‘நீட் விலக்கு மசோதா’ ஓட்டுக்கட்சிகளின் நீட் தேர்வு விலக்கு நாடகமும் நீட் தேர்வை விலக்குவதற்கான உண்மையான வழியும்..

செப்டம்பர் 22-இல் இருந்து (22-09-2022) மருத்துவப் படிப்புகளில் (MBBS & BDS) சேர்வதற்கான விண்ணப்பமும் தொடங்கப்பட்டுவிட்டது.

அதிமுக அரசு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்று தருகிறோம் என்று சொல்லியே பா.ஜ.க.வின் ஒரு கிளைக்கழகமாகவே இருந்து தங்களுடைய ஆட்சியை நடத்திவிட்டு சென்றது. அதற்கு அடுத்த ஆட்சிக்கு வந்த திமுகவோ, நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்விலிருந்து விலக்கு வாங்கி தருவோம் என்ற கவர்ச்சிகரமான வாக்குறுதியை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டது.

நீட் தேர்வால் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தொடங்கி, நீட் தேர்வு தொடர்பான மரணங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர் கதையாகியே வருகிறது. சமீபத்தில் கூட சென்னையைச் சேர்ந்த மாணவி லக் ஷனா ஸ்வேதா என்பவர் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்து இரண்டாவது முறையாக நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது.

படிக்க : நீட் என்னும் அயோக்கியத்தனம்

இந்த தேர்தல் அரசியல் மூலமோ, நீதிமன்றம் மூலமோ நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியாது என்பதை பின்வரும் நீட் தேர்வின் வரலாற்றில் இருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.

***

  • கடந்த 2013 ஆம் ஆண்டில் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு குறித்துத் தீர்ப்பு வழங்கியது. மூன்று நீதிபதிகளில் இரண்டு நீதிபதிகள், நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராகத் தீர்ப்பளித்தனர். ஆனால், மூன்றாவது நீதிபதியாகிய ஏ.ஆர்.தவே அவர்கள் மட்டும் நீட் தேர்வு தேவை எனத் தீர்ப்பளித்தார்.
  • பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தபின், நீட் தேர்வு குறித்து மறுசீராய்வு மனு ஒன்றிய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே நீட் தேர்வுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த நீதிபதி ஏ.ஆர்.தவே தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவைப் பாரதிய ஜனதா அரசு அமைத்தது. நீட் தேர்வு குறித்த மனு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஏ.ஆர்.தவே தலைமையிலான அமர்வு நீட் தேர்வைக் கட்டாயமாக்கிவிட்டது.
  • நீட் தேர்வுக்கு ஆதரவாக முன்பு தீர்ப்பளித்த நீதிபதி ஏ.ஆர்.தவே அவர்கள், இந்த அமர்வுக்குத் தலைமை ஏற்றது சரியல்ல என்ற விமர்சனம் அப்போதே எழுந்தது. பிறகு, ஒன்றிய அரசின் நல்வாழ்வுத் துறை சார்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நிலைக் குழுவுக்கு நீட் தேர்வு குறித்து முடிவெடுக்க மீளாய்வுக்காக அனுப்பப்பட்டது.
  • 08/03/2016 அன்று அக்குழு நாடாளுமன்றத்தில் இது குறித்து அறிக்கை சமர்ப்பித்தது. இது நாடாளுமன்ற நிலைக்குழுவின் 92 ஆவது அறிக்கையாகும். இந்திய அளவில் நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்குக் கேட்கும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மிகத் தெளிவாக நிலைக்குழு பரிந்துரைத்தது.
  • பிறகு, மத்தியப் பிரதேச மாநிலத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாகச் சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டா என்ற கேள்வி எழுந்தபோது, உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு 02/05/2016 அன்று (Modern Dental College Case) பின்வருமாறு தீர்ப்பு வழங்கியது.
  • “அரசமைப்புச் சாசனத்தின் படி மருத்துவம் உள்ளிட்ட கல்விக்கான மாணவர் சேர்க்கை குறித்துச் சட்டமியற்றும் அதிகாரம், மாநிலச் சட்டப் பேரவைக்கும் உண்டு ஒன்றிய அரசுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு என்பதை ஏற்க இயலாது” என அத்தீர்ப்பு தெளிவாகக் குறிப்பிட்டது.
  • இந்தியாவில் நீட் நுழைவுத்தேர்வு, அறமற்ற முறையில் ஒன்றிய பா.ஜ.க அரசால் திணிக்கப்பட்டது. இவ்வகையில் நீட் தேர்வு “முதல் கோணல், முற்றிலும் கோணல்” என்பது தெளிவு.
  • மேலும் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியானது, நெருக்கடி காலத்தில் மாநிலப் பட்டியலில் இருந்து ஒத்திசைவு பட்டியலுக்கு மாற்றப்பட்டது. ஒத்திசைவு பட்டியல் என்றால் மாநில அரசும் ஒன்றிய அரசும் இணைந்துதான் கல்வி பற்றிய முடிவை எடுக்க வேண்டும்.
  • ஆனால் அப்படிப்பட்ட ஜனநாயக முறை இருக்கிறதா என்றால்? அப்படியெல்லாம் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. மாநிலங்களின் கல்வி உரிமையைப் புதுதில்லியில் இருக்கக் கூடியவர்கள் தீர்மானிப்பது, ஜனநாயகத்துக்கு எதிரானது.
  • பெரும்பாலான தமிழ்நாட்டு மாணவர்கள் மாநிலப் பாடத்திட்டத்தில் பயில்கின்றனர். ஆனால் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் அவர்கள் நீட் தேர்வை எழுதும் கட்டாய சூழல் நிலவுகிறது. இது அறிவுக்குப் புறம்பான ஒன்றாகும். படிப்பது ஒன்றில், தேர்வு எழுதுவது மற்றொன்றில் என்ற கேவலமான சூழல் எந்த நாட்டிலும் இல்லை.
  • இவ்வகையான நியாயமற்ற அணுகுமுறையால், 2017 ஆம் ஆண்டில் அனிதாவின் உயிர் காவு வாங்கப்பட்டது. மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து 1200 மதிப்பெண்களுக்கு 1176 மதிப்பெண்கள் எடுத்துச் சாதனை படைத்த அனிதா, தனக்குத் தொடர்பில்லாத சி.பி.எஸ்.இ பாடத்திட்ட அடிப்படையில் கேட்கப்பட்ட நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியவில்லை.
  • அனிதாவைப்போல் பல மாணவர்கள் இன்று வரை நீட் தேர்வால் இறந்து வருகின்றனர். மாநிலப் பாடத்திட்டத்தில் மிகச்சிறந்த சாதனைகள் படைக்கும் மாணவர்கள், நீட் தேர்வால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி, ஆண்டுதோறும் தற்கொலை செய்து கொள்வது இன்றும் தொடர் கதையாகி வருவது மிகப்பெரும் அவலம். நீட் தேர்வு என்பது மாணவர்கள் மீது ஏவப்பட்ட கொடூரமான வன்முறையாகும்.
  • அனிதாவின் அநியாயமான மரணத்திற்கு நீதிகேட்டுத் தமிழ்நாடே கொந்தளித்தது. ஆனால் ஒன்றிய பா.ஜ.க அரசு அதை சிறிதும் பொருட்படுத்தவில்லை.
  • மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டுமென்றால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும். அதற்குத் தனிப்பயிற்சி கட்டாயம் தேவை. அப்படிப்பட்ட தனிப் பயிற்சி பெறுவதற்குப் பல இலட்சக்கணக்கான ரூபாய்களை மாணவர்கள் கொட்டி அழ வேண்டியுள்ளது. ஏறக்குறைய எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போதே தனிப்பயிற்சி நிலையங்களுக்குச் சென்று ஆயத்தமானால் தான் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறமுடியும். கிராமங்களிலுள்ள ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மாணவர்களால் இலட்சக்கணக்கான ரூபாய்களை நீட் தனிப்பயிற்சிக்காகச் செலுத்தவே முடியாது.
  • நீட்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால்தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும். அப்படி அதிக மதிப்பெண் பெறுவதற்காகத்தான் தனிப்பயிற்சி என்ற தூண்டிலை வணிக நிறுவனங்கள் கையில் வைத்துக் கொண்டு கொள்ளை அடிக்கின்றன. நீட் பயிற்சி என்பது பணம் கொட்டும் வணிகம் ஆகிவிட்டது.
  • பள்ளியில் படிப்பது தேவையில்லாத ஆணி நீங்கள் நேரடியாக மாணவர்களை கோச்சிங் சென்டரில் சேருங்கள் என்ற விளம்பரத்தை மட்டும்தான் கோச்சிங் சென்டர்கள் இன்னும் செய்யவில்லை. கூடிய விரைவில் அதையும் செய்து விடுவார்கள் போல.

  • இப்படிப்பட்ட தனிப்பயிற்சி வணிகத்தின் ஆண்டு வருமானம் பல கோடியைத் தாண்டும் எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் ரிலையன்ஸ் போன்ற மிகப்பெரும் வணிக நிறுவனங்கள் இத்துறையில் ஈடுபட்டுள்ளன. Allen, Aakash, FIITJEE, BYJUS போன்ற பெரும் வணிக நிறுவனங்கள், இத்துறையில் ஆண்டுதோறும் கோடிகளை அள்ளுகின்றன. நீட் தேர்வு என்பது முற்றிலும் வணிகமயத்தை ஊக்குவிக்கக் கூடிய ஒன்றாக மாறிவிட்டது. பணம் இருப்பவர்களுக்கு தான் மருத்துவக்கல்வி என்பது எழுதப்படாத சட்டமாக ஆகிவிட்டது. ஏழைகள் மருத்துவ படிப்பை நினைத்து கூட பார்க்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.
  • கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்தான் தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது. அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்தது பா.ஜ.க தலைமையிலான அரசு.
  • தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதற்கு அன்றைய அ.தி.மு.க அரசு உட்பட பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு அ.தி.மு.க அரசு நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கவில்லை. அந்த மசோதாவின் நிலையே 12 மாதங்களுக்குப் பிறகுதான் தெரிய வந்தது.
  • தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் மாநில அரசு மூலமாகதான் கட்டப்பட்டுள்ளது. மேலும் மாநில அரசுதான் கல்லூரிகளுக்கான அனைத்து வித செலவுகளையும் செய்து வருகிறது.
  • 100 சதவீத இடங்களை நிரப்புவதைப் பற்றிய முடிவை எடுப்பதற்கு கூட மாநில அரசுக்கு உரிமை உண்டு.
  • ஆனால் வெறும் 7.5% இட ஒதுக்கீடுதான் அரசு பள்ளி மாணவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டது. இது எவ்வளவு பெரிய அநீதி. இந்த 7.5% இட ஒதுக்கீட்டை பெற்று கொடுத்ததே நாங்கள்தான் என்று பீத்திக் கொள்கிறது அடிமை அ.தி.மு.க.
  • அதன்பிறகு ஆட்சிக்கு வந்த தி.மு.க.வானது, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், இந்த நீட் தேர்வு காரணமாகச் சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஒரு குழு அமைத்தது. அந்த குழுவும் ஆய்வு நடத்தி, பொதுமக்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரிடம் கருத்துக் கேட்டது. அந்த கருத்துக்களை ஆய்வு செய்து விரிவான அறிக்கையை நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அரசுக்குத் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், நீட் தேர்வு பலதரப்பட்ட சமூக பிரதிநிதித்துவத்தைக் குறைத்துள்ளது என்றும், கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில்சார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை சட்டத்தைப் போல, மாநில அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறலாம் என்றும் பரிந்துரை செய்திருந்தது.
  • தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிரான மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
  • இதனிடையே, தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பிய நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா மீது ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தார்.
  • ஏறக்குறைய 4 மாதங்களுக்குப் பின் ஆளுநர் மசோதாவை திரும்ப அனுப்பினார். தமிழக ஆளுநர் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவை மறுபரிசீலனை செய்யும்படி தமிழக சட்டப்பேரவை தலைவருக்குத் திருப்பி அனுப்பினார்.
  • இதனையடுத்து, நீட் விலக்கு மசோதா விவகாரம் தொடர்பாகச் சிறப்புச் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது.
  • இதன்படி, பிப்ரவரி 8 ஆம் தேதி சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வு கூட்டப்பட்டு நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
  • கடைசியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் ஆளுநர் மாளிகையில் இருந்து கிடைத்துள்ளது.
  • தற்போது வரை 7 மாதங்கள் ஆகியும் நீட் விலக்கு மசோதா இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

***

அ.தி.மு.க நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்று தரவில்லை என்று சொல்லிவிட்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்று தருவோம் என்று சொல்லிய தி.மு.க.வாலும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்று தர முடியவில்லை.

இதிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இருக்கும் குறுகிய அதிகாரமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அரசு அதிகாரிகளுக்கு இருக்கும் அதிக அதிகாரமும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். திமுக ஆட்சி முடிந்து ஒருவேளை வேறு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், நீட் தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்பது அனுபவ உண்மையாக உள்ளது.

படிக்க : கேரளா : நீட் தேர்வு – மாணவர்கள் மீது ஏவப்படும் ஒடுக்குமுறை!

ஏனென்றால் நீட் என்பது பல ஆயிரம் கோடிகளை முதலாளிகளுக்கு வாரி வழங்கும் வணிகமாகும். இப்படி இலாபம் தரும் ஒரு வணிகத்தை விட்டுக் கொடுப்பது என்பது முதலாளிகளுடைய கனவிலும் அவர்கள் நினைத்து பார்க்க முடியாதது.

நீட் தேர்வு மருத்துவப் படிப்பை மட்டுமல்ல ஒட்டு மொத்த மருத்துவத்துறையையும் தனியார்மயமாக்குவதில் பங்குபெறும் ஒரு முக்கிய ஆயுதமாகும். எனவே இந்த தங்க முட்டையிடும் வாத்தை என்ன நேர்ந்தாலும் பாதுகாத்தாக வேண்டும் என்று அவர்கள் நினைப்பார்கள்.

இந்திய அரசோ இந்த கார்ப்பரேட் முதலாளிகளின் கை அசைவிற்கு வாலாட்டும் ஒரு செல்லப்பிராணி. செல்லப்பிராணி என்று இருந்தால், தன் எஜமானருக்கு எதுவும் நேராமல் பாதுகாக்கத் தானே செய்யும். எனவே இந்திய ஆளும் வர்க்கத்தினர் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி நீட் தேர்வை தக்க வைத்துக் கொள்வார்கள்; அதனை எதிர்த்து  இந்த அமைப்பிற்குள் பதவியை வைத்திருக்கும் எவராலும் செயல்பட முடியாது.

“நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத் தருவோம்” என்று கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் ஓட்டு கட்சிகளின் தேர்தல் நாடகமே. செல்லாக்காசான நீட் விலக்கு மசோதா சாதித்து என்வென்றால் நீட் தேர்வை தி.மு.க போன்ற ஓட்டுக்கட்சிகளால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை நிரூபித்தது தான்.

ஆக, தேர்தல் அரசியல் மூலமோ, நீதிமன்றம் மூலமோ நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியாது, ஜல்லிக்கட்டு மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போன்ற மக்களின் தீவிர போராட்டங்களால் மட்டும்தான் நீட் தேர்விலிருந்து முழுமையான விலக்கை பெற முடியும்!!!

அய்ன்ஸ்டைன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க