”நீட் ரிசல்ட் வந்தாச்சி, தமிழினி 654 மார்க் வாங்கியிருக்காளாம்”

”டேய், சங்கீதா பேசறேண்டா. யோகேஷ் 215 மார்க் வாங்கியிருக்கான். கொஞ்சம் வீட்டுக்கு வாயேன்”

“அந்தப் பொண்ணை பார்க்கவே கொஞ்சம் பரிதாபமாத் தாங்க இருக்கு. முன்னூத்தி இருபது மார்க்காம். நேத்தி பூரா ஒரே அழுகை”

முதலிரண்டு தகவல்கள் தொலைபேசியிலும் கடைசி தகவல் நேரிலும் சொல்லப்பட்டது. நீட் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து தெரிந்தவர்கள், உறவினர்கள் வட்டாரத்தில் மருத்துவ படிப்புக் கனவுகளோடு தேர்வெழுதியவர்கள் அரக்கப் பரக்க ஏதேனும் ஒரு கல்லூரியில் இடம் பிடிக்க அலைந்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரின் பின்னும் ஒரு கதை உள்ளது.

***

தமிழினி :

நண்பரின் மூத்த அண்ணன் மகள். இந்த முறை 654 மார்க் வாங்கியிருக்கும் தமிழினிக்கு இது மூன்றாவது நீட் தேர்வு. மூன்று தடவைகளுக்கு மேல் முயற்சி எடுப்பது சாத்தியமில்லை என்பதால் கடந்த ஓராண்டாக இரவு பகலாக படித்து வந்தாள். இந்தாண்டு தேர்வுக்கு சரியாக பத்து நாட்களுக்கு முன் தமிழினியின் தாயார் இறந்து விட்டார்.

தமிழினியின் தாயார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக கர்பப்பை புற்று நோயால் அவதியுற்று வந்தார். பத்தாண்டுகளுக்கு முன் முதன் முறையாக புற்று இருப்பது கண்டறியப்பட்டபோது கர்பப்பை அகற்றப்பட்டது. கடுமையான கீமோதெரபி சிகிச்சைகளைத் தாங்கிக் கொண்டு மீண்டு எழ அவருக்கு ஓராண்டுக்கு மேல் ஆனது. பின்னர் ஐந்தாண்டுகளுக்கு முன் இரண்டாவது தாக்குதல். மீண்டும் கீமோ. இரண்டாவது தாக்குதலில் மிகுந்த போராட்டங்களுக்குப் பின் மீண்டு வந்தவரை மீண்டும் மூன்றாவது முறையாக ஓராண்டுக்கு முன் தாக்கியது புற்று நோய்.

இரண்டாவது முறை தாக்குதலில் இருந்து தப்பிய பின் வாழ்க்கையை ஓரேயடியாக வெறுத்துப் போன தமிழினியின் தாய் இறுதி முறையாக சில அறிகுறிகள் தென்பட்ட போது யாரிடமும் சொல்லவில்லை. நோய் முற்றி ஒரு வழியாக செத்துப் போனாலும் பரவாயில்லை கீமோ எடுத்துக் கொள்ள முடியாது என இருந்து விட்டார். ஆறு மாதங்களுக்கு முன் புற்று உடலின் பிற உறுப்புகளுக்கும் பரவிய பின்னர்தான் மருத்துவமனைக்குச் சென்றனர். இம்முறை புற்று மூன்றாம் நிலைக்குச் சென்று விட்டது. தமிழினியின் நீட் தேர்வுக்கு சரியாக பத்து நாட்களுக்கு முன் அவரது தாய் அங்கையர்கண்ணி இறந்து போனார்.

தமிழினி அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் படித்தாள். பன்னிரெண்டாம் வகுப்பில் 94 சதவீதம் மதிப்பெண்கள். தாயின் நோயை அருகில் இருந்து பார்த்தவள் என்பதால் மருத்துவப் படிப்பை லட்சியமாகக் கொண்டிருந்தாள். நடுத்தர வர்க்கக் குடும்பம் என்றாலும் பெரிய குடும்பம். அங்காளி பங்காளிகள் என சேர்த்தால் பெரும் கூட்டமே சேரும்.

தமிழினி முதலிரண்டு முறை நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் எடுக்கவில்லை என்றாலும் அந்தக் குடும்பமும் உறவினர்களும் அவளுக்குப் பின் நின்றது. ஒவ்வொருவதும் ஐம்பதும் நூறுமாக கொடுத்து சென்னைக்கு அனுப்பி அங்கே உறவினர் வீட்டில் தங்கவைத்து படிக்க வைத்தனர். இப்போது நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதோடு பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கான தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாள்.

தமிழினிக்கு சென்ற வாரம் தொலைபேசினேன், “ரெண்டு வருசம் வீணாப் போச்சி அண்ணே” என்றாள். ஆனால் அதைச் சொல்லும் போது குரலில் துக்கம் ஏதும் தெரியவில்லை.

***

யோகேஷ் :

“எனக்கு இங்கே கெடைக்கலேன்னா மொரீஷியஸ் அனுப்புங்க. இல்லேன்னா இன்னொரு வருசம் ட்ரை பண்ணி பாக்கறேன். ஆனா வேற எதுவும் படிக்க முடியாது. படிச்சா இதான். இல்லேன்னா இல்ல” நான் அருளானந்தம் வீட்டுக்குப் போன போது யோகேஷ் தொண்டை புடைக்க கத்திக் கொண்டிருந்தான். அருளானந்தம் பரிதாபமாக சோபாவில் உட்கார்ந்து முறைத்துக் கொண்டிருந்தார்.

அருளானந்தம் அடிமட்டத்தில் இருந்து உழைத்து முன்னேறியவர். சித்தாளாகத் துவங்கி, மேசனாக, மேஸ்திரியாக உயர்ந்து இப்போது காண்டிராக்டராக இருக்கிறார். எப்போதும் நான்கைந்து கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருக்கும். எப்படியாவது தனது ஒரே மகனை கட்டிடப் பொறியாளராக்கி தான் பார்த்துப் பார்த்து உருவாக்கிய சாம்ராஜ்ஜியத்தை அவனிடம் கொடுத்து விட வேண்டும் எனக் கனவு கண்டு கொண்டிருந்தார்.

படிக்க:
♦ நீட் தேர்வின் வெற்றியும் தோற்கடிக்கப்பட்ட சமூக நீதியும் !
♦ நீட் : தமிழக மாணவர்களை குற்றவாளிகளாக கருதும் மோடி அரசு !

“அப்பா, எவனைப் பார்த்தாலும் பி.ஈ படிக்கிறான். நானும் பி.ஈ படிச்சா எல்லாவனும் என்னைப் பார்த்து சிரிப்பான்” எனப் பேசிப் பேசி அப்பாவின் மனதைக் கரைத்தான் யோகேஷ்.

யோகேஷ் இரண்டாவது முயற்சியாக நீட் எழுதினான். முதல் முறையாக சென்ற ஆண்டு எழுதி பெயில் ஆகி விட்டான். அதன் பின் புகழ் பெற்ற ஆகாஷ் அகாடமியில் 1.5 லட்சம் கட்டி கடந்த ஓராண்டாக படித்து வந்தான். அவனது அகாடமியிலேயே இதுதான் குறைந்த மார்க் என அருளின் மனைவி (என் கல்லூரித் தோழி) தலையில் அடித்துக் கொண்டாள்.

“ரமேசு, நீயாவது வந்து அவனை எப்படியாச்சும் பேசி பி.ஈ படிக்க ஒத்துக்க வையேண்டா. இந்த தறுதலைய நினைச்சி அருளுக்கு ஒரே பிரசர். இப்ப தொழிலும் முன்னப் போல இல்ல. ரொம்ப டவுனாகிடிச்சி. அதுவும் இதுவுமா சேர்ந்து அருளு நைட்டெல்லாம் தூங்கறதே இல்ல” சங்கீதா எனக்குத் தொலைபேசியில் பேசி வீட்டுக்கு அழைத்திருந்தாள். எப்படியாவது பேசி யோகேஷை சரிக்கட்டி விடு என தொலைபேசியில் கேட்டிருந்தாள். எனக்கு யோகேஷைத் தெரியும். அவனை சம்மதிக்க வைப்பது அத்தனை சுலபம் இல்லை என்றும் தெரியும். இருந்தாலும் தோழிக்காக சென்றேன்.

“அங்கிள், உங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்ல. தேவையில்லாம ஏன் தலையிடறீங்க? நீங்க எங்கம்மாவோட பிரண்டுன்னா அவங்களோட உங்க பஞ்சாயத்த வச்சிக்கங்க. தேவையில்லாத என் கிட்ட வேணாம்” நான் முதல் வரி பேசுவதற்கு முன்பே யோகேஷ் பொரிந்தான்.

”டேய், கொஞ்சம் பேச விடேண்டா?” என்றேன்.

“நீங்க என்ன பேசுவீங்கன்னு தெரியும். எங்கப்பா இவ்ளோ சம்பாதிக்கிறாங்க இல்ல. நான் மட்டும் தானே பையன்? எனக்கு செலவு செய்ய ஏன் கசக்குது? என்னா ஒரு…. ஒரு கோடி செலவாகுமா? வேணும்னா நான் படிச்சி ஒரே வருசத்துல சம்பாதிச்சி கொடுத்திடறேன். தரச் சொல்லுங்க” என்றவன் அவன் அறைக்குச் சென்று படீரென கதவை அறைந்து சாத்திக் கொண்டான். உள்ளே ஜஸ்டின் பீய்பரின் அலறல் கேட்கத் துவங்கவும் அருளைக் கூப்பிட்டுக் கொண்டு வெளியே வந்தேன்.

இருவருமாக பக்கத்து தேனீர் கடைக்கு வந்து ஆளுக்கொரு தேனீர் சொல்லி விட்டு காத்திருந்தோம். அவரே முதலில் பேச ஆரம்பித்தார்.

“எப்படியும் சீட்டு கிடைச்சிரும்னு சொல்றாங்க”

“எப்படிங்க கிடைக்கும்? இப்ப யோகேஷோட ரேங்க்கு 5 லட்சத்துக்கு மேல. எப்படிப் பார்த்தாலும் ஒரு லட்சம் சீட்டு தானே இருக்கும்? அப்புறம் எப்படி கிடைக்கும்னு நம்பறீங்க?”

“இல்லைங்க, கவர்ன்மெண்ட்ல கிடைக்காது. பிரைவேட்ல கவர்மெண்ட்டுக்கு ஒதுக்கியிருக்க சீட்டுகளுக்கும் கிடைக்காது. ஆனா டீம்டு காலேஜுகள்லயும் பிரைவேட்லயே மேனேஜ்மெண்ட் கோட்டாவுல இருக்கிற என்.ஆர்.ஐ ரிட்டர்ன் சீட்டுகளும் கிடைக்க வாய்ப்பிருக்கு. மாப் அப் ரவுண்ட்ல கிடைக்கலாம்னு சொல்றாங்க” என்றார் அருள்.

“சரி, அங்கேயும் இருக்கிற குறைந்த சீட்டுகளுக்கு நல்ல போட்டி இருக்குமில்லே? நிறைய செலவாகுமே?” சமீபத்தில் அருள் வாங்கிப் போட்ட இடம் ஒன்று கோர்ட் வழக்கில் மாட்டிக் கொண்டதில் பெரிய தொகை ஒன்று மாட்டிக் கொண்டிருந்தது. இப்போது சில லட்சங்கள் எடுப்பதே சிக்கல் என்பது எனக்குத் தெரியும்.

“வாஸ்தவம் தான். வருசத்துக்கே முப்பத்தஞ்சி வரலாம்னு சொல்றாங்க. அதிலயும் மூன்று வருட பீசையும் ஒரே தவணையா கட்டச் சொல்றாங்க”

“எப்படி சமாளிப்பீங்க?”

“எதுனா நிலத்தை விற்க வேண்டியதுதான்… இப்ப நம்ம அவசரத்தைப் பார்த்து ரொம்பவே விலையைக் குறைச்சு கேட்கிறாங்க”

“சரிங்க, இதுக்கு பேசாம யோகேஷ் மண்டைல ஒரு தட்டு தட்டி சிவில் படிக்க சொல்ல வேண்டியது தானே?”

“இல்லைங்க. அவன் பிறந்ததிலேர்ந்து கேட்டது எதையும் நான் மறுத்ததில்லே. இப்ப நான் எதுனா சொல்லப் போயி அவன் எதுனா முடிவெடுத்திட்டா? பேப்பர்ல வேற நிறைய பார்க்கிறோம் இல்ல?”

தேனீர் முடிந்து எழுந்தோம்.

***

அந்தப் பெண் (தர்ஷினி)  :

தர்ஷினி எங்கள் ஊர்தான். எங்கள் ஊரிலேயே இருக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தாள். அவள் அப்பா சுந்தரவேல் எனக்கு தூரத்து முறையில் அண்ணன் வேண்டும். சுந்தரத்திற்கு பக்கத்தில் உலோக உருக்காலை ஒன்றில் வேலை; ஈய உலைக்களத்தின் ஆபரேட்டர்.

கடந்த இருபதாண்டுகளாக ஈய உலைக்களத்தில் வேலை பார்த்ததில் அவரது தோல் முழுவதும் பாதிக்கப்பட்டு ஒரு வகையான சொரியாசிஸ் போல் வந்து விட்டது. கை கால்கள் எல்லாம் மீன் செதில்கள் போல் வெள்ளை நிறத்தில் திப்பி திப்பியாக இருக்கும். சென்ற ஆண்டு வேலைக்குச் சென்ற இடத்தில் மயங்கி விழுந்து விட்டார். இரத்த வாந்தியும் எடுத்திருக்கிறார்.

அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பரிசோதித்துப் பார்த்ததில் இரத்தத்தில் ஈயத் துகள்கள் இருப்பதாகவும் அதிகபட்சம் சில ஆண்டுகள் தான் ஆயுள் என்றும் சொல்லி இருக்கிறார்கள். தர்ஷினி அப்போது பதினோராம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதியிருந்த சமயம். பத்தாம் வகுப்பில் 90 சதவீதம் வாங்கியிருந்த தர்ஷினிக்கு இயல்பாகவே பதினோராம் வகுப்பில் முதல் வகுப்பு கொடுத்திருந்தனர். எதாவது ஒரு பட்டம் பெற்றுக் கொண்டு டீச்சர் ட்ரைனிங் சேர வேண்டும் என்கிற விருப்பத்தில் இருந்த தர்ஷினி அப்பாவின் நோயைக் குறித்து அறிந்த பின் மருத்துவராவது என முடிவு செய்தாள்.

கடந்த ஓராண்டாக மிகக் கடுமையாக நீட்டுக்கு படித்து வந்தாள். தனியார் நிறுவனத்தில் பணம் கட்டிப் படிக்க வசதியில்லை. இரவு பகலாகப் படித்து 320 மதிப்பெண் எடுத்திருந்தாள். இந்த மதிப்பெண்ணுக்கு அரசு கல்லூரியில் இடம் கிடைக்காது. தனியார் கல்லூரியில் அரசுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கைகளிலும் இடம் கிடைக்காது. தனியார் கல்லூரியின் நிர்வாகக் கோட்டா அல்லது நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் கிடைக்கலாம். எப்படியும் வருடத்திற்கு 12 லட்சம் வரை செலவாகலாம். தர்ஷினி மருத்துவ படிப்புக் கனவைக் கைவிடும் முடிவை எடுத்திருப்பதாகச் சொன்னார்கள். வெளியூர் சென்று விட்டு மூன்று வாரம் கழித்துதான் அவளைப் பார்க்கச் சென்றேன்.

“என்ன படிக்கப் போறே தர்ஷி..”

“நர்சிங்குக்கு அப்ளை பண்ணிருக்கேன் சித்தப்பா” அவள் முகத்தில் மெலிதான சோகம் தவிர பெரிய துக்கம் ஏதும் இல்லை.

“வருத்தமா இல்லையா தர்ஷி?..”

“எனக்கென்ன சித்தப்பா… அப்பாவுக்கு முடியாம போனா நானே பார்த்துக்கனும்னு நினைச்சேன். அவங்க கைய பாத்தீங்களா? வேற யாரும் அக்கறையா பார்த்துக்க மாட்டாங்க. இப்ப என்ன? டாக்டரா இல்லாட்டி, நர்சா இருந்து பார்த்துக்கப் போறேன். அவ்ளோ தானே?” சிரித்தாள்.

“சரிம்மா, நல்லா படி” உச்சியில் தட்டிக் கொடுத்து விட்டுக் கிளம்பினேன்.

வசீகரன்

2 மறுமொழிகள்

  1. பல்வேறு சமூக பொருளாதார பிராந்திய கல்வி பின்னணிகளைக் கொண்ட 16 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்துவதைவிட ஆண்டுதோறும் எம்பிபிஎஸ் படிப்பு முடித்து வெளிவரும் 65,000 மாணவர்களுக்கு வெளியேறும் தேர்வு நடத்துவது தான் சரியான முடிவாக இருக்க முடியும். தகுதியான தரமான மருத்துவ கல்வியையும் மருத்துவர்களையும் உறுதிப்படுத்துவதற்கு இதுதான் சரி. இந்த வெளியேறும் தேர்வானது பல தாள்களை கொண்டதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தாளிலும் குறிப்பிட்ட மதிப்பெண்கள் எடுத்தால் எம்பிபிஎஸ் படிப்பில் பாஸ் என அறிவிக்கலாம். பல தாள்களை கொண்ட இதே தேர்வை உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். அரசியல் நோக்கத்தோடு நீட் தேர்வை கட்டாயப்படுத்தும் பாஜக அரசு இதைப்பற்றி எல்லாம் யோசிக்காது.

    • First we don’t got enough teacher’s to teach properly in Post graduate studies . Because we are ready to pay enough salary to Master degee Doctors equal they able earn in private sector. The Doctor who are with good knowledge they are not ready to work as teacher’s because of politics within College and Politicians.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க