பிபிசி வருமான வரித்துறை ஆய்வு: ஊடகங்களை முடக்க எத்தனிக்கும் பாசிஸ்டுகள்!

பாசிஸ்டுகள் தங்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிடும் ஊடகங்களை மிரட்டிப் பணிய வைப்பார்கள் அல்லது தடை செய்வார்கள். சில சமயம், கார்ப்பரேட் முதலாளிகளைக் கொண்டு விலைக்கு வாங்கியும் விடுகிறார்கள்; அதானி என்.டி.டி.வி-ஐ (NDTV) வாங்கியதைப்போல.

0

நேற்று (பிப்ரவரி 14) பிபிசி ஊடகத்தின் தில்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு (survey) நடத்தினர்.‌ வரி ஏய்ப்பு புகார் காரணமாக வருமான வரித்துறை இயக்குநா் உத்தரவின் அடிப்படையில், பிபிசி துணை நிறுவனங்களின் சா்வதேச வரி விவகாரங்கள் தொடா்பாக இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டாம் நாளாக இன்றும் வருமான வரித்துறையின் ஆய்வு தொடர்கிறது.

வருமான வரித்துறையின் ஆய்வின்போது, ஊழியர்களின் செல்போன்கள், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் கடவுச்சொற்களையும் பெற்றுக்கொண்டனர். இது குறித்து வெளியே பேசக் கூடாது என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.

கடந்த 2002-ஆம் ஆண்டில் சங்க பரிவார கும்பலால் நடத்தப்பட்ட குஜராத் படுகொலை குறித்த ஆவணப் படத்தை பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான பிபிசி கடந்த ஜனவரி மாதத்தில் வெளியிட்டது. “இந்தியா: மோடி மீதான கேள்வி” என்ற தலைப்பில் இரண்டு பாகங்களைக் கொண்டிருந்தது அந்த ஆவணப்படம். இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி தான் காரணம் என்பதை அது அம்பலப்படுத்தியது. குஜராத் கலவர வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று மோடி உள்ளிட்டோரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருந்த நிலையில் இந்த ஆவணப்படம் வெளியானது.

கடந்த ஜனவரி 21-அன்று, இந்த ஆவணப்படத்தை வெளியிட யூ-டியூப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தது மத்திய அரசு. ஆனால், மாணவர் அமைப்புகள் தடையை மீறி கல்லூரி – பல்கலைக்கழகங்களில் இந்த ஆவணப்படத்தை திரையிட்டனர். போலீசைக் கொண்டு பாசிச மோடி அரசு பல இடங்களில் இதை தடுக்கவும் செய்தது. இந்த ஆவணப்படம் பல்வேறு ஜனநாயக சக்திகளாலும் எதிர்க்கட்சிகளாலும் பொது இடங்களில் மக்களுக்கு திரையிடப்பட்டது. சில மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும் இது திரையிடப்பட்டது (தமிழ்நாட்டில் வி.சி.க செய்ததைப் போல).


படிக்க: “இந்தியா: மோடி மீதான கேள்வி” ஆவணப்படம்: மீண்டும் அம்பலமாகும் பாசிச மோடி!


இந்த ஆவணப்படத்தை வெளியிட்டதால் பிபிசி-ஐ தடை செய்ய வேண்டும் என்று ஹிந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அம்மனுவை தள்ளுபடி செய்து விட்டது.

இதைத்தொடர்ந்து, பிபிசி-யின் ஆவணப்படத்திற்கு எதிர்வினையாகவே தற்போது இந்த வருமான வரித்துறை ஆய்வு‌ நடைபெற்றுள்ளது. இது பத்திரிக்கை சுதந்திரத்தை வெளிப்படையாக நசுக்குவதாகும். எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட தனது ஏவல் நாயான வருமான வரித்துறையை, தற்போது ஊடகங்களை ஒடுக்கவும் பயன்படுத்துகிறார்கள். மோடி அரசின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ், சி.பி.எம், சி.பி.ஐ, ஆம் ஆத்மி, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கண்டித்துள்ளன. எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா (Editors Guild of India) அமைப்பும் மோடி அரசின் இந்த நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்துள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டில் பத்திரிகைச் சுதந்திரத்தில் 142-வது இடத்திலிருந்த இந்தியா, 2022-ஆம் ஆண்டில் 150-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. 2014 – 2020 காலகட்டத்தில் 135 பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தியாவில் 35 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மோடி அரசின் செயல்பாட்டையும் பாசிச கொள்கைகளையும் விமர்சிக்கும் ஊடகங்களை வருமான வரித்துறையைக் கொண்டு தாக்குவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே நியூஸ் கிளிக் (NewsClick), தைனிக் பாஸ்கர் (Dainik Bhaskar) போன்ற ஊடக நிறுவனங்கள் மோடி அரசின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.


படிக்க: ஜனநாயக ஊடகங்களின் குரல்வளையை நெறிக்கும் பாசிஸ்ட்டுகள்!


இதேபோல, 1970-களில் பாசிஸ்ட் இந்திரா காந்தி ஆட்சியில் கல்கத்தா (Calcutta) மற்றும் ஃபேந்தம் இந்தியா (Phantom India) என இரண்டு ஆவணப்படங்களை ஒளிபரப்பியதால் பிபிசி-க்கு தடை விதிக்கப்பட்டது. 1975-ஆம் ஆண்டில், எமர்ஜென்சி விதிமுறைகளுக்கு உட்படாத ஊடகங்களை தடை செய்தபோதும் பிபிசி-யும் தடைசெய்யப்பட்டது.

பாசிஸ்டுகள் ஒருபோதும் தங்களுக்கு எதிரான கருத்துகளை விரும்புவதில்லை. தங்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிடும் ஊடகங்களை மிரட்டிப் பணிய வைப்பார்கள் அல்லது தடை செய்வார்கள். சில சமயம், கார்ப்பரேட் முதலாளிகளைக் கொண்டு விலைக்கு வாங்கியும் விடுகிறார்கள்; அதானி என்.டி.டி.வி-ஐ (NDTV) வாங்கியதைப்போல. இப்போக்கின் நீட்சியே பிபிசி மீதான இந்த தாக்குதலும்!

பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க