02.02.2024
ஹேமந்த் சோரன் கைது ! வெறி பிடித்து அலையும் மோடி அரசு !
பத்திரிகைச் செய்தி
ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நேற்றைய தினம் தனது பதவியை இராஜினாமா செய்தார்.அன்றைய தினமே அவர் அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். பாசிச பாஜக அரசால் மேற்கொள்ளப்பட்ட இந்த பழிவாங்கும் நடவடிக்கையை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசத்தின் இந்து இராஷ்டித்திற்கு யார் யாரெல்லாம் தடையாக இருப்பார்களோ அத்தனை பேரையும் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு. ஜார்க்கண்ட் மாநில அரசை சீர்குலைக்கவும் கலைக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட பாசிச மோடி அரசு, அதன் இன்னொரு பகுதியாக அமலாக்கத்துறையை ஏவி ஹேமந்த் சோரனை கைது செய்திருக்கிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வடமாநிலங்களில் வெற்றி பெறுவதற்கான பல்வேறு மோசடி வேலைகளை தொடங்கியுள்ளது. நிதீஷ் குமார் போன்றவர்களின் விலைக்கு வாங்கி இந்தியா கூட்டணியை பிளவுபடுத்துவதும் தன்னுடைய வழிக்கு வராத ஹேமந்த் சோரன் போன்றவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும் தான் தற்போது நடந்தேறி வருகிறது.
படிக்க : “வேண்டாம் பிஜேபி” பிரச்சாரத்தை தடுத்த காவிகளும் காக்கிகளும்
ஹேமந்த் சோரன் கைது என்பது திட்டமிட்ட பழி வாங்கும் நடவடிக்கை. தோல்வி முகத்தில் இருக்கும் பாசிச ஆர்எஸ்எஸ் – பிஜேபி கும்பல் வெறி பிடித்து அலைந்து கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக வெறும் அறிக்கைகளை மட்டும் இந்தியா கூட்டணியின் தலைவர்கள் வெளியிட்டுக் கொண்டிருப்பது என்பது சரியான நடவடிக்கை அல்ல; மாறாக ஜார்க்கண்ட் மாநில உட்பட பல்வேறு மாநிலங்களிலும் இந்த கைதுக்கு எதிராக மிகப்பெரிய மக்கள் போராட்டங்களை நடத்தி இருக்க வேண்டும்.
மக்கள் போராட்டங்களுக்கு மட்டுமே பாசிச கும்பல் பின் வாங்கும் என்பது மட்டுமல்ல; அந்த மக்கள் போராட்டங்களால் மட்டுமே ஆர்.எஸ்.எஸ் – பாஜக; அம்பானி – அதானி பாசிச கும்பல் வீழ்த்தப்படும்.
ஆகவே, ஹேமந்த் சோரன் மீதான அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321