இன்று (ஜனவரி 20) அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்காக உள்ள நிலையில், அமெரிக்கா முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து பாசிஸ்ட் டிரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
“சியரா கிளப் மற்றும் முன்னணி”, “கருக்கலைப்பு நடவடிக்கை இப்போது”, “செயல்பட வேண்டிய நேரம்”, “சகோதரி பாடல்”, “பெண்கள் பேரணி”, “மக்கள் ஜனநாயகத்தில் நடவடிக்கை”, “ஹாரியட்டின் காட்டு கனவுகள்”, “பெண்ணிய முன்னணி”, “இப்போது”, “திட்டமிடப்பட்ட பெற்றோர்”, “தேசிய பெண்கள் சட்ட மைய நடவடிக்கை நிதி” உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் கீழ் நேற்று (ஜனவரி 19) அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி-யில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தையும் பேரணியையும் நடத்தினர். இந்த அமைப்பு ஜனவரி 2017-இல் டிரம்ப் முதன்முறையாக பதவியேற்றபோதும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மூன்று வெவ்வேறு பூங்காக்களில் இருந்து தொடங்கிய ஆர்ப்பாட்டம் லிங்கன் நினைவுச்சின்னம் அருகே ஒன்றிணைந்து பெரும் போராட்டமாக நடந்தது. டிரம்பிற்கு எதிரான சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை ஏந்திய போராட்டக்காரர்கள், பதவியேற்கவுள்ள டிரம்பிற்கு எதிராகவும், டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க் உட்பட அவரது நெருங்கிய ஆதரவாளர்களுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
“பெண்கள், சமத்துவம், குடியேற்றம் என தற்போது நாங்கள் இழக்க உள்ள அனைத்தையும் ஆதரிக்க நாங்கள் இங்கு வர விரும்பினோம்” என்று போராட்டத்தில் ஈடுபட்ட பிரிட்டானி தெரிவித்தார். பேரணியில் கலந்துகொண்ட மக்கள், “நாங்கள் கீழ்ப்படியவில்லை அல்லது பாசிசத்திற்கு அடிபணியவில்லை என்பதை நமது சமூகங்களுக்கு நிரூபிக்க வெகுஜன போராட்டம் மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும், மேலும் மக்களையும் அதையே செய்வதற்கு அழைக்கிறது” என்று கூறினர்.
படிக்க: அமெரிக்க அதிபர் தேர்தல்: ட்ரம்ப்-மஸ்க் கும்பலின் வெற்றியும் – விளைவுகளும்!
இப்பேரணியில், “எழுந்திரு, எதிர்த்துப் போராடு!”, “கறுப்பினப் பெண்களை நம்பு!” மற்றும் “நாங்கள் அமைதியாக இருக்க முடியாது”, “டிரான்ஸ் லிவ்ஸ் மேட்டர்!” (Trans Lives Matter!) உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர். இப்பேரணிகள் சிறிய அளவில் இருந்தாலும், நியூயார்க், சியாட்டில், சிகாகோ உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய நகரங்கள்தோறும் நடந்தன. மேலும், டிரம்பின் பதவியேற்புக்கு முன்னதாக வார இறுதி முழுவதும் இத்தகைய போராட்டங்கள் மற்றும் பிற நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
வெள்ளை இனவெறி பாசிஸ்டான டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் பெண்கள், கருப்பின மக்கள், புலம்பெயர் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிபோகும். டிரம்பின் கடந்த ஆட்சி காலத்திலேயே நலிவுற்ற மக்கள் மீது இத்தகைய அறிவிக்கப்படாத பாசிசப் போர் தொடுக்கப்பட்ட நிலையில் இம்முறை அது மேலும் தீவிரமடையும் என்பதாலேயே டிரம்ப் பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க மக்கள் போராடி வருகின்றனர்.
முன்னதாக, கடந்தாண்டு இறுதியில் அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற உடனேயே அமெரிக்காவில் உள்ள பெண்கள் அமைப்புகள் டிரம்பின் குடியரசுக் கட்சியின் சிந்தனை குழாமான ஹெரிடேஜ் ஃபவுண்டேஷனுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது அப்போராட்டத்தில் பிற அமைப்புகளும் கலந்துகொண்டிருப்பது சிறப்பு வாய்ந்ததாகும். அமெரிக்காவின் உழைக்கும் மக்கள் வீதியில் இறங்கும்போது இந்த பாசிச கூட்டங்கள் ஓட்டம் பிடிப்பது திண்ணம்.
சோபியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram