பெண் அடிமைத்தனம் மற்றும் ஆணாதிக்கத்தை நியாயப்படுத்தும் விதமாக சிபிஎஸ்இ தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
கடந்து டிசம்பர் 11-ம் தேதி நடைபெற்ற சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு ஆங்கில மொழிதாள் தேர்வில் பெண்களுக்கு எதிரானக் கருத்துக்களை கேள்விகளின் ஊடாக பதிவு செய்துள்ளது. ஆங்கில உரைநடையில் சில பத்திகள் கொடுத்து அதிலிருந்து மாணவர்களுக்கு கேள்வி கேட்பது என்ற வகையில் கொடுக்கப்பட்ட உரைநடைப் பகுதி முழுக்க முழுக்க ஆணாதிக்கச் சிந்தனையை போற்றுவதாகவும், பெண் விடுதலையை கேள்விக்குட்படுத்துவதாகவும் இருந்தது.
அதில், குடும்ப உறவுகளில் மனைவி வலுப்பெறுவது என்பது குடும்பக் கட்டமைப்பை வலுவிழக்க செய்கிறது என்றும் குழந்தைகள் தந்தையின் பேச்சை வேதவாக்காக மதிப்பதில்லை என்றும் முன்பு கணவனுக்கு மணைவி கீழ்படிந்து வந்த நிலையில் தற்போது அப்படியான சூழல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
படிக்க :
12-ம் வகுப்பு தேர்வில் குஜராத் கலவரம் தொடர்பான கேள்வி : பதறிய சி.பி.எஸ்.இ
சி.பி.எஸ்.ஈ பாடத்திட்ட மாற்றம் : ஜனநாயகத்தை கல்வியிலிருந்தே ஒழித்துக்கட்டும் சதி !
மேலும், குழந்தைகளையும், வேலையாட்களையும் அவரவர்களுக்கான இடங்களில் வைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இளம் தலைமுறையினர் சீரழிவிற்கு “ஃபெமினிஸ்ட் ரிவோல்ட்” (பெண்ணுரிமை கலக) சிந்தனை வளர்ந்துள்ளதே காரணம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பெண்களுக்கு எதிராக, பெண்ணடிமைத் தனத்தை நியாயப்படுத்தும் வகையில் இடம்பெற்றிருந்த இந்தக் கேள்விகளுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரசு, திமுக, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து பாராளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பியுள்ளன.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ” ஆங்கில தாளில் உள்ள படித்து விடையளிக்கும் பகுதி முற்றிலும் அருவருப்பானது. இளைஞர்களின் மன உறுதியையும் எதிர்காலத்தையும் நசுக்க ஆர்எஸ்எஸ்-பாஜக சூழ்ச்சி செய்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
“பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான அடிமை சித்தாந்தத்தை இந்திய சமூகத்தின் மீது திணிக்கும் என்றும், புதிய கல்விக் கொள்கை என்பது இந்த மாதிரி அழுகிப் போன கற்காலச் சிந்தனைகளையும், பெண்கள், குழந்தைகள், கல்வி முறைக்கு, இந்தியச் சமூகத்தின் நவீனத் தன்மைக்கும் எதிராக இருக்கிற சித்தாந்தத்தைத்தான் புதிய கல்விக் கொள்கை பிரதிபலிக்கிறது. புதிய கல்விக் கொள்கையில் என்ன வரப்போகிறது என்பதற்கு முன்னுதாரணமாக இந்த வினாத்தாள் வந்துள்ளது” என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜோதிமணி கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களிலும் எதிர்ப்புகள் அதிகரிக்கவே வேறுவழியின்றி கேள்வியை நீங்குவதாக அறிவித்துள்ளது சிபிஎஸ்இ நிர்வாகம்.
ஆனால், கடந்த வாரம் 12-ம் வகுப்பு தேர்வில் குஜராத் கலவரம் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது என்று தெரிந்த மறுகணமே அக்கேள்வியை நீக்கி, கேள்வியை தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று பதறியடித்துக் கொண்டு சிபிஎஸ்இ.
குறிப்பாக, குஜராத் கலவரம் தொடர்பான கேள்வி பாட புத்தகத்தில் இருந்துதான் கேட்டப்பட்டுள்ளது. அதற்கே ஏவ்வளவு பதறிப்போய் செயல்பட்ட சிபிஎஸ்இ, தற்போது பாடபுத்தகத்தில் இல்லாமல் தயாரிக்கப்பட்ட ஓர் ஆணாதிக்கம் மிக்க உரைநடை பகுதியை சர்வசாதாரணமாக கடந்து போகிறது. பாராளுமன்றம் வரை எதிர்ப்புகள் வந்த பிறகுதான் பின் வாங்குகிறது.
சி.பி.எஸ்.இ. தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் ஊதுகுழலாக செயல்பட்டு இந்துதுவ கருத்துக்களை மாணவர்கள் மனதில் விதைக்க முயற்சித்து வருகிறது. கல்வி காவிமயமாவதைத் தடுக்கத் தவறினால், அடிமைச் சமூகத்தை நோக்கி இந்திய சமூகம் தள்ளப்படுவதை தடுக்க முடியாது.
சந்துரு
செய்தி ஆதாரம் : இந்தியன் எஸ்பிரஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க