நீட் தேர்வு: பிரபஞ்சன்களும் அனிதாக்களும்!

பல லட்சம் ரூபாய் முதலீடுசெய்து நீட் தேர்வில் தேர்ச்சிபெறும் மாணவர்களால், மருத்துவத்தை சேவையாக கருத முடியுமா? அவர்கள் மலைக்கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றுவார்களா?

ண்மையில் 2023-ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்தன. அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் 720/720-க்கு பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றிருந்தார். அம்மாணவனின் வெற்றியை “ஆளப்போறான் தமிழன்” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுக் கொண்டாடியது தமிழ் முரசு நாளிதழ். “நீட் தேர்வில் முதலிடம் பிடித்து பிரபஞ்சத்தை திரும்பிப் பார்க்க வைத்த தமிழ்நாட்டு மாணவன் பிரபஞ்சன்” என்பது போன்ற இடுகைகளையும் பெருமிதத்துடன் சமூக ஊடகங்களில் பலர் பகிர்வதைப் பார்க்க முடிந்தது.

பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, அம்மாணவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியதோடு, பரிசுப் பொருட்களையும் வழங்கியுள்ளார். மேலும், “மருத்துவப் படிப்பில் அனைவருக்கும் சமவாய்ப்பை உருவாக்கிய நீட் தேர்வை அரசியலாக்கிய தி.மு.க.விற்கு நீட் முடிவுகள் தகுந்த பாடத்தைக் கற்பிக்கும் என்று நம்புவோம்” என்று தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

நீட் தேர்வை எதிர்க்கும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும்கூட தங்களது அறிக்கைகளில் பிரபஞ்சனை பாராட்டிவிட்டுத்தான் நீட் தேர்வு ரத்துசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையைப் பற்றி பேசியுள்ளனர். இது நம்மையும் அறியாமல் பாசிசக் கும்பல் தோற்றுவிக்கும் மாயையில் நீட் எதிர்ப்பை நீர்த்துப்போகச் செய்வதாகவே அமைந்துள்ளது.

பிரஞ்சனை வாழ்த்துவதும் அனிதாவை தூற்றுவதும் ஒன்று!

நீட் தேர்விற்காக கடுமையாக உழைத்து வெற்றி பெற்றிருக்கிறார் என்று பலரும் பிரபஞ்சனைப் பாராட்டுகிறார்கள். அம்மாணவனைப் பாராட்டுவது அவர்களது தனியுரிமை. ஆனால், பிரபஞ்சனைப் பாராட்டுவதன் மூலம் “நீட் தேர்வையும் தாண்டி தமிழனால் சாதிக்க முடியும்” அல்லது “மருத்துவம் படிப்பதற்கு நீட் ஒரு தடையில்லை” என்ற பொதுக்கருத்து உருவாக்கப்படுவதை நம்மால் அனுமதிக்க முடியாது. இத்தகைய பொதுக்கருத்தை திட்டமிட்டு உருவாக்குவதன் மூலம் தமிழ்நாட்டின் நீட் எதிர்ப்புணர்வை நீர்த்துப் போகச் செய்கிறது பா.ஜ.க. கும்பல். இவற்றுக்கு நாம் பலியாகிக் கொண்டிருக்கிறோம்.

அனிதா உள்ளிட்டு நீட் தேர்வில் தேர்ச்சிபெற முடியாமல் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 20க்கும் மேல். இவ்வாறு தங்களது மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களைப் பார்த்து நீட் தேர்வுக்கு எதிராக ஆவேசம் கொள்வதைவிட, இரங்கல் தெரிவிப்பதும் நம்மை நாமே தேற்றிக்கொள்வதும் மட்டுமே நடந்துவருவது அவலமானது.


படிக்க: ‘நீட் விலக்கு மசோதா’ எனும் ஓட்டுக் கட்சிகளின் நாடகம் ! – தீர்வு என்ன?


இந்த பிரபஞ்சன் யார்? விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த மேல ஒலக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவன். தாய், தந்தை இருவரும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். 10ஆம் வகுப்பு வரை தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்துவிட்டு, 11 மற்றும் 12ஆம் வகுப்பை சென்னை மேல் அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர். மேலும், அதே நிறுவனத்தின் துணை நிறுவனமான “வேலம்மாள் நெக்சஸ்” என்ற  நீட் மற்றும் ஐ.ஐ.டி. பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்.

நீட் தேர்வில் தான் வெற்றி பெற்றது குறித்து ஊடகங்களுக்கு பிரபஞ்சன் கொடுத்த பேட்டியில், “நீட் தேர்வைப் போன்ற கிராண்ட் டெஸ்ட் என்ற தேர்வை 50-க்கும் மேற்பட்ட முறை எழுதியிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். 2 ஆண்டுகளாக நீட் தேர்வில் எவ்வாறு கேள்வி கேட்பார்கள், அதற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று தனியார் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றதோடு, நீட் தேர்வுக்கான பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலும் படித்திருக்கிறார். இதுவே பிரபஞ்சன் நீட் தேர்வில் முதலிடம் பெற முடிந்ததற்கு காரணம்.

பிரபஞ்சன் மட்டுமல்ல, நீட் தேர்ச்சியில் முதல் 10 இடங்களில் நான்கு இடங்களைப் பெற்றதாகக் கூறப்படும் தமிழ்நாட்டு மாணவர்களான கவுஸ்டவ் பவுரி, சூர்யா சித்தார்த், வருண் ஆகியோரும் பிரபஞ்சனைப் போல தனியார் பயிற்சி நிறுவனத்தில் லட்சக்கணக்கில் பணம் கொட்டிப் பயிற்சிப் பெற்றவர்கள்தான். ஆகவே நீட் என்பது  லட்சக்கணக்கில் பணம் கொட்டிப் படிக்க வாய்ப்பிருக்கிற மாணவர்களுக்கு மட்டுமே ‘வரப்பிரசாதம்’ என்பதே உண்மை. அதனால்தான் பிரபஞ்சன் “நீட் மிகவும் நல்ல தேர்வு, தகுதியான மாணவர்களை தேர்வு செய்ய நீட் அவசியம்” என்று பேட்டி கொடுக்கிறார்.

12ஆம் வகுப்பில் 1176\1200 எடுத்தபோதும், பிரபஞ்சன் போன்ற மாணவர்களுக்கு இருக்கும் “தகுதி” – அதாவது அரசு வேலைசெய்யும் பெற்றோர், சி.பி.எஸ்.சி.யில் படிக்கவும் பல லட்சங்களைக் கொட்டிக் கொடுத்து நீட் பயிற்சி பெற குடும்பப் பொருளாதாரம் ஆகியவை இல்லாத காரணத்தால்தான் அனிதா தற்கொலை செய்துகொண்டார்.

இத்தகைய ‘தகுதி’யை முன்வைக்கும் நீட் தேர்வை நாம் நியாயப்படுத்துகிறோமா. பிரபஞ்சனுக்கு வாழ்த்துச் சொல்பவர்கள் தெரிந்தோ தெரியாமலோ அதைத்தான் செய்கிறார்கள்!


படிக்க: நீட் என்னும் அயோக்கியத்தனம்


இன்னும் சொல்லப்போனால், லட்சக்கணக்கான அனிதாக்களின் மருத்துக்கல்வி கனவை பறித்தெடுப்பதன் மூலம்தான் பிரபஞ்சன்கள் முதலிடம் பெறுகிறார்கள். இது தனிப்பட்ட ஒரு மாணவன் மீது காழ்ப்புகொண்டு முன்வைக்கும் வாதமல்ல; ஒரு சமூகப் பிரச்சினை! நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை யாருக்கானது என்பது பற்றிய பிரச்சினை.

பொத்தாம் பொதுவாக இது தமிழ் மாணவர்களின் மருத்துவக் கனவுக்கு எதிரானது என்பதல்ல பிரச்சினை. சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் மருத்துவக் கல்வி உரிமையை நீட் தேர்வு பறித்துள்ளது என்பதுதான் பிரச்சினை. ஒவ்வொரு ஆண்டு நடைபெறும் நீட் தேர்வின் முடிவுகளும் இதை நமக்கு துலக்கமாகக் காட்டுகின்றன.

நீட் முன்வைக்கும் ‘தகுதி’: மீண்டும் அம்பலமானது!

தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் படிக்கின்ற அரசுப் பள்ளி மாணவர்களது நீட் தேர்வு பங்கேற்பும், தேர்ச்சி விகிதமும் ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. இந்தாண்டு நீட் தேர்வு எழுதிய 12,997 தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களில் 3,982 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இதுகூட தமிழ்நாடு அரசு வழங்கிவரும் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு கிடைத்த பலனாகும். இந்த தேர்ச்சியும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டில், 12,840 அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் 4,447 மாணவர்கள் வெற்றிபெற்றிருந்தனர். இதிலும்கூட வெற்றிபெற்ற அனைத்து மாணவர்களும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துவிடுவதில்லை. அரசுக் கல்லூரிகள் கிடைக்கப்பெறாத பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் மனதைக் கல்லாக்கிக் கொண்டு தங்களது கனவுகளை தலைமுழுகுகின்றனர்.

பின், ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் முன்னேறிவருவது யார்? இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சிபெற்று இந்திய அளவில் முதல் 50 இடங்களைப் பிடித்த 39 மாணவர்களிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நடத்திய ஆய்வானது இந்த கேள்விக்கு பதில் வழங்குகிறது.

இந்த ஆய்வானாது நீட் தேர்வு பிரபஞ்சன் போன்ற மேட்டுக்குடி வகையறாக்களுக்கானதுதான் என்பதை ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியிருக்கிறது. அந்த ஆய்வின்படி, பிரபஞ்சனையும் சேர்த்து மொத்தம் 29 மாணவர்கள் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்தவர்கள். மேலும், 39 மாணவர்களில் 38 மாணவர்கள் நீட் தேர்விற்காக தனியார் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்கள்; ஒருவர் தனியாகப் பயிற்சி பெறவில்லையென்றாலும் டெல்லியின் புகழ்பெற்ற தனியார் பள்ளியொன்றில் படித்தவர்.

இந்த 39 மாணவர்களும், டெல்லி, புனே, சென்னை, கொல்கத்தா, நாக்பூர், கோட்டா, விஜயவாடா, விசாகப்பட்டினம் போன்ற பெரும் நகரப் பகுதிகளைச் சார்ந்தவர்கள். பணக்காரக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள். சாதிரீதியாகவும் இவர்களில் 29 மாணவர்கள் பொதுப் பிரிவைச் சார்ந்தவர்கள், 8 மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பையும், 2 மாணவர்கள் மட்டுமே பட்டியலின வகுப்பையும் சார்ந்தவர்கள்.

நீட் பறிப்பது மருத்துவக் கல்வியை மட்டுமல்ல!

எல்லாவற்றையும் தாண்டி நீட் தேர்வு என்பது அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல, அரசு மருத்துவக் கட்டமைப்பை பாதுகாப்பது தொடர்பானது, மக்கள் நலன் மீது அக்கறைகொண்ட மருத்துவர்களை உருவாக்குவது தொடர்பானது.

இன்று நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டதாக தமிழ்நாடு விளங்குவதற்கும், சமூக ரீதியாக பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு கல்வியை கொண்டுபோய் சேர்ந்த தமிழ்நாட்டின் மக்கள் நல அரசுக் கொள்கைக்கும் தொடர்பிருக்கிறது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் மருத்துவக் கல்வியை தேர்வுசெய்த கடந்த தலைமுறைகளைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களின் உழைப்பினால்தான் இன்று தமிழ்நாட்டில் பெரும்பான்மை கிராமப்புறங்களிலும் ஆரம்ப சுகாதார சேவை கொண்டுபோய்ச் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆனால், பல லட்சம் ரூபாய் முதலீடுசெய்து நீட் தேர்வில் தேர்ச்சிபெறும் மாணவர்களால், மருத்துவத்தை சேவையாக கருத முடியுமா? அவர்கள் மலைக்கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றுவார்களா? தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ஒரு செங்கலை நகர்த்தும் வகையிலாவது இவர்களின் செயல்பாடு இருக்குமா? நிச்சயமாக இருக்கப்போவதில்லை.

நீட் தேர்வு என்பது தனியார் பயிற்சி நிறுவனங்களின் கொள்ளைக்கானது மட்டுமல்ல, மக்கள் நல அரசு என்ற கொள்கையை கைவிட்டுவிட்டு 90களுக்கு பின்பு தனியார்மய – தாராளமயக் கொள்கையை பின்பற்றத் தொடங்கியுள்ள இந்திய அரசு, அரசு மருத்துவக் கட்டமைப்பை ஒழித்துக்கட்ட மேற்கொண்டுவரும் முயற்சிகளின் ஒருபகுதிதான் நீட் தேர்வு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

நீட் தேர்வு என்பதை தவிர்க்க முடியாது, அதற்கு நம்மை தயார்படுத்திக் கொள்வதுதான் ஒரே தீர்வு என்பது இன்று ஏறத்தாழ அனைத்து நடுத்தர வர்க்கப் பெற்றோர்களது கருத்தாகவும் உள்ளது. நீட் தேர்வை எதிர்ப்பவர்கள்கூட, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும், அரசு நீட் பயிற்சி மையங்களை அதிகப்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வைக்கத் தொடங்கிவிட்டார்கள். ‘வேறு வழியில்லை’ என்பதுதான் அவர்களது கருத்தாக உள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டமும் முடிவில்லாத தொடர்கதையாகச் சென்றுகொண்டிருக்கிறது. 2017இல் அனிதா மரணத்தை ஒட்டி நடைபெற்ற மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டங்களைப் போல, மீண்டும் ஒரு மாணவர் எழுச்சி திட்டமிட்டு கட்டமைக்கப்பட வேண்டியிருக்கிறது. அதுதான் இந்த கையறுநிலையை முடிவுக்கு கொண்டுவரும்.


ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம், ஜூலை 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க