ஜீரோ பெர்சண்டைல்: புழுத்து நாறுகிறது நீட் தேர்வின் யோக்கியதை!

இவ்வாண்டு பூஜ்ஜியம் சதமானம் (Zero Percentile), அதாவது இந்த ஆண்டு முதுநிலை நீட் தேர்வின் கடைசி மதிப்பெண்ணான -40 பெற்ற மாணவனும் விண்ணப்பிக்கலாம் என்பதே இந்த அறிவிப்பின் பொருள். அதாவது அனைத்து கேள்விகளுக்கும் தவறாக பதில் அளித்திருக்கும் ஒரு மாணவனும் தகுதியுடையவன் என்று அர்த்தம்.

நீட் தேர்வென்பது தகுதியான மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது; நீட் தேர்வால் பல ஊழல்களும் முறைகேடுகளும் குறைக்கப்படுகிறது’ என்று படாடோபமாக கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலமாகி வருகிறது.

செப்டம்பர் 20 அன்று மோடி அரசின் சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் மருத்துவ கலந்தாய்வுக் குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இரண்டு சுற்று கலந்தாய்விற்குப் பிறகும் முதுநிலை மருத்துவ படிப்பில் மருத்துவ இடங்கள் காலியாக இருப்பதால் நீட் தேர்வில் பூஜ்ஜியம் சதமானம் (percentile) எடுத்திருந்தாலும் முதுநிலை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இந்த பூஜ்ய சதமான கட்-ஆஃப் அனைத்து பிரிவினருக்கும் பொருந்தும்.

இதன் அடிப்படையில் தான் தற்போது கலந்தாய்வு நடந்துகொண்டிருக்கிறது. இந்த அறிவிப்பிற்கு பல மருத்துவ அமைப்புக்களும் எதிர்க்கட்சிகளும் அதிருப்தியும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.

இங்கு நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பூஜ்ய சதமானம் என்று இவர்கள் குறிப்பிடுவது “Percentile” (சதமானம்),  “Percentage” (சதவீதம்) இல்லை. இவ்விரண்டும் பார்பதற்கு ஒன்றுபோல் இருந்தாலும் அடிப்படையில் வேறானது.

சதவீதம் vs சதமானம் (Percentage vs Percentile)

பெர்சண்டேஜ் என்பது சதவீதம். நூறில் எத்தனை பங்கு எனக் கணக்கிடுவது. உதாரணமாக 100 மதிப்பெண் தேர்வில் 50 பெர்சண்டேஜ் என்பது 50 மதிப்பெண்கள். இந்த பெர்சண்டேஜ் எத்தனை பேர் தேர்வு எழுதினாலும் மாறாது. யார் எத்தனை மதிப்பெண் எடுத்தாலும் மாறாது. ஐம்பது என்பது 50-ஆகத் தான் இருக்கும்.

பெர்சண்டைல் என்பது அனைத்து மாணவர்களும் எடுத்த மதிப்பெண்களை வரிசைப்படுத்தி அதில் ஒரு இடத்தை குறிப்பது. உதாரணமாக, ஒரு தேர்வில் 9 மாணவர்களின் மதிப்பெண்கள் = 89, 90, 90, 91, 92, 96, 98, 98, 99. இதில் 50-வது பெர்சண்டைல் = 92. அதாவது 50 சதவீத மாணவர்கள் 92-க்கு மேல் பெற்றுள்ளனர். 50 சதவீத மாணவர்கள் 92-க்கு கீழ் பெற்றுள்ளனர். (50th percentile is 92). இதில் 50% பெர்சன்டைல் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பது 92 மதிப்பெண்கள் மேல் எடுத்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பொருள்.


படிக்க: நீட் எனும் மோசடித் தேர்வு: முதுநிலை மருத்துவ படிப்பில் சேர “0” மதிப்பெண் போதுமாம்!


இதனடிப்படையில் பார்த்தால், இவ்வாண்டு பூஜ்ஜியம் சதமானம் (Zero Percentile), அதாவது இந்த ஆண்டு முதுநிலை நீட் தேர்வின் கடைசி மதிப்பெண்ணான -40 பெற்ற மாணவனும் விண்ணப்பிக்கலாம் என்பதே இந்த அறிவிப்பின் பொருள். அதாவது அனைத்து கேள்விகளுக்கும் தவறாக பதில் அளித்திருக்கும் ஒரு மாணவனும் தகுதியுடையவன் என்று அர்த்தம். இவர்கள் கூறும் ’தகுதி’ என்பது பணமற்ற ஏழை மாணவர்களுக்குத் தானேயொழிய பணம் படைத்தவனுக்கு  இல்லை. பணம் வைத்திருப்பதே தகுதி தான் என்று மீண்டுமொரு முறை நிரூபணமாகியிருக்கிறது.

இதற்கு முன்பு வரை 50 பெர்சன்டைலுக்கு மேல் எடுத்தவர்களுக்கு தான் இடங்கள் ஒதுக்கப்பட்டது. இந்த அறிவிப்பை வைத்துப் பார்த்தால் சென்ற ஆண்டு 50 பெர்சன்டைலுக்கும் கீழ் எடுத்து தகுதியற்றவர்கள் என்று வெளியேற்றப்பட்ட மாணவர்கள் தற்போது தகுதியுள்ளவர்களா என்று கேள்வி எழுகிறது. இந்த நுழைவுத் தேர்வு முறையே ஒரு கேலிக்கூத்து என்பது நிரூபணம் ஆகிறது.

மேலும், இந்த ஆண்டு முதுநிலை மருத்துவ படிப்பில் 4,400 இடங்கள் காலியாக உள்ளது. பெரும்பாலும் தனியார் கல்லூரிகளில் தான் காலி இடங்கள் இருக்கிறது. தனியார் கல்லூரிகள் லாபம் கொழிப்பதற்காக இதுவரை இல்லாத அளவிற்கு கட்-ஆஃப் சதவீதத்தை குறைத்திருக்கிறது மோடி அரசு. வசதி படைத்திருப்பவர்கள் கோடிகளைக் கொட்டி மருத்துவர் ஆகமுடியும். ஆனால், வசதி இல்லாத மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் நுழைவது குறித்து கனவுகூட காணமுடியாது.

அண்ணாமலையின் உருட்டு!

இதுகுறித்து பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “கேள்வி கேட்பதற்கு ரிசர்ச் செய்து விட்டு வர வேண்டும் அல்லவா. நான் பதில் சொல்கிறேன். ரிசர்ச் செய்துள்ளேன் போன ஆண்டு நீட் PG-ல் 50 சதவீதம் என்பது கட்-ஆஃப் ஆக இருந்தது. சென்ற ஆண்டு இந்தியாவில் கிட்டத்தட்ட 1,80,000-ற்கும் மேல் PG சீட் இருக்கிறது. அதில் ஏகப்பட்ட சீட் நிரம்பவில்லை. குறிப்பாக டீச்சிங் பாடங்களாக இருப்பதை நீட் மூலமாக PG-க்கு போகிறவர்கள் எடுக்கவில்லை. அவையெல்லாம் தொடர்ந்து காலியாக உள்ளது. இன்றைக்கு மத்திய அரசு என்ன முடிவு எடுத்துள்ளது என்றால், PG-க்கு ஜீரோ பெர்சண்டைல். அப்படி என்றால், நீட் நீங்கள் எழுதி இருந்தால் போதும். ஏன் என்றால் அவர்கள் MBBS பாஸ் செய்து விட்டுத்தான் வருகிறார்கள்.

ஆனால், MBBS முடித்துவிட்டு PG படிக்கப் போகிறவர்களுக்கு MBBS-ல் கடைசியில் எழுதக் கூடிய பரீட்சையே ஒரு கட்-ஆஃப். அதையே தற்போது ஒரு கட்-ஆஃப் ஆக கருதுகிறார்கள். அதைத்தான் ஜீரோ பெர்சண்டைல் எனக் கூறுகிறார்கள். எதற்கு என்றால் இந்தியாவில் courses fill-ஆக வேண்டும். 1,80,000 சீட் நிரம்ப வேண்டும். குறிப்பாக டீச்சிங்  படிப்புகள் நிரப்ப வேண்டும்” என்று உருட்டுக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை.


படிக்க: நீட் தேர்வு: பிரபஞ்சன்களும் அனிதாக்களும்!


மொத்தமாகவே 67,802 முதுநிலை இடங்கள் தான் இருக்கிறது. மேலே குறிப்பிட்டதைப் போல் 4,400 இடங்கள் தான் காலியாக உள்ளது. அதுவும் பெரும்பான்மையாக தனியார் கல்லூரிகளில். மருத்துவத்தில் Non- clinical துறையை தேர்வு செய்த மாணவர்களுக்கு  முறையான உதவித்தொகையும் வேலைவாய்ப்பும் கிடையாது. ஆகையால் அண்ணாமலை பேசுவதையெல்லாம் கணக்கிலே எடுத்துக் கொள்ளக்கூடாது.

பாசிச மோடி அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால் மருத்துவ கட்டமைப்பையே சுக்குநூறாக உடைந்து வருகிறது. நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், பல லட்சங்களைச் செலவழித்துப் படிக்கும் மாணவன் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்றா நினைப்பான். செலவழித்த பணத்தை எவ்வாறு இரட்டிப்பாக்குவது என்றுதான் சிந்திப்பான். இதனால், ஒருபுறம் லாபவெறிபிடித்த, தகுதியற்ற மருத்துவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது நீட் தேர்வு; மற்றொருபுறம், தனியார் மருத்துவமனைகளையும் பயிற்சி மையங்களையும் உருவாக்கி லாபத்தில் கொழிக்க வைக்கிறது.

மக்களுக்கு மாணவர்களுக்கும் எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.”நீட் தேர்வை ரத்து செய்” என்பது மக்கள் கோரிக்கை. மக்கள் கோரிக்கைகளை மக்கள் போராட்டத்தின் மூலமே வென்றெடுக்க முடியுமேயொழிய நாடாளுமன்ற நீதிமன்ற வழிமுறைகளால் அல்ல.


ஹைதர்விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க