ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2023 | பதிவு 18

டந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில், “ஆதிவாசி பக்தி” மற்றும் பழங்குடியினரின் அடையாளம்/பெருமை என பல்வேறு விஷயங்கள் பேசுபொருளாகியது. சான்றாக, நவம்பர் 7-ஆம் தேதி சத்தீஸ்கரில் உள்ள பிஷ்ராம்பூரில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “நான் பழங்குடியினருக்குச் சேவை செய்ய பிறந்தவன்” என்றும் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவைக் குறிப்பிட்டு, “பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஜனாதிபதியாக வருவார் என்று யாராவது நினைத்தார்களா?” எனவும் கேள்வியெழுப்பியிருந்தார்.

அதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் நடைபெற்ற பேரணியில் பேசுகையில், பழங்குடியிகளைக் குறிக்கும் வகையில் “வனவாசி” என்ற சொல்லைப் பயன்படுத்தும்  வழக்கத்தை ஒழிப்பதாக உறுதியளித்தார். இந்த சொல்லை பயன்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலையும் கண்டித்தார்.

ஆனால் பழங்குடி மக்களின் அடையாளங்கள், பெருமைகளை ஓட்டு பொறுக்குவதற்காகப் பேசிய காங்கிரஸ் அவர்களின் உண்மையான பிரச்சனைகளைப் பற்றி வாய் திறக்கவில்லை. பழங்குடி மக்கள் மீது மோடி அரசு தொடுத்துவரும் பாசிச தாக்குதல்கள் குறித்தும் வாய்திறக்கவில்லை. உலகளவில் விவாதிக்கப்பட்ட மணிப்பூர் இனப்படுகொலை கூட இத்தேர்தலில் விவாதிக்கப்படவில்லை.

ஆனால், மோடியின் கடந்த ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் கனிமவளச் சூறையாடலுக்காகப் பழங்குடியின மக்கள் மீது ஒரு போரையே பாசிச கும்பல் தொடுத்து நடத்தி வருகிறது. இந்த தேர்தலில் விவாதிக்கப்படாத பழங்குடி மக்கள் மீது மோடி அரசால் தொடுக்கப்பட்டுவரும் பாசிசத் தாக்குதல்கள், ஒடுக்குமுறைகள் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

000

இந்தியாவில் ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அதானி, வேதாந்தா, ஜிண்டால் போன்ற உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் இரும்பு, பாக்சைட் போன்ற கனிம வளங்களை சூறையாடி வருகிறார்கள். ஒன்றிய பா.ஜ.க மற்றும் மாநில அரசுகளின் துணையுடன் இச்சூறையாடலை மேலும் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த கனிமவளச் சூறையாடலுக்கு எதிராக பழங்குடியின மக்கள் போராட்டங்களைக் கட்டியமைத்து வருகிறார்கள். போராட்டங்களை ஒடுக்குவதற்காக பழங்குடியின மக்கள்மீது அரசு படைகள் ஏவப்பட்டு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. ஆனால், இத்தாக்குதல்கள் குறித்து கார்ப்பரேட் ஊடகங்கள் எதுவும் வெளிக்கொண்டுவருவதில்லை; திட்டமிட்டே மூடிமறைத்துவருகின்றன. இத்தகைய திரைசீலைக்கு பின்னால் ஒன்றிய பா.ஜ.க. அரசும் மாநில அரசுகளும் பழங்குடியின மக்கள்மீது மறைமுகமான போரை தொடுத்து வருகின்றன.

பழங்குடி மக்களின் வீரமிகு போராட்டங்கள்!

இந்தியாவில் ஏறக்குறைய 3,896 மில்லியன் டன்கள் பாக்சைட் தாதுக்களில், சரிபாதி அளவுக்கு ஒடிசா மாநிலத்தில்தான் உள்ளது. ஆகையால், இரும்பு உற்பத்திக்கு தேவையான ஹேமாடைட் (Hematite) தாது அதிக அளவில் ஒடிசா மாநிலத்தில் இருந்துதான் வெட்டி எடுக்கப்படுகிறது. ஒடிசாவில் மட்டும் ஹேமாடைட், பாக்சைட் போன்ற தாதுக்கள் அதிகளவில் கொட்டிக்கிடக்கின்றன என்றால், இந்தியா முழுவதும் கொட்டிக்கிடக்கும் பிற தாதுக்கள் மற்றும் லித்தியம் போன்ற அரியவகைத் தனிமங்களின் அளவை நாம் ஊகித்துக்கொள்ள வேண்டும்.

இந்தியாவின் இத்தகைய கனிம வளங்கள்தான் அதானி, வேதாந்தா போன்ற கார்ப்பரேட்டுகளின் கண்களை உறுத்துகின்றன. கனிம வளங்களைச் சூறையாடுவதற்கு பழங்குடி மக்கள்தான் இவர்களுக்கு தடைகல்லாக இருக்கின்றனர். ஆனால், தங்கள் உயிரைக் கொடுத்தாவது மலைகளையும் காடுகளையும் பாதுகாத்து நிற்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர், பழங்குடி மக்கள்.


படிக்க: ஒடிசா: வேதாந்தாவின் நலன் காக்க துப்பாக்கி முனையில் கருத்துக்கேட்பு கூட்டம்!


கடந்த மே மாதத்தில் மட்டும் சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் புதிதாக மேற்கொள்ளப்பட்டுவரும் சுரங்க நடவடிக்கைகளுக்கு எதிராக 70 நாட்களுக்கு மேலாக பழங்குடி மக்கள் போராட்டங்களை நடத்தியுள்ளதாக கூறுகிறார், இண்டி ஜர்னல் (Indie Journal) பத்திரிகையாளர் பிரஜக்தா ஜோஷி. “ஜல், ஜங்கல், ஜமீன்” (தண்ணீர், காடு, நிலம்) என்பதுதான் அப்போராட்டங்களின் மையமான கோரிக்கை ஆகும். இக்கோரிக்கையை முன்வைத்து மத்திய இந்திய மாநிலங்களில் முப்பத்திற்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கும் பத்திரிகையாளர், “பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் போலீசு நிலையங்கள் மற்றும் முகாம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் மக்கள் போராட்டத்திற்கான மற்றொரு காரணமாகும்” என்கிறார்.

சத்தீஸ்கரில் உள்ள பிஜப்பூர் மற்றும் சுக்மா மாவட்டங்களின் எல்லையில் உள்ள சில்கர் கிராமத்தில் நிறுவப்பட்ட சி.ஆர்.பி.எஃப் முகாமுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2021 மே 17 அன்று, போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்மீது சி.ஆர்.பி.எஃப் படையினர் துப்பாக்கி சூடு நடத்திய போதும், இரண்டு ஆண்டுகள் வரை போராட்டம் தொடர்ந்ததாக தெரிவிக்கிறார் பிரஜக்தா ஜோஷி.

“கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம்; இனியும் போராட்டத்தைத் தொடருவோம். சட்டப்படி எங்களிடம் அனுமதி எதுவும் பெறாமல் சுரங்கத் திட்டங்கள், சாலைகள், சி.ஆர்.பி.எஃப். முகாம்களைக் கொண்டு வருகிறார்கள். நாங்கள் தண்ணீர், காடு, நிலத்தைக் காக்கவே போராடுகிறோம்” என்று பஸ்தார் ஜன்சங்கர்ஷ் சமன்வே மஞ்ச் (பஸ்தார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போராட்டம் நடத்தும் பல்வேறு குழுக்கள் மற்றும் தளங்களின் குடை அமைப்பு) தலைவர் ரகு மாத்யாமி கூறுகிறார்.

மகாராஷ்டிராவில் சுர்ஜாகர் (Surjagarh) மலையில் ஆறு இரும்பு சுரங்கங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சிரோலி மாவட்டத்தின் எட்டாபள்ளி தாலுகாவில் அமைந்துள்ள டோட்கட்டா மற்றும் அதைச் சுற்றியுள்ள 70 கிராமங்களின் மக்கள் மார்ச் 11-ஆம் தேதி முதல் சுமார் 250 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். மக்கள் போராட்டம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, கடந்த மே மாதம், ஓம்சாய்ராம் ஸ்டீல்ஸ் அண்ட் அலாய்ஸ் பிரைவேட் லிமிடெட், சன்ஃப்ளாக் அயர்ன் அண்ட் ஸ்டீல் கம்பெனி லிமிடெட் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களுக்கு 4,684 ஹெக்டர் பரப்பளவில் சுரங்கங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே, அப்பகுதியில் உள்ள சுரங்கங்கள் அங்கு கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ளன. சுரங்கத்தின் கழிவுகள் மலைகளில் இருந்து வழிந்தோடி ஆற்று நீரையும், அருகில் உள்ள கிராமங்களின் வயல்களையும் மாசுபடுத்தி வருகின்றன. சுரங்கங்களில் இருந்து வெளியேறும் சிவப்பு நிற தூசி சாலைகள், வயல்கள், வீடுகள் என சுற்றியுள்ள பகுதிகள் அனைத்திலும் படிந்துவிடுகின்றது. இதனால் ஆறுகளும் விவசாய நிலங்களும் சிவப்பு நிறமாக மாறியுள்ளன.

சுரங்கங்கள் அமைக்கப்பட்டால் ஏற்படும் பாதிப்புகளையும் துணை இராணுவப் படைகளால் ஏவப்படும் கொடிய தாக்குதல்களையும் மக்கள் உணர்ந்துள்ளதால்தான், சுரங்கத் திட்டங்களுக்கு எதிராகவும் போலீசு முகாம்களை அமைப்பதற்கு எதிராகவும் விடாப்பிடியான போராட்டங்களைக் கட்டியமைத்து வருகிறார்கள், பழங்குடி மக்கள். மேற்கூறிய சில்கர், கட்சிரோலி மக்களின் போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் பழங்குடி மக்களின் போராட்டத்திற்கு சில சான்றுகள்தான்.

பழங்குடி மக்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம்!

பழங்குடி மக்களின் எதிர்ப்பை அடக்குவதற்காக, பழங்குடி கிராமங்கள் மீது ட்ரோன் மூலம் குண்டுகளை வீசி மக்களை அச்சுறுத்துவது, துணை இராணுவப் படையினரும் போலீசும் இணைந்துக்கொண்டு மக்கள் மீது திடீரென கண்முடித்தனமான தாக்குதல் நடத்துவது, நள்ளிரவில் வீடுகளில் புகுந்து அடாவடித்தனமாக கைது செய்வது, கடத்திச் செல்வது, சுட்டுக்கொல்வது, காணாமல் ஆக்குவது போன்று எப்பொழுது என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத பயங்கரவாத தாக்குதல்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் பழங்குடி மக்கள் மீது ஏவிவிடப்படுகின்றன.

ஒடிசாவில் ராய்கடா, காலாஹண்டி மற்றும் கோராபுட் மாவட்டங்களில் பாக்சைட் சுரங்கத்திற்கு போராடி வரும் பழங்குடி மற்றும் பட்டியலின மக்கள்மீது தொடர் தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. நியாம்கிரி சுரக்ஷ்ய சமிதியின் தலைவர்கள், ஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட ஒன்பது பேர் மீது ஊபா கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

துவாமுல் – ராம்பூர் மற்றும் காஷீபூர் தொகுதிகளில் உள்ள சிஜிமாலி, குருட்மாலி, மஞ்சிங்மாலி ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் நள்ளிரவில் வீடுகளில் புகுந்து 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்ட உதவிகளை செய்வதற்காக ராயகடாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வந்திருந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஸ்ரீ பிரபுல்ல சமந்த்ரா போலீசாரால் கடத்தப்பட்டு மிரட்டப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம், சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள படிகுடா, கவர்கட்டா, மீனாகட்டா, ஜப்பாகட்டா ஆகிய நான்கு கிராமங்களின் மீது ஆளில்லா கலன்கள் (ட்ரோன்) மூலம் குண்டுகள் வீசப்பட்டன. குண்டுகளை வீசிய பிறகு, மூன்று ஹெலிகாப்டர்களிலிருந்து கனரக இயந்திர மூலம் துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இது நான்காவது தாக்குதலாகும். கடந்த ஜனவரி மாதம் தொடுக்கப்பட்ட தாக்குதலில், தெலுங்கானா – சத்தீஸ்கர் – ஒடிசா சி.ஆர்.பி.எஃப் கிரேஹவுண்ட் மற்றும் கோப்ரா கமாண்டோக்கள் மாவட்ட ரிசர்வு படைகளுடன் கூட்டு சேர்ந்து ஈடுபட்டுள்ளனர்.


படிக்க: ஒடிசா: பழங்குடி மக்களின் நிலத்தை அபகரிக்கத் திட்டமிடும் நவீன் பட்நாயக் அரசு!


காடுகளை கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டலிலிருந்து பாதுகாத்து நிற்கும் பூர்வக்குடிகளின் போராட்டங்களை ஒடுக்க அரசு மேற்கொண்டுவரும் இத்தகைய நடவடிக்கைக்கு பெயர் ஆபரேஷன் சமாதான் பிரஹார் (Operation SAMADAN-Prahar). 2017-ஆம் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சமாதான் பிரஹாருக்கு முன்னோடி மத்திய அரசு, இந்திய துணை இராணுவப்படை, சல்வா ஜூடும் அமைப்புகளால் பழங்குடியினத்தவர்கள்மீது நடத்தப்பட்ட காட்டு வேட்டை (Operation Green Haunt) ஆகும். பழங்குடியின மக்கள் வசித்துவரும் காடு, மலை பகுதிகளில் இருந்து அவர்களை வெளியேற்றுவதற்கு அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் இவை.

ஆளில்லா கலன்கள் மூலம் குண்டுகளை வீசுவது இரு நாடுகளுக்கிடையேயான போரில்தான் நடக்கும். ரஷ்ய – உக்ரைன் போரில் ட்ரோன் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. எதிரி நாட்டிற்கெதிரான போரில் பயன்படுத்த வேண்டிய ட்ரோன்களை, பழங்குடியின மக்கள்மீது தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்துவதன் மூலம் பழங்குடி மக்கள்மீது அரசு போர் தொடுத்துள்ளது என்பதையே நமக்கு உணர்த்துகின்றன.

மகாராஷ்டிராவில் கட்சிரோலி மாவட்டத்தில் இரும்பு சுரங்கங்களுக்கு எதிராக போராடி வரும் மக்கள்மீது மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் உள்ளார்கள் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போராடும் மக்கள் தங்களை கொல்ல முயன்றதாகவும், வெடி பொருட்களை வைத்திருந்ததாகவும், மாவோயிஸ்டுகளிடம் இருந்து நிதி பெறுவதாகவும் அவர்கள்மீது பொய்யாக குற்றம் சாட்டியுள்ளது, மகாராஷ்டிரா மாநில போலீசு.

இவ்வாறு பழங்குடி மக்கள்மீது பயங்கரவாதத் தாக்குதல்களை தொடுப்பதன் மூலம் மக்களின் போராட்டங்களை ஒடுக்கிவிடலாம் என்று கனவு கண்டு வருகின்றன, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள். ஆனால் தாக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்க, கனிமவளச் சூறையாடலுக்கு எதிராக போராடும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்குமே தவிர ஒருபோதும் குறையப் போவதில்லை என்பது தற்போது அதிகரித்துவரும் போராட்டங்களே நமக்கு உணர்த்தும்.

கனிமவளச் சூறையாடலை தீவிரப்படுத்தும் சட்டத்திருத்தங்கள்!

கார்ப்பரேட்டுகள் கனிம வளங்களை வரைமுறையின்றி சூறையாடுவதற்கு சாதகமாக மோடி அரசும் மாநில அரசுகளும் பல சட்டங்களை நிறைவேற்றி வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனப் பாதுகாப்பு திருத்தச் சட்டம், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம் ஆகிய பாசிச சட்டங்களை, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஜனநாயக சக்திகளின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றி உள்ளது மோடி அரசு.

“பாக்சைட் புதைந்துகிடக்கும் நிலப்பகுதிகளையும் மலைகளையும் கையகப்படுத்துவதை விரைவுபடுத்துவதில் ஒடிசா அரசும் ஒன்றிய பா.ஜ.க. அரசும் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தீவிரமடைந்திருப்பது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல. வனப்பாதுகாப்புச் சட்டம் திருத்தப்பட்ட பிறகுதான் இப்படி நடக்கிறது” என்று கூறுகிறது, மக்கள் சிவில் உரிமை கழகம் (PUCL) அமைப்பின் அறிக்கை.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதும் லித்தியம் போன்ற அரிய வகைத் தனிமங்களைக் கொள்ளையடிக்கத்தான். அண்மையில் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் 59 லட்சம் டன் அளவிலான லித்தியம் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், மணிப்பூரில் மேய்தி இனவெறியர்களால் குக்கி பழங்குடி மக்கள் மீது திட்டமிட்டு இனக்கலவரம் நடத்தப்பட்டு வருவதும், குக்கி மக்களை மலைகளில் இருந்து வெளியேற்றி அம்மலைகளில் உள்ள கனிம வளங்களை கார்ப்பரேட்டுகள் சூறையாடுவதற்கு வழிவகை செய்து கொடுப்பதற்குதான்.

அண்மையில், நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா அரசும் பழங்குடி மக்களின் நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரிப்பதற்கு சாதகமாக சட்டத்திருத்தத்தை செய்துள்ளது. நவம்பர் 14 அன்று, ஒடிசா பட்டியல் பகுதிகள் அசையா சொத்து பரிமாற்றம் (பட்டியல் பழங்குடியினர்) ஒழுங்குமுறை, 1956–யின் (Orissa scheduled areas transfer of immovable property (by scheduled tribes) regulation, 1956 – OSATIP) ஒழுங்குமுறை எண்.2-இல் திருத்தம் செய்வதன் மூலம், பழங்குடியினர் தங்கள் நிலங்களை பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு விற்பதற்கு அனுமதியளிக்க அமைச்சரவையால் முடிவெடுக்கப்பட்டது.

இச்சட்டத்திருத்தத்திற்கு எழுந்த எதிர்ப்பின் காரணமாக, இரண்டு நாள்களிலேயே அமைச்சரவை முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா அரசு. வருங்காலத்தில் இச்சட்டத்திருத்தத்தை நிறைவேற்றவே ஒடிசா அரசு முயற்சி செய்யும் என்பது அனைவரும் அறிந்ததே.

மேற்கூறிய சட்டத்திருத்தங்கள் அதானி, ஜிண்டால், வேதாந்தா போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு கனிம வளங்களை வாரிக்கொடுப்பதற்குதான் நிறைவேற்றப்படுகின்றன. வருங்காலங்களில், இச்சட்டங்களைப் போன்று பல சட்டங்கள் நிறைவேற்றப்படலாம். அவையெல்லாம் கார்ப்பரேட்டுகளுக்கு கனிம வளங்களைச் சூறையாடலை எளிதானதாக்கவும் புதிய வழிமுறைகளை உருவாக்கிக் கொடுக்கவும் வழிவகுக்கும். இதன் விளைவாக பழங்குடி மக்கள்மீது தொடுக்கப்பட்டுவரும் போர் மேலும் தீவிரமாகும்.

இதேவேளையில், ஆதிகாலம் தொட்டு தாங்கள் பாதுகாத்துவந்த காடுகளின் பசுமையையும் மலைகளின் வளங்களையும், கொத்திக்குதற கழுகுப்போல் காத்துக்கிடக்கும் இலாபவெறிப்பிடித்த கார்ப்பரேட் முதலாளிகளை எதிர்த்து கிளர்ந்தெழுந்த போராட்டம், மேலும் அதிகரிக்கவே செய்யும். எனவே, போராட்டக் களத்தில் பழங்குடி மக்களோடு தோளேடுதோள் நிற்க வேண்டியது அவசியம். கனிம வளக் கொள்ளைக்கெதிரான பழங்குடி மக்களின் போராட்டங்களை விவசாய, தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களுடன் இணைக்க வேண்டியதும், பாசிச எதிர்ப்பு போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டியதும் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.


அமீர்

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க