சத்குருவின் சட்டவிரோத சாம்ராஜ்யம் : கட்டிஎழுப்பப்பட்டது எப்படி? – பாகம் 2

2012-வாக்கில் எம்.எஸ்.பார்த்திபன் என்ற வனச்சரகர் ஈஷா ஆசிரமத்திற்குள் சென்றார். சாடிவயலுக்கும் தாணிக்கண்டிக்கும் இடையில் யானைகள் சென்று வரும் வழியில், ஈஷா பல இடங்களை வளைத்துப் போட்டிருப்பதை அவர் கண்டறிந்தார். யானைகள் வரும் வழியில் சட்டவிரோதமாகக் கட்டங்கள், மின் வேலிகள், சுவர்கள் எழுப்பப்பட்டிருந்ததால், யானைகள் செம்மேடு மற்றும் நர்சீபுரத்திற்கு இடைப்பட்ட வனப்பகுதி வழியாக வெளியேறி விவசாயப் பயிர்களை நாசம் செய்ததோடு, விவசாயிகளையும் தாக்கிவந்தன.

படிக்க :
♦ காடுவெட்டி சத்குரு ! நாட்டை விற்கும் மோடி !! கேலிச்சித்திரங்கள்
♦ ஜக்கி காருண்யா ஆக்கிரமிப்பை மீட்காமல் சின்னத்தம்பிக்கு விடுதலை ஏது ?

“300 சதுர மீட்டர் பரப்பிற்கு மேல் எதைக் கட்ட வேண்டுமென்றாலும் HACAவின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஆனால், ஈஷா எந்த அனுமதியும் இன்றி மிகப் பெரிய அளவுக்கு கட்டுமானங்களை உருவாக்கியிருந்தது. அவர்கள் முதலில் கட்டடங்களைக் கட்டிவிட்டு பிறகு அனுமதிக்காக விண்ணப்பித்தார்கள். அவர்கள் புதிய கட்டுமானப் பணிகளுக்காக விண்ணப்பிக்கும்போது எங்கள் அனுமதிக்காக காத்திருந்ததேயில்லை.

ஆதியோகி சிலைக்கு அருகில் மின்சாரம் தாக்கி பலியான யானை.

விண்ணப்பித்துவிட்டு கட்டடம் கட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.” என்கிறார் பார்த்திபனின் சோதனையின்போது உடன் சென்ற ஒரு அதிகாரி. இவர் தன் பெயரைத் தெரிவிக்க விரும்பவில்லை. “ஈஷா கட்டடம் கட்டிய இடங்கள் யானைகள் நடமாடும் பகுதிகள். அதனால்தான் அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை” என்கிறார் அந்த அதிகாரி.

இக்கரை பொலுவம்பட்டியில் 33 கட்டுமானங்களை மதரீதியான பணிகளுக்கு என ஈஷா குறித்திருக்கிறது. இவை தமிழ்நாடு அரசின் கட்டுமான விதிகளின்படி இவை பொதுப் பயன்பாட்டிற்கான கட்டடங்கள்.  இம்மாதிரியான கட்டுமானங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் ஒப்புதல் தேவை. மேலும் நகர்ப்புறத் திட்டமிடல் துறையின் துணை இயக்குனரின் ஒப்புதலும் தேவை.  ஆனால், இந்த அனுமதிகளைப் பெறுவது குறித்து ஈஷா அலட்டிக்கொள்ளவேயில்லை.

அதற்குப் பதிலாக அனுமதி கோரி அந்த கிராமப் பஞ்சாயத்தை அணுகினர். நகர்ப்புறத் திட்டமிடல் துறையின் அனுமதியின்றி அம்மாதிரி ஒப்புதலை அளிக்க அந்தப் பஞ்சாயத்துக்கு அதிகாரமே இல்லை.  பிறகு ஒரு வழியாக 2011ல் ஒப்புதல் கோரி திட்டமிடல் துறையை அணுகினர்.

ஈஷா வளாகத்தை ஒட்டி போடப்பட்டுள்ள மின் வேலி

ஆனால், அதற்கு முன்பாகவே சட்டவிரோதமாக பல கட்டங்கள் அங்கே கட்டப்பட்டிருந்தன.    ஏற்கனவே கடந்த 15 ஆண்டுகளாகக் கட்டிய கட்டங்களுக்கு ஒப்புதல் கேட்டதோடு, புதிதாக 27 கட்டடங்களைக் கட்டவும் அனுமதி கோரினர். ஆனால், அந்த விண்ணப்பம் முழுமையானதாக இல்லை. 2012 பிப்ரவரிக்குள் புதிய விண்ணப்பத்தை அளிக்கும்படி நகர்ப்புற திட்டமிடல் துறை சொன்னது.

ஆனால், அதற்குள் ஈஷா விண்ணப்பத்தை தாக்கல் செய்யவில்லை. ஏழு மாதங்களுக்குப் பிறகு புதிய விண்ணப்பத்தை அனுப்பியது.  இதன் தொடர்ச்சியாக 2012 அக்டோபரில் திட்டமிடல் துறையின் அதிகாரிகள் ஈஷா வளாகத்திற்கு வந்தபோது, புதிய கட்டங்களைக் கட்டும் பணிகள் ஏற்கனவே துவங்கியிருந்தன. இந்தக் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி அவர்கள் உத்தரவிட்டனர். இது தொடர்பாக 2012 நவம்பரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், ஈஷா கண்டுகொள்ளவில்லை.

2012 டிசம்பரில் நகர்ப்புறத் திட்டமிடல் துறை மீண்டும் ஒரு நோட்டீஸை அனுப்பியது. ஒரு மாதத்திற்குள் சட்டவிரோதக் கட்டுமானங்கள் அனைத்தையும் இடித்துவிடும்படி அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து நகர்ப்புறத் திட்டமிடல் துறையின் இயக்குனர் முன்பாக முறையிட்டது. இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

அந்த நேரத்தில் கே. மூக்கைய்யா என்பவர் நகர்ப்புற திட்டமிடல் துறையின் துணை இயக்குனராக கோயம்புத்தூரில் பணியாற்றிவந்தார்.  நகர்ப்புறத் திட்டமிடல் துறை விதித்த ஆணைகளை ஈஷா அலட்சியப்படுத்திய நிலையில், அந்தத் துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்?

ஈஷா வளாகத்தில் உள்ள ஆதியோகி வடிவம்

“அந்த நோட்டீஸை அனுப்பிய ஒரு மதத்திற்குள் நான் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது எனத் தெரியவில்லை. அனுமதியைப் பெற்றார்களா இல்லையா என்பது தெரியவில்லை” என்கிறார் மூக்கைய்யா.

2012வாக்கில் ஈஷா 50 கட்டடங்களைக் கட்டியிருந்தது. மேலும் 27 கட்டடங்களைக் கட்டிவந்தது. எல்லா கட்டடங்களுமே சட்டவிரோதமானவை. ஆனால், ஈஷாவின் சட்டவிரோத செயல்பாடுகளை யாரும் எதிர்க்கத் துணியாத நிலையில், எதிர்க்கத் துணிந்த சிலர் இருந்தார்கள்.

அவர்கள் பூவுலகின் நண்பர்கள்!

(தொடரும் – 2)

பாகம் : 1

கட்டுரையாளர் : பிரதீக் கோயல்
தமிழாக்கம் : சுந்தர் ராஜன்
நன்றி : Newslaundry

முகநூலில் : Sundar Rajan

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க