கொரோனா தொற்று – லாக்டவுன் காரணமாக 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தொடர்ச்சியாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவது சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியது. மாணவர்கள் ஆன்லைனில்தான் தேர்வு நடத்த வேண்டும் என்று கோரினர். இவற்றுக்கு தீர்வாக அரசு ஆன்லைன் மூலமாக வகுப்புகள், தேர்வுகள் நடத்த அனுமதி அளித்தது.
தனியார் கல்வி நிறுவனங்கள் அரசின் இந்த அறிவிப்பை தங்களின் கட்டணக் கொள்ளைக்கான வாய்ப்பாக பயன்படுத்தின அல்லது அத்தனியார் நிறுவனங்களின் நலனில் இருந்து அரசு இந்த அறிவிப்பை விடுத்தது என்றுகூட சொல்லலாம்.
ஆன்லைன் வகுப்புகள் மட்டுமல்ல செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டன. பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் வினாத்தாளை ஆன்லைனில் அனுப்பி, மாணவர்கள் வீட்டிலிருந்தே தேர்வு எழுத அனுமதித்தன. மாணவர்களும் மகிழ்ச்சியாக ஆன்லைனில் தேர்வுகளை எழுதினர்.
2021 லாக்டவுனிற்கு பிறகு செப்டம்பர் மாதத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் தொடர்ச்சியாக நடக்கவில்லை. ஆகவே ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடந்தன. ஓரளவுக்கு கொரோனா தொற்று குறையத் தொடங்கியது. அரசு அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் நேரடியாகத்தான் நடக்கும் (ஆஃப்லைனில்) என்பதை திட்டவட்டமாக அறிவித்தது.
படிக்க :
தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் புதிய கல்விக் கொள்கை : ஆசிரியர் உமா மகேஷ்வரி உரை !
NEP பரிந்துரைக்கும் முறைசாரா கல்வியின் ஒரு வடிவமே இல்லம் தேடி கல்வித் திட்டம் || CCCE
மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, சென்னை, புதுக்கோட்டை என பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாணவர்களும் அரசின் அறிவிப்புக்கு எதிராக போராடத் தொடங்கினர். வகுப்புகள் ஆன்லைனில் நடத்தியது போல், செமஸ்டர் தேர்வுகளையும் ஆன்லைனில்தான் நடத்த வேண்டும் என போராட்டங்களை நடத்தினர்.
பல்வேறு கல்வியாளர்களும் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தி, தேர்வு எழுதினால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படும், மாணவர்கள் படிக்காமல், புத்தகங்களை பார்த்தோ, அருகில் உட்கார்ந்துக் கொண்டு விவாதித்தோ எழுதுகின்றனர். ஆகவே நேரிடையாக மட்டும்தான் தேர்வு வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
எனினும் மாணவர் போராட்டாங்களின் விளைவு, அரசு தனது அறிவிப்பை திரும்பப் பெற்றுக்கொண்டு, இந்த முறையும் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த அறிவிப்பு கொடுத்தது.
மாணவர்கள் மகிழ்ச்சியாக வரவேற்று தேர்வுக்கு தயாராகின்றனர். பல மாணவர்கள் ஆன்லைன் தேர்வை புத்தகங்களை வைத்து பார்த்து எழுதுவது, ஒன்றாக உட்கார்ந்து விவாதித்து எழுதுவது, வாட்ஸ்ஆப்பில் பேசிக்கொண்டு பதில் எழுதுவது என்றெல்லாம் திட்டமிட்டுக் கொள்கின்றனர்.
கல்வியாளர்கள் சொல்வதுபோல் இத்தகைய ஆன்லைன் வகுப்பு மற்றும் தேர்வு முறை மாணவர்களின் கற்றல் திறனை குறைத்துவிடும், இந்நிலை தொடர்ந்தால் மாணவர்களின் எதிர்காலம் பெரியளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், ஒன்றிரண்டு தலைமுறையே கல்வியறிவற்றவர்கள் உருவாகுவதற்கு வழிவகுக்கும் என்பதில் நமக்கும் மாற்றுக்கருத்து இல்லை.
அனைவருக்குமான கல்வி மறுப்பும், ஆளும் வர்க்கத்தின் நோக்கமும்:
இதற்கு பின்னால் இருக்கும் ஆளும் வர்க்கத்தின் நலன், கல்வி என்பதை சரக்காக மாற்றி கொள்ளையடிக்கும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. முதலாளித்துவ சமூகத்தில் அனைவருக்கும் கல்வியை கொடுப்பது, சமூகத்தை முன்னேற்ற வேண்டுமென்பதற்கோ, ஏழை, உழைக்கும் வர்க்கங்களை சார்ந்த குழந்தைகளுக்கும் கல்வியறிவை கொடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல.
ஆளும் வர்க்கங்களின் உற்பத்திக்கு, பல்துறை அறிவு பெற்றவர்கள் தேவைப்படுவதற்கு ஏற்ப, அவர்கள் ஒட்டச் சுரண்டுவதற்கு, குறைந்த கூலிக் கொடுப்பதற்கு, சமூகத்தில் இருந்து அவர்களை பொறுக்கி எடுத்துக் கொள்வதற்கு கல்வி, பயிற்சி பெற்ற வேலையில்லா ரிசர்வ் பட்டாளம் தேவைப்படுகிறது.
அத்தகைய சூழல் எப்பொழுதும் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மிகவும் அவசியமாகும். ஆனால் அவற்றின் தேவையைவிட, மிதமிஞ்சிய வகையில் சமூகத்தில் வேலையில்லா ரிசர்வ் பட்டாளம் அதிகரித்து வருகிறது. இவர்கள் இந்த உற்பத்தி முறைக்கு தேவையற்றவர்களாக, சமூகத்தில் வாழத் தகுதியற்றவர்களாக, பெரும் சுமையாக ஆளும் வர்க்கங்கள் கருதுகின்றன.
கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் உள்ள வாக்கியத்தை இங்கு நினைவூட்டுவது பொருத்தமாக இருக்கும். “ஏன் இப்படி? ஏனென்றால் நாகரிகம் மிதமிஞ்சிவிட்டது, வாழ்க்கைத் தேவைப் பொருட்கள் அளவு மீறிவிட்டன, தொழிலும் வாணிபமும் எல்லை கடந்துவிட்டன. சமுதாயத்தின் வசமுள்ள உற்பத்தி சக்திகள் முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகளின் வளர்ச்சிக்கு இனி உதவுவதாய் இல்லை. மாறாக, அவை இந்த உறவுகளுக்குப் பொருந்தாத படி அளவுமீறி வலிமை மிக்கவையாகிவிட்டன. இந்த உறவுகள் அவற்றின் வளர்ச்சிக்கு தடையாகிவிட்டன. பொருளுற்பத்தி சக்திகள் இந்தத் தடைகளைக் கடக்க முற்பட்டதும் அவை முதலாளித்துவ சமுதாயம் முழுமையிலும் குழப்பம் உண்டாக்குகின்றன, முதலாளித்துவ சொத்துடைமை நிலவுவதற்கே அபாயத்தை ஏற்படுத்துகின்றன. அவை உற்பத்தி செய்யும் செல்வத்துக்குத் தம்முள் இடம் போதாதபடி முதலாளித்துவ சமூக உறவுகள் குறுகலாகியிருக்கின்றன. இந்த நெருக்கடிகளை முதலாளித்துவ வர்க்கம் எப்படிச் சமாளிக்கிறது? ஒரு புறத்தில், வலுக்கட்டாயமாய் உற்பத்தி சக்திகளில் ஒரு பெரும் பகுதியை அழிப்பதன் மூலமும்…”
ஆகவே அனைவருக்கும் கல்வி என்ற அவசியம் கூட இன்றைய ஆளும் வர்க்கங்களுக்கு தேவையில்லாததாக மாறி வருகிறது. இவற்றின் விளைவு இலவச கல்வி, அனைவருக்கும் கல்வி போன்றவைக் கூட தேவையற்றதாகின்றன. ரிசர்வ் பட்டாளம் கூட மிதமிஞ்சி அவர்கள் வாழத்தகுதி இல்லாதவர்களாக்கப்பட்டு வருகிறார்கள். முறையான கல்வி இல்லை, வேலையின்மை, எதிர்காலத்தின் மீது நம்பிக்கையின்மை, மனசோர்வு, தனிமை உணர்வு, சாராயம், கஞ்சா போதை (கஞ்சா மிக வேகமாக பரவி வருகின்றது.), செல்பேசியில் மூழ்குவது என்கிற நிலைக்கு குறிப்பிட்ட பிரிவு மாணவ – இளைஞர்கள் தள்ளப்பட்டு வருகிறார்கள். இவர்களை ‘வேண்டாத சதைப் பிண்டமாக, வெட்டியெறிய வேண்டியவர்களாக’ ஆளும் வர்க்கம் கருதுகிறது.
ஆன்லைன் தேர்வும், மாணவர்களின் மனநிலையும்:
ஆன்லைன் தேர்வுக்காக மாணவர்களின் போராட்டம், ஆளும் வர்க்கத்தின் நலனில் இருந்து இன்றைய சமூக சூழலில் இளைஞர்கள், மாணவர்கள் ஏன் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று பார்த்தோம். இத்தகைய சூழலில் மாணவர்களின் மனநிலையை பரிசீலிப்போம்.
மாணவர்கள் ஆன்லைன் தேர்வை புத்தகங்களை பார்த்து எழுத வேண்டும் என்றுதான் விரும்புகின்றனர், திட்டமிடுகின்றனர். யாரும் கண்காணிக்கவில்லை என்றாலும், சுய ஒழுக்கத்துடன் படித்து தேர்வை எழுத வேண்டும் என்று நினைக்கவில்லை. அதைவிட முக்கியமான விசயம், மாணவர்களிடம் எந்த ஓரு குற்றவுணர்வோ, தாம் செய்வது தவறு என்ற உணர்வோ கடுகளவுக்கூட இல்லை.
இது இன்று மட்டும் நடக்கவில்லை, ‘பிட்’ அடிப்பது, வினாத்தாளை மாற்றிக்கொண்டு எழுதுவது, புத்தகத்தை ரகசியமாக வைத்துக்கொண்டு எழுதுவது, காப்பி அடிப்பது போன்றவை நிகழ்ந்து கொண்டுதான் இருந்தன. ஆனால் அப்பொழுதுக்கூட குற்றவுணர்வு, தவறானவைதான் என்கிற எண்ணங்கள் இருந்தன. அத்தகைய எந்த குற்றவுணர்வுமின்றி இன்றோ மகிழ்ச்சியாக, உற்சாகமாக திட்டமிட்டு புத்தகங்களை பார்த்து ஆன்லைனில் தேர்வு எழுதுகின்றனர்.
மாணவர்களிடம் சுய ஒழுக்கம் இல்லாமல் போய்விட்டதா, இத்தகைய மாணவர்கள் நாளை சமூகத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன? சமூகம் சீரழிந்து விடாத? என்றெல்லாம் கேள்விகளும், ஆதகங்களும் வெளிப்படாமல் இல்லை. இத்தகைய கேள்விகளுக்கு மாணவர்கள் சார்பாக நாம் பதிலளிப்போம். ஒன்றும் குடி முழுகிப்போய்விடாது என்று.
இந்த சமூகம் மாணவர்களுக்கு எதை கற்றுத்தந்ததோ அதையே திருப்பி அளிக்கின்றனரே தவிர, வேறோன்றுமில்லை. இங்கு குற்றவாளி இந்த சமூகமும், இத்தகைய நிலைக்கு காரணமான ஆளும் வர்க்கமும்தான். மாணவர்களோ, இளைஞர்களோ அல்ல.
வேலையின்மை, நம்பிக்கையற்ற எதிர்காலம், போட்டி, பொறாமை, சீரழிவு, வறுமை இவற்றை தோற்றுவித்தது ஆளும் முதலாளித்துவ வர்க்கம். அதையே இச்சமூகத்திற்கு எதிர்வினையாற்றுகின்றனர்.
சுயநலமாக வாழ வேண்டும், தன்னுடைய நலனுக்காக எதையும் செய்யலாம், வேலை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும், வாழ்கையில் வெற்றி பெற தமக்கு முன்னிற்பவரின் காலையும் வாரலாம், மற்றவர்களை சுரண்டலாம், அடக்கலாம், ஒடுக்கலாம் போன்றவற்றையே இந்த முதலாளித்துவ சமூகம் கற்றுத்தருகிறது.
போட்டி தேர்வுகளில் 1000 இடங்களுக்கு, 10 லட்சம் பேர் போட்டி. இதில் தான் 1000-த்தில் ஒரு இடத்தை பெற்றுவிட வேண்டும், வேலை கிடைக்காமல் போகிறவர்களைப் பற்றி எந்த கவலையும் தேவையில்லை. இதைதானே இளைஞர்களுக்கு இச்சமூகம் கற்றுத்தருகிறது.
இவைதான் இந்தச் சமூகத்தின் பண்பாடாக, ஒழுக்கமாக, விழுமியமாக இருக்கும்போது, மாணவர்கள், இளைஞர்கள் மட்டும் தேர்வுகளை சுய ஒழுக்கத்துடன் எழுத வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது எந்த வகையில் சரியாக இருக்கும். அப்படியென்றால் இவற்றை ஆதரிக்கிறீர்களா என்று விதண்டாவாதமாக எதிர்வாதம் புரியக்கூடாது.
படிக்க :
பள்ளிகள் மூடல் : உலகளாவிய கல்வி நெருக்கடி நிலை | உலக வங்கி அறிக்கை !
காவிக் கல்வி : பெண்ணடிமைத்தனத்தை பரப்பும் சி.பி.எஸ்.ஈ !
இச்சமூகத்திலும் குறைந்தப்பட்சம் நியாய உணர்வோடு வாழ்பவர்களில் சாதாரண உழைக்கும் மக்கள்தான் பெரும்பான்மையினர். இவர்களுக்கு மற்றவர்களை சுரண்டுவதற்கு வாய்ப்பு இல்லையென்பதால் அல்ல, இவர்களின் யாதார்த்தமான வாழ்க்கை இதர ஒடுக்கும் மக்களுடன் இணைந்து வாழ வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துவதால்.
கல்விமுறையும், சமூகமும் மாணவர்களுக்கு “சமூக நலன், மக்கள் நலன், தேச நலன்” போன்றவற்றை என்று பிரதானப்படுத்துகிறதோ, அத்தகைய பண்பாட்டில் வளர்ந்து வரும் சமூகத்தில் மாணவர்களை யாரும் வெளியிலிருந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகும்.
அத்தகைய பண்பாடு, சுரண்டலை மையமாகக் கொண்டுள்ள முதலாளித்துவ உற்பத்தி முறையில் கொஞ்சம் கூட இவை சாத்தியமில்லை. ஆகவே பாட்டாளி வர்க்கம் தன்னை ஆளும் வர்க்கமாக அமைத்துக்கொள்ளும் சமூகத்தில், சோசலிச உற்பத்தி முறையில் சமூக, தேசிய நலனை பிரதானப் படுத்தும் பண்பாடு தழைத்தோங்கும்.
ஆகவே, இத்தகைய சீரழிவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டியது ஆளும் வர்க்கங்களே தவிர, மாணவர்களோ, இளைஞர்களோ அல்ல! இன்றைய சீரழிந்த சமூகத்தை மாற்றுவதற்கான போராட்டங்களின் ஊடாகத்தான் சமூக உணர்வையே மாணவர்கள் பெறுவார்கள். அத்தகைய பணியை முன்னெடுப்போம்.

கந்தசாமி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க