கொரோனா பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால் கொடிய கொரோனா பெருந்தொற்றை ஆற்றலுடன் தடுக்கத் தவறி வரலாற்றில் தமது பெயரை அழிக்க முடியாத வகையில் இந்தத் தலைவர்கள் பதிய வைத்து விட்டனர். சிலர் உண்மையில் மக்களைக் காக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

கோவிட்-19ஐக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். தொற்று நோய் மேலாண்மை என்று வரும்போது அதைக் கட்டுப்படுத்தும் பொறுப்புள்ளவர்கள் என்பதாக ஆட்சியில் உள்ள அரசியல் தலைவர்களின் பங்குள்ளது. ஆனால் சில தற்போதைய மற்றும் முன்னாள் உலகத் தலைவர்கள் தங்கள் நாட்டில் பெருந்தொற்று பாதிப்புகளை எதிர்த்துப் போராடுவதற்கு வெகு குறைவான முயற்சிகளையே எடுத்துள்ளனர். அது தொற்றுநோயின் தீவிரத்தை குறைத்து மதிப்பிடுவதன் மூலமோ, அறிவியலை புறக்கணிப்பதன் மூலமோ அல்லது சமூக இடைவெளி மற்றும் முகக் கவசங்கள் போன்ற முக்கியமான சுகாதார தலையீடுகளை புறக்கணிப்பதன் மூலமோ தொற்று பரவ காரணமாக இருந்துள்ளனர். இந்த பட்டியலில் உள்ள அனைத்து தலைவர்களும் இந்த தவறுகளில் ஒன்றையாவது செய்தனர். சிலர் அனைத்து தவறுகளையும் செய்தனர், அவற்றின் கொடிய விளைவுகளுடன்.

***

படிக்க :
♦ இந்தியாவின் துயரம் : ஆர்.எஸ்.எஸ் – பாஜக !
♦ மாதவிடாயும்  சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா

இந்தியாவின் நரேந்திர மோடி :
ஸ்மித் கங்குலி, இண்டியானா பல்கலைக் கழகம்

உலகளாவிய தொற்று நோயின் புதிய மையமாக இந்தியா உள்ளது. மே 2021 க்குள் நாளொன்றுக்கு சுமார் 400,000க்கும் மேலானவர்களுக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்படும். புள்ளி விவரங்கள் எவ்வளவு தான் மோசமானதாக இருந்தாலும், இந்த புள்ளி விவரம் நாட்டில் நிலவுகின்ற கொடூரமான பயங்கரத்தை வெளிப்படுத்த இயலாது. கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனைகளில் இறந்து கொண்டிருக்கின்றனர், ஏனெனில் மருத்துவ மனைகளில் ஆக்ஸிஜன் இல்லை மற்றும் ரெம்டெசிவிர் போன்ற உயிர்காக்கும் மருந்துகள் இல்லை. நோயாளிகள் அளவுக்கு அதிகமாக நிரம்பி வழிவதால் புதிதாக வரும் நோயாளிகளுக்கு படுக்கைகள் இன்றி மருத்துவமனைகளில் இருந்து திருப்பி அனுப்பப் படுகிறார்கள்.

நாட்டின் இந்தப் பெருந்துயருக்கு காரணம் என மக்கள் ஒரே ஒரு நபரை சுட்டிக் காட்டுகின்றனர். அது பிரதமர் நரேந்திர மோடி.

ஜனவரி 2021-ல், மோடி ஒரு உலகளாவிய மன்றத்தில் “இந்தியா மனிதகுலத்தை காப்பாற்றியதுகொரோனாவை திறம்பட கட்டுப்படுத்துவதன் மூலம்என்று சுய தம்பட்டம் அடித்துக் கொண்டார். மார்ச் மாதம், அவரது சுகாதார அமைச்சர் தொற்றுநோய் ஒரு ”முடிவுக்கு” வந்து விட்டதாக படாடோபமாக அறிவித்தார். அச்சமயம் கோவிட்-19 உண்மையில் இந்தியாவிலும் உலகெங்கிலும் வலுப்பெற்று வந்தது ஆனால் அவரது அரசாங்கம் ஒரு கொடிய மற்றும் மிகவும் எளிதாகவும் வேகமாகவும் தொற்றும் கோவிட்-19 மாறுபட்ட வடிவத்தை அடைந்து விட்டது பற்றி எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

நாட்டின் குறிப்பிடத்தக்க பகுதிகளில் வைரஸை முழுமையாக கட்டுப்படுத்தாத நிலையில், மோடியும் அவரது கட்சியின் மற்ற உறுப்பினர்களும் ஏப்ரல் தேர்தலுக்கு முன்னர் நெரிசல் நிறைந்த வெளிப்புற பிரச்சார பேரணிகளை நடத்தினர். வெகு சில பங்கேற்பாளர்கள் மட்டுமே முககவசங்களை அணிந்திருந்தனர். ஜனவரி முதல் மார்ச் வரை லட்சக் கணக்கானவர்களை ஈர்க்கும் ஒரு (இந்து) மத விழாவையும் மோடி அனுமதித்தார். பொது சுகாதார அதிகாரிகள் இப்போது இந்த விழா ஒரு மிகப்பெரிய அளவு நோய்த் தொற்றைப் பரப்பும் (சூப்பர்ஸ்ப்ரெட்டர்) நிகழ்வு என்றும் ஒரு மகத்தான தவறுஎன்றும் நம்புகிறார்கள்.

கடந்த ஆண்டு மோடி இந்தியா உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர் என தற்பெருமையடித்துக் கொண்ட போது, இந்தியா ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசி அளவுகளை அண்டை நாடுகளுக்கு அனுப்பியது. இருப்பினும் இந்தியாவின் 130 கோடி மக்களில் வெறும் 1.9% பேருக்கு மட்டுமே மே மாத தொடக்கத்தில் கோவிட்-19 க்கு எதிரான முதல் கட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில் ஆகப் பெரும்பான்மையினருக்கு 2-ம் கட்ட தடுப்பூசி போட தடுப்பூசிகள் இல்லை.

***

பிரேசிலின் ஜைர் போல்சோனாரோ :
எலிஸ் மசார்ட் டா ஃபொன்ஸெகா, Fundação கெடுலியோ வர்காஸ் மற்றும் ஸ்காட் எல். கிரீர், மிச்சிகன் பல்கலைக்கழகம்

பிரேசில் ஜனாதிபதி ஜைர் போல்சோனாரோ கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இது ஒரு சிறிய காய்ச்சல்என்று அவர் ஏளனம் செய்தார் அவர் பிரேசிலில் நோயின் பாதிப்புகளை மேலும் தீவிரமாக மோசமடையச் செய்தார்.

மருத்துவ நெறிமுறைகள், புள்ளி விவர தரவுகளை வெளியிடுதல் மற்றும் தடுப்பூசி கொள்முதல் போன்ற சுகாதார அமைச்சகத்தின் நிர்வாக விவகாரங்களில் தலையிட, போல்சோனாரோ தனது அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தினார். அரசியல் அமைப்பு தனக்கு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தை (வீட்டோ) கேடாகப் பயன்படுத்தினார். எடுத்துக்காட்டாக, மத வழிபாட்டிடங்களில் முகக்கவசங்களைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்கியிருக்கும் சட்டத்தை அவர் ரத்து செய்தார், தொற்றுநோயால் நிரந்தரமாக பாதிக்கப்பட்ட சுகாதார நிபுணர்களுக்கு இழப்பீடு வழங்குவதையும் ரத்து செய்தார். சமூக இடைவெளியை ஊக்குவிப்பதற்கான மாநில அரசாங்கத்தின் முயற்சிகளை அவர் தடுத்தார் மேலும் அழகு நிலையங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் உட்பட பல வணிகங்கள் அத்தியாவசியமானதாகதிறந்திருக்க அனுமதிக்க தனது சிறப்பு அதிகாரத்தைப் (வீட்டோ) பயன்படுத்தினார். கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, நிரூபிக்கப்படாத மருந்துகளை, குறிப்பாக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்ஐ போல்சோனாரோ தீவிரமாக ஊக்குவித்தார்.

போல்சோனாரோ ஜனாதிபதி என்ற முறையில் தனது சொந்த சுய முயற்சியில் கொரோனா வைரஸ் நெருக்கடியைச் சுற்றியுள்ள விவாதத்தை வடிவமைத்தார். தொற்று பாதிப்புக்கும் பொருளாதார பேரழிவுக்குமான தொடர்பை மறுத்தார். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்பதை முற்றாகப் புறக்கணித்தார். அறிவியலை கேடாக சித்தரித்தார். இதனால் மக்களில் பலர் தவறான கருத்துக்களுக்கு ஆட்பட்டு, எந்தக் கட்டுப்பாடுகளுமின்றி தொற்றை தீவுரமாகப் பரப்பினார்கள். ஆனால் ஜனாதிபதி போல்சோனாரோவோ கோவிட்-19 நெருக்கடிக்கு பிரேசிலிய மாநில அரசாங்கங்கள், சீனா மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றை குற்றம் சாட்டினாரே தவிர, பெருந்தொற்று பாதிப்புக்கான தனது தவறான நிர்வாகப் பொறுப்பின் காரணத்தை ஒருபோதும் ஏற்கவில்லை.

டிசம்பரில், போல்சோனாரோ பக்க விளைவுகள் காரணமாக தடுப்பூசியை எடுக்க மாட்டேன் என்று அறிவித்தார். “நீங்கள் முதலையாக மாறினால், அது உங்கள் பிரச்சனை,” என்றார் அவர்.

போல்சோனாரோவின் தொற்றுநோய் பற்றியதான தவறான நிர்வாகம் அவரது அரசாங்கத்திற்குள் மோதலை உருவாக்கியது. பிரேசில் ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில் நான்கு சுகாதார அமைச்சர்களைக் கண்டது. பிரேசிலின் கட்டுப்பாடற்ற நோய்த் தொற்று பல புதிய கொரோனா வைரஸ் வகைகளுக்கு வழிவகுத்தது, இதில் பி.1 மாறுபாடும் அடங்கும், இது மிகவும் தொற்றும் தன்மை கொண்டதாக தோன்றுகிறது. பிரேசிலின் கோவிட்-19 தொற்று பரவும் விகிதம் இறுதியாக குறையத் தொடங்கியுள்ளது, ஆனாலும் நிலைமை இன்னும் கவலையளிக்கிறது.

***

பெலாரஸின் அலெக்சாண்டர் லூக்காசென்கோ:
எலிசபெத் ஜே. கிங் மற்றும் ஸ்காட் எல். கிரீர், மிச்சிகன் பல்கலைக்கழகம்

உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் கோவிட்-19 க்கு சில நடவடிக்கைகள் எடுத்தாலும் அவை போதுமானவையாக இல்லாததால் மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாயின. ஆயினும், அப்படி அறைகுறை நடவடிக்கையை விட முழுமையான மறுப்புவாதத்தை தேர்ந்தெடுத்தவர்கள் மோசமான தொற்றுநோய் தலைவர்கள் என்று நாங்கள் முடிவுக்கு வருகிறோம்

பெலாரஸ் நாட்டின் நீண்டகால சர்வாதிகாரத் தலைவரான அலெக்சாண்டர் லூக்காசென்கோ கோவிட்-19 இன் அச்சுறுத்தலை ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை. தொற்றுநோயின் ஆரம்பத்தில், மற்ற நாடுகள் ஊரடங்குகளை நடைமுறைப்படுத்தியபோது, கோவிட்-19 பரவுவதைத் தடுக்க எந்த கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளையும் செயல்படுத்த வேண்டாம் என்று லூக்காசென்கோ தேர்வு செய்தார். மாறாக, வோட்கா குடிப்பதன் மூலமும், ஒரு சிறிய அறையில் நீராவிக் குளியல் எடுக்கும் சௌனாவுக்கு சென்று வருவதன் மூலமும், வயல்களில் வேலை செய்வதன் மூலமும் கொரோனா வைரஸைத் தடுக்க முடியும் என்று அவர் கூறினார். இந்த மறுப்புவாதம் அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளைக் கைவிடவும், தனிநபர்களாகவும் மற்றும் கொத்துக் கொத்தாகவும் தொற்றுநோய் பரவுவதற்கும், மக்கள் இறப்பதற்குமே உதவியது.

2020 கோடையில், லூக்காசென்கோ தனக்கு கோவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டதாகவும், ஆனால் தனக்கு அதற்கான அறிகுறிகள் ஏதுமில்லையென்றும், இந்த வைரஸ் ஒரு தீவிர அச்சுறுத்தல் அல்ல என்றும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார். முகமூடி இல்லாமல் கோவிட்-19 மருத்துவமனைகளுக்குச் சென்றதாகவும், இந்த நோயை முறியடித்து விட்டதாகவும் கூறி வந்தார். மேலும் தான் ஒரு வலுவான மனிதன் என்று தான் விரும்பிய பிம்பத்தை உருவாக்க இந்த நடவடிக்கைகள் உதவின.

தற்போது பெலாரஸ் நாட்டில் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தொடங்கியிருப்பினும், லூக்காசென்கோ தான் தடுப்பூசி போட்டுக் கொள்ளப் போவதில்லை என உறுதிபடக் கூறிவிட்டார். இன்றைய தேதி வரை பெலாரஸ் நாட்டு மக்கள் தொகையில் 3%க்கும் குறைவானவர்களுக்கு தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் :
டோரதி சின், கலிபோர்னியா பல்கலைக் கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ்.

டிரம்ப் தேர்தலில் தோற்று பதவியில் இல்லாமற் போனாலும், அவர் இந்த கொரோனா தொற்றை தவறாகக் கையாண்டதன் விளைவாக அமெரிக்காவில் அதன் கொடிய பாதிப்புகள் நீண்ட காலத்திற்கு தொடர்கின்றது. குறிப்பாக வெள்ளையின மக்கள் அல்லாதவர்களின் சுகாதாரமும் நல்வாழ்வும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

துவக்கத்தில் ட்ரம்ப் இந்த கொரோனா தொற்று நோயை மறுத்தார். முகமூடி அணிவது மற்றும் சிகிச்சைகள் பற்றிய தவறான தகவல்களை தீவிரமாக பரப்பினார். இதோடு, ஆட்சியிலிருந்த தலைமைகளுக்கிடையே ஒற்றுமையின்மை நாடு முழுவதிலும் பெரும் தீங்கு விளைவித்தது ஆனால் விளைவு வெள்ளையர்களை விட வேறு சில குழுக்களுக்கு மிகவும் மோசமாக இருந்தது. நிற சமூகங்கள் சமத்துவமற்ற நோய் மற்றும் இறப்புகளால் பாதிக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் லத்தீனோக்களும் அமெரிக்க மக்கள் தொகையில் 31% மட்டுமே என்றாலும், கோவிட்-19 நோயாளிகளில் 55% க்கும் அதிகமானவர்கள் இந்தப் பிரிவினர்களே. பழங்குடி அமெரிக்கர்கள் 3.5 மடங்கு அதிகமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் மற்றும் வெள்ளையர்களின் இறப்பு விகிதத்தை விட 2.4 மடங்கு அதிக இறப்புக்கும் ஆளாயினர்.

வேலையின்மை பாதிப்புகளும் சமத்துவமற்ற முறையிலிருந்தது. அமெரிக்காவில் கொரோனா தொற்று மிக மோசமான போது, லத்தீன் அமெரிக்கர்களுக்கு 17.6% ஆகவும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு 16.8% ஆகவும், ஆசிய அமெரிக்கர்களுக்கு 15% ஆகவும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. இவர்களுடன் ஒப்பிடுகையில் வெள்ளையின அமெரிக்கர்களின் வேலையின்மை 12.4% தான் உயர்ந்தது.

இந்த சமத்துவமற்ற கொரோனா தாக்குதல்களின் விளைவாக, ஏற்கனவே இருக்கும் வறுமை, வீடின்மை மற்றும் பள்ளிக் கல்வியின் தரம் போன்றவற்றில் உள்ள சமத்துவமின்மைகள் மேலும் மிகுதியாக அதிகரித்தன மேலும் வரவிருக்கும் சில காலத்திற்கு தொடர்ந்து இப்படி அதிகரிக்கவே செய்யும். எடுத்துக்காட்டாக, ஒட்டுமொத்த அமெரிக்கப் பொருளாதாரம் மீட்சிக்கான அறிகுறிகளைக் காட்டினாலும், இந்த நிற பாகுபாடு சிறுபான்மைக் குழுக்கள் சமமான முன்னேற்றத்தை அடையவில்லை.

இறுதியாக, கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு சீனாவை ட்ரம்ப் குற்றம் சாட்டினார் இந்த வைரஸை குங் காய்ச்சல்என்று அழைக்கும் இனரீதியான வெறுப்பை உமிழும் அடைமொழிகளும் அடங்கும். இந்த இனவெறிப் பிரச்சாரம் காரணமாக கடந்த ஆண்டில் ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பசிபிக் தீவுவாசிகள் மீதான தாக்குதல்கள் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்தது. இந்த இனவெறித் தாக்குதல்கள் குறைவதற்கான அறிகுறிகள் இன்று வரை தென்படவில்லை.

தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான ஆரம்பகட்ட முன்னேற்றத்திற்கு ட்ரம்ப் நிர்வாகம் ஆதரவாக இருந்தது, உலகில் வேறு எந்தத் தலைவரும் செய்யாத ஒன்று. ஆயினும் கொரோனா பற்றிய தவறான தகவல்களைப் பரப்பியது, அறிவியல் பூர்வமற்ற பிரச்சாரத்தை காட்டுத்தனமாக மேற்கொண்டது போன்ற பாதிப்புகளினால் அமெரிக்கா இன்னும் கொரோனா பாதிப்பிலிருந்து மீளமுடியாமல் உள்ளது. சமீபத்திய ஒரு கருத்துக் கணிப்பின்படி மொத்த அமெரிக்கர்களில் 24% பேரும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 41% பேரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள மாட்டோம் எனறு கூறியுள்ளனர்.

மெக்சிகோவின் ஆண்ட்ரீஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடர்
சால்வடார் வஸ்குஎஸ் டெல் மெர்காடோ, சென்ட்ரோ டி இன்வெஸ்டிகேசன் ஒய் டோசென்சியா எகனாமிகாஸ்

மெக்சிகோ நாட்டு கோவிட்-19 நோயாளிகளில் 9.2% நோயால் இறக்கும் நிலையில், மெக்சிகோ உலகிலேயே மிக உயர்ந்த இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. சமீபத்திய மதிப்பீடுகள் அது 617,000 இறப்புக்களை சந்தித்திருக்கலாம் என்று காட்டுகின்றன.

அதிக மக்கள் தொகை கொண்ட இரு நாடுகளான அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இணையாக, மெக்சிகோவில் நீண்ட, தீவிர கோவிட்-19 தொற்றுப் பரவலுக்கு பல காரணங்கள் இருப்பினும், அதில் ஆற்றல் மிக்க ஒரு தேசியத் தலைமை இல்லாததும் ஒன்று.

தொற்றுநோய் காலம் முழுவதிலும், மெக்சிகோவின் ஜனாதிபதி ஆண்ட்ரீஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடர் மெக்சிகோவில் நோயின் தீவிரத்தை குறைத்துக் காட்டவே முயன்றார். ஆரம்பத்தில், அவர் நாடு தழுவிய ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதற்கான கோரிக்கைகளை எதிர்த்தார். இறுதியில் மார்ச் 23, 2020 அன்று மெக்சிகோ இரண்டு மாதங்களுக்கு ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் நாடு தழுவிய பேரணிகளை நட்த்தினார். அவர் அடிக்கடி முகக்கவசம் அணிய மறுத்தார்.

படிக்க :
♦ சத்குருவின் சட்டவிரோத சாம்ராஜ்யம் கட்டிஎழுப்பப்பட்டது எப்படி? – பாகம் 1
♦ யானைகளின் வழித்தடத்தை அழித்து விவசாயிகளின் வயிற்றிலடித்த ஜக்கி !

அவர் 2018-ல் பதவியேற்றபோது சுகாதார சேவைகளுக்கு குறைந்த அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதையே மரபுரிமையாகப் பெற்றார். அதன் பின்னர், லோபஸ் ஒப்ராடர் தொற்றுநோயின் போது சுகாதாரம் தொடர்பான செலவினங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யாமல், சற்றே அதிகரித்தார். மருத்துவமனை வரவு செலவுத் திட்டங்கள் எதிர்கொள்ளும் மகத்தான பணிக்கு இந்த நிதி உயர்வு போதுமானதாக இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

தொற்றுநோய் வெடிப்பதற்கு முன்னரே, லோபஸ் ஒப்ராடரின் தீவிர நிதி சிக்கனக் கொள்கை – 2018 ல் இருந்து நடைமுறையில் இருந்தது குடிமக்கள் மற்றும் வணிகங்களுக்கு கிடைக்கும் கோவிட்-19 நிதி உதவியை கணிசமாக கட்டுப்படுத்துவதன் மூலம் ஒரு சுகாதார நெருக்கடியை சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்தது. இதையொட்டி, மெக்சிகோவில் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அது தீவிரப்படுத்தியது. கடந்த ஆண்டு முழுவதும் பொருளாதார நடவடிக்கைகளை தொடர்வதற்காக தேவையானவர்களுக்கு உணவளித்தது. ஆண்டு இறுதியில் தொற்றிலிருந்து மீளும் சூழலில் மூர்க்கமான குளிர்கால இரண்டாவது அலைக்குள் நுழைந்தது.

இறுதியில், மற்றொரு முடக்கம் தவிர்க்க முடியாததாகியது. 2020 டிசம்பரில் மெக்சிகோ மீண்டும் சிறிது காலம் மூடப்பட்டது.

இன்று, முகமூடி அணிந்திருப்பது அதிகரித்துள்ளது. மெக்சிகோ அதன் மக்கள் தொகையில் 10% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளது. அண்டை நாடான கௌதமாலாவில் 1% பேருக்கே தடுப்பூசி போடப்பட்டுள்ளதுடன் ஒப்பிடுகையில், விசயங்கள் மேம்பட்டு வருகின்றன. ஆனால் மெக்சிகோவின் மீட்புப் பாதை நீண்டது.

00000

கட்டுரையாளர்கள் குறித்த குறிப்பு :

1. சுமித் கங்குலி புகழ்பெற்ற அரசியல் அறிவியல் பேராசிரியர் மற்றும் இந்திய கலாச்சாரங்கள் மற்றும் நாகரிகங்களுக்கான தாகூர் இருக்கையின் தலைவர், இந்தியானா பல்கலைக்கழகம்;
2. டோரதி சின் – இணை ஆராய்ச்சி உளவியலாளர், கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ்;
3. எலிசபெத் ஜே கிங் – மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பொது சுகாதார பள்ளியில் சுகாதார நடத்தை மற்றும் சுகாதார கல்வி இணை பேராசிரியர்;
4. எலிஸ் மசார்ட் டா ஃபொன்ஸெகா – உதவி பேராசிரியர், பிரேசிலிய பொது நிர்வாக பள்ளி, Fundação கெடுலியோ வர்காஸ்;
5. சால்வடார் Vázquez டெல் மெர்காடோ கோனாசைட் ஆராய்ச்சி பேராசிரியர், பொது கொள்கை தேசிய ஆய்வகம், சென்ட்ரோ டி Investigación ஒய் டோசென்சியா Económicas;
6. ஸ்காட் எல். கிரீர் பேராசிரியர், உலகளாவிய சுகாதார மேலாண்மை மற்றும் கொள்கை மற்றும் அரசியல் அறிவியல், மிச்சிகன் பல்கலைக்கழகம்.

இந்த கட்டுரை ஒரு கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் தி கான்வர்சேசன்ல் இருந்து மறுபிரசுரம் செய்யப்படுகிறது.

நன்றி: The Wire
தமிழாக்கம் : நாகராசு
.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க