பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டம்!

போராடக் கூடிய செவிலியர்கள், கொரோனாவில் மக்களுக்காக சேவை மனப்பான்மையுடன் உயிரை பனையம் வைத்து சேவை செய்தார்கள். அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் வேலை முடிந்ததும் வெளியேற்றப் பார்க்கிறது திராவிட மாடல் அரசு!

கொரோனா பெருந்தொற்றில் தற்காலிகமாக பணியாற்றிய செவிலியர்கள் தங்களது பணியை நிரந்தரம் செய்ய கோரி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கொரோனா பெரும்தொற்று மிகப்பெரும் அழிவை உண்டாக்கியது. இதையொட்டி அன்று இருந்த அதிமுக அரசு மருத்துவமனையில் ஆறு மாதம் தற்காலிகமாக செவிலியர்கள் பலரை பணியமர்த்தியது. அப்பணி தொடர்ந்து பலமுறை நீட்டிப்பு செய்யப்பட்டு தற்போது டிசம்பர் 31, 2022 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்த பணி நீட்டிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து, பணிநீக்கம் செய்யப்போவகதாக அறிவிப்பு வெளியானது. இதனை எதிர்த்து, தங்களுக்கு நிரந்தரமாக பணி வழங்கக்கோரி தமிழ்நாட்டு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றார்கள் செவிலியர்கள்.

படிக்க : செவிலியர்கள் முதல் மருத்துவர்கள் போராட்டம் வரை – நம்மிடம் கோருவது என்ன? ஒன்றினைந்த போராட்டமே !

சென்னையில் நடைபெற்றப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களில் ஒருவர், “திமுக தேர்தல் அறிக்கையின் 356-வது வாக்குறுதியின் படி ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் திமுக அரசு தனது வாக்குறிதியை நிறைவேற்றாமல் எங்களை வஞ்சித்து கொண்டிருக்கிறது” என்று கூறினார்.

கோவையில் கடந்த பத்து நாட்களாக செவிலியர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜனவரி 10 அன்று கையில் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களில் ஒருவர் கௌசியா, “நான் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறேன். கொரோனா காலத்தில் பணியாற்ற வேண்டும் என்ற நிர்பந்தத்தின் அடிப்படையில் நாங்கள் பணியில் சேர்ந்தோம். இப்பணிக்கு பல்வேறு சலுகைகள் தருகிறோம் என்று அரசு கூறியது. எனினும் மக்களை காப்பாற்றுவதற்காகத்தான் நாங்கள் கொரோனா மீட்பு பணியை மேற்கொண்டோம். கடந்த ஆறு மாதமாக எங்களுக்கு சம்பளமோ, ஊக்கத்தொகையோ வழங்கப்படவில்லை. நான் கருவுற்றிருந்த போது விடுப்புக்கூட எடுக்காமல் மக்களுக்காக கொரோனா மீட்பு பணியை செய்தேன். தற்போது எங்களின் போராட்டத்தை அரசு அதிகாரிகள் யாருமே கண்டுகொள்ளவில்லை. எங்களுக்கு பணி நிரந்தரமும் பணிப் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும்” என்றார் வேதனையுடன்.

இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதல்வருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம் விழுப்புரம், கிருஷ்ணகிரி, சென்னை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மற்றும் சேலத்தில் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

படிக்க : மறுகாலனியாக்க சுரண்டலுக்கு நவீன பண்ணை அடிமைகளாக மாற்றப்படும் செவிலியர்கள் !

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய மா.சுப்ரமணியம் “போராடும் செவிலியர்கள் ஜனநாயக ரீதியாக போராடுவது சரி, ஆனால் பணிப் பாதுகாப்பை உறுதி செய்து நிரந்தரம் செய்ய வேண்டும் என்று செவிலியர்கள் போராடுவதை காரணம் காரியம் அறிந்து போராட வேண்டும்” என்று கூறுகிறார்.

போராடக் கூடிய செவிலியர்கள், கொரோனாவில் மக்களுக்காக சேவை மனப்பான்மையுடன் உயிரை பனையம் வைத்து சேவை செய்தார்கள். அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் வேலை முடிந்ததும் வெளியேற்றப் பார்க்கிறது திராவிட மாடல் அரசு! செவிலியர்கள் போராட்டத்திற்கு துணைநிற்கவேண்டியதே நம் அனைவரின் கடமை.

ரோகித் வெமுலா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க