கேரளா : நீட் தேர்வு – மாணவர்கள் மீது ஏவப்படும் ஒடுக்குமுறை!

கல்வி தனியார்மயத்தை தீவிரப்படுத்தும் – மாணவர்களை இழிவுப்படுத்தும் – நீட் போன்ற அநீதி தேர்வுகளை எதிர்த்து களமிறங்கி போராடுவதே மாணவர்களின் மீதான கல்வி தனியார்மய ஒடுக்குமுறைகளை முறியடிப்பதற்கான ஒரே வழி.

0

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் மருத்துவத் துறைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் கலந்து கொண்ட மாணவிகளின் உள்ளாடைகளை கழற்ற சொல்லி தேர்வை எழுதச் சொல்லியுள்ளார்கள். இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் கேரள போலீசு ஜூலை 19 அன்று வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354 மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். ஆயூரில் உள்ள மார்தோமா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில் ஜூலை 17 அன்று நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்றபோது உள்ளாடைகளை கழற்றி தேர்வு எழுத சொன்னது குறித்து மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளார்.

பெண் அதிகாரிகள் குழு சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், இச்செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காவலர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


படிக்க : நீட் தேர்வின் தரா‘தரம்’ என்ன?


ஜூலை 18 அன்று, 17 வயது மாணவியின் தந்தை, முதல் நீட் தேர்வில் அமர்ந்திருக்கும் தனது மகள், உள்ளாடை இல்லாமல் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தேர்வுக்காக அவள் உட்கார வேண்டிய அதிர்ச்சிகரமான மனநிலையிலிருந்து இன்னும் வெளியே வரவில்லை என்று ஊடகங்களிடம் கூறினார். அப்போதுதான் இந்த அடக்குமுறை வெளிச்சத்திற்கு வந்தது. நீட் தேர்வு விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளாடைகள் குறித்து எதுவும் கூறப்படாத ஆடைக் குறியீட்டின்படி தனது மகள் உடை அணிந்திருந்ததாக தந்தை தொலைக்காட்சி ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.

இச்சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பல்வேறு இளைஞர் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கேரள மாநில மனித உரிமை ஆணையமும் உத்தரவிட்டுள்ளது. 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கொல்லம் ரூரல் எஸ்.பி.க்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்துவும் கண்டனம் தெரிவித்துள்ளார். “கொல்லத்தில் நீட்-யுஜி தேர்வெழுதிய மாணவிகள் தேர்வு அறைக்குள் நுழைவதற்கு முன்பு அவர்களது உள்ளாடைகளை கழற்ற வைத்தது கண்டிக்கத்தக்கது. தேர்வை நடத்தும் ஏஜென்சியைச் சேர்ந்தவர்கள் இதைச் செய்ததாகத் தெரிகிறது” என்று அவர் ட்வீட் செய்துள்ளார். சிறுமிகளின் உள்ளாடகளை கழற்ற வற்புறுத்திய ஏஜென்சி மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

தனியார் நிறுவன அதிகாரிகள் தங்கள் ஊழியர்கள் யாரும் சோதனையில் ஈடுபடவில்லை என்று கூறியுள்ளனர். “பயோமெட்ரிக் வருகையை சோதனை செய்வதற்கும் குறிப்பதற்கும் NTA-ல் இரண்டு ஏஜென்சிகள் நியமிக்கப்பட்டன. இதற்கான விதிகள் என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஏஜென்சி ஊழியர்கள் இதையெல்லாம் சரிபார்க்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில், மாணவிகள் சால்வை அணிய அனுமதிகேட்டு எங்களிடம் அழும்போது, ​​நாங்கள் தலையிட்டு அவர்களை அனுமதித்தோம்” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறுமியின் தந்தையின் புகார் கற்பனையானது மற்றும் தவறான நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கொல்லத்தில் உள்ள நீட் தேர்வு மைய கண்காணிப்பாளர் தேசிய தேர்வு முகமையிடம் கூறியுள்ளார்.


படிக்க : போலி ஜனநாயகத்தை அம்பலப்படுத்தும் நீட் விவகாரம் !


கடைசியில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையையே பொய் சொல்வதாக சொல்லிவிட்டார் நீட் தேர்வு மைய கண்காணிப்பாளர். அதாவது நீட் தேர்வு எழுதச்சென்ற தனது மகளை உள்ளாடையை கழற்ற சொல்லி தேர்வு எழுத சொன்னதினால் மனதளவில் கஷ்டத்தை அனுபவித்து இருக்கும் நிலையில், அவர் எதோ கற்பனையாக பேசுகிறார் என்கிறார்கள்.

கேரள உயர்கல்வி அமைச்சரோ இது அரசின் தவறு அல்ல தனியார் ஏஜென்சி ஊழியர்களின் தவறு என்கிறார். தேர்வைக்கூட தனியார் ஏஜென்சியை வைத்து நடத்துகிறார்கள் என்றால், இது கல்வி தனியார்மயத்தின் விளைவே அன்றி வேறென்ன.

ஏற்கனவே, நீட் தேர்வு நடைமுறைபடுத்தப்பட்டதில் இருந்து தனியார் நீட் கோச்சிங் செண்டர்கள் புற்றீசல் போல் பெருகி பொற்றோர்களின் உழைப்பை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. நீட் எனும் அநீதி தேர்வினால் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு அழிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்வையும் அரசு நடத்தைவில்லை தனியார் ஏஜென்சி கையில் விட்டுவிட்டது. அந்த ஏஜென்சி மாணவியின் உள்ளாடையை கழற்ற சொன்ன அடாவடியான செயலைக்கூட, எதிர்ப்புகளின் பிறகுதான் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கல்வி தனியார்மயத்தை தீவிரப்படுத்தும் – மாணவர்களை இழிவுப்படுத்தும் – நீட் போன்ற அநீதி தேர்வுகளை எதிர்த்து களமிறங்கி போராடுவதே மாணவர்களின் மீதான கல்வி தனியார்மய ஒடுக்குமுறைகளை முறியடிப்பதற்கான ஒரே வழி.


புகழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க