த்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் 2020-2021-ம் ஆண்டுக்கான பாடத் திட்டத்திலிருந்து மதச்சார்பின்மை, கூட்டாட்சி, குடியுரிமை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நீக்கியுள்ளது. இந்த பாடத் திட்ட நீக்கத்திற்கான வழிகாட்டுதலை மத்திய மனித வளத்துறை அமைச்சகம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சி.பி.எஸ்.ஈ என்று அழைக்கப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் கடந்த ஜுலை 7, 2020 அன்று தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. அந்தச் சுற்றறிக்கையில், தற்போதைய கொரோனா நிலைமைகளைக் கணக்கில் கொண்டு 2020- 21 கல்வியாண்டில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் 30% அளவிற்குக் குறைக்கவுள்ளதாகத் தெரிவித்தது.

குறிப்பாக வகுப்பறை பயிற்றுவித்தல் நேரம் குறைவாக இருக்கும் காரணத்தால் மாணவர்களின் பளுவைக் குறைக்க இந்த முடிவுகளை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தது. அந்த அடிப்படையில் ஏற்கெனவே இருக்கும் பாடத்திட்டத்தில் இருந்து குறிப்பான பகுதிகளை நீக்கி புதிய பாடத்திட்டத்தை தனது வலைத்தளத்தில் ஏற்றியுள்ளது.

இந்த புதிய பாடத்திட்டத்தின் கீழ், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசியல் அறிவியல் (Political Science) பாடத்தில் இருந்து கூட்டாட்சி, குடியுரிமை, தேசியவாதம், மதச்சார்பின்மை ஆகிய பாடப் பகுதிகளை (Chapers) பாடத்திட்டத்திலிருந்து சி.பி.எஸ்.ஈ நீக்கியுள்ளது. அதே போல ”நமக்கு ஏன் உள்ளாட்சி அரசாங்கங்கள் தேவை” , “இந்தியாவில் உள்ளாட்சி அரசாங்கங்களின் வளர்ச்சி” ஆகிய உப பிரிவுகளையும் (Sub Sections) பாடத் திட்டத்திலிருந்து நீக்கியுள்ளது.

மேலும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அரசியல் அறிவியல் பாடத்திலும் பணமதிப்பழிப்பு, ஜனநாயகம், வேற்றுமையில் ஒற்றுமை, பாலின வேறுபாடு, மதம் மற்றும் ஜாதி குறித்த பாடப் பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு புகழ்பெற்ற போராட்டங்கள், இயக்கங்கள் உள்ளிட்ட பகுதிகளும் பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. தமிழக மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இருந்து திருக்குறள், சிலப்பதிகாரம், பெரியார் சிந்தனைகள் ஆகிய பாடப் பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. மோடி, சீன எல்லையில் இராணுவத்தினரிடம் திருக்குறள் வாசிப்பது எல்லாம் கண்துடைப்பு நாடகம் என்பதை இந்த சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்கு முன்னதாகவே, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் வழிகாட்டுதலின் கீழ் பாடத் திட்டத்தின் அளவு 30% அளவுக்கு குறைக்கப்படவுள்ளதாகவும் அதற்கேற்ற வகையில் பாடத்திட்டத்தை மாற்றி விரைவில் வெளியிடவிருப்பதாகவும் சி.பி.எஸ்.ஈ அறிவித்திருந்தது.

படிக்க:
கருப்பின மக்களின் வாழ்வும், அமெரிக்கா எனும் ஜனநாயக சோதனையும் !
தோழர் வரவரராவை விடுதலை செய் ! கருத்துப்படம்

இந்திய அரசியல்சாசனத்தின் அடிப்படைகளை மாணவர்களுக்கான கல்விப் பாடத்திட்டத்திலுருந்து நீக்கியது குறித்து இந்தியா முழுவதும் இருந்து கல்வியாளர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரிடமுமிருந்து விமர்சனங்கள் வந்த பின்னர் கடந்த ஜூலை 8-ம் தேதி இந்த மாற்றம், இந்த கல்வியாண்டுக்கு மட்டும்தான் என்று சி.பி.எஸ்.ஈ விளக்கமளித்தது. ஆனால் இந்த ஒரு ஆண்டுக்குமே, குறிப்பான இந்த அரசியல் அறிவியல் பாடப் பகுதிகள் நீக்கப்பட்டது குறித்து எந்த விளக்கமும் தரவில்லை.

இது குறித்து விளக்கமளித்துள்ள மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், கொரோனா நிலைமைகளை ஒட்டி, மாணவர்களின் கல்விப் பளுவைக் குறைப்பதற்காக இந்தியா முழுவதும் கல்வியாளர்களிடம் மத்திய அரசு கருத்து கேட்டதாகவும், அவ்வாறு பெறப்பட்ட சுமார் 1500 ஆலோசனைகளைப் பரிசீலித்து இந்த பாடத்திட்டக் குறைப்பை செய்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் இந்த நடவடிக்கை குறித்து உள்நோக்கம் கொண்ட தவறான விளக்கங்கள் அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் அறிவியல் பாடத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தை மட்டும் அனைவரும் பெரிதாக்கிப் பேசுகின்றனர் என்றும், பாடங்களில் உள்ள அடிப்படையான பகுதிகளை வைத்துக் கொண்டு கூடுதல் பகுதிகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளது என்றும், இந்த விடுபட்ட தலைப்புகளை அதற்கு சம்பந்தமுள்ள பிற பாடப் பகுதிகளை விளக்குகையில் ஆசிரியர்கள் விளக்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளார் ரமேஷ் பொக்ரியால். அதாவது, மதச்சார்பின்மை, கூட்டாட்சி, குடியுரிமை ஆகியவை எல்லாம் அவர்களைப் பொறுத்தவரையில் அரசியல் அறிவியல் பாடத்தின் அடிப்படையான பகுதிகள் கிடையாது.

பாஜக முதன்முறையாக வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைத்த போதே, பாபர் மசூதி இடிப்பில் இழிபுகழ் பெற்ற முரளி மனோகர் ஜோஷியின் தலைமையில், பாடத்திட்டத்தை “இந்துத்துவப்” படுத்தும் வேலைகளைச் செய்யத்துவங்கியது சங்க பரிவாரக் கும்பல். அப்போதைய கூட்டணிக் கட்சிகளின் நெருக்குதல் காரணமாக விரிவான வகையில் எதையும் செய்யமுடியவில்லை.

தற்போது தொடர்ச்சியாக இரண்டுமுறை மத்தியில் மோடி ஆட்சி அமைந்துள்ள சூழலில், கல்வியில் நீட் துவங்கி புதிய கல்வித்திட்டம் வரை அனைத்திலும் மனுதர்மத்தை நிலைநாட்டி வருகிறது சங்க பரிவாரக் கும்பல். தமது பாசிச நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ற வகையில் அடுத்த தலைமுறையை வார்த்தெடுக்க, மாணவர்களின் பாடத்திட்டத்தில் இருந்து, ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களான மதச்சார்பின்மை, கூட்டாட்சி, குடியுரிமை ஆகியவற்றை படிப்படியாக ஒழித்துக்கட்டுவதற்கான ’பிள்ளையார் சுழி’தான் இந்த தற்காலிக பாடத்திட்ட மாற்றம் !


– நந்தன்
செய்தி ஆதாரம்: ஸ்க்ரால்.

1 மறுமொழி

  1. வர வர சிபிஎஸ்இ கல்வி முறையும் சமச்சீர் கல்வி மாதிரி குப்பைத்தொட்டியாக ஆகி வருகிறது என இதன் மூலம் தெரிகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க