Wednesday, February 8, 2023
முகப்புசெய்திஇந்தியா‘முசுலீம்களை முழுவதுமாக புறக்கணியுங்கள்’ : வெறுப்பு பிரச்சாரத்தில் காவிகள்

‘முசுலீம்களை முழுவதுமாக புறக்கணியுங்கள்’ : வெறுப்பு பிரச்சாரத்தில் காவிகள்

இசுலாமியர்களுக்கு எதிரான கொலைபாதகங்களைச் செய்துவரும் இந்துத்துவ கும்பல்; ‘முசுலீம்களை முழுமையாக புறக்கணியுங்கள்’ என இப்போது முழங்க ஆரம்பித்திருக்கிறது.

-

முசுலீம்கள் மீதான வெறுப்பை வளர்ப்பதில் காவிகள் முனைப்பாக உள்ளனர். முசுலீம்களை குறிவைத்து கும்பல் வன்முறைகள் ஏவுவது, வதந்திகளை பரப்புவது, கொலை வரை சென்ற இந்துத்துவ கும்பல் ‘முசுலீம்களை முழுமையாக புறக்கணியுங்கள்’ என இப்போது முழங்க ஆரம்பித்திருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று ட்விட்டரில் ‘முசுலீம்களை முழுமையாக புறக்கணியுங்கள்’ என காவிகள் ட்ரெண்ட் செய்தனர்.

இந்துத்துவ அமைப்பு ஒன்றைச் சேர்ந்த கமலேஷ் திவாரி என்பவர் கடந்த வாரம் உத்தர பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார். நான்காண்டுகளுக்கு முன்பு இவர் முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாகவும் அதற்கு பழிவாங்க முசுலீம்களால் திவாரி கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதி, உ.பி. அரசு நான்கு முசுலீம்களை கைது செய்துள்ளது.

ஆனால், திவாரி கொல்லப்படும் முன் வெளியிட்ட வீடியோவில் ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த பின் தனக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதாகவும் பாஜகவினரால் தனக்கு ஆபத்து இருப்பதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். ‘இந்துத்துகளுக்காக’ தான் தன்னந்தனியாக போராடிக் கொண்டிருப்பதாகவும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அவரது வீட்டிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொலைக்கு பாஜகவினரே காரணம் என அவருடைய தாயார் குற்றம்சாட்டுகிறார். அவருடைய மனைவியோ இந்தக் கொலைக்கு முசுலீம்களே காரணம் எனவும், முகமது குறித்து கூறிய கருத்துக்காக திவாரியின் தலைக்கு சில முசுலீம்கள் விலை பேசினர். அவர்கள் கொன்றிருக்கலாம் எனவும் கூறுகிறார்.

திவாரி ஆதித்யநாத் மீதே குற்றம்சாட்டியிருந்த நிலையில், முசுலீம் வெறுப்பு கொண்ட ரவுடி சாமியார் ஆதித்யநாத் அரசாங்கம், முசுலீம்களை கைதுசெய்து பல கதைகளை ஊடகங்களிடம் புனைந்து வெளியிட்டிருக்கிறது. ஜீ நியூஸ் உள்ளிட்ட காவி ஆதரவு ஊடகங்கள் இந்த விசயத்தை வைத்து முசுலீம்களுக்கு எதிரான விசத்தை கக்கி வருகின்றன.

இந்தப் பின்னணியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ட்விட்டரில் காவி ட்ரோல்கள் ‘முசுலீம்களை முழுமையாக புறக்கணியுங்கள்’ என ட்ரெண்ட் செய்யத் தொடங்கினர்.

படிக்க :
கும்பல் படுகொலைகள் : புள்ளிவிவரத்தை வெளியிடாத தேசிய குற்ற ஆவணக் காப்பகம் !
♦ நீட் ஆள்மாறாட்டம் மட்டுமல்ல , நீட் தேர்வே மோசடி ! சிதம்பரம் RSYF கருத்தரங்கம்

முசுலீம்களிடமிருந்து பொருட்களை வாங்குவதைத் தவிருங்கள், முசுலீம்கள் உணவு டெலிவரி செய்தால் வாங்காதீர்கள் என்பன உள்பட பல ஆட்சேபணைக்குரிய செயல்களை செய்யும்படி அந்த ட்விட்டுகள் கூறின.

நாடு தழுவிய அளவில் மதரஸாக்களை தடை செய்ய வேண்டும் என சொன்னது ஒரு காவி ட்ரோல்.

முசுலீம்களுக்கு எதிரான ஹேஷ்டேக் ட்ரெண்டாவது இதுதான் முதல்முறை அல்ல, ஆனால் சமீப காலங்களில் இது அதிகமாகியுள்ளது. கடந்த அக்டோபர் 18-அன்று ‘புனிதர் ஒரு கே’ என்ற மிக மோசமான மதவெறி ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. அக்டோபர் 19 ‘அல்லாவை புறக்கணியுங்கள்’ என்கிற பெயரில் காவி ட்ரோல்கள் 20,000 ட்விட்களை செய்தனர்.

கவுரவ் சிங் என்பவர், “டெலிவரி செய்தவர் ஒரு முல்லா என்பதால் எனது ஸொமோட்டோ ஆர்டரை ரத்து செய்துவிட்டேன். இன்று முதல் தொடங்கும் ஒவ்வொரு முறையும் ‘அல்லாவை புறக்கணியுங்கள்’. நீங்கள் இதை ஒப்புக்கொண்டால் இதைப் பகிருங்கள்”. என தனது ட்விட்டரில் வெறுப்பை உமிழ்ந்துள்ளார்.

இதுபோன்ற பதிவுகள் தெளிவாக மத அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு எதிரான பாகுபாட்டை ஏற்படுத்தும் செயல்களாகும். இந்திய தண்டனை சட்டம் 153 ஏ பிரிவின்படி இரண்டு சமூகங்களுக்கிடைய பகைமை உருவாக்குவது சட்டப்படி தவறாகும்.

இதுபோன்ற ஹேஷ்டேக் போடுகிறவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யலாம். நடப்பதே அவர்களுடைய ஆட்சிதான் என்பதால் அப்படியெதுவும் நடக்காது என்பது தெரிந்த கதைதான்.

நடவடிக்கை எடுப்பது இரண்டாம்பட்சமானாலும் இத்தகைய ட்ரோல்களை பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல மத்திய அமைச்சர்கள் பின்தொடர்வது, காவிகள் இதை திட்டமிட்டே செய்கிறார்கள் என்பதை உறுதி செய்கிறது.

ஆத்திரமூட்டக்கூடிய படம் ஒன்றை பகிர்ந்துள்ள ‘கோவிந்த் இந்து’ என்ற பெயரிலான ட்விட்டர் கணக்கை, நரேந்திர மோடி, பியூஸ் கோயல் மற்றும் மூன்று பாஜக புள்ளிகள் பின் தொடர்கிறார்கள்.

இதேபோல, எக்ஸ் செக்யூலர் என்ற கணக்கில், காவி எதிர்ப்பாளரான ஸ்வரா பாஸ்கர் கமலேஷ் திவாரிக்கு நீதி கேட்பதாக போட்டோஷாப் செய்யப்பட்ட படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. இந்தக் கணக்கையும் மோடி, பியூஸ் கோயல் உள்ளிட்ட பாஜக புள்ளிகள் பின் தொடர்கிறார்கள்.

சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் வாயிலாக பரவும் காவிகளின் வெறுப்புப் பிரச்சாரம் சமூகத்தில் உடனடியாக தாக்கத்தை உண்டாக்குகிறது. முசுலீம்கள் டெலிவரி செய்யும் பொருட்களை வாங்க மாட்டோம் என சொல்வது அதிகரித்து வருகிறது. திட்டமிட்டு காவிகள் உருவாக்கும் கருத்தாக்கம் ஆரம்பத்திலேயே முறியடிக்கப்பட வேண்டும். சமூக ஊடக நிறுவனங்கள் இத்தகைய வெறுப்புப் பிரச்சாரத்தை தடுக்க முடியாமல் திணறும் நிலையில், காவிகளை முறியடிக்க பொது சமூகம் இணையவேண்டும்.


கலைமதி
நன்றி : தி வயர்.

  1. தமிழகத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

    சிரிக்க முடியுமா?
    தலை சொறிய முடியுமா?
    பணியிடத்தில் சட்ட உரிமை பேச முடியுமா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க