அமெரிக்காவில் கும்பலாட்சி துவக்கம்: புதிய வகை மேலாதிக்கத்திற்கான அறிவிப்பு!

உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பெயரளவிலான ஜனநாயகத்தைக் கூட இல்லாதொழித்து பாசிசத்தை நிலைநாட்ட வேண்டுமென அமெரிக்க தொழில்நுட்ப - தொழிற்துறை கார்ப்பரேட்டுகள் முடிவுக்கு வந்துவிட்டனர்.

டந்த ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றுக்கொண்டார். தேர்தலில் வென்றது ட்ரம்ப் என்றாலும், அவருக்குப் பின்னணியில் இருப்பது எலான் மஸ்க்-தான் என்பது தேர்தலின் போதே அம்பலமாகிவிட்டது. பதவியேற்புக்கு முன்பிருந்தே புதிய வகையில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் முயற்சிகளில் இவ்விருவரும் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே ஏராளமான நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டு, “அமெரிக்கா முதன்மை” (America First) என்ற பெயரில் தனது பாசிசக் கோமாளித்தனங்களையும் மேலாதிக்க வெறியையும் வெளிக்காட்ட ஆரம்பித்தார் ட்ரம்ப்.

தினந்தோறும் பல அறிவிப்புகள், முரண்பட்ட பேச்சுகள், நடவடிக்கைகள் என எந்தத் திசையில் செல்கிறார்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்ற குழப்பம் இருப்பது போன்ற தோற்றத்தை ட்ரம்ப் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். கடந்த ஆட்சிக் காலத்திலும் இவ்வாறான ‘கோமாளித்தனங்களை’ ஏராளமாகச் செய்திருந்தாலும், இம்முறை அவையனைத்துக்கும் பின்னால் ஒரு பொது நோக்கம் ஒளிந்திருப்பது பளிச்செனத் தெரிகிறது.

கும்பலாட்சிக்கான அறிவிப்பு:

“இன்று, அமெரிக்காவில் அதீத செல்வம், அதிகாரம் மற்றும் செல்வாக்கு கொண்ட ஒரு சிறு கும்பலின் ஆட்சி உருக்கொள்ளத் தொடங்கியுள்ளது. இது நமது முழு ஜனநாயகத்தையும், நமது அடிப்படை உரிமைகள், சுதந்திரம், அனைவரும் முன்னேறுவதற்கான நியாயமான வாய்ப்பையும் அச்சுறுத்துகிறது” என்று முந்தைய அதிபர் ஜோ பைடன் தனது இறுதி உரையில் கூறியிருக்கிறார். அந்தளவுக்கு பெருங்கோடீஸ்வரர்களின் வெளிப்படையான ஆட்சியாக ட்ரம்பின் இப்போதைய நிர்வாகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினரின் நலனுக்காக பாடுபடுவதாகக் கூறி ஆட்சியைப் பிடித்த ட்ரம்ப், தன்னளவிலேயே சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புகொண்ட கோடீஸ்வரர். உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், “அரசாங்க செயல்திறன் துறை” எனப்படும் புதியதொரு துறைக்குத் தலைமை தாங்குவார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. கல்வி, உள்துறை, கருவூலம், வணிகம், சிறுவணிக நிர்வாகம், நாசா உள்ளிட்ட பல துறைகளுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்பு கொண்டவர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

“மறுகாலனியாதிக்கத்தைப் புதிய வகையில் நிலைநாட்டும் திசையில் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் நிதிமூலதன ஆதிக்கக் கும்பலும் இனி பயணிப்பர்; இதற்கேற்ப அமெரிக்க அரசு எந்திரத்தை கார்ப்பரேட்டுகள் நேரடியாகவே கட்டுப்படுத்தி இயக்குவர் என்பதே ட்ரம்ப் – மஸ்க் கூட்டணி பெற்றிருக்கும் வெற்றி உலகுக்குச் சொல்லவரும் செய்தி” என “அமெரிக்க அதிபர் தேர்தல்: ட்ரம்ப்-மஸ்க் கும்பலின் வெற்றியும் – விளைவுகளும்!” என தலைப்பிடப்பட்ட டிசம்பர் 2024 புதிய ஜனநாயகம் இதழ் கட்டுரையில் கூறப்பட்டிருந்ததை ட்ரம்ப் மற்றும் அவரது கார்ப்பரேட் கூட்டாளிகள் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ட்ரம்பின் கடந்த ஆட்சிக்காலத்தில் அவருடன் ஒத்துப்போகாத ஆப்பிள், மெட்டா உள்ளிட்ட பல கார்ப்பரேட் முதலாளிகளும் இப்போது இணக்கமான போக்கினைக் கடைபிடிக்கத் தொடங்கியிருக்கின்றனர். ட்ரம்ப் – மஸ்க் கும்பலுடனான தமது நெருக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், ட்ரம்பின் பதவியேற்பு நிகழ்வுக்கு தலா ஒரு மில்லியன் டாலர் வரை பலரும் நிதியளித்துள்ளனர். இதுவரையில்லாத அளவுக்கு 250 மில்லியன் டாலர்கள் வரை பதவியேற்பு நிதி திரண்டிருக்கிறது. மேலும், பல இலட்சம் கோடி டாலர்களைக் குவித்துள்ள எலான் மஸ்க் (டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ்), ஜெஃப் பெசோஸ் (அமேசான்), மார்க் ஜுக்கர்பெர்க் (மெட்டா), பெர்னார்ட் அர்னால்ட் (LVMH), செர்ஜி பிரின் (கூகுள்), முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்), மிரியம் அடெல்சன் (கேசினோஸ்), ரூபர்ட் முர்டோக் (ஃபாக்ஸ் நியூஸ், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்), டிம் குக் (ஆப்பிள்), சுந்தர் பிச்சை (ஆல்பாபெட்), சாம் ஆல்ட்மேன் (OpenAI) என கார்ப்பரேட் முதலாளிகளும் தலைமைச் செயல் அதிகாரிகளுமாய் நிறைந்திருந்தது ட்ரம்பின் பதவியேற்பு நிகழ்வு.

கடந்த காலங்களில் ட்ரம்ப் உள்ளிட்டோரின் பொய்ப் பிரச்சாரங்களை அம்பலப்படுத்திய உண்மை கண்டறியும் முறையைக் கைவிடுவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், ட்ரம்புக்கும் குடியரசுக் கட்சிக்கும் நெருக்கமாக இருக்கும் சிலரை தனது நிறுவனங்களின் உயர்பதவிகளில் அமர்த்தவும் செய்திருக்கிறார் மார்க் ஜூக்கர்பெர்க். இதன்மூலம், ட்ரம்ப்- மஸ்க் கும்பலின் பொய்ப்பிரச்சாரங்கள் தங்கு தடையின்றி பெருக்கெடுத்து ஓடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், தொடர்ச்சியாக பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்கொண்டுவரும் தொழிற்சங்கப் பிரச்சினைகள், தொழிலாளர் போராட்டங்களைத் திசைதிருப்பும் வகையில் பிளவுவாத அரசியலை முன்னெடுத்துள்ளது ட்ரம்ப் – மஸ்க் கும்பல். இதையெல்லாம் கணக்கில் கொண்டே, ஜனநாயக முகமூடிகளைக் கழற்றி எறிந்துவிட்டு, ட்ரம்ப் – மஸ்க் கும்பலின் பின்னால் அணிவகுத்து கும்பலாட்சிக்குத் தயாராகி வருகின்றனர் அமெரிக்க தொழில்நுட்ப – தொழிற்துறைக் கார்ப்பரேட்டுகள். இதையொட்டிய பல்வேறு உத்தரவுகளில் ட்ரம்ப் கையெழுத்திட்டு, முதல்நாளே தனது சேவையைத் துவங்கியிருக்கிறார்.

முதல்நாள் உத்தரவுகளின் உள்ளடக்கம்:

  • பன்முகத்தன்மை, சமவாய்ப்பு, உள்ளடக்குதல் (DEI) கொள்கை ரத்து
  • ஜனவரி 6 (வெள்ளை மாளிகை கைப்பற்றல்) கலவரக்காரர்களுக்கு மன்னிப்பு வழங்குதல்
  • ஆண் – பெண் என்ற இரண்டு பாலினங்களை மட்டுமே அங்கீகரித்தல். திருநங்கைகள் உள்ளிட்ட மூன்றாம் பாலினத்தோருக்கான அங்கீகாரத்தை ரத்து செய்தல்.
  • கூட்டாட்சி ஊழியர் நியமனக் கொள்கையை மாற்றுதல்
  • காலநிலை மாற்ற ஒப்பந்தங்களில் இருந்து வெளியேறுதல்
  • எரிசக்தி கொள்கை என்ற பெயரில் புதைபடிவ எரிபொருள் உற்பத்தியை ஊக்குவித்தல்
  • குடியேற்றம் மற்றும் குடியுரிமை தொடர்பான விதிகளைத் திருத்துதல்
  • அமெரிக்காவின் தெற்கு எல்லையில் அவசரநிலை பிரகடனம் மற்றும் ராணுவம் குவிப்பு
  • உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறுதல்
  • பிற நாடுகளுக்கான நிதி உதவிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல்

போன்ற பல உத்தரவுகளில், பதவி ஏற்றுக்கொண்ட முதல் நாளிலேயே கையெழுத்திட்டுள்ளார் ட்ரம்ப்.

டிரம்ப் பதவியேற்பதற்கு எதிராக கிளர்ந்தெழுந்த அமெரிக்க மக்கள்.

“அமெரிக்கா முதன்மை” என்ற முழக்கத்தை மையமாக்கி, ட்ரம்ப் தனது அரசியல் திட்டங்களை அறிவித்து வருகிறார். இது ஹிட்லரின் “ஜெர்மனி முதன்மை” என்ற முழக்கத்துடன் ஒப்பிடத்தக்கது. ட்ரம்பின் முழக்கத்தின் உள்ளே எலான் மஸ்க் தலைமையிலான கார்ப்பரேட் நிதிமூலதனக் கும்பலின் நலன்கள்தான் பிரதானமாக இருக்கின்றன. இவை பாசிசத்திற்கான அடிப்படையை உருவாக்குகின்றன. இந்த சிறிய கார்ப்பரேட் கும்பல், தங்களது வளர்ச்சியையும் ஆட்சியையும் நிலைநிறுத்துவதற்காக, சமூகத்தை பிரித்து, இனவாதம் மற்றும் மதவெறியை ஆயுதமாகப் பயன்படுத்தி, மக்களை எதிரிகளாக்கி மோதவிடும் வேலையில் இறங்கியுள்ளது.

உதாரணமாக, பன்முகத்தன்மை, சமவாய்ப்பு, உள்ளடக்குதல் (DEI) கொள்கை ரத்து செய்யப்பட்டிருப்பதைக் கூறலாம். இக்கொள்கையை “ஆபத்தானது, இழிவானது, ஒழுக்கக்கேடானது” என்று கூறி ரத்து செய்துள்ள ட்ரம்ப், அதற்கு மாற்றாக, “தகுதி, திறன் மற்றும் நுண்ணறிவு” (MEI) என்ற புதிய கொள்கையை முன்வைத்துள்ளார். இந்தப் புதிய கொள்கையை ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் ஏற்க மறுத்துள்ளன. ஆனால், மெட்டா, மெக்டொனால்ட்ஸ், வால்மார்ட், ஹார்லி-டேவிட்சன், ஜான் டீர், அமேசான், போயிங் போன்ற பல கார்ப்பரேட் நிறுவனங்கள், பன்முகத்தன்மை மற்றும் சம உரிமைக் கொள்கைகளைக் கைவிட்டுவிட்டு, ட்ரம்பின் புதிய கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன. இதன்மூலம், அவர்கள் வெள்ளை இனவாதத்தை ஊக்குவித்து தொழிலாளர் வர்க்கத்தைப் பிரிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்த இருப்பதை அறிவித்துள்ளனர்.

ட்ரம்ப் மற்றும் மஸ்க் கூட்டணி, அரசு நிர்வாகத்திலிருந்து முந்தைய டி.இ.ஐ. கொள்கைக்கு ஆதரவான ஊழியர்களை நீக்கி, தங்களுடைய இனவெறிக் கொள்கையின் ஆதரவாளர்களை பதவிகளில் நியமிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது, இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசக் கும்பல், அரசு எந்திரத்தில் ஏற்படுத்திவரும் மறுகட்டமைப்புச்  செயல்பாடுகளைப் ஒத்ததாகும்.

ஜாடிக்கேற்ற மூடிகளை ஆதரிக்கும் மஸ்க்:

தனது டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களை ஆதிக்கம் பெறச் செய்யவும், அவற்றுக்கான மூலப் பொருட்களைக் கட்டற்ற முறையில் கொள்ளையடிக்கவும் உகந்த வகையில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார் எலான் மஸ்க். உள்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் தனக்குச் சாதகமான ஆட்சிகள் – ஆட்சியாளர்கள் இருக்க வேண்டுமென விரும்புகிறார். இந்த நோக்கத்திற்கு உடன்படாத ஆட்சியாளர்களை வெளிப்படையாகச் சாடி, ஆட்சியை விட்டு நீக்க நெருக்கடி தந்து பாசிசத்தின் பாதுகாவலனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார் மஸ்க்.

ட்ரம்ப் – மஸ்க் கும்பலின் நெருக்கடிக்கு முதலில் பலியிடப்பட்டிருப்பது கனடா பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ. அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறையை, கனடாவுக்குக் கொடுக்கப்படும் மானியம் எனத் திரித்துப் பேசிய ட்ரம்ப், அந்த மானியங்களால்தான் கனடா வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றார். மேலும், அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடா இணைந்துகொண்டால் வரிகள் இல்லாமல் வாழலாம் என்றும் ட்ரூடோவை கனடாவின் ஆளுநர் என்றும் இழிவுபடுத்தினார். இதேபோல் எலான் மஸ்க்கும் தன் பங்குக்கு ட்ரூடோவைக் கடுமையாக இழிவுசெய்தார். அடுத்து வரும் தேர்தலில் ட்ரூடோ தோற்றுப் போவார் என்று மஸ்க் பேச ஆரம்பித்த பின், ட்ரூடோவின் கட்சியினரே அவர்மீது நம்பிக்கை இழந்து, பதவி விலகச் சொல்லி நெருக்கடி கொடுத்தனர். அதற்கு முன்பே கூட்டணிக் கட்சிகள் ஆதரவை விலக்கிக் கொண்டன. இதன் பின்னிருப்பது, கனடாவின் எண்ணெய் – எரிவாயு வளங்களையும் இயற்கை வளங்களையும் கொள்ளையிட வேண்டுமென்ற ட்ரம்ப் – மஸ்க் கும்பலின் மேலாதிக்க வெறியே.

இதேபோல, தனது மின்சாரக் கார்களுக்கு ஆதரவாக சுற்றுச்சூழல் விதிகளைத் திருத்தவும், மானியங்களைக் கொடுக்கவும் உடன்படாத ஐரோப்பிய நாடுகள் மீதும் எலான் மஸ்கின் ‘அஸ்திரங்கள்’ பாயத் தொடங்கியிருக்கின்றன. பொதுவில் ‘இடது’சாரிகளாகவும் ‘மைய’வாதிகளாகவும் அறியப்படும் இங்கிலாந்து பிரதமர், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் அதிபர்களுக்கு எதிராக கடும் அவதூறுகள், குற்றச்சாட்டுகளை வீசுவதோடு அவர்கள் பதவி விலகினால்தான் அந்நாடுகள் உருப்படும் எனவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார். இது மட்டுமின்றி இந்நாடுகளில் உள்ள தீவிர வலதுசாரி கட்சிகளை வெளிப்படையாக ஆதரித்து பரப்புரையும் செய்து கொண்டிருக்கிறார். குறிப்பாக ஜெர்மனியின் வலது தீவிரவாதக் கட்சியான ‘ஜெர்மனிக்கான மாற்று’ (AfD) கட்சியை தடைசெய்ய வேண்டுமென அந்நாட்டிலுள்ள இதர தாராளவாதக் கட்சிகள் கோரிவருகின்றன. ஆனால், எலான் மஸ்க்கோ, இக்கட்சிதான் ஜெர்மனியின் கடைசி நம்பிக்கை, அடுத்த தேர்தலில் இக்கட்சி வெற்றி பெறாவிட்டால் ஜெர்மனியைக் காப்பாற்ற முடியாது என பேசி வருகிறார்.

ட்ரம்ப் பதவியேற்புக்கு மற்ற நாட்டுத் தலைவர்களைக் கூப்பிடுவதிலும் இதே அணுகுமுறையைத்தான் கையாண்டுள்ளனர். இதுவரை அமெரிக்காவின் விசுவாசிகளாக இருந்தாலும் கூட இப்போது தங்களுக்கு ஒத்துவராத ஆட்களைப் புறக்கணிப்பதும், அவர்களுக்கு எதிரான ஆட்களை அழைப்பதுமாக தமது நோக்கத்தை வெளிப்படையாகவே காட்டிக் கொண்டுள்ளனர். இங்கிலாந்து பிரதமர், பிரான்ஸ் – ஜெர்மனி அதிபர்களையும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவரையும் அழைக்காமல் அங்குள்ள தீவிர வலதுசாரி கட்சித் தலைவர்களை அழைத்துள்ளனர். இன்னொரு பக்கத்தில் இத்தாலி, ஹங்கேரி, எல் சால்வடார், அர்ஜெண்டினா போன்ற நாடுகளின் வலதுசாரி ஆட்சியளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தனது முதல் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவின் முதன்மை எதிரி என அறிவிக்கப்பட்ட சீனாவின் அதிபருக்கு முதல் அழைப்பை அனுப்பிய ட்ரம்ப், நகமும் சதையுமாக இருந்த மோடியை அழைக்கவே இல்லை. எதிரியாக இருந்தாலும், அருமண் தனிமங்களுக்கு சீனாவையே பெரிதும் சார்ந்திருப்பதால், உடனடியாகப் பகைத்துக் கொள்ளாமல் இணக்கப் போக்கைக் கையாள முடிவு செய்துள்ளனர். மறுபக்கத்தில், 2020 தேர்தலில் ட்ரம்ப் தோற்ற பிறகு அவரைக் கண்டுகொள்ளாமல், பைடனுடன் நெருக்கம் காட்டினார் மோடி. எலான் மஸ்க் விரும்பிய வகையில் மின்சாரக் கார் தயாரிப்புக்கு சலுகைகள் கொடுக்க முன்வராமல் இருந்தார். செயற்கைகோள் வழியே இணையத் தொடர்பு கொடுக்கும் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கும் போதிய வகையில் மோடி ‘சேவை’ செய்யவில்லை. இவற்றிற்கெல்லாம் மோடிக்குப் பாடம் புகட்டவே அவரைப் புறக்கணித்தனர். ஒரு வாரம் கழித்து மோடி தொலைபேசி வழியே ட்ரம்பிடம் பேசியபின், சமரசம் செய்துகொள்ளும் முடிவுக்கு வந்துள்ளனர்.

ஆர்டிக் மண்டலத்தைக் கொள்ளையிடத் துடிக்கும் ட்ரம்ப் – மஸ்க்:

துவக்கம் முதலே தமது நலனில் இருந்து அனைத்தையும் அணுகுவதன் மூலம், தங்களது ஆட்சியின் திசைவழியை வெளிப்படையாக அறிவித்திருக்கிறது ட்ரம்ப் – மஸ்க் கும்பல். மின்சாரக் கார்கள் – மின்கலன்கள் தயாரிப்பிற்கும், ராணுவ – விண்வெளி வாகனத் தயாரிப்பிற்கும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்குத் தேவையான ‘சிப்’ தயாரிப்புக்கும் அவசியமான அருமண் தனிமங்கள், கனிம வளக்கொள்ளையில் மேலாதிக்கம் செலுத்த விரும்பும் எலான் மஸ்க், அதற்கேற்ப காய்நகர்த்தி வருகிறார். அதன் தொடக்கமாகவே, ட்ரம்பைத் தூண்டிவிட்டு கிரீன்லாந்து ஆக்கிரமிப்பு பற்றி பேச வைத்துள்ளார்.

ரஷ்யா, கனடா, கிரீன்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட பல நாடுகளின் எல்லைகளைக் கொண்டிருக்கிறது பனிபடர்ந்த ஆர்டிக் மண்டலம். இதிலுள்ள கிரீன்லாந்து, டென்மார்க் முடியாட்சியின் கீழ் ஒரு தன்னாட்சிப் பகுதியாக இருந்துவரும் உலகின் மிகப்பெரிய தீவாகும். சுமார் 175 ஆண்டு காலமாகவே அப்பகுதியைக் கைப்பற்றிக்கொள்ளும் நோக்கில் அவ்வப்போது அமெரிக்கா முயற்சி செய்துவருகிறது.

2019-ஆம் ஆண்டில், தனது முதல் ஆட்சிக்காலத்திலேயே “அமெரிக்கா கிரீன்லாந்தை வாங்க முடிந்தால் எப்படி இருக்கும்?” என தனது ஆலோசகர்களிடம் கேட்ட ட்ரம்ப், இதை வாங்கி, அமெரிக்காவின் நிலப்பரப்பை விரிவுபடுத்த வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார். இப்போது மீண்டும், அமெரிக்காவின் பாதுகாப்பு நலன்களுக்காக கிரீன்லாந்தின் மீதான உரிமையும் கட்டுப்பாடும் அவசியம் எனக் கூறி வருகிறார். கிரீன்லாந்தை வாங்குவது பற்றி தன் ஆதரவாளர்களிடம் பேசும்போது, இது “ஒரு மிகப்பெரிய ரியல் எஸ்டேட் ஒப்பந்தமாக இருக்கும்” என்று கூறிய ட்ரம்ப், பின்னர், “நகைச்சுவையாக” கூறினேன் என்று நழுவலாக விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சனுடன் ட்ரம்ப் தொலைபேசியில் உரையாடியபோது, “கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை; இது ஒரு அபத்தமான யோசனை” என்று டென்மார்க் பிரதமர் கடுமையாக விமர்சித்தார். இதனையடுத்து, நடக்கவிருந்த அதிகாரப்பூர்வ டென்மார்க் பயணத்தை ரத்துசெய்த ட்ரம்ப், “தகாத முறையில் நடந்துகொண்டார்” என்று டென்மார்க் பிரதமரை விமர்சித்தார். கிரீன்லாந்தின் தலைவர்கள் தங்களது தன்னாட்சியை வலியுறுத்தி, ட்ரம்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற மற்ற ஐரோப்பிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஆர்டிக் மண்டலத்தின் மீதான அமெரிக்காவின் (ட்ரம்ப் – மஸ்க்) வெறித்தனமான ஈடுபாட்டுக்கு அங்குள்ள அரிய மற்றும் முக்கியமான கனிம வளங்களும், போர்த்தந்திர ரீதியான புவியியல் முக்கியத்துவமும் முதன்மைக் காரணமாக இருக்கின்றன. கிரீன்லாந்தில் அருமண் தனிமங்கள் மற்றும் யுரேனியம், தங்கம், இரும்பு தாது, தாமிரம், துத்தநாகம், டைட்டானியம் ஆகியவை ஏராளமாகப் புதைந்து கிடக்கின்றன. இவை, மின்னணு சாதனங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்கள் (எ.கா., மின்கலங்கள், காற்றாலை டர்பைன்கள்) மற்றும் இராணுவத் தொழில்நுட்பங்களுக்கு மிகவும் முக்கியமானவை.

அமெரிக்கா இத்தகைய கனிமங்களுக்கு தற்போது சீனாவையே பெரிதும் சார்ந்துள்ளது. எனவே, கிரீன்லாந்தின் அருமண் கனிம வளங்களைக் கொள்ளையிடுவதன் மூலம் சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க விரும்புகிறது. குறிப்பாக, எலான் மஸ்க் தனது டெஸ்லா நிறுவனத்தின் மின்சாரக் கார்களுக்கான மின்கலங்கள் தயாரிக்க லித்தியம், கோபால்ட் உள்ளிட்டவை மீதான ஏகபோகத்தை நிலைநாட்ட, கிரீன்லாந்து – ஆர்டிக் பகுதியைக் கைப்பற்றுவது அவசியமாக இருக்கிறது.

ஆர்டிக் பகுதியில் எண்ணெய், இயற்கை எரிவாயு, தங்கம், வெள்ளி, நிக்கல், அருமண் தனிமங்கள் மற்றும் வைரங்கள் போன்ற கனிம வளங்கள் செறிந்துள்ளன. இதனால், இப்பகுதி உலக அரசியலில் முக்கியமான பொருளாதார மற்றும் பாதுகாப்பு மையமாக மாறுகிறது. காலநிலை மாற்றம் காரணமாக ஆர்டிக் பிராந்தியத்தில் உள்ள பனி உருகி வருவதால், புதிய கனிம வளங்கள் மற்றும் கடல் பாதைகளை அணுகும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி தனது பொருளாதார மற்றும் போர்த்தந்திரரீதியான மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. ரஷ்யா, சீனா மற்றும் கனடா ஆகிய நாடுகளும் ஆர்டிகின் வளங்களைக் கைப்பற்றும் போட்டியில் ஈடுபட்டுள்ளன.

காலநிலை மாற்றம் ஒரு ஏமாற்று என்று கூறி பாரீஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என்று அறிவித்திருப்பதன் பின்னணியில் ஆர்டிக் மண்டலத்தைக் கொள்ளையிடும் நோக்கமே முதன்மையாக அடங்கியிருக்கிறது என்பதை இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. ஆர்டிக் பனிப்பாறைகள் எந்தளவுக்கு உருகுமோ, அந்தளவுக்கு அங்குள்ள எண்ணெய் – இயற்கை வளங்களைக் கொள்ளையிடுவது எளிதாகும். புதிய கடல்வழிகள் திறக்கும். இதுவரை மனிதன் வசித்துவரும் இடங்களை எல்லாம் பங்கீடு – மறுபங்கீடு செய்துவந்த கார்ப்பரேட்டுகள், இப்போது கால்படாத இடங்களையும் கைப்பற்ற ஆரம்பித்துவிட்டனர். புவிக்கோளத்தை அழிவின் விளிம்பில் நிறுத்தியேனும் தமது மூலதன ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் மிகக் கேடுகெட்ட, இழிந்த நிலைக்குச் சென்றுவிட்டது கார்ப்பரேட் முதலாளித்துவம்.

புதிய வகை மேலாதிக்கம்:

ரஷ்யா, சீன ஏகாதிபத்தியங்களின் எழுச்சியால் அமெரிக்காவின் ஒற்றைத்துருவ மேலாதிக்கம் சரியத் தொடங்கிவிட்ட நிலையில், அதைத் தக்கவைத்துக் கொள்வதற்கான புதிய வழிகளைத் தேடுகிறது என்பதையே ட்ரம்ப் – மஸ்க் கும்பலின் செயல்பாடுகள் காட்டுகின்றன. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, உலகை மேலாதிக்கம் செலுத்த உதவிய ஐக்கிய நாடுகள் சபை, நேட்டோ கூட்டமைப்பு, உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பழைய ஆதிக்கக் கருவிகளைப் படிப்படியாகக் கைவிட்டு, புதிய வகை டிஜிட்டல் – செயற்கை நுண்ணறிவு வகைப்பட்ட கருவிகளைக் கொண்டு மேலாதிக்கம் செய்யும் திசையைத் தேர்வு செய்திருக்கிறது அமெரிக்கா.

கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரித்து ரஷ்யாவின் ஆதிக்கத்திற்கு முட்டுக்கட்டை போடுவதும், மின்சார வாகனங்கள் மற்றும் குறைகடத்தி சில்லுகள் தயாரிப்பில் சீனாவை மிஞ்சுவதற்கான போட்டியில் அருமண் தனிமங்களைப் பெறுவதில் ஆதிக்கம் செலுத்தவுமே கிரீன்லாந்து மற்றும் ஆர்டிக் பகுதி மீது தனது கவனத்தை திருப்பியிருக்கிறது. இதற்கேற்ப, காலநிலை மாற்ற ஒப்பந்தங்களை கிழித்து எறிந்திருக்கிறது.

இந்த வகையில் மேலாதிக்கம் செய்ய வேண்டுமானால், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பெயரளவிலான ஜனநாயகத்தைக் கூட இல்லாதொழித்து பாசிசத்தை நிலைநாட்ட வேண்டுமென அமெரிக்க தொழில்நுட்ப – தொழிற்துறை கார்ப்பரேட்டுகள் முடிவுக்கு வந்துவிட்டனர். அதனாலேயே உள்நாட்டில் கும்பலாட்சியை நிறுவுவதில் எலான் மஸ்கின் தலைமையில் பெரும்பாலான கார்ப்பரேட்டுகள் அணிவகுக்கத் தொடங்கியுள்ளன. இதன் தாக்கம் சர்வதேச அளவிலும் பல்வேறு நாடுகளில் எதிரொலிக்கும் என்பதை ஐரோப்பிய நாடுகள் மீதான எலான் மஸ்கின் கருத்துத் தாக்குதல்கள் கோடிட்டு காட்டி வருகின்றன.

எதிரிகள் புதிய திசையில் – புதிய ஆயுதங்களை ஏந்திப் பயணிக்க ஆரம்பித்துவிட்ட பிறகு, ஒடுக்கப்படும் உழைக்கும் வர்க்கமும் தனக்கான புதிய திசையை – ஆயுதங்களைத் தயார் செய்துகொள்வது அவசியமாகிறது. உள்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்.-பாஜக; அம்பானி – அதானி பாசிசக் கும்பலையும், உலக அளவில் ட்ரம்ப் – மஸ்க் பாசிசக் கும்பலையும் எதிர்கொள்ள அணிதிரள்வது பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் முன்னிருக்கும் உடனடி கடமை.


வாகைசூடி

(புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க