ந்திய அரசியலமைப்பு என்பது மக்கள் விரோதமானது, போலி ஜனநாயகத் தன்மை கொண்டது, என்று பொதுவில் அதன் உண்மை தன்மையை எடுத்துரைக்கும் போது பலரும் ஏற்றுக் கொள்வதில்லை. இந்த அரசியலமைப்புச் சட்டப்படி, மக்கள் பிரதிநிதிகளின் சபைக்கு சட்டத்தை இயற்றுவது தாண்டி வேறு எந்த அதிகாரமும் இல்லை, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகார வர்க்கம்தான் அதை அமல்படுத்தும் இடத்தில் இருந்து கொண்டு நமது நாட்டை ஆள்கிறது என்பதை புரிந்துகொள்ள நீட் விலக்கு மசோதா தொடர்பாக நடக்கும் நிகழ்வுகளை கூர்ந்து கவனித்தாலே போதும்.
அண்மையில் நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக ஆளுநர் நடந்து கொள்ளும் முறைகள் மீது கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தமிழக சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க மறுத்து மீண்டும் தமிழக சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பினார்.
தமிழக சட்டமன்றமும் அவசரமாக கூடி, நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பியுள்ளது. தமிழக சட்டமன்றத்தின் முடிவை ஏற்காமல் ஆளுநர் என்ற ஒரு, “தனி உயர் சிறப்பு பெற்ற அதிகாரி,” எப்படி திருப்பி அனுப்பினார் என்ற கேள்வி இந்திய ஜனநாயக அமைப்பின் உண்மை தன்மையை கேள்வி எழுப்புவதாகும்.
படிக்க :
நீட் தேர்வு : சட்டப் போராட்ட அனுபவம், களப்போராட்ட அவசியத்தை போதிக்கிறது!
ஆன்லைன் தேர்வு கேட்டு போராடும் மாணவர்களின் கோரிக்கை நியாயமற்றதா?
முதலாவதாக, நீட் என்பது தமிழக மக்களில் ஆகப் பெரும்பான்மையினரால் எதிர்க்கப்படுகிறது என்பது ஒரு உண்மை. இதனால், நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பினாலும், சட்டமன்றம் அதனை ஏற்றுக்கொண்டு வாபஸ் பெறப்போவதில்லை, மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் என்பது யாவரும் அறிந்த உண்மை. இருப்பினும் தமிழக மக்களின் உயர்ந்த பிரதிநிதித்துவ அமைப்பாக கருதப்படுகின்ற தமிழக சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய ஒரு மசோதாவை ஆளுநரால் நிராகரிக்க முடியும் என்பதுதான் போலி ஜனநாயகமாகும்.
இங்கே கவனிக்க வேண்டிய முதன்மையான விஷயம், தமிழக சட்ட மன்றத்தில் பெரும்பான்மையின் அடிப்படையில் இந்த மசோதா நிறைவேற்றி அனுப்பப்பட்டு இருந்தாலும், அந்த நிலையிலும் கூட ஆளுநர் சட்ட மசோதாவை திருப்பி அனுப்புவது என்பது மக்கள் பிரதிநிதி அமைப்பான சட்டமன்றத்தையும் தமிழக மக்களையும் இழிவுபடுத்துகின்ற நடவடிக்கையே.
ஆகையால், இந்திய ஜனநாயகத்துக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் மேலாக, அதிகார வர்க்கத்தை திட்டமிட்டு கட்டியமைத்து வைத்துள்ளது என்பதும், ‘ஆள்வது அதிகார வர்க்கம், ஆடுவது ஜனநாயக நாடகம்’ என்பதும்தான் உண்மை.
இந்தப் போலி ஜனநாயக அவலத்தை, தமிழக மக்களுக்கு நீட் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள அவமதிப்பை, எந்தவித வெட்க தன்மை உணர்வும் இன்றி தமிழக ஊடகங்கள், குறிப்பாக பார்ப்பன ஊடகங்கள் நியாயப் படுத்துவது தான் அவலமான நிலையாகும்.
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை தொடர்ந்து தமிழக சட்டமன்றம் மீண்டும் அந்தச் சட்டத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ள நடவடிக்கையை வரவேற்று 07/02/2022 அன்று ‘தி இந்து தமிழ்’ நாளிதழ் எழுதியுள்ள தலையங்கத்தை கவனித்தால், இந்த போலி ஜனநாயகத்தின் இந்த நிலையையும் இதனை நியாயப்படுத்தும் ஊடகத்தின் இழிந்த நிலையையும் நாம் கவனிக்கலாம்.
07/02/2022 ‘தி இந்து நாளிதழில்’ வெளிவந்துள்ள தலையங்கத்தில்,
“….. சிறப்பு சட்டமன்ற தொடரைக் கூட்டி, இளநிலை மருத்துவ படிப்பில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப முடிவு எடுத்திருப்பது சரியான அணுகுமுறை. அரசமைப்பு ரீதியிலும் அதுவே சரியானது. ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை காரணம்காட்டி ஆளுநர் சட்டம் முன்வடிவில் கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பியுள்ளார். என்பதற்காக அவர் பதவி விலக வேண்டும் என்று உடனடியாக மக்களவையில் எழுந்த முழக்கங்கள் அரசமைப்பு குறித்த புரிதல் இன்மை என்பதை காட்டிலும் உணர்ச்சிகரமான அரசியல் கட்சிகள் தான் என்று பொருள்படும்.
“ஏற்கனவே அதிமுக ஆட்சிகாலத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து நிறைவேற்றப்பட்ட மசோதா குடியரசு தலைவரால் திருப்பி அனுப்பப்பட்டது. இப்போது திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது கையெழுத்திடுவதை தவிர்த்து, சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பவும் குடியரசு தலைவரிடம் கருத்து கேட்டு அனுப்பவும் ஆளுநர் அதிகாரத்தை பெற்றிருக்கிறார். இவை ஒவ்வொன்றுக்கும் எந்த ஒரு கால அவகாசமும் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே, ஆளுநருக்கு அனுப்பப்படுகிற எந்த ஒரு சட்ட முன்வடிவும் இவற்றில் எந்த ஒரு முடிவையும் சந்திக்க நேரிடலாம். ஒத்திசைவு பட்டியலில் இருக்கும் ஒவ்வொரு இடுகையின் மீது சட்டமன்றத்தின் கருத்தையே ஆளுநரும் பிரதிபலிப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. மக்களின் கருத்துக்களை சட்டமன்றம் பிரதிபலிக்கிறது அதற்கு ஆளுநர் பதிலளிக்க வேண்டுமென விரும்படுகிறது. ஆனால் ஆளுநரின் செயல்பாடுகள் மத்திய அரசின் கருத்தை எதிரொலிக்கும் வகையிலேயே நமது அரசு அமைப்பு அமைந்துள்ளது.
“சட்டமன்றத்தில் மீண்டும் ஒருமுறை நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டாலும் கூட, ஆளுனர் அதற்கு ஒப்புதல் அளிப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அவர் அதை குடியரசுத் தலைவரின் கருத்து கேட்டு அனுப்பி வைத்தால், குடியரசு தலைவரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகினாலும் தீர்ப்பு சாதகமாக இருக்கும் என்பதில் உத்தரவாதமில்லை….”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நீட் மசோதா திருப்பியனுப்பப்பட்டது  “தமிழ் இந்து”விற்கு குஷியான விவகாரம் தான் என்றாலும், தனது சந்தோசத்தை அப்பட்டமாக வெளிப்படுத்த முடியாத தமிழக சூழ்நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, “தங்களுக்குச்” சாதகமான இந்த அரசியல் சாசனத்தின் படியான வரம்புகளை துணைக்கு அழைத்துக் கொண்டு, இந்த தலையங்கத்தை தீட்டியுள்ளது. அதில் அரசியல் சாசன சட்டத்தின் ஜனநாயகத் தன்மை அம்பலமாகியிருக்கிறது என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியது.
மக்கள் விருப்பத்திற்கும் மக்கள் பிரதிநிதிகளின் அமைப்பான சட்டமன்றத்தின் விருப்பத்திற்கும் கூட மரியாதை இல்லை, அதிகாரம் இல்லை. ஆளுநரும், குடியரசு தலைவரும், உச்சநீதிமன்றமும் அவற்றின் முடிவுகளை, விருப்பங்களை ஏற்காமல் நிராகரிக்க முடியும் என்பதை ‘தி ஹிந்து’ தலையங்கக் கட்டுரை தெளிவுபடுத்துகிறது.
நீட் விலக்கு மசோதாவில் ஆளுநர் – தமிழக சட்டமன்றம் – குடியரசுத் தலைவர் – உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் நிலை அவற்றின் இயல்பிலேயே மக்கள் விரோதமானது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
இரண்டாவதாக, மேற்கண்ட ‘தி இந்து’ தலையங்கம், “…..ஒத்திசைவு பட்டியலை பொறுத்தவரை, மத்திய அரசு தனக்கான அதிகாரத்தை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்பதையே பிரச்சினையின் மையம் என்று நீட் விவகாரத்தில் மத்திய அரசின் நிலையை தெளிவாக விளக்கப்பட்டது.
படிக்க :
நீட் : ஏ.கே.ராஜன் குழு அறிக்கையும் – சங்கிகளின் கட்டுக்கதைகளும் !
நீட் மரணங்கள் : தமிழ்நாடு அரசின் சட்டம் தீர்வைத் தருமா ?
அதாவது, நீட் விவகாரத்தில் விலக்கு பெற இயலாது; அதிகார அமைப்புகளான ஆளுநர், குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்றம் இதனை ஏற்கப் போவதில்லை; எல்லாம் இருந்தாலும்! மத்திய அரசு நீட் விசயத்தில் விலக்கு கொடுக்க போவதில்லை. இதுதான் எதார்த்தநிலை என்பதை ‘தி இந்து’விளக்கியுள்ளது.
தமிழக மக்களாகிய நாம் எதிர்கொள்ள வேண்டிய எதார்த்தமும் இதுதான். இந்த உண்மையில் இருந்துதான் நமது செயல்பாடுகளை வகுத்துக் கொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டு விவகாரத்திலும் சரி, மூன்று வேளாண் சட்ட விவகாரத்திலும் சரி இதை ஒத்த நிலையைத்தான் சட்டமன்றம் குடியரசுத் தலைவர் நீதிமன்றம் மற்றும் மத்திய அரசு போன்றவை கடைப்பிடித்தனர் என்பது நாம் அறிந்த உண்மை.
தற்போது ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி உள்ளது; 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. இந்த விவகாரங்களில் போலி ஜனநாயகத்தின் இருக்கமான கோட்டைக் கதவுகளை தகர்த்தெறிந்தது மக்கள் போராட்டங்களே அன்றி, சட்டப் போராட்டங்கள் அல்ல. இந்த உண்மையை எடுத்துக் கொண்டு செயல்படுவோமாக! மீண்டும் மக்கள் எழுச்சி களம் புகுவோமாக!

பாரி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க