கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் செவிலியர்களை “தேவதைகளாக” “கடவுளாக போற்றிய“ அரசு இன்று அவர்களை கைது செய்து, வழக்கு பதிவு செய்து, தான் ஒரு வன்முறை கருவி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
கடந்த ஜுன் 7-ம் தேதி அன்று “மருத்துவ பணியாளர் தேர்வு” (MEDICAL SERVICES RECRUITMENT BOARD EXAM – MRB) எழுதி ஒப்பந்த முறையில் 7 ஆண்டுகளாக வேலை செய்துவரும் செவிலியர்கள் தமிழகத்தின் அனைத்து பகுதியிலிருந்து அணிதிரண்டு வந்து சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.
இதில், ஒரு பகுதியாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்திற்கு முன்பு 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த முறையை ரத்து செய்துவிட்டு தங்களை நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்க வேண்டும். ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் போன்ற அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து “திராவிட மாடல் ஆட்சியில்” மூன்றாவது முறையாக ஏதேனும் “விடியல்” வந்துவிடாத என செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுப்பட்ட ஒரு மூத்த பெண் செவிலியர், அரசு கொடுக்கும் அற்பக் கூலியை வைத்துக்கொண்டு இன்று இருக்கும் விலைவாசி உயர்வில், எங்கள் வாழ்க்கையை எப்படி நடத்துவது என்றே தெரியவில்லை. என் பிள்ளைகளின் படிப்பு செலவு, வீட்டுப் பராமரிப்பு செலவு, போக்குவரத்து செலவு என எதையுமே என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை. கடன் வாங்கிதான் இவற்றை தீர்க்க முடியும் என்ற நிலைமை உள்ளது. அந்த கடனும் இப்பொழுது என் கழுத்தை நெருக்குகிறது என கலங்கினார்.
படிக்க :
♦ கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய செவிலியர்களை கைவிடும் தமிழக அரசு !
♦ உயிர்காக்கும் செவிலியர்களின் போராட்டம் வெல்லட்டும் !
மற்றொரு பெண் செவிலியர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள அனைவரும் இளங்கலை, முதுகலை என்று செவிலியர் படிப்பில் உயர் படிப்பை முடித்தவர்கள். எங்கள் தகுதிக்கு இந்த அரசு கொடுக்கும் மரியாதை இது தானா? என்று கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.
செவிலியர்களின் போராட்டத்தை கண்டு அஞ்சிய தி.மு.க அரசு போராட்டத்தை ஒடுக்குவதற்காக 200-க்கும் மேற்பட்ட காக்கி குண்டர்களை இறக்கிவிட்டது. செவிலியர்களை – கைது செய்து – வலுக்கட்டாயமாக தூக்கி வேனில் ஏற்றியது. போராட்டத்தை முடித்துக் கொள்ள மறுத்த செவிலியர்கள் காக்கி ரவுடிகளால் தரதர வென்று அடித்து இழுத்து செல்லப்பட்டனர். இதனால் இரண்டு செவிலியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
495 செவிலியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது போலீசுத்துறை. இத்தகைய மோசமான ஒடுக்குமுறையை செவிலியர்கள் மீது கட்டவிழ்த்து விட்டுவிட்டு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே பத்து பதினைந்து ஆண்டுகளாக நீங்கள் உழைத்து விட்டீர்கள், தேவையில்லாமல் வெயிலில் போராடி உடம்பை வருத்திக் கொள்ளாதீர்கள் என அறிவுரை வழங்கியுள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு மூலம் பதினோராயிரம்  செவிலியர்களை பணிக்கு எடுத்தது தமிழக அரசு. இவர்களுக்கு பணி வழங்கும் போதே ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுப்பதாகவும், இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் நிரந்தர (காலமுறை ஊதிய முறைக்கு) பணிக்கு மாற்றுவதாகவும் கூறியது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அரசு செவிலியர்களை ஏமாற்றி வந்தது.
எம்.ஆர்.பி என்ற தேர்வு முறை வருவதற்கு முன்பு, அரசு கல்லூரியில் படித்த மாணவர்களை நேரடியாக வேலைக்கு எடுத்து வந்தார்கள். இதற்காக தனி தேர்வுகள் எதுவும் கிடையாது. சுகாதாரத்துறையில் ஏற்படும் ஆள் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய “எமெர்ஜென்சிக்காக” அரசாணை 230-ன் படி ஒப்பந்தம் செய்து பணிக்கு எடுப்பார்கள்.
பிறகு 101A விதிகளின் படி அவர்கள் நிரந்தர பணியாளராக அமர்த்தப்படுவர். இதுதான் 2013-க்கு முன்பு வரை இருந்த நடைமுறை. எம்.ஆர்.பி தேர்வு என்பது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தது.
தற்போது ஆளும் ‘விடியல்’ அரசும், இந்த 230 அரசாணையைத்தான் பிரதானப்படுத்துகிறது. ஆனால் போராடும் செவிலியர்கள், G.O 191 1st February 1962 Public Services (A) அரசாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் (Time to Scale) என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பதை பிரதானப்படுத்துகிறார்கள்.
000
மறுகாலனியாக்க சூறையாடலுக்காக மருத்துவத்துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நிதிகளை வெட்டி சுருக்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த அரசு, அதில் ஒரு உச்சகட்ட நடவடிக்கையாக MRB தேர்வு முறை கொண்டு வந்தது (இதில் நீட் போன்ற தேர்வுகளும் அடங்கும்). இதன் நோக்கம் அரசு மருத்துவமனையின்  உள்கட்டமைப்பு வசதிகள் மட்டுமல்ல அதில் வேலைபார்க்கும் செவிலியர்களும் மருத்துவர்களும் கூட சரி இல்லை என்ற பிம்பத்தை ஏற்படுத்த ஆளும் வர்க்கம் நினைக்கிறது. இதன் மூலம் மருத்துவத்தை தனியார் – கார்ப்பரேட் – முதலாளிகளின் இலாப வேட்டைக்காக மடை மாற்றி விடுகின்றது.
தற்போது செவிலியர்களை, அரசு மருத்துவமனை வேலைகளுக்கு எடுப்பதில்லை. உற்பத்தி தொழில்களில் ஒப்பந்த தொழிலாளர்களை ஈடுபடுத்தி ஒட்ட சுரண்டுவதுபோல மருத்துவத் துறையிலும் ஒப்பந்த முறையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டு சுரண்டபடுகிறார்கள்.
அரசு ஊழியராக நியமித்தால் அடிப்படை ஊதியமாக மட்டும் மாதம் ரூ.19,000 மேல் கொடுக்க வேண்டியிருக்கும். ஆகவே, தொகுப்பூதியம் (கான்ட்ராக்ட்) அடிப்படையில்  செவிலியர்களை வேலைக்கு அமர்த்துவதால் அவர்களுக்கு மாதம் ரூ.7,000; ரூ.10,000  என்ற  அடிமாட்டு கூலி கொடுத்தால் போதும். சில ஆண்டுகள் வேலை செய்தால் அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இவர்களும் வேலை செய்ய துவங்குகிறார்கள். அதன் பிறகு செவிலியர்களின் நிலை தூண்டியலில் சிக்கிய புழுவின் கதையாகி விடுகிறது.
தனியார்மய கொள்கைகள் காரணமாக – கார்ப்பரேட்டுகளின் இலாபவெறிக்காக – அரசு மருத்துவமனைகளை அரசாங்கம் பாராமுகமாக கைவிட்டாலும், அவை ஓரளவு இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு அர்ப்பணிப்புடன் பணிபுரியும் செவிலியர்கள், மருத்துவர்கள் தான் முதன்மையான காரணம். இது நிதர்சனமான உண்மை என்பதை கொரோனா பெரும் தொற்றும் நமக்கு நிரூபித்ததுள்ளது.

படிக்க :

♦ டெல்லி ஜிப்மர் : பணியிலிருக்கும் செவிலியர்கள் மலையாளம் பேசக் கூடாதாம் !

♦ போலீசின் மிரட்டலுக்கு அஞ்சாமல் போராடும் ஒப்பந்த செவிலியர்கள் !

இந்தியாவின் மொத்த மருத்துவ சந்தையின் மதிப்பு 2015-ம் ஆண்டில் 100 பில்லியன் டாலரிலிருந்து 2020-ம் ஆண்டில் அதாவது ஐந்தாண்டுகளில் 280 பில்லியன் டாலராக இருக்கும் எனவும் அதன் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 22.9 சதவீதமாக இருக்குமென்றும் கணிக்கப்பட்டது. இந்திய மருத்துவ சந்தையை பன்னாட்டு ஏகபோக நிதி மூலதன கும்பல்களுக்கு சுறையடுவதற்கான காரணத்தை இந்த ஒரு புள்ளி விவரமே போதும்.
மருத்துவ துறையில் தனியார்மய தாராளமய கொள்கை திணிக்கப்படுவதால் பாதிக்கப்படும் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் என அனைத்து தரப்பட்ட மக்களையும் ஓரணியில் அணிதிரட்டி இந்த தனியார்மய – தாராளமய கொள்கையை எதிர்த்து போராடுவது மட்டுமே நமக்கான முழுதும் முற்றான தீர்வாக அமையும்.
கதிர்
வினவு களச்செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க