அமெரிக்க அதிபர் தேர்தல்: ட்ரம்ப்-மஸ்க் கும்பலின் வெற்றியும் – விளைவுகளும்!

உலகம் முழுவதுமுள்ள லித்தியத்தையும், பிற இயற்கை வளங்கையும் கொள்ளையடிப்பதற்காக ட்ரம்ப்- எலான் மஸ்க் கும்பல் மீண்டும் வெறிகொண்டு அலையும் என்பது உறுதி.

லகம் முழுவதும் தீவிரமாகிவரும் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையால்,  நிலையற்ற பொருளாதாரம்,  வேலையின்மை, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, சமூகநலத் திட்டங்களுக்கான நிதிக் குறைப்பு,  அகதிகள்-புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினை, கார்ப்பரேட் கும்பல்களின் இயற்கைவளச் சுரண்டல் – மக்களின் வாழ்வாதாரம் பறிப்பு, இயல்பாகிவிட்டப் பேரிடர்கள்  என உலகம் ஒரு பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

இந்தப் பேரழிவிலிருந்து மக்களை மீட்பதற்கான மாற்று எதுவும் ஆளும் வர்க்கத்திடம் இல்லாததாலும் பாட்டாளி வர்க்க சக்திகள் பலவீனமாக இருப்பதாலும்,  இந்தப் பேரழிவு சூழலை தங்களது இனவெறி -மதவெறி – நிறவெறி – தேசியவெறிக்கு பயன்படுத்திக் கொண்டு பாசிசக் கும்பல் ஆட்சி அமைக்கின்ற போக்கு உலகெங்கும் நிலவுகிறது.

தற்போது அந்த வரிசையில், அமெரிக்காவில் 47-வது அதிபராக பாசிஸ்டான டொனால்டு ட்ரம்ப் வெற்றிபெற்றுள்ளார். ட்ரம்ப் வெற்றி பெற்றே ஆக வேண்டுமென பெரும் காப்பரேட் முதலாளியான எலான் மஸ்க் வெளிப்படையாக ஆதரித்து பிரச்சாரம் செய்திருக்கிறார். ட்ரம்ப் வெற்றி பெற்றவுடன், உக்ரைன் போர் நிறுத்தப்படுமோ, நேட்டோ படை கலைக்கப்படுமோ, காப்புவாதம் மீண்டும் தலைதூக்குமோ என ஐரோப்பிய யூனியன் நாடுகள் மத்தியில் பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. இவ்விரு நிகழ்வுகளும் எதை வெளிப்படுத்துகின்றன? அடுத்து வரும் சர்வதேச நிகழ்ச்சிப் போக்குகள் எத்திசையில் செல்லும்? என்ற கேள்விகளுக்கு விடை காண்பது அவசியம்.

ட்ரம்ப் தேர்தல் வெற்றி: “எலான் மஸ்க் விளைவு”

ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்காவின் இரு கட்சி ஆட்சி முறையானது கார்ப்பரேட் ஆதிக்கத்தின் துலக்கமான வெளிப்பாடாகும். இரண்டு கட்சிகளைச் சேர்ந்த அதிபர் வேட்பாளர்களையும் வெவ்வேறு கார்ப்பரேட்டுகள் ஆதரிப்பதும், தேர்தல் நிதியளிப்பதும் பொதுவில் நடப்பவை. யாருக்கு எவ்வளவு நிதி திரள்கிறது என்பதிலிருந்தே, யாரை அதிபராக்க கார்ப்பரேட்டுகள் விரும்புகின்றன என்பது தெளிவாகிவிடும். அதன் பிறகு நடத்தப்படும் தேர்தல் வெறும் சடங்குதான். அமெரிக்கத் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றிருப்பதை “எலான் மஸ்க் விளைவு” (The Elon Musk Effect) என்று அந்நாட்டு முதலாளித்துவ ஊடகங்களே விமர்சிக்கின்றன.

கடந்த பத்தாண்டுகளில் தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு நாசாவிடமிருந்து ஒப்பந்தங்களையும், மின்சாரக் கார் தயாரிப்புக்கு அமெரிக்க அரசிடமிருந்து மானியத்தையும் பெற்று பல பில்லியன் டாலர்களைக் குவித்தார் எலான் மஸ்க். இருப்பினும் கூட, ஜோ பைடன் அரசாங்கத்தின் ஏகபோக ஆதரவைப் பெற முடியவில்லை. மின்சார வாகனத் தயாரிப்பில் டெஸ்லாவின் போட்டியாளர்களான ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ், ஸ்டெல்லான்டிஸ் ஆகிய நிறுவனங்களுக்கும் பைடன் முக்கியத்துவம் அளித்தார். இதுமட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள லித்தியம் இருப்புகள் மீதான கட்டுப்பாட்டைப் பெறுவதில் பைடன் அரசாங்கத்தால் சீனாவுடன் திறம்பட போட்டியிட முடியவில்லை. இது மின்சார வாகனத் தயாரிப்பில் டெஸ்லாவின் ஏகபோகத்தை நிலைநாட்டிக் கொள்வதில் உள்ள முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றாகும்.

உக்ரைனில் உள்ள யுரேனியம், லித்தியம் போன்ற பல ட்ரில்லியன் டாலர்கள் மதிப்புகொண்ட அரியவகைத் தனிமங்களைக் கைப்பற்றும் இலக்கில் துவங்கப்பட்டதே உக்ரைன் – ரஷ்யப் போர். இந்தப் போரும் உடனடியாக முடிவுக்கு வராமல் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்க ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களே பல நூறு பில்லியன் டாலர்களை விழுங்கிக் கஜானாவை காலி செய்து கொண்டிருக்கின்றன. ஏதேனும் ஒரு வகையில் இப்போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து, உக்ரைனின் கனிம வளங்களைப் பங்கிட்டுக் கொள்வது எலான் மஸ்க் உள்ளிட்ட முதலாளிகளுக்குத் தேவையாக உள்ளது. எனவே தான், ‘திறமையற்ற’ பைடன் நிர்வாகத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முடிவில் எலான் மஸ்க் வகையறாக்கள் வெளிப்படையாகக் களமிறங்கியுள்ளனர்.

ட்ரம்புக்கு ஆதரவும் நிதியளிப்பும்:

அமெரிக்க அரசியல் செயல்பாட்டுக் குழு என்னும் ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் ட்ரம்புக்கும் இதர குடியரசுக் கட்சியினருக்கும் சுமார் 200 மில்லியன் டாலர்கள் வரை நன்கொடையாக  வழங்கியிருக்கிறார் எலான் மஸ்க். இது வெளியே தெரிந்த கணக்கு மட்டுமே. அதே சமயத்தில் கமலா ஹாரிஸோ, இதுவரை அதிபர் வேட்பாளர்கள் எவரும் பெறாத அளவுக்கு, ட்ரம்பை விடவும் மிக அதிகமாக, சுமார் ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான நன்கொடையைத் திரட்டியிருந்தார். இத்தனைக்கும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் கடந்த நான்காண்டுகளில் அதிகரித்த போதிலும், புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினை உள்ளிட்ட எதற்கும் சரியான தீர்வை முன்வைக்காத நிலையிலும் கூட,  பல கார்ப்பரேட் நிறுவனங்கள் கமலாவை ஆதரித்து நன்கொடை அளித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், எலான் மஸ்கின் ஆதரவைப் பெற்றதன் மூலமாகவே ட்ரம்ப் இம்முறை வென்றுள்ளார் என்பதே கவனிக்க வேண்டிய செய்தி. குறிப்பாக, வேறு யாரும் செய்யாத வகையில் எலான் மஸ்க், ட்ரம்புடன் ஒரே மேடையில் தோன்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டது இங்கு கவனிக்கத்தக்கது.

ட்ரம்புக்கு நெருக்கடியான ஏழு மாகாணங்களில் உள்ள மக்களைக் கவர்வதற்காக கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் செய்தார் மஸ்க். தனது அரசியல் செயல்பாட்டு குழுவின் அறிக்கையை அங்கீகரித்து தேர்தல் முடியும் வரை வாக்களிப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் டாலர் இலவசமாக அளிப்பதாகக் கடந்த அக்டோபர் 19- ஆம் தேதி அறிவித்தார். அறிவித்ததோடு மட்டுமல்லாமல், பென்சில்வேனியாவில் நடைபெற்ற அரங்கக்கூட்டத்தில் பங்கேற்ற ஒருவருக்கு ஒரு மில்லியன் டாலருக்கான காசோலையும் வழங்கினார். இந்த அறிவிப்பிற்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்ததன் மூலம், மஸ்கின் சட்டவிரோத அறிவிப்பையும், செயல்பாட்டையும் பென்சில்வேனியா நீதிமன்றம் அங்கீகரித்தது.

ட்ரம்ப் – மஸ்கின் பொய்ப்பிரச்சாரம்:

டிவிட்டர் என அறியப்பட்ட எக்ஸ் தளத்தில் உண்மைக்கு மாறான தகவல்களை சாதாரண மக்கள் யாரேனும் பதிவிட்டால், அத்தளத்தின் நிர்வாகத்திடம் புகார் செய்து நீக்க முடியும். ஆனால், அத்தளத்தின் உரிமையாளரே பொய்த்தகவல்களைப் பகிர்ந்தால் என்ன செய்வது? சமூக ஊடகங்களின் ஜனநாயக வெளியை அதிகரிக்க வேண்டுமென டிவிட்டர் தளத்தை விலைக்கு வாங்கிய போது எலான் மஸ்க் அறிவித்தார். அதன் பிறகு இத்தளத்தில் பணிபுரிந்த ஊழியர்களின் கொத்துக்கொத்தான வேலைநீக்கமே அவரது ஜனநாயக வேட்கையின் இலட்சணத்துக்கு சான்று.

கடந்த 2020-ஆம் ஆண்டில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்காமல் ஆட்சிக்கவிழ்ப்புக்குத் திட்டமிட்டு, வன்முறையைத் தூண்டும் விதமாக செய்திகளைப் பகிர்ந்தார் என்பதற்காக, 2021 ஜனவரியில் அவரது கணக்கை முடக்கியது டிவிட்டர் நிர்வாகம். எலான் மஸ்க் இத்தளத்தின் உரிமையாளரான பிறகு, ட்ரம்பின் கணக்குகளை மீண்டும் அனுமதித்தார். இப்போதைய தேர்தலில் அதே சமூக வலைதளத்தைப் பயன்படுத்தி, இவர்கள் இருவருமே கமலாவுக்கு எதிராக பல பொய்மூட்டைகளைக் கட்டவிழ்த்து விட்டனர். எலான் மஸ்க் விரும்பிய ஜனநாயகம், பொய்ப் பிரச்சாரத்துக்கான ஜனநாயகம் என்பது இப்போது அம்பலமாகிவிட்டது.

“அமெரிக்காவை மீண்டும் வலிமையாக்குவோம்” (Make America Great Again) என்ற ட்ரம்பின் முழக்கத்தையும், ட்ரம்பின் நிறவெறி, இனவெறி பொய்ப் பிரச்சாரங்களையும் அமெரிக்காவெங்கும் பரப்பியது எக்ஸ் வலைதளம்.  கமலா மற்றும் அகதிகள் குறித்த பொய்ப் பிரச்சாரங்களை சமூக ஊடகங்களில் ஊதிப்பெருக்கி, அமெரிக்க மக்கள் மத்தியில் பாசிச ட்ரம்புக்கு அடித்தளத்தை உருவாக்கியது. ட்ரம்ப் வந்தால் தங்களது பிரச்சினை தீர்ந்துவிடும் என கண்மூடித்தனமாக சாதாரண அமெரிக்கக் கறுப்பின மக்கள் நம்புமளவிற்கு  இந்தப் பொய்ப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

கமலா அறிவித்த பொருளாதாரச் சீர்த்திருத்தங்கள் மற்றும் மக்களுக்கான சில சலுகைகளைக் கொண்டு கமலா ஹாரிஸ் ஒரு ‘கம்யூனிஸ்ட்’ என்ற பொய்ப் பிரச்சாரம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. கம்யூனிஸ்டுகள் மத்தியில் கமலா பேசுவது போன்று, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை ட்ரம்ப் பதிவிட்டிருந்தார். எலான் மஸ்க் ஒருபடி மேலே போய், கம்யூனிஸ்ட் கட்சியின் அரிவாள் – சுத்தியல் சின்னம் பொறித்த சிவப்பு சீருடையில் கமலா நிற்பது போன்ற புகைப்படத்துடன், முதல் நாளே கமலா ஒரு கம்யூனிஸ்ட் சர்வாதிகாரியாக செயல்பட சபதம் எடுத்துள்ளார்  என்று பதிவிட்டார்.

இதேபோல, கடந்த 2020-ஆம் ஆண்டிலிருந்தே அமெரிக்க வலதுசாரிகள், ட்ரம்ப் ஆதரவாளர்கள்,  நடிகர்கள், கருத்தாக்கம் செய்வோர் என பலரும் அமெரிக்க மக்கள் மத்தியில் சோசலிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை செய்திருக்கின்றனர் என்ற உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது அமெரிக்காவின் டிஜிட்டல் ஜனநாயக நிறுவனம். இதற்காக ஸ்பானிஷ் மற்றும் போர்த்துக்கீசிய மொழியில் 1300 வாட்ஸ் அப் மற்றும் 200 டெலிகிராம் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன என்பதையும் அந்நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது.

மேலும், கமலா ஒரு கம்யூனிஸ்ட் என்று பதிவிட்டதோடு மட்டுமின்றி, அதை  வெகுஜன மக்கள் நம்பும்படியாக கமலாவின் பெயரில் ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் அட்டை ஒன்றையும் போலியாக உருவாக்கி உலவ விட்டிருக்கிறது இந்த கம்யூனிச வெறுப்பு-பாசிசக் கும்பல். இந்தப் பொய்ப் பதிவை 83.9 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர், 5 லட்சம் மக்கள் பகிர்ந்திருக்கின்றனர் என்றால்  ட்ரம்ப்-மஸ்க் கும்பல் சமூக வலைதளங்களில் எந்தளவிற்கு செல்வாக்கு செலுத்தியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஊடக விவாதங்களிலும், கமலாவும் அவரது அப்பாவும் கம்யூனிஸ்டுகள் என்ற பொய்யைத் திரும்பத் திரும்பப் பேசினார் டிரம்ப்.

அதேபோல், மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் நுழையும் புலம்பெயர் தொழிலாளர்கள், செல்லப் பிராணிகளான பூனைகளையும், நாய்களையும் தின்கிறார்கள் என்று ஓகியோ மாகாணத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் இனவெறியைக் கக்கினார் ட்ரம்ப். இதே கருத்தை வெளிப்படுத்தும் வகையில் “கமலா என்னை வெறுக்கிறார்” என்று கிண்டலுடன் பூனையின் புகைப்படத்தைப் பகிர்ந்தார் எலான் மஸ்க்.

மேலும், எக்ஸ் தளத்தில், சட்டவிரோத ஏலியன்கள் தேர்தலில் வாக்களிக்கப் போகிறார்கள் என்ற பொய்ச் செய்தி பரப்பட்டது. அக்டோபரில், “ஜனநாயகக் கட்சியினர் சட்டவிரோத புலம்பெயர் தொழிலாளர்களை வரவழைத்து, பொது மன்னிப்பு வழங்கி, வரவிருக்கிற தேர்தலில் தங்களது வாக்குவங்கியை அதிகரிக்கத் திட்டமிருக்கின்றனர் என்றும், ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்தால், அமெரிக்கா ஒரு கட்சி ஆட்சிமுறை கொண்ட சோசலிஸ்ட் நாடாக மாறிவிடும் என்றும் ஒரு சதிக்கோட்பாட்டைப் பரப்பினார் எலான் மஸ்க். உச்சக்கட்டமாக, தேர்தலுக்கான கடைசி ஒருவார காலத்தில், “ஒருவேளை ட்ரம்ப் வெற்றி பெறாவிட்டால் இதுவே கடைசி தேர்தல்” என்று அமெரிக்க மக்களுக்குப் பீதியூட்டினர்.

எலான் மஸ்கின் இந்தப் பொய் மற்றும் சதிக்கோட்பாடுகள் வெள்ளை அமெரிக்கர்கள் மற்றும் கருப்பின மற்றும் ஸ்பானிஷ், போர்த்துக்கீசிய மொழி பேசும் மக்களிடம் செல்வாக்கு செலுத்தியிருப்பதையே ட்ரம்ப் பெற்றுள்ள வெற்றி காட்டுகிறது. லத்தீன் அமெரிக்க ஆண்கள், முதல் தலைமுறையினரின் வாக்குகளைப் பெருவாரியாக ட்ரம்ப் பெற்றிருப்பதாக தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், இதர கார்ப்பரேட்டுகள் பெருமளவில் ஆதரிக்காத போதிலும், ட்ரம்புக்கு பின்புலமாக இருந்து வெல்ல வைத்ததன் மூலம், இத்தேர்தலில் வெற்றி பெற்றது எலான் மஸ்க் தான்.

ஆதரவும் பிரதிபலனும்

2014-இல் இந்தியாவில் மோடியைப் பிரதமராக்கி, அதன் பலனாக நாட்டையே சூறையாடிக் கொண்டிருக்கும் அம்பானி-அதானிகளைப் போல, ட்ரம்பை அதிபராக்கியிருப்பதன் மூலம் எலான் மஸ்கின் கட்டற்ற கொள்ளை நடக்குமென முதலாளித்துவவாதிகளே அனுமானிக்கின்றனர். ட்ரம்ப் வெற்றி பெற்ற ஒரு சில வாரங்களிலேயே எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சுமார் 70 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 6 இலட்சம் கோடி ரூபாய்)  அதிகரித்துள்ளது இதன் முன்னோட்டம் தான்.

அடுத்துவரும் தனது ஆட்சியில் யாரையெல்லாம் பொறுப்பில் அமர்த்துவது என்பதை இப்போதே ட்ரம்ப் தேர்வு செய்து வருகிறார். அதுமட்டுமின்றி, எலான் மஸ்குக்காகவே புதிதாக “அரசு செயல்திறன் துறை” என்னும் துறை உருவாக்கப்பட்டுள்ளது. இத்துறையின் தலைமைப் பொறுப்பை எலான் மஸ்க் உடன் சேர்ந்து இந்துத்துவவாதியான விவேக் ராமசாமி நிர்வகிப்பார். இத்துறையானது அரசின் செலவீனங்களை ஆண்டுக்கு இரண்டு ட்ரில்லியன் (இரண்டு இலட்சம் கோடி) டாலர் வரை குறைக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளது. இராணுவ சேவை மற்றும் அவசரகாலத்தில் பணியாற்றியவர்களுக்கே வாக்குரிமை, வாக்குரிமை வயதை 25 ஆக அதிகரிப்பது, கல்வித்துறை, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு சேவை அமைப்பு, உள்நாட்டு வருவாய் அமைப்பு ஆகியவற்றைக் கலைப்பது, எச்.1பி விசா நிறுத்தம் போன்ற பாசிசத் திட்டங்களை ஏற்கெனவே முன்மொழிந்திருக்கிறார் விவேக். எனவே வருங்காலத்தில் அமெரிக்க மக்களின் சமூகநலத் திட்டங்களுக்கான நிதி பெருமளவில் குறைக்கப்படுவதும், அரசுத்துறை வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதுமான  அபாயம் உருவாகியிருக்கிறது.

எலான் மஸ்க் நேரடியாக அரசு நிர்வாகத்தில் பங்கேற்றிருப்பதால், அமெரிக்க விண்வெளித்துறை மற்றும் இராணுவத்திடமிருந்து பல ஒப்பந்தங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. 2019-ஆம் ஆண்டில், ட்ரம்பின் முதல் ஆட்சிக்காலத்தில் விண்வெளிப்படை என்ற துறை உருவாக்கப்பட்டு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் 733.6 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. நாசா விண்வெளி அமைப்பானது, கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்து சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை இந்நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஸ்டார் லிங்க் நிறுவனத்தின் மூலம் கிராமப்புறப் பகுதிகளில் செயற்கைகோள் வழி இணைய சேவை வழங்குவதற்கு ட்ரம்ப் ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 2022-ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டிருந்தன. இவற்றை அமெரிக்க அரசு தற்போது மறுபரிசீலனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவை எல்லாவற்றையும் விட, எலான் மஸ்கின் செவ்வாய் கிரகத்துக்கான பயணத் திட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும். பல ட்ரில்லியன் கணக்கிலான அத்திட்டத்தை அரசின் செலவிலோ பெரும் மானியத்துடனோ நிறைவேற்றும் போக்குகள் தீவிரமடையும். இதை முன்கூட்டியே குறிக்கும் வகையில், “OCCUPY MARS” என்ற வாசகம் பொறித்த டி-சர்ட் மற்றும் “MAKE AMERICA GREAT AGAIN” என்னும் வாசகம் பொறித்த தொப்பி ஆகியவற்றை அணிந்து, ட்ரம்பின் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் எலான் மஸ்க் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இது தவிர்த்து, டெஸ்லா நிறுவனத்தின் மூலம் மின்சாரக் கார் உற்பத்தியில் உலகு தழுவிய ஏகபோகத்தை நிலைநாட்டுவது மஸ்கின் குறிக்கோள்களில் ஒன்று. சீனா உள்ளிட்ட பல்வேறு நாட்டு நிறுவனங்களும் இத்துறையில் போட்டியாளர்களாக உள்ள நிலையில், மின்சாரக் கார்களின் பேட்டரியில் பயன்படுத்தப்படும் லித்தியம் மூலப்பொருட்களின் தேவை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. 2019-ஆம் ஆண்டில், லித்தியம் கைப்பற்றலுக்கான போட்டியில் தான் பொலிவியாவின் ஈவா மொரேல்ஸ் ஆட்சியைக் கவிழ்த்தது அமெரிக்கா. அதன் பின்னால் இருந்தது எலான் மஸ்கின் இலாபவெறி மட்டுமே. எனவே, உலகம் முழுவதுமுள்ள லித்தியத்தையும், பிற இயற்கை வளங்கையும் கொள்ளையடிப்பதற்காக ட்ரம்ப்- எலான் மஸ்க் கும்பல் மீண்டும் வெறிகொண்டு அலையும் என்பது உறுதி. இதற்காக தனது மேலாதிக்கத்திற்கு ஒத்துவராத நாடுகளில் ஆக்கிரமிப்பையும், ஆட்சிக் கவிழ்ப்புகளையும் இந்த பாசிஸ்டுகள் நடத்துவார்கள். இதை மூடிமறைப்பதற்காக இன-நிற-மதவெறிகளை ஆயுதமாகப் பயன்படுத்தி, உழைக்கும் மக்களை ஒருவருக்கொருவர் எதிரிகளாக்குவார்கள் என்பதும் உறுதி.

மேலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் துறையிலும் கால்பதித்துள்ள எலான் மஸ்க், மனித குலத்தையே பேரழிவுக்குத் தள்ளும் அபாயமிக்க, மூளையில் சில்லுகள் பொருத்துகிற  “நியூரா லிங்க்” திட்டத்தைச் செயல்படுத்தத் துடித்துக் கொண்டிருக்கிறார். செயற்கை நுண்ணறிவு – டிஜிட்டல் மேலாதிக்கத்திற்கான இந்தத் திட்டத்தை, பாசிச சர்வாதிகாரத்தின் மூலம் அமல்படுத்த முனையும் இவர்களால் ஒட்டுமொத்த மனித குலமும் பேரபாயத்தை எதிர்நோக்கியிருக்கிறது.

000

இந்தியாவைப் பொறுத்தவரை, அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்திருப்பது, இந்திய பாசிசக் கும்பலுக்கு மேலும் வலுவூட்டுவதாக இருக்கும். ஏனெனில் ட்ரம்பின் ஆட்சி அதிகாரத்தில் இந்துத்துவவாதியான விவேக் பங்கேற்றிருப்பது, பழைமைவாதிகளான குடியரசுக் கட்சியுடன் அமெரிக்காவில் உள்ள ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு உள்ள நெருக்கம் ஆகியவை இந்திய ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-விற்கு  தார்மீக ரீதியான ஆதரவைப் பெற்றுத்தரும். அதுமட்டுமின்றி, ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு அமெரிக்காவிலிருந்துதான் அதிகப்படியான நிதி வருகிறது. வருங்காலங்களில் இவ்வரவு இன்னும் அதிகரிக்கும். இவையெல்லாம், இந்தியாவில் தாழ்த்தப்பட்ட-சிறுபான்மையின மக்கள் மீதான தாக்குதல்கள், பாசிச கருப்புச் சட்டங்கள் அமலாக்கம் மற்றும் ஜார்க்கண்ட்-காஷ்மீர்- தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் “தேச வளர்ச்சி-பொருளாதார வளர்ச்சி” என்ற பெயரில் இயற்கைவளக் கொள்ளையை தீவிரப்படுத்துவது ஆகியவை அதிகரிக்கும் அபாயமிருக்கிறது.

ஐரோப்பா கலங்குவது ஏன்?

ட்ரம்ப் ஒரு பாசிசக் கோமாளி என்பது அவரது கடந்த ஆட்சிக் காலத்திலேயே அம்பலமான ஒன்று. அதே சமயத்தில், அமெரிக்க நலனை முன்னிறுத்தியே பல முடிவுகளையும் அறிவிப்புகளையும் வெளியிட்டும், சீனாவுடன் வர்த்தகப் போரைத் துவக்கி பெரும் நெருக்கடியைத் தூண்டி விடவும் செய்தார். இப்போதும் அவற்றைத் தொடர்வதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன. நேட்டோ அமைப்பால் அமெரிக்காவுக்கு வெட்டிச் செலவுதான் ஆகிறது – எனவே அதைக் கலைக்க வேண்டும்; ஐ.நா, உலக வர்த்தகக் கழகத்தால் என்ன பயன் – அவற்றைக் கலைக்க வேண்டும்; உக்ரைன் போரில் அமெரிக்காவுக்குத்தான் அதிகம் செல்வாகிக் கொண்டிருக்கிறது – அதை உடனே நிறுத்த வேண்டும் என்றெல்லாம் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருந்தார் ட்ரம்ப். இப்போது அவர் வெற்றி பெற்றுவிட்ட நிலையில், சொன்னதையெல்லாம் செய்தால் என்னாகும் என்ற பீதி ஐரோப்பிய நாடுகளிடம் மேலோங்கியுள்ளது. அதனால்தான், அவசரகதியில் ஐரோப்பிய நாடுகளின் கூட்டத்தைக் கூட்டி, அமெரிக்கா இல்லாவிட்டாலும் நேட்டோவை தொடர்ந்து செயல்படுத்துவது, உக்ரைன் போரைத் தொடர்ந்து நடத்துவது என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், இவை எதுவும் அவர்களால் முடியாது என்பதே எதார்த்தம். ட்ரம்ப் சொல்வது போலவே நேட்டோவுக்கும், ஐ.நா.வுக்கும், உக்ரைன் போருக்கும் அமெரிக்காதான் மிகப்பெரும் நிதியைச் செலவழித்துக் கொண்டிருக்கிறது. காரணம், இவையெல்லாம் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு அவசியம் என அமெரிக்க ஏகாதிபத்தியம் இதுவரை கருதியதுதான்.

புதிய முறையில் மேலாதிக்கம்!

சரிந்துவரும் தனது ஒற்றைத்துருவ மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள பல்வேறு முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. தற்போது ட்ரம்ப் – மஸ்க் கூட்டணியோ, உலக மேலாதிக்கத்தை இனியும் பழைய வழியிலேயே தொடர முடியாது என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் பழைய வகைப்பட்ட மேலாதிக்கக் கருவிகளை, வழிமுறைகளைக் கைவிடத் தயாராகி, அது பற்றி பேசி வருகின்றனர். இவர்களது நோக்கம், அமெரிக்க மேலாதிக்கத்தைப் புதிய வகையில், செயற்கை நுண்ணறிவு – டிஜிட்டல் – மின்வாகனங்கள் – விண்வெளி ஆதிக்கம் என்ற வகையில் நிறுவ வேண்டும் என்ற திசையில் பயணிப்பதாக உள்ளது. இத்திசையில் தமக்குப் போட்டியாக வளர்ந்து வரும் சீனாவை முதன்மை எதிரியாகக் கட்டமைத்து முரண்பாட்டைத் தீவிரப்படுத்துவர்.

சுருக்கமாகச் சொன்னால், மறுகாலனியாதிக்கத்தைப் புதிய வகையில் நிலைநாட்டும் திசையில் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் நிதிமூலதன ஆதிக்கக் கும்பலும் இனி பயணிப்பர்; இதற்கேற்ப அமெரிக்க அரசு எந்திரத்தை கார்ப்பரேட்டுகள் நேரடியாகவே கட்டுப்படுத்தி இயக்குவர் என்பதே ட்ரம்ப் – மஸ்க் கூட்டணி பெற்றிருக்கும் வெற்றி உலகுக்குச் சொல்ல வரும் செய்தி.


அப்பு

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



1 மறுமொழி

  1. ப்ரிக்கஸ் கட்டமைப்பை எதிர்க்க முடியாமல் வீழ்ச்சி அடையும் அமெரிக்க ஆளும் வர்க்கம் திண்டாடி கொண்டிருக்கிறது. அதன் உள்நாட்டு முரண் அதன் வெளிப்பாடே! அதன் தீர்வு பேர்ணி சண்டர்சின் கைனீசிய தீர்வான பில்லினியர்கள் மீது வரி விதிப்பதுதான். ஜனநாயகத்துக்கு விரோதமாக பேர்ணி சண்டர்சை வரவிடாமல் தடுத்து நிற்பது கமலா ஹாரிஸ் கூட்டணியான ஓபாமா, ஹில்லாரி, புஷ் ராணுவ உற்பத்தியாளர் ஏஜென்டுகள் கூட்டணி. அவர்களே ஹிட்லரை சோவியத் எதிராக ஏவியது போல ட்ரம்பை வைத்து இடதுசாரிகளை வீழ்த்த உதவியுள்ளனர். இயங்கியல் இல்லாத வரட்டு இடதுசாரி பேச்சு எந்த தெளிவை கொடுக்காது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க