பில் பிரதேச கோரிக்கை: ஆர்.எஸ்.எஸ் கும்பலின் மீது விழுந்த பேரிடி

பிஏபி மற்றும் ஆதிவாசி பரிவார் தலைவர்கள் இந்து மதத்திற்கும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) செல்வாக்கிற்கும் எதிராக ஒரு தனித்துவமான பழங்குடி கலாச்சாரத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் பாலைவன பகுதிகளுக்கு முற்றிலும் மாறாக பசுமையான மலைகளுடன் காட்சியளிக்கிறது பன்ஸ்வாரா. ராஜஸ்தானின் 12 சதவிகித பழங்குடியின மக்கள் தொகையை தன்னகத்தே கொண்டுள்ளது. பன்ஸ்வாரா மாவட்டத்தில் தான் பழங்குடியினரின் மங்கர் தாம் நினைவுச்சின்னம் அமைந்துள்ளது.

பிரிட்டீஸ் ஆட்சியில் 1913 ஆம் ஆண்டு பில் பிரதேசம் (Bhil Pradesh) அமைக்கக் கோரி பில் பழங்குடியினர் போராடினர். பில் பிரதேசம் என்பது ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களில் பில் பழங்குடிகள் அதிகம் வாழும் 49 மாவட்டங்களைக் கொண்டு உருவாக்கப்படும் தனி மாநிலம். பில்களின் போராட்டம் பிரிட்டீஸாரால் கொடூரமாக நசுக்கப்பட்டது. 1500 பில் பழங்குடிகள் போராட்டத்தில் உயிர் நீத்தனர். அவர்களது நினைவாக எழுப்பப்பட்டது தான் மங்கர் தாம் நினைவுச்சின்னம். அவர்கள் முன்வைத்த பில் பழங்குடியினருக்கான தனிமாநில கோரிக்கை போலி சுதந்திரத்திற்குப் பிறகும் பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து பில் பழங்குடிகளால் எழுப்பப்பட்டு தான் வரப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி, மங்கர் தாமில் லட்சக்கணக்கான பழங்குடி மக்கள் கூடி பில் பிரதேசம் கோரி மிகப்பெரிய பேரணி ஒன்றை நடத்தினர். பாரத் ஆதிவாசி கட்சி (Bharat Adivasi Party – BAP) தான் இப்பேரணிக்குத் தலைமை தாங்கியது. குஜராத்தை மையமாகக் கொண்டு இயங்கிய பாரதிய பழங்குடியினர் கட்சியில் (Bharatiya Tribal Party – BTP) இருந்த ராஜஸ்தான் தலைவர்கள் பிரிந்து பாரத் ஆதிவாசி கட்சியைத் தொடங்கினர்.

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலையொட்டி 2023 செப்டம்பர் மாதம் தான் கட்சி தொடங்கப்பட்டாலும், பாரதிய பழங்குடி கட்சிக்கு ராஜஸ்தானில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் மத்தியப் பிரதேசத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் உள்ளனர். பன்ஸ்வாரா மக்களவை தொகுதியிலிருந்து ராஜ்குமார் ரோட் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது மக்களிடம் நிலவும் பில் பிரதேச கோரிக்கையின் மீதான உறுதியை உணர்த்துகிறது.


படிக்க: பஸ்தர்: பழங்குடியினர் மீது பயங்கரவாத தாக்குதல்களை ஏவும் ராணுவ முகாம்கள்


பழங்குடியினர்களின் தனித்துவத்தை வலியுறுத்தி “ஆதிவாசி பரிவார்” என்ற இயக்கமும் செயல்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ் பழங்குடிகளை இந்து வளையத்திற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளுக்கு எதிராக பிஏபியும் ஆதிவாசி பரிவாரும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். பில் பழங்குடிகள் அதிகளவுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

பிஏபி மற்றும் ஆதிவாசி பரிவார் தலைவர்கள் இந்து மதத்திற்கும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) செல்வாக்கிற்கும் எதிராக ஒரு தனித்துவமான பழங்குடி கலாச்சாரத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ், பில் பழங்குடியினரைப் பொய்கள் மற்றும் கவர்ச்சிவாதங்களின் மூலமாக இந்துக்கள் என்று நம்ப வைக்க முயல்கிறது. ஆனால், பில்களின் தெய்வங்கள், சடங்குகள் வேறானது. பிறப்பு, இறப்பு அல்லது திருமணம் போன்ற முக்கியமான வாழ்க்கை நிகழ்வுகளைக் குறிக்கும் பழங்குடிகளின் சடங்குகள் வேறுபட்டவை. பாரம்பரியமாக, பில்கள் இயற்கையை வணங்குபவர்கள். மேலும், ஒவ்வொரு கிராமத்திற்கும் அதன் சொந்த தெய்வம் உள்ளது. முன்னோர்களை வழிபடுவதும் பில் நம்பிக்கையின் ஒரு அங்கமாகும் என்று பிஏபி கட்சியின் மோகன்லால் தெரிவிக்கிறார்.

“பில் பிரதேசத்தை உருவாக்குவதே எங்களின் முக்கிய நோக்கம். இந்த கோரிக்கையை ஏற்றால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். பழங்குடியினர் நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர். இன்றும் கூட, மூன்று முதல் நான்காம் வகுப்பு குழந்தைகள் ஒன்றாக அமர்ந்திருக்கும் பல பள்ளிகள் இருக்கிறது. ஊட்டச்சத்துக் குறைபாடு அனைவருக்கும் பொதுவானதாக உள்ளது. சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலிருந்தே இந்த பகுதியில் பழங்குடியினர் வசித்து வந்தாலும் அவர்களுக்கு இன்னும் நிலத்தின் உரிமை கிடைக்கவில்லை.

பழங்குடியினர் தங்கள் சொந்த மத அமைப்பு மற்றும் சடங்குகளைக் கொண்டுள்ளனர். பழங்குடி தேவி மற்றும் தேவன் இந்து தேவி மற்றும் தேவனிலிருந்து வேறுபட்டவை. ஆதிவாசிகள் இந்துக்களோ, கிறிஸ்தவர்களோ, ஜெயின்களோ, பௌத்தரோ அல்ல என்றும் பழங்குடியினருக்குச் சொல்கிறோம். அவர்களுக்கென்று தனி அடையாளம், சொந்த மதம் உள்ளது” என்று தெரிவிக்கிறார் பன்ஸ்வாரா மக்களவை உறுப்பினர் ராஜ்குமார் ரோட்.


படிக்க: ஐந்து மாநிலத் தேர்தல்: ஓரங்கட்டப்பட்ட பழங்குடியின மக்கள் பிரச்சனை!


இவ்வமைப்பினர் பழங்குடியினரின் கலாச்சாரத்தின் தனித்துவம் குறித்துத் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். உதாரணமாக, பில் பெண்கள் தங்கள் முகத்தை மறைக்க வேண்டாம் என்று ஊக்குவிக்கப்படுகிறார்கள். ராஜபுத்திரர்களின் செல்வாக்கு காரணமாக அவர்கள் முக்காட்டை அணிந்தனர். “பில் பெண்களுக்குப் பாரம்பரியமாக சமூகத்தில் சம அந்தஸ்து இருந்தது. அவர்கள் முகத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை,” என்று துங்கர்பூரில் உள்ள பிஏபியின் மாவட்டத் தலைவர் அனுதோஷ் ரோட் கூறினார்.

மத்திய இந்தியா முழுவதிலுமுள்ள பழங்குடியினரை இந்துத்துவா வளையத்திற்குள் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. வனவாசி கல்யாண் ஆஷ்ரம், சேவா பாரதி, வனவாசி கல்யாண் பரிஷத், விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்ற ஆர்.எஸ்.எஸ் சங்கப் பரிவார அமைப்புகள் இதற்காகச் செயல்பட்டு வருகின்றன. பழங்குடியினரின் தனித்துவமான கலாச்சாரத்தை இந்து கலாச்சாரமாகப் புராணக் கட்டுக்கதைகளின் மூலம் மாற்றி அவர்களுக்கு ‘வனவாசி’ என்ற அடையாளத்திற்குள் கொண்டு வர ஆர்.எஸ்.எஸ் முயல்கிறது.

ஆனால், பில் பழங்குடியினரின் பில் பிரதேச கோரிக்கையும் பிஏபி, ஆதிவாசி பரிவார் அமைப்புகளின் பழங்குடியினரின் தனித்துவமான கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கும் முன்னெடுப்பும் ஆர்.எஸ்.எஸ்-க்கு விழுந்த பேரிடியாக அமைந்துள்ளன.


ஹைதர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க