புதிய தொழில்நுட்ப வரைவு விதிகள்: அறிவிக்கப்படாத எமர்ஜென்சி!

இதற்கு முன்னர் செய்திகளை ‘போலி’ என்று மட்டுமே பி.ஐ.பி-ஆல் சுட்டிக்காட்ட முடியும். ஆனால் தற்போது செய்திகளை நீக்கும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டுள்ளது.

0

னவரி 17, 2023 அன்று மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தகவல் தொழில்நுட்ப வரைவு விதிகளில் (IT Rules, 2021) புதிதாக திருத்தங்கள் செய்து வெளியிட்டுள்ளது. புதிய திருத்தங்களின்படி, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் (Press Information Bureau – PIB) உண்மை கண்டறியும் குழு போலியானவை என்று சுட்டிக்காட்டும் செய்திகளை சமூக வலைதள நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து நீக்க வேண்டும்.

திருத்திற்கான இந்த முன்மொழிவுகள் அமலுக்கு வந்தால் சமூக ஊடகங்கள் உட்பட எல்லா ஆன்லைன் தளங்களிலும் வரும் கருத்துகள்/செய்திகள் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் வரும். பி.ஐ.பி-க்கு அளிக்கப்படும் அதிகாரம், 2000-வது ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69A-இன் கீழ் வருகிறது. இந்த வரைவில் எது ‘போலி’ என்பது பற்றிய ஒரு தெளிவான வரையறை இல்லை. இந்துத்துவத்தை எதிர்க்கும் அனைத்து கருத்துகளும் போலி என்று கூறப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள இத்திருத்தங்களுக்கு எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா (Editors Guild of India), இணைய சுதந்திர அறக்கட்டளை (Internet freedom foundation) உள்ளிட்ட அமைப்புக்களும், காங்கிரஸ், சி.பி.ஐ, சி.பி.எம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பி.ஐ.பி அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற முகமை ஏதேனும் செய்தியின் உள்ளடக்கத்தைப் போலி என்று சுட்டிக்காட்டினால், அச்செய்தி இணையத்தில் இருந்து நீக்கப்படும் என்று வரைவு கூறுகிறது. இதற்கு முன்னர் செய்திகளை ‘போலி’ என்று மட்டுமே பி.ஐ.பி-ஆல் சுட்டிக்காட்ட முடியும். ஆனால் தற்போது செய்திகளை நீக்கும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டுள்ளது.

இத்திருத்தம் பி.ஐ.பி-க்கு மட்டும் செய்திகளை நீக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை; அங்கீகாரம் பெற்ற முகமைகளுக்கும் நீக்கும் அதிகாரத்தை வழங்குகிறது. “அங்கீகாரம் பெற்ற முகமை” என்ற பெயரில் எந்தெந்த நிறுவனங்களுக்கு / தனிநபர்களுக்கு அதிகாரம் வழங்கப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. ஆர்.எஸ்.எஸ் — பாஜக பாசிசத்தின் பரப்புரையாளர்களான அர்னாப் கோஸ்வாமி, ரங்கராஜ் பாண்டே போன்றவர்களே மத்திய அரசால் அங்கீகரிக்கப்படுவர்.


படிக்க: பொய்களை பரப்பும் முகநூல் மார்க்கை தொடர்ந்து ட்விட்டர் மஸ்க் | ஆர்.எம்.பாபு


பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) பொய்யான செய்திகளை மட்டும்தானா ‘போலி’ என்று முத்திரை குத்திவருகிறது? அரசை அம்பலப்படுத்தும் பல செய்திகளை போலியானவை என்று பி.ஐ.பி முத்திரை குத்தியிருக்கிறது. இத்திருத்தம் அமல்படுத்தப்பட்டால் அரசை கேள்வி கேட்கும் அனைத்து கருத்துகளும் போலியானவை என்று கூறப்பட்டு முடக்கப்படும்.

பி.ஐ.பி-யின் யோக்கியதையை அதன் உண்மை சரிபார்ப்புக் குழுவின் நடவடிக்கைகளில் இருந்து புரிந்துகொள்ளலாம். செய்தியாளர் தபஸ்யா “ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அங்கன்வாடியில் சத்துணவு வழங்கும் திட்டத்திற்கு ஆதார் அட்டை அவசியம்” என்ற மத்திய அரசின் முடிவு குறித்து ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவில் (Reporters’ Collective) எழுதியிருந்தார். அரசை விமர்சனம் செய்திருந்த காரணத்தால் பி.ஐ.பி உண்மை சரிபார்ப்புக் குழு இந்தச் செய்தி போலியானது என்றும் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை தேவையில்லை என்றும் கூறியது. போலி என்பதற்கான ஆவணங்கள் எதையும் வழங்கவில்லை.

தபஸ்யா இது குறித்து ஆர்டிஐ தாக்கல் செய்தபோது, ​​குழந்தைகளுக்கு ஆதார் அட்டை தேவையில்லை என்று 2022 ஆகஸ்ட்டில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தபஸ்யாவின் செய்தி ஜூன் 2022இல் வெளியிடப்பட்டது; அப்போது அமலில் இருந்தது மார்ச் 2022 வழிகாட்டு நெறிமுறைகள். பழைய மார்ச் வழிகாட்டு நெறிமுறைகளின் படி ஆதார் அட்டை கட்டாயமாகத்தான் இருந்திருக்கிறது என்பது தெரியவருகிறது. இதன் மூலம் பி.ஐ.பி-யின் பித்தலாட்டம் அம்பலமாகிறது.

அதேபோல், மே 2020-இல் கொரோனா பெருந்தொற்றின் போது, ஜோதி சி.என்.சி (Jyoti CNC) என்ற குஜராத் நிறுவனம் வெண்டிலேட்டர்களை இலவசமாக வழங்கியது. அந்நிறுவனத்துக்கு சில பாஜக தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இலவசமாக வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்கள் தரமற்றவையாக இருப்பதாக குஜராத் மற்றும் புதுச்சேரியில் இருந்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிறுவனத்திடமிருந்து வெண்டிலேட்டர்களை அரசு விலைக்கு வாங்குவதாக இருந்தது. இது குறித்து தி வயர்-இல் செய்தி வெளியானது. இது முற்றிலும் சரியான தகவல். ஆனால், பி.ஐ.பி இதையும் ‘போலிசெய்தி’ என்று முத்திரை குத்தியது.


படிக்க: பா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் !


மத்திய அரசு முன்மொழிந்துள்ள இந்த புதிய தொழில்நுட்ப வரைவு விதிகள் சாதாரணமாக கடந்து செல்லக் கூடியது அல்ல. கருத்துச் சுதந்திரத்தை நசுக்கக்கூடிய நடவடிக்கை இது. அவசரநிலை காலகட்டத்தில் செய்திகள் அனைத்தும் அரசால் தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெளியிட அனுமதிக்கப்பட்டன. தற்போதைய பாசிச மோடி அரசும் அதையே செய்ய எத்தனிக்கிறது, அவசர நிலையை பிரகடனம் செய்யாமல்.

பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க