கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியமர்த்தப்பட்ட 3200 தற்காலிக செவிலியர்களில் 800 பேரை பணிநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு 2400 செவிலியர்கள் நிரந்தர ஒப்பந்த செவிலியர்களாகவும், மீதமுள்ள 800 செவிலியர்கள் பின்வரும் காலங்களில் காலிப்பணியிடங்களுக்கு தகுந்தாற்போல் பணியமர்த்தப்படுவார்கள் என்று மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 31-ம் தேதியோடு அந்த 800 செவிலியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் டி.எம்.எஸ் வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதுமட்டுமில்லாமல் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு அருகே 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டம் நடத்தினர்.
“கருணையின் வடிவமாகவே செவிலியரைக் காண்கிறேன். அன்பு செலுத்து; அதை வெளிப்படுத்து; இந்த இரண்டும் இணைந்ததுதான் உங்களின் வாழ்க்கை. கொரோனா காலத்தில் தங்களின் உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் செயல்படும் செவிலியர்கள் அனைவரையும் மனதார நெஞ்சார வாழ்த்துகிறேன்”.
படிக்க :
டெல்லி ஜிப்மர் : பணியிலிருக்கும் செவிலியர்கள் மலையாளம் பேசக் கூடாதாம் !
உயிர்காக்கும் செவிலியர்களின் போராட்டம் வெல்லட்டும் !
மேற்கண்ட வார்த்தைகள் 2021 செவிலியர் தினத்தன்று முதல்வர் ஸ்டாலின் கூறிய வார்த்தைகள். அதே ஸ்டாலின் தலைமையிலான அரசில்தான் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள்.
திமுக தன்னுடைய தேர்தல் வாக்குறுதி 356-ல்தான் ஆட்சிக்கு வந்தால் ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ள அனைத்து செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறியுள்ளது.
தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்தவுடன் திமுக ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ள 1212 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்தது. மொத்தமாக 12000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக 6 வருடங்களுக்கு மேல் வேலை செய்யும்போது 1212 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கியதை திமுகவின் கூட்டணிக் கட்சிகள் பெருமையாக பேசினர். ஆனால் தற்போது செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதைப் பற்றி வாய்திறக்க மறுத்து மௌனமாக இருக்கின்றனர்.
2021 செப்டம்பர் மாதத்தில் 1000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணிநீக்கம் செய்தபோது விகடன் நாளிதழ் சென்னையிலுள்ள ஓர் அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியராக பணிபுரியும் ஒருவரிடம் எடுத்த பேட்டியில் அவர் கூறியதாவது, “நான் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அரசு வேலை என்பதால் இங்கு பணிக்கு வந்தேன். கொரோனா பணிக்காக எங்களை பணியமர்த்தினார்கள். கொரோனா வார்டில் மற்றவர்களைக் காட்டிலும் எங்களுக்குதான் அதிகப்பணி வழங்கப்படும். மாதச் சம்பளம் ரூ.14000 தான் வழங்கப்படுகிறது” என்று கூறினார்.
மேற்கூறியவாறுதான் அரசு பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நிறைய பேர் தன்னுடைய வேலையை விட்டுவிட்டு வெளியூரில் இருந்து வந்து எல்லாம் சென்னையில் வேலை பார்த்தனர். அவர்களுக்கு குறைவான சம்பளத்தை கொடுத்து அவர்களிடம் கடுமையான உழைப்புச் சுரண்டலை தமிழக அரசு நடத்தியது.
கொரோனா தொற்றுப் பரவல் அதிகமாக இருக்கும்போது, வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அவர்களுக்கு சுயதனிமைப்படுத்தலைக் கருத்தில் கொண்டு உண்ணும் உணவு மற்றும் தங்குமிடம் போன்றவற்றை தமிழக அரசு ஏற்பாடு செய்தது.
ஆனால், தொற்று குறைந்த பிறகு தங்கும் இடம் மற்றும் உணவு ஏற்பாடு செய்ய தமிழக அரசு மறுத்தது. வெளியூரில் இருந்து வந்து வேலை செய்பவர்களுக்குகூட தங்கும் இடம் ஏற்பாடு செய்ய மறுத்து அவர்களை கைவிட்டது. குறைவான சம்பளத்துடன், செவிலியர் என்பதால் வாடகைக்கு தங்கும் இடம் கிடைக்காமல் அவர்கள் பட்ட கஷ்டம் அவர்களுக்குதான் தெரியும்.
படித்தால் உயர்வு பெறலாம் என செவிலியம் படித்த பெண்கள் இன்று சரியான வேலை வாய்ப்பின்றியோ, கிடைத்த வேலையில் முறையான ஊதியமின்றியோ, கூடுதல் பணி நேரமென அரசுப் பணியிலும் துன்புறும் அவலநிலை இருக்கிறது.
தனியார் கல்லூரியில் படித்த செவிலியர்களுக்கு அரசு வேலை 2008 வரை மறுக்கப்பட்டது. நீதிமன்றப் போராட்டத்துக்குப் பிறகுதான் அரசு வேலை என்ற உரிமை கிடைத்தது. அரசு வேலைக்குப் பணி அமர்த்தலில் தேர்வு முறை (MRB) உண்டு.
தேர்வெழுதிப் பணிக்கு எடுக்கப்படும் ஒவ்வொரு செவிலியரும் நிரந்தரப் பணியாளர் என்ற ஆணை இப்போதும் உள்ளது. ஆனாலும் ஒப்பந்தம் போட்டு 2 ஆண்டுகளுக்கு கையொப்பம் வாங்கி 6 ஆண்டுகள் வெறும் 14,000 சம்பளத்துக்கு கொத்தடிமைகள்போல் வேலை வாங்கியது சென்ற அதிமுக அரசு. 12000-க்கும் மேற்பட்ட செவிலியர்களின் நிலைமை இன்னும் அதே கொத்தடிமை தான்.
தற்போது ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசானது அதிமுக விட்டுச் சென்ற வேலையை அப்படியே பின்தொடர்கிறது. என்ன சற்று முற்போக்கு வேடம்!
படிக்க :
ஸ்டெர்லைட்டின் ஆணிவேரை அறுக்காமல் விடமாட்டோம் : தூத்துக்குடி மக்கள் போராட்டம் !
திருவையாறு – விக்கிரவண்டி பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் | களச்செய்திகள்
தற்போது 800 செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது, ”கொரோனா காலத்தில் பணியாற்றிய 1000-க்கும் மேற்பட்ட செவிலியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டுவிட்டது. தற்போது 800 செவிலியர்களுக்கு மட்டும் பணி வழங்க முடியாத சூழல் உள்ளது. அந்த 800 செவிலியர்களுக்கு அரசுப் பணி வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய ஒருவரைக் கூட விட்டுவிடாது பணி வழங்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். கண்டிப்பாக பணி வழங்கப்படும் என்று தெரிவித்த பிறகு போராட்டம் நடந்தது” என்று கூறியுள்ளார்.
மேற்கூறியதில், அமைச்சர் சுப்பிரமணியன் கண்டிப்பாக பணி வழங்கப்படும் என்று செவிலியர்களிடம் தெரிவித்த பிறகும் போராட்டம் நடத்துகின்றனர் என்று கூறியுள்ளார். திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி, 12000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா காலத்தில் ஒப்பந்த செவிலியர்களாக நியமிக்கப்பட்ட 1000-க்கும் மேற்பட்ட செவிலியர்களை வேலையைவிட்டு நீக்கியது.
அவர்களுடைய நிலைதான் நமக்கும் என்று தங்களுடைய சொந்த அனுபவத்தில் புரிந்துக் கொண்ட செவிலியர்கள் தங்கள் உரிமைக்காகப் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் அமைச்சரோ கண்டிப்பாக பணி வழங்கப்படும் என்று நம்ப முடியாத விசயத்தை நம்ப சொல்கிறார்.

அமீர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க