ஜனநாயக ஊடகங்களின் குரல்வளையை நெறிக்கும் பாசிஸ்ட்டுகள்!

ஒட்டுமொத்த செய்தி ஊடகங்களும் காவிகளுக்கு சேவை செய்கிற சூழலில், சுதந்திர ஊடகங்கள் காவி பாசிஸ்டுகளை அம்பலப்படுத்துவதால் தங்களின் ஊதிப் பெருக்கப்பட்ட வளர்ச்சி பிம்பம் மக்கள் மத்தியில் உடைப்படுவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை

காவி பாசிஸ்டுகளின் கார்ப்பரேட் சேவையையும், சங்கப் பரிவாரக் கும்பல் வன்முறைகளையும் அம்பலப்படுத்துகிற ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சுதந்திர ஊடகங்கள்தான் (Freelance Media – சமூக அக்கறைக் கொண்டவர்களால் நடத்தப்படும் ஊடகங்கள்) காவி பாசிஸ்டுகளின் இலக்காகியிருக்கின்றன.

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலில் இந்துராஷ்டிர மாடலாக உள்ள உத்தரப்பிரதேசம்தான் இந்திய அளவில் முதலிடத்தில் இருக்கிறது. உலகளவில் ஊடக சுதந்திரக் குறியீட்டில் 180 நாடுகளின் பட்டியலில், கடந்த 2021 ஆம் ஆண்டில் 142-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 150-வது இடத்திற்கு சென்றிருக்கிறது என்கிறது “எல்லைகளில்லா பத்திரிகையாளர்கள்” (Reporters without Borders) என்ற அமைப்பின் அறிக்கை.

கொலைகள்… கைதுகள்… மிரட்டல்கள்

காவி பாசிஸ்ட்டுகளுக்கு  எதிராக போராடினால் ‘புல்டோசரை’யும், எழுதினால் கைதுகள்-வழக்குகளையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதே பாசிஸ்டுகள் உருவாக்கியிருக்கும் புதிய இயல்புநிலை.

கடந்த 2020-ஆம் ஆண்டு, உத்தரப்பிரதேசம் ஹத்ராஸில் தாழ்த்தப்பட்ட பெண் ஒருவர் தாக்கூர் ஆதிக்க சாதி குண்டர்களால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, நாக்கறுக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட அப்பெண்ணின் உடலைக்கூட அப்பெண்ணின் பெற்றோர்களிடம் ஒப்படைக்காமல், இரவோடு இரவாக போலீசே எரித்துக் கொன்ற கொடூரம் இந்தியாவையே உலுக்கியது. இக்கொலை குறித்து உண்மைகளை வெளிக்கொணர உ.பி.க்குச் சென்ற கேரளாவைச் சேர்ந்த சித்திக் கப்பான் என்கிற மலையாள இணையதளப் பத்திரிகையாளரை ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்து இரண்டு ஆண்டுகள் சிறை வைத்தது யோகி ஆதித்யநாத் அரசு. நீண்ட சட்டப்போராட்டம் மற்றும் களப்போராட்டங்களுக்குப் பின்னர்தான் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஹத்ராஸ் கொடூரம் நடந்த அதே நாளில், அப்பெண்ணின் உறவினர்களைப் பேட்டிக்கொண்டு கொலை தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வந்தார் “இந்தியா டுடே” வார இதழின் பத்திரிகையாளர் தனுஸ்ரீ பாண்டே. கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரனிடம் உ.பி அரசு தங்களை அச்சுறுத்துவதாகக் கூறும்படி தனுஸ்ரீ பயிற்சியளித்தார் என்று பத்திரிகையாளர் தனுஸ்ரீக்கு எதிராக அவதூறைப் பரப்பியது, காவி கும்பல். இதனைத் தொடர்ந்து தனுஸ்ரீ இந்தியா டுடே பத்திரிகையிலிருந்து விலகிவிட்டார்.

தனுஸ்ரீ இந்தியா டுடே பத்திரிகையில் இருந்து விலகியது தொடர்பாக ஆங்கில மாத இதழான “தி கேரவன்” கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அக்கட்டுரையில், பா.ஜ.க.வுக்கு எதிராக செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் இந்தியா டுடே பத்திரிகையிலிருந்து ஓரங்கட்டப்படுகின்றனர், இறுதியில் அவர்கள் வெளியேற்றப்படுகின்றனர் என்று குறிப்பிடுகிறது. இந்தியா டுடே பத்திரிகையே பா.ஜ.க. ஆதரவு பத்திரிகை என்றும், அந்தவகையில்தான் தனுஸ்ரீயும் அப்பத்திரிகையில் இருந்து ‘விலகும்’ நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.


படிக்க: கிட்டத்தட்ட 88% இந்திய ஊடகங்களின் தலைமைப் பதவிகள் உயர்சாதியினரின் கைகளில் உள்ளது!


இவை மட்டுமல்ல, உ.பி.யில் காவி கும்பல்களின் ஊழல்களையும் அரசு நிர்வாகத்தின் முறைகேடுகளையும் அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்கள் யோகி ஆதித்யநாத் அரசினால் நரவேட்டையாடப்பட்டுள்ளனர். உ.பி.யில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவாக வழங்கப்படும் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு கொடுக்கப்படும் அவலத்தை வெளியிட்டதற்காக பஸ்வான் ஜெய்ஸ்வால் என்ற உள்ளூர் பத்திரிகையாளரைக் கொடூரமாகத் தாக்கியிருக்கிறது உ.பி. போலீசு. சாராய மாஃபியா கும்பல்களின் ஊழலை அம்பலப்படுத்தியதற்காக ஸ்ரீவஸ்தவா என்ற பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சந்தோஷ் ஜெய்ஸ்வால் என்ற மற்றொரு பத்திரிக்கையாளர், ஆரம்பப் பள்ளிக் குழந்தைகள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்வதை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் உ.பி. அரசின் நிர்வாக சீர்கேடுகளை அம்பலப்படுத்தியத்திற்காக ஸ்க்ரோல் (Scroll) இணையதளத்தின் பத்திரிகையாளர் சுப்ரியா சர்மா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேற்கண்ட நிகழ்வுகள் சில சான்றுகளே. 2017 முதல் 2022 வரையிலான யோகியின் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில், 12 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; 48 பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்; 66 பத்திரிகையாளர்கள் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன என்கிறது, பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான குழுவின் அறிக்கை.

பெண் பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதனால், பல பத்திரிகையாளர்கள் அவர்களது துறையைவிட்டே ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கர்நாடகாவின் புகழ்பெற்ற பெண் பத்திரிகையாளரான கவுரி லங்கேஷ் படுகொலையே இதற்குச் சான்று.

பத்திரிகையாளர்களைக் கொலை செய்வது, கைது செய்வது ஒருபுறம் என்றால், சுதந்திர ஊடகங்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பது என்பதும் சாதாரண நிகழ்வாகியிருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் “தி வயர்” இணையதளத்தில் அமெரிக்க “மெட்டா” நிறுவனத்திற்கும் பா.ஜ.க.விற்கும் தொடர்பு இருப்பதாக (பேஸ்புக், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனம்) கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அக்கட்டுரையில், பா.ஜ.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவரான அமித் மாள்வியாவிக்கு ‘கிராஸ் செக்’ (Cross check) முறையின் மூலம் சில சலுகைகள் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படும் பா.ஜ.க-விற்கு எதிரான கருத்துகளை அமித் நீக்க முடியும் என்று அக்கட்டுரையில் எழுதப்பட்டிருக்கிறது.


படிக்க: புதிய தொழில்நுட்ப வரைவு விதிகள்: அறிவிக்கப்படாத எமர்ஜென்சி!


“மெட்டா” குறித்து வெளியிடப்பட்ட இக்கட்டுரை உறுதியான தகவல் ஆதாரங்களின் அடிப்படையில்தான் எழுதப்பட்டது என்று முதலில் கூறினாலும், பிறகு அந்த ஆதாரம் உண்மையானதல்ல என்று அறிந்தவுடன் தனது தவறுக்கு மன்னிப்புக் கோரியது “தி வயர்” இணையதளம்.

எனினும், தன்மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக டெல்லி காவல் நிலையத்தில் அந்த இணையதளத்தின் ஆசிரியர்களான சித்தார்த் வரதராஜன், சித்தார்த் பாட்டியா, எம்.கே. வேணு, துணை ஆசிரியர் ஜான்வி சென் உள்ளிட்டோர் மீது புகாரளித்திருக்கிறார் அமித். இந்தப் புகாரை முகாந்திரமாகக் கொண்டு “தி வயர்” இணையதளப் பத்திரிகையாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தியது போலீசு.

இதுமட்டுமின்றி, அமித்ஷா மகன் ஜெய்ஷாவின் சொத்து குவிப்பு குறித்து செய்தி வெளியிட்டதற்காகவும், டெல்லி விவசாயிகள் பேரணியின் போது உயிரிழந்த நவ்ரீத் சிங்கின் குடும்பத்தினரின் கருத்துகளை வெளியிட்டதற்காகவும் “தி வயர்” இணையதளத்தின் மீது வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு காவி பாசிச கும்பல்களின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் பத்திரிகைகள், பத்திரிகையாளர்களை முற்றிலுமாக முடக்கும் வகையில், பொய் வழக்குகளைப் போடுவது, சிறையில் அடைப்பது, காவி குண்டர்கள், போலீசை ஏவித் தாக்குவது, கொல்வது என பலவகைகளில் நெருக்கடிகள் கொடுத்து ஒடுக்கி வருகிறது காவி கும்பல்.

என்.டி.டிவி-யை விழுங்கிய அதானி

பத்திரிகை துறையில் காவி பாசிஸ்டுகளின் தாக்குதல் ஒரு முக்கியமான விசயம், என்.டி.டி.வி என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தை, அந்த நிறுவனத்திற்குத் தெரியாமலேயே சட்டவிரோதமாக அதானி கும்பல் வாங்கிய நிகழ்வாகும்.

இந்திய அளவில் இந்தி மொழியில் மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைத் தோலுரிக்கும் செய்தி நிறுவனம்தான் என்.டி.டி.வி. என்றழைக்கப்படும் “புதுடெல்லி  தொலைக்காட்சி” நிறுவனமாகும். பத்திரிகையாளர்களான பிரனாய் ராய் மற்றும் ராதிகாராய் இருவரும் ஆர்.ஆர்.பி.ஆர். ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் கீழ் என்.டி.டிவியைத் துவங்கினர். கடந்த 2008 ஆம் ஆண்டு விஸ்வபிரதான் கமர்சியல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் ரூ. 403 கோடி பத்தாண்டுகளில் திருப்பித் தருவதாக கடன்வாங்கியது ஆர்.ஆர்.பி.ஆர். ஹோல்டிங்ஸ். ஆனால், கடனைக் கட்ட முடியாததால் என்.டி.டிவியின் 29.8 சதவீத பங்குகள் விஸ்வபிரதான் நிறுவனத்துக்குச் சொந்தமானது.

விஸ்வபிரதான் நிறுவனத்தை அதானி குழுமம் 2012-இல் வாங்கியது. இதனால், விஸ்வபிராதானுக்குச் சொந்தமான என்.டி.டிவியின் பங்குகள் அதானி குழுமத்திற்கு சொந்தமானது. ஆனால், ஆர்.ஆர்.பி.ஆர். ஹோல்டிங்ஸ் நிறுவனர்களோ, விஸ்வபிரதான் நிறுவனத்தின் பங்குகள் அதானி குழுமத்திற்கு விற்பது குறித்து எவ்வித தகவல்களும் தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும், இது முறைகேடான கையகப்படுத்துதல் என்றும் குற்றஞ்சாட்டினர்.

இவ்வாறு முறைகேடான முறையில் அதானி குழுமம் என்.டி.டிவி-யை கையகப்படுத்தியிருக்கும்போதே, திறந்த சந்தையில் என்.டி.டிவியின் இதர பங்குகளை வாங்குவதற்கு அதானி குழுமத்திற்கு அனுமதியளித்திருக்கிறது இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி. நவம்பர் 23-ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 5-ஆம் தேதி வரை திறந்த சந்தையில் என்.டி.டிவி பங்குகளை வாங்கியதன் மூலம் 37.44 சதவீத பங்குகளைக் கைப்பற்றியது. பிரனாய் மற்றும் ராதிகா ஆகியோர் தங்களிடமிருந்த பங்குகளில் 27.26 சதவீதத்தை விற்றதன் மூலம், என்.டி.டிவி நிறுவனத்தில் 55 சதவீதப் பங்குகளைப் பெற்று அதிக பங்குகளைக் கொண்ட தனி நிறுவனமாக மாறியிருக்கிறது அதானி குழுமம்.

என்.டி.டிவி, என்.டி.டிவி இந்தியா, என்.டி.டிவி 24×7 ஆகிய நிறுவனங்கள் அதானி வசமாகியிருக்கின்றன. என்.டி.டிவி நிறுவனர்கள் மீது பண மோசடி விசாரணை, இந்தியாவிலிருந்து வெளியேற தடை போன்றவற்றின் மூலம் ஒன்றிய அரசு அச்சுறுத்தியே பங்குகளை விற்க வைத்திருப்பதாக செய்தி வெளியிட்டிருக்கிறது “அல் ஜசீரா” என்கிற சர்வதேச செய்தி நிறுவனம்.


படிக்க: டிஜிட்டல் செய்தி ஊடகங்களை ஒடுக்கத் துடிக்கும் மோடி அரசு!


இதனால், என்.டி.டிவி இயக்குநர் குழுவிலிருந்து ராதிகா மற்றும் பிரனாய் விலகியிருக்கின்றனர். அதானி குழுமத்திற்கு என்.டி.டிவி கைமாறிய உடன் என்.டி.டிவியின் விவாத நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவரும், ஆசியாவின் நோபல் பரிசு என்றழைக்கப்படும் “‘ரமொன் மகசேசே” விருதைப் பெற்றவருமான ரவீஷ் குமார், என்.டி.டிவி-யிலிருந்து விலகியிருக்கிறார். தன்னுடைய விலகல் குறித்து “ஃபாரீன் பாலிசி” (Foreign Policy) என்கிற செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “பெட்ரோல் விலை உயர்வும், வேலையில்லாத் திண்டாட்டமும் தலைவிரித்தாடும் சூழலில் மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்காமல் ஜெர்மனி அல்லது ஜப்பானில் என்ன நடக்கிறது என்று விவாதிக்க முடியுமா?” என்று கொந்தளித்திருக்கிறார். ஒன்றிய அரசின் கொள்கைகளை விமர்சித்ததால்தான் என்.டி.டிவியை பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறது அதானி குழுமம்.

இந்தியாவில் உள்ள 400 செய்திச் சேனல்கள் மற்றும் 10,000 செய்தித்தாள்களில் பெரும்பாலானவை அரசு – ஆளும் வர்க்கங்கள் கக்குவதையே செய்தியாக வெளியிடுகின்றன. மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்படுவது பற்றியோ, சொந்த நாட்டின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது பற்றியோ எவ்வித உறுத்தலுமின்றி போராடும் மக்களை வளர்ச்சிக்கு எதிரானவர்களாக சித்தரிக்கின்ற ஊடகங்கள்தான் அரசின் செல்லப்பிள்ளையாக இருக்கின்றன. ரவீஸ் வார்த்தையில் சொல்வதானால் “கோதி” (Godi- lapdog – வளர்ப்பு நாய்) மீடியாக்களாக இருக்கின்றன.

ஒட்டுமொத்த செய்தி ஊடகங்களும் காவிகளுக்கு சேவை செய்கிற சூழலில், மக்கள் பிரச்சினை வெளிக்கொண்டுவருகிற, விவாதிக்கிற சுதந்திர ஊடகங்களின் முக்கியத்துவம் முன்பை விட அதிகரித்துள்ளது. காவி பாசிஸ்டுகளை சுதந்திர ஊடகங்கள் அம்பலப்படுத்துவதால் தங்களின் ஊதிப் பெருக்கப்பட்ட வளர்ச்சி பிம்பம் மக்கள் மத்தியில் உடைப்படுவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, அதனால்தான் தங்களை விமர்சிக்கும் ஊடகங்கள், பத்திரிகையாளர்களின் குரல்வளையை நெறிக்கின்றனர் பாசிஸ்டுகள்.

பல்வேறு வகைகளில் அடக்குமுறைகளைச் செலுத்துவதன் மூலம், சமூக ஊடகங்கள் மற்றும் சுதந்திர ஊடகங்களை முடக்க எத்தனிக்கிறது பாசிச கும்பல். இதற்கெதிராக, ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள் தங்கள் கருத்துரிமை எழுத்துரிமையை நிலைநாட்ட ஒன்றிணைந்து போராட வேண்டியுள்ளது. இத்தகைய ஊடகவியலாளர்களுக்கு ஆதரவாக புரட்சிகர ஜனநாயக சக்திகளும், மக்களும் கைகோர்க்க வேண்டிய தருணமிது.

அப்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க