ப்பிரிக்க-அமெரிக்கரும், ஐந்து குழந்தைகளின் தந்தையுமான 46 வயது ஜார்ஜ் பிளாய்ட், கடந்த மே 25 அன்று அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகர வெள்ளையின போலீஸ் அதிகாரி டெர்க் சௌவின்னால் 8 நிமிடங்கள், 46 விநாடிகளுக்கு கழுத்தின் மீது முழங்காலிட்டு அழுத்திக் கொல்லப்பட்டார். பிளாய்ட் கொலை செய்யப்பட்ட வீடியோ வெளியானதும் அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. அமெரிக்காவில் எப்போதெல்லாம் இனக்கலவரங்கள் நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் டாக்டர் மார்டின் லூதர்கிங்கின் வார்த்தைகள் அடிக்கடி எதிரொலிக்கின்றன.

டாக்டர் மார்டின் லூதர் கிங்

“கலகங்கள்தான் புறக்கணிக்கப்பட்டவர்களின் மொழி” என்பது டாக்டர் மார்டின் லூதர் கிங்கின் வார்த்தை. பகலில் அமைதியாக நடக்கும் அணிவகுப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள், இரவில் மட்டும் ஏன் வன்முறை வெறியாட்டங்களாக, பொதுச் சொத்தை சூறையாடுவதாக இருக்கின்றது என்பதை வெளிக்காட்ட முயற்சிக்கும் பண்டிதர்களால் மார்ட்டின் லூதர் கிங்கின் வார்த்தைகள் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படுகின்றன.

இந்த சூழலுக்குப் பெருமளவில் பொருத்தமில்லாத போதும், மார்ட்டின் லூதர் கிங் படுகொலை செய்யப்படுவதற்கு சரியாக 7 மாதங்களுக்கு முன்பு, 1967-ம் ஆண்டு வாசிங்டனில் உள்ள அமெரிக்க உளவியல் கழகத்தின் ஆண்டுக் கூட்டத்தில் பேசிய உரை முக்கியமானது. அங்கு அவரது உரையில். “வெள்ளை அமெரிக்கா தனது ஆன்மாவிலேயே இனவெறியால் நஞ்சூட்டப்பட்டுள்ளதை அது புரிந்துகொள்ள வேண்டும். அந்த புரிதல்கள் கவனமாக ஆவணப்படுத்தப்பட வேண்டும், அதன் தொடர்ச்சியாக இதை நிராகரிப்பது மிகக் கடினம்” என்று கூறினார்.

மேலும் “நீக்ரோ வாழ்க்கையின் எதார்த்தத்தைப் பற்றி துளியும் அறிவற்றவர்களாக வெள்ளை அமெரிக்கர்கள் உள்ளனர் என்பதை, உள்ளபடியே வெள்ளை அமெரிக்கர்களிடம் சமூக விஞ்ஞானிகள் எடுத்துரைக்க வேண்டுமென நீக்ரோக்கள் விரும்புகிறார்கள்” என்று தனது பார்வையாளர்கள் மத்தியில் அறைகூவல் விடுத்தார் மார்ட்டின் லூதர் கிங்.

கோவிட் 19 பரவலால், மூன்று மாத ஊரடங்கிலிருந்து அமெரிக்கா மீண்டு வரும் சூழலில், கவனத்தைச் சிதறடிக்க விளையாட்டோ, வேறு எதுவுமோ தொலைக்காட்சியில் இல்லாத நிலையில், இதுவரை அமெரிக்க போலீஸ் வரலாற்றில் இல்லாதபடி வீடியோவாக பதிவு செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டக்கூடிய, சீர்கேடான மற்றும் மனிதத் தன்மையற்ற கொலைவெறித் தாக்குதலை போலீசு பயன்படுத்தியதைப் பற்றி நாடு முழுவதும் மக்கள் மத்தியில் விவாதம் நடந்தது.

17 வயது டார்னெலா ஃப்ரேசரால் தனது செல்போன் மூலம் கவனமாக ஆவணப்படுத்தப்பட்ட பிளாய்ட் கொலைக் காட்சியானது, அமெரிக்கா தோன்றியதிலிருந்து கறுப்பின மற்றும் இதர நிற மக்கள் இடித்துரைத்து வந்த, தங்கள் மீதான அரசால் அனுமதிக்கப்பட்ட இனவெறி வன்முறையின் எதார்த்தத்தை சாரமாக வெள்ளையின அமெரிக்காவிற்கு அம்பலப்படுத்தியது. கடந்த நான்கு மாத காலங்களில், (பிப்,2020 – மே,2020) வெள்ளையினப் போலீசால் கொல்லப்பட்ட நிராயுதபாணியான கருப்பினத்தவர்களில் பிளாய்ட் மூன்றாவது நபர்.

இதற்கு முன்னர், ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள பிரன்சுவிக் நகரில், ஒரு முன்னாள் சட்ட அமலாக்க அதிகாரியும் அவரது மகனும் மற்றொரு வெள்ளையினத்தவரும் சேர்ந்து தமது புதிய குடியிருப்பிப் பகுதிக்கு அருகே ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆப்பிரிக்க-அமெரிக்கரான 25 வயது அகமது ஆர்பெரியை துரத்திச் சென்று சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

மற்றொரு சம்பவத்தில், இன்னொருவர், மிஸ்ஸோரி மாகாணத்தின், செயிண்ட் லூயிஸில் வசிக்கும் அவசரகால மருத்துவ தொழில்நுட்பவியலாளரான 26 வயது பிரியோனா டெய்லர் தனது படுக்கையில் இருந்த நிலையிலேயே இரகசிய போதைப் பொருள் துப்பறிவாளர்களால் 8 முறை சுடப்பட்டு உயிரிழந்தார். ஏற்கனவே போலீஸ் காவலில் இருந்த சந்தேகத்துக்கிடமான ஒரு நபரின் வீட்டில் முன்னறிவிப்பற்ற தேடுதல் ஆணையை (no-knock search warrant) நடைமுறைப்படுத்தும் முயற்சியில் தவறான வீட்டிற்குள் நுழைந்திருக்கின்றனர்.

அடிமைமுறை முதல் ஜிம் க்ரோ சட்டங்கள் (Jim Crow), சிவில் உரிமைகள் / கருப்பின இயக்கங்கள் வழியாக போதைப் பொருள்கள் மீதான போர் மற்றும் தற்போதைய பெருமளவிலான சிறைவைப்பு காலகட்டம் வரையிலான அமெரிக்காவின் நீண்ட கொடூரமான கருப்பின மக்கள் மீதான தாக்குதல் வரலாற்றில், இந்த சமீபத்திய கொலைகள் புதியதாக சேர்ந்திருக்கின்றன.

படிக்க:
அமெரிக்கா : கொரோனாவுக்கு பலியாகும் கருப்பின ஏழை மக்கள் !
கழிப்பறை கட்ட துப்பில்லை ! ஸ்மார்ட் சிட்டியாம்… திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு !

முதன்முதலாக ஆப்பிரிக்கர்கள் அமெரிக்கக் கடற்கரைக்குக் கொண்டு வரப்பட்ட 1619-ம் ஆண்டு முதல் 1968-ம் ஆண்டு வரையிலான 349 ஆண்டு காலத்தில், கருப்பின மக்கள் தங்கள் முழுமையான குடியுரிமை உரிமைகளை கொள்கையளவில் 1968-ம் ஆண்டுதான் சமத்துவ வீட்டு வசதிச் சட்டத்தின் (Fair Housing act) மூலம் பெற்றனர். நவீன சிவில் உரிமைகள் சட்டம், அதாவது சிவில் உரிமைகள் சட்டம் 1964 மற்றும் ஓட்டு உரிமைச் சட்டம் 1965 ஆகியவற்றை இயற்றியதன் உச்சமாகவே இச்சட்டம் இயற்றப்பட்டது. இன ஒடுக்குமுறையை நசுக்குவதாக வரையறுக்கப்படும் தற்போதைய அமெரிக்காவில் கருப்பின மக்களின் 401 ஆண்டுகால (1618 – 2020) அனுபவத்தின் 87%-த்தை (1964 வரை) இந்தச் சட்டம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

ஆகவே கடந்த 56 ஆண்டுகளில் மட்டும்தான், இந்த எழுத்தாளரின் வாழ்நாளுக்குட்பட்ட காலகட்டத்தில்தான் அமெரிக்கக் குடியுரிமையிலிருந்து உரிமைகளும், சுதந்திரமும் ஆப்பிரிக்க–அமெரிக்கர்களுக்கு வெளிப்பகட்டாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அமெரிக்காவிலிருக்கும் கருப்பின மக்களின் மீதான கொடூரக் கொலைகள் தடையின்றி தொடர்கின்றன.

எவ்வாறாயினும், இதற்கு முன்னர் பெரும்பாலான அமெரிக்க மாகாணங்களில் உள்ள தற்காப்புச் சட்டங்கள் அனுமதித்துள்ள (Stand–Your-Ground law) சரத்துகளின் படி, வெள்ளையினப் போலீஸ் மற்றும் வெள்ளையின குண்டர்களால் தற்காப்பு என்ற பெயரால் கொல்லப்பட்ட நிராயுதபாணி கருப்பினத்தவர்களின் மரணங்கள் நிகழ்ந்த தருணங்களைவிட தற்போதைய தருணம் வெளிப்படையாகவே மாறுபட்டதாக இருக்கிறது. கடந்த காலங்களில், குறிப்பாக 1960-களின் பிற்பகுதியில், நிராயுதபாணியான கருப்பினத்தவர்கள் கொல்லப்பட்டதையடுத்து நடந்த கலவரங்கள் மற்றும் போராட்டங்களில் கருப்பினத்தவர்களே முதன்மையாகப் பங்கேற்ற நிலையில், இந்தமுறை வித்தியாசத்தை உணர முடிகிறது. ஜார்ஜ் பிளாய்டின் மரணத்திற்குப் பிறகு, 64% வெள்ளையினத்தவர்களும், 19% கருப்பினத்தவர்களும் வாழும் மின்னபொலிஸ் நகரின் வீதிகளில் களமிறங்கிய அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள், கிளர்ச்சியாளர்கள் மற்றும் சூறையாடியவர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் அனைவரும் பல்வேறு பின்னணியிலிருந்து வந்த பல்வேறு இனத்தைச் சேர்ந்த கலவையான மக்களே ஆகும்.

இந்தமுறை, அமெரிக்காவின் பன்முகத்தன்மையை மிக நெருக்கமாக பிரதிபிம்பப்படுத்தும் விதமாக போரட்டக்காரர்களும் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறார்கள். போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் அமெரிக்காவின் சிறிய மற்றும் பெரிய நகரங்கள் மற்றும் மாநகரங்களுக்குப் பரவிவரும் நிலையில் அங்கிருந்து வெளிவரும் புகைப்படங்கள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.
போராட்டங்கள் அமெரிக்கா முழுவதும் மற்றும் தற்போது உலகம் முழுவதும் தொடரும் நிலையில், வெள்ளையின நடுத்தரவர்க்கத்தினர் வாழும் சிறு நகர்ப்புற, கிராமப்புறப் பகுதிகளில் வெள்ளையின போராட்டக்காரர்கள் “கருப்பினத்தவர்களின் உயிரும் முக்கியமானது” (Black Lives Matter) என்ற பதாகைகளை ஏந்தியபடி போராட்டங்களில் கலந்து கொள்வது, இந்தமுறை முந்தைய நிலையை விட வேறுபட்டது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

உலகளாவிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பினும். கோரிக்கைகள் என்னவோ அவற்றின் அடிப்படைஅம்சத்தில், பல தலைமுறைகளாக கருப்பின மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளாகவே இருக்கின்றன. அவையும் கூட வேறுபட்டவையே. ஒவ்வொரு விசயத்திலும், வெள்ளையின உயிருக்கும், பிறவற்றுக்கும் மதிப்பளிக்கும் அளவிற்கு கறுப்பின உயிருக்கும் சமூகம் மதிப்பளிக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கைகளின் அடிப்படையாக இருக்கிறது. அமெரிக்காவில் தற்போதுவரை 401 ஆண்டுகாலத்தில் சுதந்திரத்திற்காகவும், இன சமத்துவம் மற்றும் நீதிக்காகவும் நடைபெற்ற இரத்தம் தோய்ந்த போராட்டத்தின் சாரம்சத்தை “கருப்பினத்தவர்களின் உயிரும் முக்கியமானது” என்ற ஒற்றைவரி எளிமையாகவும், நேர்த்தியாகவும் எடுத்துக் காட்டுகிறது.

தற்போதைய போராட்டங்களும் வேறுபட்டவையே. அவை இனங்களைத் தாண்டி நடப்பவையாக மட்டுமின்றி எல்லை கடந்தும் பெருங்கடல்களைத் தாண்டியும் பரவியுள்ளன. கனடா, ஐரோப்பா ஒன்றியம், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் இதர நாடுகளிலும் ”கருப்பினத்தவர்களின் உயிரும் முக்கியமானது” இயக்கத்திற்கு ஆதரவாகவும் அமெரிக்கா மற்றும் இதர நாடுகளிலும் இருக்கும் அமைப்புரீதியான இனவெறி மற்றும் போலீசு மிருகத்தனத்துக்கு முடிவுகட்டக் கோரியும் போராட்டங்கள் நடக்கின்றன.

படிக்க:
“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் !
இந்தியாவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் போராட்டங்கள் ஏன் நடக்கவில்லை ?

இதற்கு முன்னர் கொல்லப்பட்ட 12 வயதான தமிர் ரைஸ் (2014), எரிக் கார்னர் (2014), பிலண்டோ கேஸ்டில் மற்றும் இன்னும் எண்ணற்ற கருப்பினத்தவர்களுக்காக கொந்தளிக்காத வெள்ளையின அமெரிக்கர்கள் பிளாய்ட் போலீசால் கொடூரமாகத் தாக்கிக் கொல்லப்பட்ட வீடியோ வெளிவந்தவுடன் மட்டும் ஏன் கொந்தளிக்கின்றனர்? மார்ட்டின் லூதர் கிங் தனது உரையில் அறைகூவல்விடுத்த, விஞ்ஞானப்பூர்வ வழிமுறையை தமது ஆய்வுக்குப் பயப்படுத்தும், சமூக விஞ்ஞானிகளைப் பொறுத்தவரையில், இந்தக் காணொளி சந்தேகப் புத்தியுள்ள வெள்ளையின சிந்தனையோட்டத்தை ஏற்கச்செய்யப் போதுமான அளவிலான ஆதாரமாக இருக்கிறது. அமெரிக்கா எனப்படும் இந்த ஜனநாயக சோதனையில் கருப்பினத்தவர்கள் போலீஸ் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும் அதே வேளையில், கருப்பினத்தவர்களின் அனுபவமானது இந்த நாட்டில் உள்ள சட்ட அமலாக்கத் துறை மற்றும் குற்றவியல் நீதித்துறையில் தங்களது அனுபவத்திற்கு நேர் எதிராக உள்ளது என்பதை அந்த ஆதாரம் நிரூபித்துள்ளது.

கருப்பினத்தவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதன் மூலம், அமெரிக்காவில் நிலவும் அப்பட்டமான இன சமத்துவமின்மையை கோவிட்-19 அம்பலப்படுத்தியதைப் போல, பிளாய்டின் கொலையானது அமெரிக்காவில் பல நூற்றாண்டுகளாக கருப்பினத்தவர்கள் மீது நடத்தப்படும் அரசு அனுமதித்த மற்றும் சட்டத்திற்கு அப்பாற்பட்ட இனரீதியான வன்முறை மற்றும் அநீதிகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. சாதாரண குடிமக்கள் – குறைந்தபட்சம் – வேற்று நிற மக்கள் தங்களது தினசரி வாழ்க்கையில் நேரடியாக சந்தித்துச் சென்றிருக்கக் கூடிய, அரசின் மிகவும் சர்வவியாபகமான முகவர்களான போலீசுடனான ஆப்பிரிக்க – அமெரிக்கர்களின் மோதல் சம்பவங்கள் பிரச்சினையில் வெளித்தெரியும் ஒரு சிறுபகுதி மட்டுமே.

போலீசுக்கும், கருப்பினத்தவருக்குமிடையிலான மோதல்கள் அமெரிக்க சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவியியுள்ள ஆழமான, அமைப்பு ரீதியான இன ஏற்றத்தாழ்வுகளின் அடையாளமாகும். இது அமெரிக்காவில் உள்ள கருப்பின, பழுப்பின, பழங்குடி மற்றும் பல்வேறு சமூக அடையாளங்களைக் கொண்ட ஆசிய மக்களை பாதித்தாலும், இந்த ஏற்றத்தாழ்வு கருப்பின மக்களின் விளிம்பு நிலையில் தான் அப்பட்டமாக வெளிப்படுகிறது, அமெரிக்க ஆன்மாவில் வரலாற்றுரீதியாகவே இருக்கும், கருப்பினத்தவர்களின் பொருளாதார இழப்பு, சிறைத் தண்டனை, அவர்களை தாக்குதல் தொடுப்பவர்களாக சமூக அடையாளப்படுத்துதல் ஆகியவையே பெரும்பாலான வெள்ளை அமெரிக்கர்களை கருப்பின மக்களின் வாழ்க்கையின் எதார்த்தத்தை புரிந்து கொள்வதிலிருந்து தடுக்கிறது.

தற்பொழுது வெள்ளை அமெரிக்கர்கள் மட்டுமல்ல, உலகமே இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டுள்ள நிலையில், கருப்பின மற்றும் குறிப்பிட்ட அளவிற்கு நிறரீதியாக வேறுபட்ட மக்களைப் பாதிக்கின்ற சமூகப் பொருளாதார விளைவுகள் மற்றும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் குற்றவியல் நீதி ஆகியவற்றிற்கு அவர்களது சொந்தத் தோல்விகளே காரணம் என்ற ஆதாரமற்ற கருதுகோள்களை நிராகரிக்க வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு இருக்கிறது. எந்த வகை சோதனைகளாலும் அதை நாம் செய்யாத பட்சத்தில் அமெரிக்கா என்றழைக்கப்படும் இந்த நாடு நிச்சயம் தோல்வியைத் தழுவும்.

கட்டுரையாளர் : Ronnie A.Dunn
தமிழாக்கம் :
– ராம்குமார்
செய்தி ஆதாரம்: த ஹிண்டு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க