நீட் தேர்வின் மூலம் தகுதியான மருத்துவர்களை கொண்டு வரப்போவதாக அறிவித்து, நாடு முழுவதும் ஏராளமான கெடுபிடிகள், கட்டுப்பாடுகள் என்று இந்தியாவை புரட்டிப்போடும் அளவிற்கு பம்மாத்து காட்டியது மோடி அரசு. ஆனால் அதெல்லாம் தற்போது புஸ்வாணமாகி சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது. மத்தியப்பிரதேசத்தின் ”வியாபம்” மோசடி போல், தற்போது நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி நடந்திருக்கிறது.

Neet Impersonation student arrest
உதித் சூர்யா

நடப்பாண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா என்பவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார். அவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து அவருடைய மருத்துவப்படிப்பு சேர்க்கை ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் புகார் ஒன்றை கொடுக்க உதித் சூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அதேசமயம் இந்த வழக்கு விசாரணையை டிஜிபி திரிபாதி சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இவ்விவகாரம் செய்தித் தாள்களிலும், அரசியல் பத்திரிகைகளிலும் பரபரப்பான செய்தியாகப் பேசப்பட்டதைத் தொடர்ந்து, திருப்பதியில் தலைமறைவாக இருந்த உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரைக் கைது செய்தனர்.  இதனிடையே, நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில், தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் அவர்களின் அறை மற்றும் புகாருக்கு உள்ளான உதித் சூர்யாவின் வகுப்பறை, நேர்காணல் நடந்த இடங்களிலும் சி.பி.சி.ஐ.டி சோதனை நடத்தியது. மேலும், தேனி அரசு மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வர் எழிலரசனிடமும் விசாரணை மேற்கொண்டது.

படிக்க:
ஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு ! | பொ.வேல்சாமி
♦ ’ நீட் ’ தேர்வு – ’ ரிசல்ட் ’ கதைகள் !

இதைத்தொடர்ந்து, உதித் சூர்யாவிற்கு உதவியதாக பேராசிரியர்கள் வேல்முருகன், திருவேங்கடம் உள்ளிட்டோர் மீது தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கானாவிலக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரில், “தான் எழுதிய தேர்வின் ஹால்டிக்கெட்டை வைத்து தான் கலந்தாய்வில் பங்கேற்க முடியும். வேறொரு நபர் புகைப்படத்துடன் பொருந்திய ஹால்டிக்கெட்டை வைத்து, இவர் எப்படி கலந்தாய்வில் ஈடுபட முடியும்” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இவருக்கு பின்னால் இருந்து உதவியவர்கள் யார்? கலந்தாய்வின் போது ஏற்பட்ட சிக்கல்கள் என்னென்ன என்பதை மேற்கொண்டு விசாரணை செய்ய வேண்டும் என்றும் அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நீட் தேர்வு மையம் நடத்தி வரும் ஜார்ஜ் ஜோசப்-க்கு பெரிய அளவில் பங்கு இருப்பதாக தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீட் தேர்வு மையம் நடத்தி வரும் ஜார்ஜ் ஜோசபை திருவனந்தபுரத்தில் கைது செய்துள்ளார்கள்.

***

இதற்கு முன்பாக, நீட் தேர்வின் மோசடி கும்பல் யார் எல்லாம் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ சீட் பெற்றார்களோ அவர்களுடைய பெற்றோர்களுக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டி இருக்கிறது ஒரு கும்பல். சத்ய சாய் மருத்துவக்கல்லூரி மாணவி அபிராமி அவருடைய தந்தை மாதவன், பாலாஜி மருத்துவக்கல்லூரி மாணவர் பிரவீன் அவருடைய தந்தை சரவணன், எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மாணவர் ராகுல் மற்றும் அவருடைய தந்தை டேவிட்  உள்ளிட்டவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்.

NEET Exam impersonation
தொடரும் நீட் மோசடி கைதுகள்.

சற்றும் எதிர்பாராத இந்த போன் கால்களால் திகைத்த பெற்றோர்கள் தங்களுடைய ஏஜெண்ட்டை தொடர்புகொள்கிறார்கள். ஏஜெண்ட் “தொடர்பு எல்லைக்கு அப்பால்” இருக்க, வேறு வழியின்றி தங்களுடைய வழக்கறிஞர் மூலம் போலிசின் உதவியை நாட அவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தது போலிசு. இவர்களிடம் நடத்திய விசாரணையில் நீட்  மோசடியில் சிக்கிய அனைவரும் பொன்னையா ராமஜெயம் இன்ஸ்டியுட்  ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் படித்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இக்கல்லூரியில் போதிய கட்டமைப்பு வசதியில்லை என்பதால் பாதியில் இழுத்து மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் தன் நண்பரான சஃபியின் மூலம் ரஷீத் என்கிற ஏஜெண்டை தொடர்பு கொண்டு அவருடைய உதவியுடன் ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்டிருக்கிறார். சஃபியும் தன் மகன் இர்பானுக்கு மோசடியின் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனையில் சீட் வாங்கி தந்திருக்கிறார்.  இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால், இவ்விவகாரம் வெளியில் வந்தபிறகுதான் சஃபி ஒரு போலி மருத்துவர் என்பதும் அம்பலமாகியது.

ஆள்மாறாட்ட மோசடியின் மீது நம்பிக்கை இல்லாத ப்ரவீன், ராகுல் ஆகிய இருவரும் ஆவடியில் உள்ள ஒரு கோச்சிங் செண்டர் மூலம் இரண்டு இடங்களில் விண்ணப்பித்து தேர்வு எழுதி சேர்ந்திருக்கிறார்கள், என்று கூறப்படுகிறது.

படிக்க:
காஷ்மீர் : இளம் பெல்லட் குண்டு மருத்துவர்கள் !
♦ பொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38

மேலும் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விழுப்புரம், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 3 மாணவர்கள் நீட் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீசு தரப்பில் கூறப்படுகிறது. அவர்களையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

impersonation சஃபியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெங்களூரை சேர்ந்த ரஷீத் மும்பை, டெல்லி, லக்னோ ஆகிய ஊர்களில் உள்ள நீட் பயிற்சி மையங்கள் மூலம் போலியான மாணவர்களை தயாரித்து அவர்களை தமிழக மாணவர்களின் பெயரில் தேர்வு எழுத வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த மோசடி கும்பலின் நெட்வொர்க் கேரளா, உ.பி, ராஜஸ்தான், பீகார் என்று இந்தியாவின் பல மாநிலங்களில் விரிந்து இருப்பதாகச் கூறப்படுகிறது. எனில், இந்த ஆள் மாறாட்டம் தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் நடந்திருப்பதற்கான வாய்ப்பு கண்டிப்பாக உண்டு.

இது மத்தியப் பிரதேசத்தில் மருத்துவ நுழைவுத் தேர்வில் நடத்தப்பட்ட வியாபம் ஊழலை நினைவுபடுத்துகிறது. இந்தியா முழுவதும் பரந்து விரிந்த புரோக்கர் வலைப்பின்னல்கள், மருத்துவக் கல்லூரிகள், கோச்சிங் செண்டர்கள், மாநில பாஜக அரசு, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட மிகப்பெரிய கூட்டணிதான் வியாபம் ஊழலை நடைமுறைப்படுத்தியது.

தற்போது நடைபெற்றிருக்கும் நீட் மோசடியிலும் கோச்சிங் செண்டர் முதல் பல்கலைக் கழகம், நீட் தேர்வு வாரியம் உட்பட ஒரு மிகப்பெரிய கூட்டுக் களவானி கும்பல் ஈடுபட்டிருகிறது.

வியாபம் ஊழல் அம்பலமான போது, ஆளும் பாஜக அரசுக்கு எதிரான சாட்சியாக இருந்த ஒவ்வொருவராக மர்மமான முறையில் கொல்லப்பட்டனர். இது குறித்து செய்தி சேகரித்த பத்திரிகையாளர் வரை 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

நீட் தேர்வின் மூலம் வியாபம் தேசியமயமாக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் கோடி மதிப்பிலான மோசடி வியாபாரம் கல்லாக் கட்டத் தொடங்கியுள்ளது. அதுவும் நம்முடைய வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில், நமக்கான வாய்ப்பை பறித்துவிட்டு, இந்த ஒட்டுண்ணிகள் அமர்ந்து மருத்துவம் படிக்கவிருக்கிறார்கள் !!

ஊழலும் மோசடியும் தேசியமயமானதற்குப் பெயர்தான் நீட். ஆனால் அதற்கு வெளிப்பூச்சு என்னவோ ”தகுதியும் திறமையும்தான்” !


எழில்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க