“நீட் ஆள்மாறாட்டம் மட்டுமல்ல நீட் தேர்வே மோசடி !” என்ற தலைப்பில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில் சிதம்பரம் ஆறுமுகநாவலர் அரங்கத்தில் கடந்த அக்-23 அன்று கருத்தரங்கம் நடைபெற்றது.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கடலூர் மாவட்ட செயலர் தோழர்  மணியரசன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் சி. ராஜூ; பு.மா.இ.மு.வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த. கணேசன்; விழுப்புரம் – அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி மாணவர் மதுரை வீரன்; கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர் பால்ராஜ்; மற்றும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர் பாரதிதாசன் ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர்.

நீட் தேர்வு கெடுபிடிகளும், நீட் தேர்வில் அம்பலமாகியுள்ள ஆள்மாறாட்ட மோசடிகளும் மட்டுமல்ல பிரச்சினை; நீட் தேர்வுமுறையே முறைகேடானதுதான் என்பதையும்; வியாபம் ஊழலை தேசியமயமாக்கியிருக்கிறது என்பதையும்; இவர்கள் முன்வைக்கும் தகுதி திறமை என்ற வார்த்தைகளுக்குப் பின் ஒளிந்துள்ள அரசியலையும் அம்பலமாக்கியது, இக்கருத்தரங்கம். நீட் தேர்வு, தேசியக் கல்விக்கொள்கை என அடுத்தடுத்து மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் மோடி அரசின் தாக்குதல்களுக்கு எதிராக தமிழக மாணவர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியது, இக்கருத்தரங்க நிகழ்வுகள்.

இக்கருத்தரங்கில் பங்கேற்று கருத்துரை வழங்கியோரின் பேச்சுக்களின் சாரத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

தோழர் மணியரசன்,
மாவட்ட செயலர், பு.மா.இமு. கடலூர்.

”நீட் தேர்வு கொண்டு வரும்பொழுது மருத்துவக் கல்வியில் உள்ள ஊழலை ஒழிப்பதும், தரமான மருத்துவ மாணவர்களை கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் நீட் தேர்வு முன் நிறுத்தப்பட்டது. ஆனால் நீட் தேர்வால் இன்று பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். நீட் தேர்வை பொறுத்தவரையில் மத்திய, மாநில அரசுகள், உச்சநீதிமன்றம் நம்ப வைத்து ஏமாற்றியது விளைவு மாணவி அனிதாவின் மரணம் அதைத் தொடர்ந்து பல்வேறு மாணவிகள், பெற்றோர்கள் இறந்தனர். ஆனால், இன்றோ நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து தகுதியுடைய ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருந்தும் மருத்துவராக முடியாமல் உள்ளனர்.

தோழர் மணியரசன், மாவட்ட செயலர், பு.மா.இமு. கடலூர்.

காரணம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தால் மருத்துவ சீட் உறுதி என்ற நிலைதான் மருத்துவ கல்வியில் உள்ளது. அப்போது கோடிக்கணக்கில் பணம் கொடுத்தால் மருத்துவராகலாம் என்றால் தகுதியுடைய ஆயிரக்கணக்கான மாணவர்களுடைய மருத்துவ கனவு என்னவாவது? இறந்துபோன மாணவர்களின் உயிருக்கு பதில் என்ன ? என்பதுதான் நாம் அரசின் முன்  வைக்கக்கூடிய கேள்வியாக இருக்க வேண்டும். மேலும் இந்த ஆள்மாறாட்ட ஊழல் என்பது தமிழகம் மட்டுமல்லாது இந்திய முழுமைக்கும் உள்ள மாநிலங்கள் அனைத்துமே உள்ளடக்கப்பட்டது தான் அந்த அடிப்படையில் தேசிய மருத்துவ கல்வி ஆணையத்தை சார்ந்த அதிகாரிகள், அமைச்சர்கள் என அனைவர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும். எந்தவித மாற்றங்கள் இன்றி நீட் தேர்வை தடை செய்ய வேண்டும். 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மீண்டும் மருத்துவ மாணவர் சேர்க்கை இனி நடைமுறைப்படுத்த வேண்டும்”

மதுரை வீரன் ,
மாணவர், அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி, விழுப்புரம்.

மதுரை வீரன்.

”நீட் தேர்வு என்பதே ஒரு மோசடி தான். அதில் நேர்மை என்பது துளிகூட கிடையாது. ஏனென்றால் பணம் கொடுத்தால் மருத்துவச் சீட்டு. பணம் இல்லை என்றால் மருத்துவ சீட்டு கிடையாது என்பதுதான் நீட் தேர்வு வந்த பின்பு நடக்கும் அவலமாக இருக்கிறது.

குறிப்பாக நீட் தேர்வு பயிற்சி மையங்கள் கட்டண கொள்ளையடிக்கும் கூடாரமாக மாறி இருக்கிறது. அதில் மாணவர்கள் முதலீடு செய்கிறார்கள். மருத்துவராக தேர்ச்சி பெற்ற பின்பு அந்த முதலீடு மீண்டும் பெறுவதற்கு பணம் மட்டுமே இவர்களின் நோக்கமாக மாறுகிறதே ஒழிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் துளியும் கிடையாது என்பதுதான் இந்த நீட் தேர்வு இந்த சமூகத்திற்கு சொல்லித் தரக்கூடிய பாடமாக இருக்கிறது. இந்த அவலநிலையை நீக்க மாணவர்கள் நாம் ஒன்றுபட வேண்டும்”

பால்ராஜ் ,
மாணவர், பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்.

பால்ராஜ்.

”தகுதி திறமை என்று சொல்லக்கூடிய நீட் தேர்வு  கட்டணக் கொள்ளை கூடாரங்களாக மாறிவிட்டது. நீட் தேர்வு பயிற்சி மையம் என்ற பெயரில் நாமக்கல் கிரீன் பார்க் தனியார் பள்ளியில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூபாய் 50 கோடி அளவில் ரொக்கமாக கைப்பற்றப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்திலே இவ்வளவு தொகை என்றால் இந்தியா முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் எவ்வளவு? அங்கே நடக்கும் நீட் தேர்வு பயிற்சி மையங்கள்  இன்னும் எவ்வளவு கோடி பணம் பெற்றோர்களிடம் கொள்ளை  அடிக்கிறது என்று நினைத்து பார்க்கவே அதிர்ச்சி அளிக்கிறது.

மோடி அரசு அறிவித்துள்ள ஒரே நாடு, ஒரே வரி, ஒரே ரேஷன், ஒரே தேர்தல் என்ற கோஷத்தின் அடிப்படையில் இந்தியா முழுக்க உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே தேர்வாம்? இது நீட் தேர்வில் இருந்து எப்படி தகுதியான மாணவர்களின் மருத்துவ கனவை அடைய விடாமல் தடுத்ததோ. அதேபோன்று இனி பெரும்பான்மை ஏழை மாணவர்கள் உயர்கல்வியை தகுதி இருந்தும் பெற முடியாத ஒரு நிலைக்கு தள்ளப்பட போகிறது.

நீட் தேர்வு பயிற்சி மையங்கள் கட்டண கொள்ளை அடிப்பது போல்   நாடு முழுக்க இனி பயிற்சி மையங்களின் கட்டணக் கொள்ளை அதிகரிப்பதும்,கல்வி உரிமையை பறிக்கப் போகிறது.”

பாரதிதாசன் ,
மாணவர், அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்.

”தமிழகத்தில் கல்வியை காமராஜர் காலம்தொட்டு தொடங்கியபோது கல்வியை அனைவரும் பயிலவேண்டும் என மதிய உணவு திட்டத்தை அனைவருக்குமான கல்வி ஆக மாற்றுவதற்கு கொண்டுவந்தனர். அதன் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தினர். ஆனால் இன்று நீட் தேர்வு கல்வியே கூடாது என்ற அடிப்படையில் அமைந்திருக்கிறது. மருத்துவ கல்வியில் மாற்றத்தை கொண்டுவர வேண்டுமானால் தேர்வில் மாற்றத்தை கொண்டு வரக்கூடாது; பாடத்திட்டத்தில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும்; அதுதான் சரி. ஆனால் அதிகாரிகள் இதை தவறாக செய்துள்ளனர். தண்டனையை அனுபவிப்பது மாணவர்கள் ஆகிய நாங்கள்தான். தமிழகத்தில் 23  மருத்துவ கல்லூரிகள் இருக்கிறது இதில் 2335 மருத்துவ சீட் உள்ளது வெளிமாநிலத்தில் இருந்து கைப்பற்ற இவர்கள் வந்தால் நாம் வேடிக்கை பார்ப்பதா? யாருக்கும் கிடைக்காத கல்வியை தீயிட்டு கொளுத்துவோம் என பெரியார் சொன்னார் நாமும் அதை பின்தொடர வேண்டியிருக்கிறது.

பாரதிதாசன் , மாணவர், அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்.

நீட்டுக்கு முன்பு சில இலட்சங்கள் கருப்புப் பணமாக கொடுத்து மருத்துவ சீட் வாங்கினார்கள். ஆனால் நீட் வந்த பின்பு ஒரு வருடத்திற்கு 20 இலட்சம் என 5 வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் நாம் படிப்பதற்கு தரவேண்டும். நீட்டிற்கு முன்பு கறுப்பாக இருந்த பணம் இன்று நீட்டிற்கு பின்பு வெள்ளையாக மாற்றப்பட்டிருப்பதுதான் நீட் தேர்வின் சாதனையாக இருக்கிறது. இங்கே உள்ள பாடத்திட்டம் தகுதி அற்றது என கூறுகிறார்கள். இலண்டனில் உள்ள பாடத்திட்டம் தகுதியான சிறப்பான பாடத்திட்டம் தான் அதற்காக இலண்டனில் உள்ள பாடத்திட்டத்தை இங்கு கொண்டு வந்து வைத்தால் இலண்டன் மாணவர்கள்தான் மருத்துவர் ஆவார்கள். அதற்காக அவர்களை நாம் சேர்த்துக் கொள்ளலாமா” என கேள்வி எழுப்பினார்.

வழக்குரைஞர் சி. ராஜு ,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

”நீட் தேர்வில் மாணவிகள் பெற்றோர்கள் என ஆறு பேர் தொடர்ச்சியாக இறந்துள்ளனர். நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் புரோக்கர்கள் மட்டும்தான் என இந்த வழக்கை முடிக்க பார்க்கிறார்கள். ஆனால்  அப்படியில்லை. அதற்குப் பதிலாக, அகில இந்திய மருத்துவக்கல்வி மருத்துவ கவுன்சில் அதனை சார்ந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த வியாபம் ஊழலை தாண்டும் மிகப்பெரிய ஒரு ஊழல் முறைகேடு.

வழக்குரைஞர் சி. ராஜு , மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

நீட்டை எதிர்த்து யார் போராடுகிறார்கள் மருத்துவ கனவு கொண்ட மாணவர்கள் மட்டும் அல்லாது மற்ற அனைத்து தரப்பினரும் தமிழகமும்  எதிர்க்கிறது. நீட் எதிர்ப்பு மட்டுமல்லாது ஜல்லிக்கட்டு எதிர்ப்பு, தேசிய கல்வி கொள்கை, மும்மொழி கொள்கை எதிர்ப்பு ஆகியவை சமத்துவத்திற்கான அடிப்படையில் அறிவார்ந்த போராட்டங்களை முன்னெடுப்பது தமிழகம் மட்டும்தான் மற்ற மாநிலங்கள் போராட்டங்களை முன்னெடுப்பது இல்லை. அதனை தர்க்க ரீதியாகவோ,  பகுத்தறிவு அடிப்படையிலோ பார்க்க தவறுவதுதான் மற்ற மாநிலங்கள் போராட்டம் நடத்தாமல் இருப்பதற்கு காரணங்களாக இருக்கின்றன. அனிதா பிறப்பால் வேண்டுமானால் தாழ்த்தப்பட்டவர் ஆக இருக்கலாம். ஆனால் அவர் மருத்துவராக வந்திருந்தாள் அவர்கள் சார்ந்து இருக்கக்கூடிய ஊர் மக்களுக்கு தான் மருத்துவ சேவை ஆற்றுவார். ஆனால் நீட் தேர்வு படிக்கும் மாணவர்கள் பணம் சம்பாதிக்க வெளிநாடு செல்கின்றனர். அதனால் தான் நீட் தேர்வை சாதாரணமான மக்கள் கூட எதிர்த்து நின்று போராடி வருகிறார்கள் தமிழகத்தில்.

படிக்க:
மதுவால் பள்ளி மாணவி தற்கொலை : யார் குற்றவாளி ?
அதென்ன ‘பிராமின்ஸ் ஒன்லி’ ? கக்கூஸ் கழுவவும் பிரமணாள் வருவாளா ?

நீட் கோச்சிங் என்பது பிராய்லர் கோழியை உருவாக்குவது. ஆனால் படிப்பு என்பது கற்றல் கற்பித்தல்  முறையில் படிப்பதாகும். நீட் தேர்வு கொண்டு வந்தது இங்கே நிகழ்ந்து வந்த சமத்துவத்தையும், சமுகநீதியையும் சுக்குநூறாக உடைத்து எறிந்திருக்கிறது.

இனி நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதால் மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகள் செல்லமாட்டார்கள். இதன் விளைவு அரசு மருத்துவமனை தனியார்மயமாக்கப்படும் என்பதுதான்.

நீட் எதிர்த்து போராடுபவர்களை இது அரசியலைமைப்பு சட்டத்துக்கு எதிரானது என பேசுகிறார்கள். இந்த சட்டகத்துகுள் இருந்து பேசுவதை தான் பாஜக விரும்புகிறது. பெரும்பான்மை பலத்தை கொண்டு சட்டத்தையே திருத்துகிறது.

மோடி அரசு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற பெயரில் காஷ்மீர் மாநில உரிமையை பறித்து இருக்கிறது. நிதி ஆயோக் WTO கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக மக்களுக்கு வழங்கக்கூடிய சேவைகள் உணவு , உடை, இருப்பிடம் என அனைத்தையும் மக்களுக்கு தர மறுக்கிறார்கள்.

ஒவ்வொரு கொள்கை சார்ந்த சட்டம் நிறைவேற்றும்போது பாராளுமன்றத்தில் எடுக்கக்கூடிய பெரும்பான்மைதான் அரசியல் முடிவு என சொல்கிறார்கள். களத்திலே  திட்டங்களை  எதிர்த்துப் போராடும் மக்களின் எதிர்ப்புதான் பெரும்பான்மை என ஜனநாயக அடிப்படையில் தான் அந்த திட்டத்திற்கான முடிவை எடுக்க வேண்டும்.

போராட்டங்களுக்கு வெற்றி தோல்வி அளவுகோல் அல்ல, கோரிக்கையின் நியாயம் தான் அளவுகோல். அரசின் கொள்கைகளை நேரடியாக எதிர்க்கும் வகையில்தான் நமது முழக்கத்தை முன்நிறுத்தி  போராடுவதுதான் மக்களுக்கு அதிகாரம், மாணவர்களின் அதிகாரம், தொழிலாளர்களின் அதிகாரம், விவசாயிகளின் அதிகாரம்”

தோழர் த. கணேசன் ,
மாநில ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.

”தமிழகத்தில் மட்டும்தான் நீட், தேசிய கல்வி கொள்கை மற்றும் பெரும்பான்மை மக்களுக்கு மக்களை பாதிக்கக்கூடிய மோடி அரசின் பல திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடக்கின்றன. காரணம் வடமாநிலங்களில் மாணவர்களையும், மக்களையும் பார்ப்பன இந்துமத கட்டுக்கதைகள் அவர்களை சிந்திக்க விடாமல் வைத்துள்ளது. வடமாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகம் அதற்கு நேர் எதிரானது. குறிப்பாக எந்தத் திட்டமாக இருந்தாலும் மக்களும் சரி, மாணவர்களும் சரி பகுத்துப் பார்ப்பது, கேள்வி கேட்பது என்பதோடு  தவறுக்கு எதிரானப் போராட்டங்களை முன்னெடுப்பது ஆரம்ப காலம் தொட்டு இருந்து வருகிறது.

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் மட்டுமல்ல, நீட் தேர்வு ஒரு மோசடி. சர்வதேச மாஃபியா கும்பலே இதில் இருக்கிறது என்பதை இன்று நாம் நடைமுறையில் பார்த்து வருகிறோம். அன்றாடம் செய்திகளில் தகவல்களை நாம் படித்து வருகிறோம். நமக்கு தெரிந்த அளவில் ஐந்து மாணவர்கள் நீட் தேர்வில் முறைகேடு செய்துள்ளனர் என்பது தெளிவு. இது தமிழகத்தில் மட்டும்தான் நடந்து உள்ளது என்று திட்டமிட்டு இந்த ஊடகங்களால் பொய்ப்பிரச்சாரம் செய்யப்படுகின்றன. இது நாடு முழுவதும் மாஃபியா கும்பலாக செயல்பட்டு புரோக்கர்கள் ஏஜென்சிகளை கொண்டு நீட் தேர்வை நடத்துகிறார்கள். 2016-ல் நீட்தேர்வு நடத்தியது ஒரு அமெரிக்க தனியார் நிறுவனம்தான் முதல் முறைகேட்டில் ஈடுபட்டது.

படிக்க:
நீட் தேர்வு மோசடி : தேசியமயமாக்கப்படும் வியாபம் !
NEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்

இவர்கள் சொல்லக் கூடிய தகுதி திறமை கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு இங்கு எந்த வித அங்கீகாரமும் கொடுக்கப்படவில்லை.  அரசு பள்ளியில் நீட் பயிற்சி பெற்ற 40,000 மாணவர்களில் இருந்து ஒரே ஒரு மாணவர்தான் அரசுபள்ளி மாணவன். இவர்கள் சொல்லும் திறமை என்பது, பெரும்பான்மை கிராமப்புற ஏழை மாணவர்களை வடிகட்டுவது அவர்களின் மருத்துவ கனவை சிதைப்பது தான்.

நன்றியுரை : தோழர் மோகன், அமைப்பாளர், புமாஇமு, புதுச்சேரி.

ஏழைகளுக்கு மருத்துவக் கல்வி கிடையாது; பணம் உள்ளவர்களுக்கும், பணக்கார வீட்டுப் பிள்ளைகளையும் மெட்டீரியல் மூலதனமாக பார்க்கிறது நீட் தேர்வு முறை. உண்மையில், நவீன மருத்துவ பிக்பாக்கெட் கொள்ளையர்களைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பெரும்பான்மை மாணவர்களுக்கு எதிரான நீட் தேர்வை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்.”

புமாஇமு

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி.
தொடர்புக்கு : 97888 08110, 91593 51158, 81244 12013

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க