள் காட்டி, தீஸ்தா செதல்வாட் மற்றும் படுகொலைக்கு போலீசுத்துறை உடந்தையாக இருந்ததை அம்பலப்படுத்திய முன்னாள் குஜராத் போலீசுத்துறை அதிகாரி ஆர்.பி.ஸ்ரீகுமார் ஆகியோரைக் குஜராத் போலீசுத்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படை கைது செய்தது.
இவ்வாறு கடந்த 20 ஆண்டுகளில் குஜராத் இனப்படுகொலையை முன்னின்று நடத்திய பாசிச மதவெறியர்களை விடுவிப்பதில் இந்திய அரசின் ஒவ்வொரு உறுப்பும் தனது பங்கை சென்மையாக செய்திருக்கிறது. பெரு முதலாளிகளும் அவர்களின் ஊதுகுழலான “வெகுஜன” பத்திரிகைகளும் இந்த பாசிஸ்டுகள் அரசதிகாரத்தை கைப்பற்ற உதவியிருக்கிறார்கள். இந்த வேலையை செய்ததற்கான பலனையும் பெற்றுக்கொண்டனர்.
இப்படி பாசிஸ்டுகள், அவர்களை அரவணைக்கும் பெருமுதலாளிகள், அவர்களின் ஊதுகுழலான ஊடகங்கள், நீதித்துறை, போலீஸ், விசாரணை ஆணையம் போன்ற அரசு கட்டமைப்புகள் என எல்லாம் மக்கள் விரோதமானதாக இருக்கும்போது எத்தனை ஆவணப்படங்கள் எத்தனை முறை உண்மைகளை வெளிக்கொண்டு வந்தாலும் பலனில்லை. வெகுமக்கள் போராட்டங்களே நீதியை வழங்கும் வல்லமை பெற்றது.
ராஜன்