பா.ஜ.க ஐடி செல் தலைவரான அமித் மால்வியா. அவர் இந்துத்துவா கட்சியின் ஆன்லைன் பிரச்சார இயந்திரத்தின் அதிகாரப்பூர்வ தலைவர் என்பதால், அவரது தவறான கூற்றுக்கள் ஆபத்தான விளைவுகளைக் கொண்டுள்ளன. அவரால் பரப்பப்பட்ட 16 தவறான தகவல்கள் (பொய் செய்திகள்) இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. பாருங்கள்…

***

னவரி 15ம் தேதி, பாரதீய ஜனதா கட்சியின் ஐடி பிரிவை நடத்தும் அதிகாரி அமித் மால்வியா, குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து போராடும் டெல்லியின் ஷாகீன் பாக் பெண்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாகக் கூறி ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். மால்வியாவின் இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என ஆல்ட் நியூஸ் – நியூஸ் லாண்ட்ரி விசாரணையால் கண்டறியப்பட்டது.

இரண்டு நாட்களுக்கு பிறகு, ஷாகீன் பாக் கில் ஒரு முதியவர் உணவு உண்ணும் புகைப்படத்தை அமித் மால்வியா ட்வீட் செய்தார். “ஷாகீன் பாக் நகரில் பிரியாணி விநியோகிக்கப்பட்டதற்கான ஆதாரம்!” என்று அவர் கூறினார், அந்த இடத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ரூ.500 வழங்கப்படுவதாகவும், இலவச உணவு வழங்கப்படுவதாகவும் வதந்தியைப் பரப்பினார். அவரது ட்வீட் ஆதாரமற்றது. ஒரு போராட்டக்களத்தில் உணவு உண்பது ஒரு குற்றமா அல்லது தார்மீகரீதியில் சந்தேகத்திற்குரியதா என்ன?

ஷாகீன் பாக் பற்றி மட்டும் மால்வியா தவறான ட்வீட்டுகள் பதிவிடவில்லை. அவரது சமூக ஊடக பதிவுகளை ஆல்ட் நியூஸ் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளது.

தனிநபர்கள், சமூகங்கள், எதிர்க்கட்சிகள், தலைவர்கள் மற்றும் சமூக இயக்கங்களை இழிவுபடுத்தும் முயற்சியில் அவர் பலமுறை தவறான தகவல்களைப் பயன்படுத்துகிறார் என்பதைக் கண்டறிந்துள்ளது. அவர் பா.ஜ.கவின் ஆன்லைன் பிரச்சார இயந்திரத்தின் அதிகாரபூர்வ தலைவராக இருப்பதால், மால்வியா பரப்புகின்ற தவறான தகவல்கள் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அவரது தவறான கூற்றுக்கள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பா.ஜ.கவின் ஆதரவாளர்களால் எதிரொலிக்கப்படுகின்றன, இது மிகப்பெரிய அளவில் தவறான தகவல்கள் பிரச்சாரம் செய்யப்படுவதற்கு வழிவகுக்கிறது.ஸ்

CAA எதிர்ப்பாளர்கள் பற்றிய தவறான தகவல்கள்

லக்னோவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷமிட்டனர்:

டிசம்பர் 28 ம் தேதி, லக்னோவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் போராட்ட வீடியோவை ட்வீட் செய்ததோடு, அவர்கள் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத், பாகிஸ்தான் நீடூழி வாழ்க’ என முழக்கமிட்டதாக கூறினார்.

இந்த கூற்று தவறானது என ஆல்ட் நியூஸ் கண்டறிந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பாகிஸ்தான் சார்பு கோஷங்களை எழுப்பவில்லை, மாறாக, “காஷிஃப் சாப் ஜிந்தாபாத்” என முழக்கமிட்டுள்ளனர். அவர்கள் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதிகாட்-உல்-முஸ்லிமின் கட்சியின் லக்னோ தலைவர் காஷிஃப் அகமதுவைக் குறிப்பிடுகிறார்கள். அக்கட்சியின் உத்தரபிரதேச தலைவர் ஹாஜி சவுக்கத் அலி ஆல்ட் நியூசிடம் கூறியபோது டிசம்பர் 13 அன்று மாநில தலைநகரில் காஷிஃப் அகமது ஒரு போராட்டத்திற்கு தலைமை தாங்கினார் என்றார்.

AMU மாணவர்கள் இந்துக்களுக்கு எதிராக கோஷமிட்டனர்:

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அலிகார் முசுலீம் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது. அவர்கள் இந்துக்களுக்கு எதிராக கோஷமிட்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வீடியோ பரப்பப்பட்டது. டிசம்பர் 16 அன்று, வீடியோ கிளிப்பைப் பகிர்ந்தவர்களில் மால்வியாவும் ஒருவர்.

உண்மையில் மாணவர்கள் இந்துத்துவா, சாவர்க்கர், பா.ஜ.க, பார்ப்பனியம் மற்றும் சாதியவாதத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்துத்துவாவின் கல்லறை AMU -வில் தோண்டப்படும், சாவர்க்கரின் கல்லறை AMU -வில் தோண்டப்படும், பாஜகவின் கல்லறை AMU -வில் தோண்டப்படும், பார்ப்பனியம் மற்றும் சாதியவாதத்திற்கு கல்லறை AMU -வில் தோண்டப்படும் என முழக்கமிட்டுள்ளனர்.

CAA குறித்த பத்திரிக்கையாளரின் பேச்சு திரித்துக் கூறப்பட்டது:

“முசுலீமல்லாதவர்கள், முசுலீம்களின் மத அடையாளம், நம்பிக்கைகள் மற்றும் மேலாதிக்க முழக்கங்களை நற்செய்தியாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கும் வரை CAA எதிர்ப்பு என்பது ஆர்ப்பாட்டங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று முசுலீம்கள் விரும்புவதாக அமித் மால்வியா ஜனவரி 26 அன்று ஒரு வீடியோவை பகிர்ந்து கொண்டார்.

அலிகார் முசுலீம் பல்கலைக்கழகத்தில் தி வயர் தளத்தைத் சார்ந்த பத்திரிக்கையாளர் அர்பா கானும் ஆற்றிய உரை, கிளிப் செய்யப்பட்டு தவறாக சித்தரிக்கப்பட்டது. பத்திரிக்கையாளர் ஒரு இஸ்லாமிய சமுதாயத்தை ஸ்தாபிப்பதை ஊக்குவித்து வருவதாகவும், அத்தகைய சமூகம் உருவாகும் வரை முசுலீமல்லாதவர்களுக்கு ஆதரவளிக்கும் பாசாங்கைப் பேணுமாறு போராட்டக்காரர்களை வலியுறுத்துவதாகவும் மால்வியா கூறினார்.

ஆனால் உண்மையில் கானும் இதற்கு முற்றிலும் நேர்மாறாக கூறினார், மத முழக்கங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் இயக்கத்தின் மதச்சார்பற்ற தன்மையைப் பேண வேண்டும் என்றும் அவர் எதிர்ப்பாளர்களை வலியுறுத்தினார்.

***

ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பற்றிய தவறான தகவல்கள்

நேருவை ஒழுக்கக்கேடானவராக சித்தரிக்க முயற்சி.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பல பெண்களோடு இருக்கும் படங்களின் படத்தொகுப்பை நவம்பர் 2017ல் அமித் மால்வியா பகிர்ந்து கொண்டார். பெரும்பாலான புகைப்படங்கள் நேருவின் சகோதரி அல்லது மருமகளுடன் அல்லது ஜாக்குலின் கென்னடி போன்ற உலகநபர்களோடு இருக்கும் புகைப்படங்கள். மால்வியா பின்னர் தனது ட்வீட்டை நீக்கிவிட்டார். ஆனால் இது மற்றவர்கள் இப்படத் தொகுப்பைப் பகிர்வதைத் தடுக்கவில்லை.

மன்மோகன் சிங் குறித்த தவறாக சித்தரிக்கப்பட்ட வீடியோ

நவம்பர் 27, 2018 அன்று மன்மோகன் சிங் குறித்து ஒரு வீடியோவை மால்வியா ட்வீட் செய்துள்ளார், அதில் முன்னாள் பிரதம மந்திரி, “மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் அரசாங்கங்கள் மிகச் சிறந்தவை” என்று சொல்வதைக் கேட்கலாம். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மன்மோகன் சிங் பாராட்டு தெரிவிப்பதாக இந்த வீடியோ வெளியிடப்பட்டது.

மன்மோகன்சிங் பேசிய வார்த்தைகளை தவறாக சித்தரிக்கும் வகையில் மால்வியா பகிர்ந்துள்ளார். சிங்கின் வார்த்தைகளின்படி, “மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் அரசாங்கத்துடனான எனது உறவுகள் நன்றாக இருந்தன. பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு நாங்கள் ஒரு போதும் பாகுபாடு காட்டவில்லை.” என்று அவர் பேசியுள்ளார்.

ராகுல் காந்தி சோம்நாத் கோயிலில் பதிவேட்டில் ‘இந்து அல்லாதவர்’ என்று கையெழுத்திட்டார்:

நவம்பர் 2017ல் காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி, குஜராத்தின் சோம்நாத் கோவிலில் ‘இந்து அல்லாதவர்’ என்று பதிவேட்டில் கையெழுத்திட்டதாக மால்வியா கூறினார்.

இருப்பினும் கையெழுத்து பகுப்பாய்வு, பதிவேட்டில் உள்ள கையெழுத்து ராகுல் காந்தியின் பொதுவில் கிடைக்கக்கூடிய கையால் எழுதப்பட்ட குறிப்புகளுடன் பொருந்தவில்லை என்பதைக் காட்டுகிறது.

உருளைக்கிழங்கு தங்க இயந்திரம்

அதே மாதத்தில் ராகுல் காந்தியின் வேறொரு வீடியோவை மால்வியா ட்வீட் செய்துள்ளார். ஒரு உருளைக்கிழங்கு ஒரு முனையிலிருந்து செருகப்பட்டால், மறுமுனையில் தங்கம் வெளியே வரும் வகையில் ஒரு இயந்திரம் நிறுவப்படும் என ராகுல் கூறியதாக அந்த வீடியோவில் உள்ளது.

உண்மையில் நவம்பர் 12, 2017 அன்று குஜராத்தின் பதானில் ஒரு உரையின் போது ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துக் கொண்டிருந்த மிக நீண்ட உரையின் வீடியோ கிளிப் இது. இதன் முழுமையான வீடியோ கிளிப் காங்கிரசின் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டது.

அதில் ராகுல் பேசும்போது, சில மாதங்களுக்கு முன்பு இங்கு வெள்ளம் வந்தபோது, மோடி ரூ.500 தருவேன் என்று அறிவித்தார், ஆனால் ஒரு ரூபாய் கூட தரவில்லை. அவர் உருளைக்கிழங்கு விவசாயிகளிடம் “ஒரு இயந்திரத்தை நிறுவுகிறேன், அதில் ஒரு முனையிலிருந்து உருளைக்கிழங்கு செருகப்பட்டால் மறுமுனையிலிருந்து தங்கம் வெளியே வரும் என்றார்”, இவை என் வார்த்தைகள் அல்ல, “நரேந்திர மோடியின் வார்த்தைகள்”.

ராகுல் காந்தி குர்மீத் ராம் ரஹிமின் தேரா சச்சா சவுதாவை பார்வையிட்டார்:

ஆகஸ்ட்2017ல், மால்வியா கூறுகையில், “ராகுல் காந்தி தேரா சச்சா சவுதாவிற்கு ஜனவரி 2017 வரை சென்று வந்தார்.” என்று குற்றம் சாட்டப்பட்டது.

மால்வியா வெளியிட்ட கட்டுரையின் ஸ்கிரீன் ஷாட் முதலில் ஜனவரி 29, 2017 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை. “பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் ராகுல் காந்தி ஜலந்தரில் உள்ள தலித் சமூகத்தினரின் தேராசச் காண்ட் பல்லனைப் பார்வையிட்டார்.” என்று அக்கட்டுரையில் எழுதப்பட்டு இருந்தது.

காந்தி தேரா சச்சா சவுதாவைப் பார்க்கவில்லை, தேரா சச் காண்ட் பல்லன் என்ற இடத்தைத் தான் பார்வையிட்டார், அதன் தலைவர் சாந்த் நிரஞ்சன் தாஸ், சர்ச்சைக்குரிய பாலியல் கொலை குற்றவாளி குர்மீத் ராம் ரஹிமைப் பார்க்கவில்லை என்பதே உண்மை.

***

தேர்தல் பிரச்சாரங்களின் போது தவறான தகவல்கள் பரப்புதல்

01.02.2019 டெல்லி தேர்தலுக்கு முன்னர் தவறான தகவல் பரப்புதல்

டெல்லி மாநில தேர்தலுக்கு முன்னர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீடியோவை ஜனவரி 31 அன்று மால்வியா ட்வீட் செய்துள்ளார். கெஜ்ரிவால் ‘ரோட் ஷோவில்’ ஒருவர் கொலை செய்யப்பட்டதாக அவர் கூறினார். ஆனால் இந்த சம்பவம் பொது தேர்தலுக்கு முன்னதாகவே நிகழ்ந்தது.

மால்வியா முழு படத்தையும் வெளியிடவில்லை. வீடியோவின் பிற கிளிப்புகளில் கெஜ்ரிவாலை ஒரு நபர் அறைந்தார், பின்னர் அவர் முதலமைச்சரின் ஆதரவாளர்களால் அப்புறப்படுத்தப்பட்டார். சமூக ஊடக கூற்றுகளின் படி அந்த மனிதன் கொலை செய்யப்படவில்லை. இருப்பினும் அவர் கொடூரமாக தாக்கப்பட்டார்.

மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவுக்கு முன்னர் தவறான தகவல் பரப்புதல்

2019 மக்களவை தேர்தலுக்கு முன்னர், பா.ஜ.க தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியில் நடந்த கலவரம் குறித்து கொல்கத்தா வித்யாசாகர் கல்லூரி மாணவர் ஒருவரின் பதிவை மால்வியா ட்வீட் செய்துள்ளார். அதில் வளாகத்தில் ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் சிலை அழிக்கப்பட்டதாக திரிணாமூல் காங்கிரசை மாணவர் குற்றம் சாட்டியிருந்தார்.

வன்முறையின் காட்சிகளை ஆராய்ந்து அக்கல்லூரி ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களை விசாரித்த பின்னர் “மால்வியா பகிர்ந்த இடுகையில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.” என ஆல்ட் நியூஸ் ஒரு விசாரணை அறிக்கையை பின்னர் வெளியிட்டது.

2018 தெலுங்கானா தேர்தலுக்கு பிறகு தவறான தகவல்கள் பரப்புதல்

பா.ஜ.க -வுக்கு பின்னடைவு ஏற்பட்ட 2018 ஆம் ஆண்டு தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர், மால்வியா தரப்பில் “தெலுங்கானாவில் 7% வாக்குகளைப் பெற்று, ஒரு இடத்தை பா.ஜ.க வெல்ல முடிந்தது. அதே நேரத்தில் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமின் வெறும் 2.7% வாக்குகளைப் பெற்று ஏழு இடங்களைப் பெற்றார்.” என ட்வீட் செய்யப்பட்டது.

மால்வியா மேற்கோள் காட்டிய எண்கள் சரியானவை என்றாலும், அந்தக் கூற்று தவறானது. ஏனென்றால் வெறும் 8 இடங்களில் போட்டியிட்டு 7 இடங்களை வென்றது AIMIM. மறுபுறம் மாநில  சட்டசபையில் 119 இடங்களில் 118 இடங்களில் பா.ஜ.க போட்டியிட்டது. அதில் ஒரு இடம் மட்டுமே வென்றுள்ளது. பா.ஜ.கவுடன் ஒப்பிடும்போது AIMIM அதிக சதவீத வித்தியாசத்தில் வென்றுள்ளது. முழுமையான விவரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் கிடைக்கின்றன.

***

மோடிக்கு ஆதரவான தகவல்கள் பரப்புதல்

கும்பமேளாவைப் பார்வையிட்ட முதல் அரச தலைவர் மோடி

2019 ஜனவரி 24 ஆம் தேதி, நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தில் உள்ள கும்பமேளாவில் கங்கையில் நீராடினார். இது குறித்து உடனடியாக ட்வீட் செய்த மால்வியா, “இந்த ஆண்டில் கும்ப மேளாவிற்கு விஜயம் செய்த முதல் மாநிலத் தலைவர் மோடி” என்றார்.

 

இரண்டு வகையில் இக்கூற்று தவறானது, மோடி மாநிலத் தலைவர் அல்ல, அதே போல் கும்ப மேளாவைப் பார்வையிட்ட முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், கும்பமேளாவைப் பார்வையிட்ட முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு என்பதே உண்மை.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் தாலர் பணமதிப்பிழப்பை ஆதரித்தார்

2017ல் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் தாலர் மோடியின் பணமதிப்பிழப்பை ஆதரித்தார் என மால்வியா ட்வீட் செய்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தாலர் இது குறித்து கூறுகையில், “ஊழலை ஒழிப்பது என்ற நல்ல நோக்கத்திற்காக பணமற்ற பரிவர்த்தனை என்பது சிறந்த வழி, ஆனால் 2000 ரூபாயை அறிமுகப்படுத்தியதால் இந்த நடவடிக்கையின் நோக்கத்தைக் குறித்த குழப்பத்தை ஏற்படுத்துகிறது.” என்றே கூறியுள்ளார்.

யோகேந்திர யாதவ் குறித்த வீடியோ

ஏப்ரல் மாதத்தில் நடந்த தொலைக்காட்சி விவாதத்தில் யோகேந்திர யாதவ் சாதி அரசியல் செய்வதாக மால்வியா குற்றம் சாட்டினார். மால்வியாவின் இந்த குற்றச்சாட்டிற்கு ஆதாரம் காட்டினால் தான் அரசியல் வாழ்விலிருந்தே விலகிவிடுவதாக யோகேந்திர யாதவ் கூறினார். பதிலடியாக, யோகேந்திர யாதவ் தனது முசுலீம் அடையாளத்தைக் கூறி முசுலீம் மக்கள் மத்தியில் பேசுகின்ற வீடியோவை மால்வியா பதிவிட்டார்.

அந்த வீடியோவின் இறுதியில் நீங்கள் எப்போது பொது வாழ்க்கையிலிருந்து விலகப் போகிறீர்கள் என கேள்வியெழுப்பி இருந்தது. வாக்கு வங்கிக்காக தனது முசுலீம் அடையாளத்தைப் பயன்படுத்தியதற்காக யோகேந்திர யாதவிற்கு வரும் ஆதரவைத் தடுக்கவே மால்வியா தேர்தல் பேரணியில் கூட வராத ஒரு வீடியோவை தவறாக சித்தரித்து பதிவிட்டுள்ளார்.


தமிழாக்கம் :
தமிழாக்கம் : சமீரா
நன்றி :  ஸ்க்ரால். 

1 மறுமொழி

  1. இதில் ஒன்றும் அதிசயமாே …ஆச்சர்யமாே இல்லை ….அவர்கள் பிராண்டே அப்படித்தானே ….?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க