நாடு முழுவதும் கல்வியை காவிமயமாக்குவதை முதன்மை பணியாகச் செய்துவருகிறது இந்துத்துவ அரசு. தற்போது ஒருபடி மேலே போய், நாக்பூர் பல்கலைக்கழகம் ஆர்.எஸ்.எஸ். குறித்த பாடத்தை, பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது. நாட்டின் கட்டுமானத்திலோ, சுதந்திர போராட்டத்திலோ துரும்பைக்கூட அசைத்திராத ஆர்.எஸ்.எஸ். நாட்டின் கட்டுமானத்தில் ஆற்றிய பங்கு என்ன என்பது பற்றிய பாடத்தைச் சேர்த்துள்ளது, நாக்பூர் பல்கலைக்கழகம்.

ராஷ்டிரசந்த் துகாதோஜி மகராஜ் நாக்பூர் பல்கலைக்கழகம், பி.ஏ. வரலாறு இரண்டாம் ஆண்டுக்கான புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டத்தை அண்மையில் தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. இதில் இந்திய வரலாறு : 1885-1947 என்கிற தாளில் மூன்றாம் பிரிவாக ‘இந்திய கட்டுமானத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் பங்கு’ என்ற புதிய தலைப்பைச் சேர்த்துள்ளது. ‘பொதுவுடமை இயக்கம்: அதன் எழுச்சியும் பங்கும்’ என்பதற்குப் பதிலாக ஆர்.எஸ்.எஸ். குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

1925-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதோடு, இந்திய அரசியலமைப்பையும் அது சொல்கிற மதச்சார்பற்ற தன்மையையும் எதிர்த்தது என வரலாற்றாசிரியர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.  வரலாறு இப்படியிருக்க, ‘தேசிய கட்டுமானத்தில் ஆர்.எஸ்.எஸ்.-ன் பங்கு’ என தலைப்பிட்டு மாணவர்களிடம் தவறான வரலாற்றை திணிப்பதாக பல வரலாற்றாசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புனேவைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் ஸ்ரீமந்த் கொகடே, “இந்திய  அரசியலமைப்பு பேசுகிற தேசியவாதமானது சமத்துவம், நீதி, மதச்சார்பின்மை, சுதந்திரம் மற்றும் சகோதரத்துவத்தின் அடிப்படையிலானது. ஆனால், ஆர்.எஸ். எஸ். பேசுகிற தேசியவாதமோ, அரசியலமைப்பையோ அது சொல்கிற மதிப்புகளையோ ஏற்றுக்கொள்வதில்லை. சங்க பரிவாரங்கள் இந்து ராஷ்டிரத்தை உருவாக்கும் குறிக்கோளோடு உள்ளன. மகாராஷ்டிரத்திலும் மத்தியிலும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, பல்கலைக்கழக பாடத்திட்டங்களை மாற்ற முயற்சிக்கிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே, ஆர்.எஸ்.எஸ்.-ன் இந்து ராஷ்டிர உருவாக்கத்தின் மதிப்புகளை பரவச் செய்வதுமாகும்” என்கிறார்.

மேலும் அவர், “சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பங்கேற்றதற்கான எந்தவித சான்றும் இல்லை. அப்படியிருக்க, இந்திய வரலாற்றில் அது எப்படி ஒரு பகுதியாக முடியும்? இது தொடர்ந்து நடக்குமானால், இந்தியா, நாசி ஜெர்மனி போலவோ, சிரியா, ஆப்கானிஸ்தானைப் போலவோ மாறும். இதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்கிறார் கொகடே.

படிக்க:
கவுரி லங்கேஷ் , கல்புர்கி படுகொலை : ரப்பர் தோட்டத்தில் பயிற்சி எடுத்த சனாதன் சன்ஸ்தா !
♦ இராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் !

சி.பி.எம், காங்கிரஸ் கட்சிகளின் மாணவர் அமைப்புகள் நாக்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்திலிருந்து இந்தப் பாடம் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

மாணவர் அமைப்பைச் சேர்ந்த அபிஷேக் சிங் வர்தன், இந்தப் பிரிவு பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளதுகூட அரசியலமைப்புக்கு எதிரானது என்கிறார்.

“மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் அரசுகள், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தோடு தொடர்புடையவை.  எனவே, ஆர்.எஸ்.எஸ். குறித்து மாணவர்களுக்கு சொல்லித்தர பாடத்திட்டத்தில் சேர்ப்பது அவர்களுடைய சித்தாந்தத்தை கட்டாயப்படுத்தி பரப்பும் ஒரு முயற்சியே.  மாணவர்களின் சுதந்திரத்தை மறுப்பதோடு, இளம் வாக்களர்கள் மீது செல்வாக்கு செலுத்தும். இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்” என்கிறார் அபிஷேக்.

ஆனால், பல்கலைக்கழக நிர்வாகமோ அரசியல் கட்சி என்ற வகையில் அல்லாமல் ‘கலாச்சார அமைப்பு’ என்ற வகையிலேயே ஆர்.எஸ்.எஸ். குறித்த பாடம் சேர்க்கப்படுவதாக சொல்கிறது.

ஏற்கெனவே, மென் இந்துத்துவவாதிகளால் உருவாக்கப்பட்ட வரலாற்றுப் பாடத்திட்டங்கள் காவிமயத்துடன்தான் உள்ளன. ஆனபோதிலும் ஆர்.எஸ்.எஸ்-ஐ நேரடியாக தொடர்புப்படுத்தி பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டதில்லை. இந்து ராஷ்டிர கனவுடன் இரண்டாவது முறையாக ஏகபோகத்துடன் பாஜக ஆட்சியில் அமர்ந்துவிட்ட பிறகு, ஆர்.எஸ்.எஸ்-ஐ தேசியவாதத்தின் முகமாக மாற்றிவிடும் முயற்சிகள் வேகமாக முடுக்கிவிடப்பட்டுள்ளதையே மேற்கண்ட திணிப்பு சுட்டிக்காட்டுகிறது.


கலைமதி
செய்தி ஆதாரம்: நியூஸ் க்ளிக்.  

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க