டெல்லி அரசால் இயக்கப்படும் ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் மருத்துவ வளாகத்தில் மலையாளம் பேசுவதற்கு கடந்த ஜூன் 5-ம் தேதி சர்வாதிகாரத்தனத்துடன் தடை விதித்தது மருத்துவமனை நிர்வாகம். அதற்கு சமூக வலைத்தளங்களில் உண்டான கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து சுற்றறிக்கையை பின் வாங்கியிருக்கிறது.

மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் மலையாளத்தில் அதிகம் பேசிக் கொள்வதாக வந்த மொட்டை கடிதத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் ஆங்கிலம் அல்லது இந்தியில் செவிலியர்கள் பேசாவிட்டால் ‘கடுமையான நடவடிக்கை’ எடுக்கப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகத்தின் சுற்றறிக்கை எச்சரித்தது.

படிக்க :
♦ டிஜிட்டல் ஊடகங்களின் மீதான மோடி அரசின் தாக்குதல்
♦ RSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி !

“ ஜிப்மர் மருத்துவமனையில், பணிபுரியும் இடங்களில் பேசிக் கொள்ள மலையாள மொழி பயன்படுத்தப்படுவது குறித்து புகார் வந்துள்ளது. பெரும்பான்மை நோயாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த மொழி தெரியாது. மேலும், இதனால் நிறைய அசவுகரியங்கள் ஏற்படுகின்றன. எனவே, அனைத்து நர்சிங் பணியாளர்களும் இந்தி மற்றும் ஆங்கிலத்தை மட்டுமே தகவல்தொடர்புக்கு பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லையெனில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்கிறது அந்த சுற்றறிக்கை.

டெல்லி ஜிப்மர் மருத்துவமனை

பாஜக அரசின் இந்தி திணிப்புக்கும் பிற இந்திய மொழிகளை அழிக்க நினைக்கும் அதன் கொள்கைக்கும் ஏற்ப, சுற்றறிக்கை அனுப்பிய மருத்துவ நிர்வாகத்துக்கு எதிராக செவிலியர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

ஜிப்மரில் பணியாற்றும் ஒரு செவிலியர் ஏற்கனவே இதுபோன்ற எதிர்ப்புகள் வந்துள்ளதாக கூறுகிறார். “ஒரு நோயாளி அளித்த புகாரின் பேரில் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். இது மிகவும் தவறானது. இங்கே பணியாற்றும் 60 சதவீத செவிலியர்கள், கேரளத்தைச் சேர்ந்தவர்கள். அதனால், அவர்கள் நோயாளிகளுடன் மலையாளத்தில்தான் பேசுவார்கள் எனக் கூறுவது அபத்தம். மணிப்பூரி, பஞ்சாபி பேசும் செவிலியர்களும் இருக்கிறார்கள், அவர்கள் தங்களுடைய தாய்மொழியை தங்களுக்குள் பேசுகிறார்கள். அது ஒருபோதும் பிரச்சனைக்கு உள்ளாக்கப்பட்டதில்லை” என்கிறார்.

டெல்லியில் பணிபுரியும் செவிலியர்களுக்கான கூட்டமைப்பைச் சேர்ந்த ஃபமீர், “இது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இது எங்களுடைய மொழி சுதந்திரத்துக்கு விடப்பட்ட அச்சுறுத்தல். எங்கள் மாநிலத்தை அவமரியாதைக்கு உள்ளாக்கிய நபர்கள் கட்டாயம் மன்னிப்புக் கேட்க வேண்டும்” எனக் கூறினார்.

இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கண்டனத்துக்கும் ஆளானது.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “இது பன்மைத்துவத்தின் மீதான தாக்குதல். மொழி மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் ஊழியர்களை பிரிப்பது ஒரு நாகரிக சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது” என விமர்சித்தார்.

ராகுல் காந்தி எம்.பி. “மற்ற இந்திய மொழிகளைப் போலவே மலையாளமும் ஒரு இந்திய மொழி. மொழி பாகுபாட்டை நிறுத்துங்கள்” என ட்விட்டரில் பதிவிட்டார்.

சமூக வலைத்தளங்களில் எழுந்த தொடர்ச்சியான கண்டனங்கள் காரணமாக, சுற்றறிக்கையை திரும்பப் பெற்றது மருத்துவமனை நிர்வாகம். இதனிடையே வெறும் பெயருக்காக இருக்கும், டெல்லி அரசின் சுகாதாரத்துறை ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்துக்கு அந்த சுற்றறிக்கை குறித்து விளக்கம் அளிக்கும்படி குறிப்பாணை அனுப்பியுள்ளது.

வடமாநிலங்களில் பேசப்பட்டு வந்த பல மொழிகளை முழுங்கி, இந்தி என்ற ஒற்றை மொழி ஆக்கிரமித்துள்ளதைப்போல, தென்னிந்திய மொழிகளை அழித்து, ஒரே மொழி திட்டத்தை செயல்படுத்தி வரும் பாஜக அரசின் முயற்சிகளில் ஒரு அங்கமே டெல்லி மருத்துவமனையின் சர்வாதிகார சுற்றறிக்கை.

அனைத்து அரசு நிறுவனங்களிலும் உயர்மட்டங்களில் அமர்ந்து கொண்டு சங்க பரிவாரக் கும்பல்கள் தொடர்ந்து தங்களது ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற இந்தி திணிப்பு வேலைகளைச் செய்து வருகிறது. தற்போது கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் இந்தச் சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டாலும், இந்தி – இந்துத்துவ ஒற்றை கலாச்சரமயமாக்கலை காவி கும்பல் தொடர்ந்து செய்யும். எதிர்ப்பதற்கு எப்போதும் தயாராகவே இருப்போம்.


அனிதா
செய்தி ஆதாரம் : Scroll

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க