சத்குருவின் சட்டவிரோத சாம்ராஜ்யம் : கட்டிஎழுப்பப்பட்டது எப்படி? – பாகம் 1

கோயம்புத்தூரின் இக்கரை பொலுவம்பட்டியில் 150 ஏக்கர் பரப்பளவுக்கு மிகப் பெரிய ஆசிரமத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் ஜக்கி வாசுதேவ். ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் இந்த சாமியாரின் ஆசிரமம் பல்வேறு முறைகேடுகள் செய்து கட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்கும் போதெல்லாம், “இவையெல்லாம் நிரூபிக்கப்பட்டவையா?” என்று கேள்வியெழுப்புவது இந்தச் சாமியாரின் வழக்கம்.

ஆகவே, இவரது ஆசிரமம் குறித்து பல்வேறு அரசு ஊழியர்கள், செயற்பாட்டாளர்கள், ஊழலை அம்பலப்படுத்துபவர்களிடம் பேசியது நியூஸ் லாண்ட்ரி. ஈஷா ஃபவுண்டேஷன் குறித்த பல்வேறு அரசு ஆவணங்களைப் பார்வையிட்டது. ஈஷாவுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட நீதிமன்ற வழக்குகளை ஆராய்ந்தது.

படிக்க :
♦ துருக்கியில் 4700 ஆண்டு பழமையான லிங்கத்தைக் கண்டெடுத்த ஜக்கி !
♦ கோவையில் போலீசு தடையை மீறி மோடி – ஜக்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் !

ஈஷா ஃபவுண்டேஷனின் கதை ஒரு வழக்கமான ஊழல் மற்றும் பேராசை பிடித்த சாமியாரின் கதைதான். நம் மக்களிடம் மதம் மற்றும் கலாச்சாரம் மீது இருக்கும் உணர்வைப்(sentiment) பயன்படுத்தி சட்டவிரோத காரியங்கள் செய்யப் பட்டிருக்கின்றன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இக்கரைப் பொலுவம்பட்டி என்ற ஆதிவாசி கிராமத்தில் அமைந்திருக்கிறது ஈஷாவின் சாம்ராஜ்யம்.

வெள்ளையங்கிரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்த இக்கரைப் பொலுவம்பட்டியில் 150 ஏக்கரில் 77 கட்டுமானங்களுடன் செயல்பட்டு வருகிறது இந்த ஈஷா ஆசிரமம். இந்தக் கட்டிடங்கள் எல்லாம் சட்டங்களையும் விதிகளையும் மீறி 1994-க்கும் 2011-க்கும் இடையில் கட்டப்பட்டவை. பொலம்பட்டி காப்புக் காடுகளை ஒட்டி இந்த ஆசிரமம் அமைந்திருக்கிறது. இந்த காப்புக் காடுகள் யானைகளின் வாழிடங்கள்.

ஆகவே, இந்தப் பகுதியில் மனித நடமாட்டம் என்பது Hill Area Conservation Authority என்ற ஆணையத்தால் கட்டுப்படுத்தப் படுகிறது. தமிழ்நாட்டில் மலைப் பிராந்தியக் காடுகளில் வனவிலங்கு மற்றும் சூழலைப் பாதுகாப்பதற்காக 1990-ல் இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது.

இந்தப் பகுதியில் 300 சதுர மீட்டர் அளவுக்கு மேல் கட்டிடம் கட்ட வேண்டுமென்றால் இந்த ஆணையத்தின் அனுமதியில்லாமல் அதைச் செய்ய முடியாது. தமிழ்நாடு அரசின் வனத்துறை, நகர்ப்புறத் திட்டமிடல் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை ஆவணங்களை நியூஸ் லாண்டரி ஆராய்ந்த போது, 1994-ல் இருந்து 2011 வரை 63,380 சதுர மீட்டர் அளவுக்கு கட்டடங்களைக் கட்டியிருக்கிறது ஈஷா.

1,402.62 சதுர மீட்டரில் ஒரு செயற்கை ஏரியையும் உருவாக்கியிருக்கிறது. இவற்றில் எந்தக் கட்டுமானத்திற்கும் ஒப்புதல் இல்லை. 32,855 சதுர மீட்டர் அளவுக்கு கட்டடங்களைக் கட்ட தங்களுக்கு உள்ளூர் பஞ்சாயத்தின் ஒப்புதல் இருப்பதாக வாசுதேவனும் (ஜக்கிதான்) அவரது ஈஷா ஃபவுண்டேஷனும் சொல்கிறார்கள். உண்மையில் Hill Area Conservation Authority-யின் கீழ்வரும் பகுதியில் கட்டிடம் கட்ட ஒப்புதல் அளிக்க கிராமப் பஞ்சாயத்துக்கு அதிகாரமே கிடையாது.

எல்லா சட்டவிரோத கட்டிடங்களையும் கட்டி முடித்த பிறகு 2011-ல் Hill Area Conservation Authorityக்கு (HACA) விண்ணப்பித்தார் வாசுதேவன். வனத்துறையில் கிடைத்த ஒரு ஆவணத்தின் படி ஜூலை 2011-ல் HACA-வுக்கு ஒரு விண்ணப்பத்தைப் போட்டார் இந்த நல்ல மனுசன். அதாவது ஏற்கனவே சட்டவிரோதமாக 63,380 சதுர மீட்டருக்குக் கட்டிங்களைக் கட்டிவிட்டோம். அதற்கு ஒப்புதல் கொடுங்கள். மேலும், 28582.52 மீட்டருக்கு கட்டுமானங்களைக் கட்டப் போகிறோம். அதற்கும் ஒப்புதல் கொடுங்கள் என்றது விண்ணப்பம்.

இந்த விண்ணப்பத்தை எடுத்துக் கொண்டு கோயம்புத்தூரின் வனத்துறை அதிகாரி வி.திருநாவுக்கரசு 2012 பிப்ரவரியில் ஈஷா ஆசிரமத்திற்கு சென்றார். உள்ளே சென்று பார்த்தவர் அசந்துபோனார். சட்டவிரோதமாக ஏகப்பட்ட கட்டிடங்களைக் கட்டி வைத்திருந்தது ஈஷா. 28,582.52 சதுர மீட்டருக்கு புதிதாக அனுமதி கேட்டார்களே? அதிலும் கட்டிடம் கட்டி வைத்திருந்தார்கள்.

இதுபோக, ஆசிரமத்தின் சுற்றுச் சுவரும், பிரதான வாயிலும் வனத்துறையின் நிலத்தில் கட்டப்பட்டிருந்தன என்பதையும் அவர் கண்டறிந்தார். இதுபோக, ஈஷா கட்டிய கட்டிடங்களாலும் அந்த ஆசிரமத்திற்கு பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் வந்து போவதாலும் யானைகளின் நடமாட்டம் பாதிக்கப் பட்டிருந்தது. இதனால், சுற்றுப்புற கிராமங்களில் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையிலான மோதல் அதிகரித்திருந்தது.

ஆகவே, இந்தக் கட்டடங்களுக்கு அனுமதி மறுத்தார் வி.திருநாவுக்கரசு. தனது விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய வேண்டியிருப்பதாகக் கூறிய ஈஷா, தனது விண்ணப்பத்தை அந்த ஆண்டு அக்டோபரில் திரும்பப் பெற்றுக் கொண்டது. 2014 வரை மீண்டும் விண்ணப்பிக்கவில்லை.

அங்கிருந்து திருநாவுக்கரசு வேறு பணிகளுக்குப் போய்விட்டு, 2018-ல் கோயம்புத்தூரின் தலைமை வனக் காப்பாளராகப் பதவியேற்றார். ஆனால், நான்கே நாட்களில் கோயம்புத்தூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டார்.

(தொடரும் – 1)

குறிப்பு : கோயம்புத்தூரில் ஜக்கி வாசுதேவ் எப்படி தனது ஆசிரமத்தையும் ஈஷா அமைப்பையும் சட்டவிரோதமாக உருவாக்கினார் என்பது குறித்து newslaundry இணையதளம் நீண்ட கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. அதன் மொழிபெயர்ப்பு. மூன்று பாகங்களாக வாசுதேவனின் சரித்திரத்தை நியஸ் லாண்ட்ரி வெளியிடவிருக்கிறது. பகுதி பகுதியாக அதன் மொழிபெயர்ப்பை தருகிறேன்.

கட்டுரையாளர் : பிரதீக் கோயல்
தமிழாக்கம் : சுந்தர் ராஜன்
நன்றி : Newslaundry

முகநூலில் : Sundar Rajan

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க