ஒடிசா: பழங்குடி மக்களின் நிலத்தை அபகரிக்கத் திட்டமிடும் நவீன் பட்நாயக் அரசு!

தற்போது நவீன் பட்நாயக் அரசு முன்வைத்துள்ள திருத்தமானது கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசும் பழங்குடி மக்களின் நிலத்தைக் கையகப்படுத்துவதை எளிமையாக்கும்.

0

வம்பர் 14 அன்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பழங்குடிகளின் நிலங்களை பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு விற்பனை செய்வதற்கான சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஒரிசா பட்டியல் பகுதிகள் அசையா சொத்து பரிமாற்றம் (பட்டியல் பழங்குடியினர்) ஒழுங்குமுறை, 1956-யின் (Orissa Scheduled Areas Transfer of Immovable Property (By Scheduled Tribes) Regulation, 1956 – OSATIP) ஒழுங்குமுறை எண் 2-இல் திருத்தம் செய்வதன் மூலம் பழங்குடியினர் தங்கள் நிலங்களை பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு விற்பதற்கு அனுமதியளிக்க அமைச்சரவையால் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவு கடும் கண்டனங்களுக்கு உள்ளானது. இதன் காரணமாக நவீன் பட்நாயக் அரசு தனது முடிவை நவம்பர் 16 அன்று, அதாவது முடிவெடுத்த இரண்டே நாட்களில், நிறுத்திவைத்துள்ளது.

அமைச்சரவையின் முடிவை நவீன் பட்நாயக் அரசு நிறுத்திவைத்துத் தான் உள்ளதே தவிர திரும்பப்பெறவில்லை!

நவம்பர் 14-ம் தேதி எடுக்கப்பட்ட முடிவில், ”ஒரு பழங்குடி தனது நிலத்தை, சப்-கலெக்டரின் எழுத்துப்பூர்வ அனுமதியுடன், பொது நோக்கங்களுக்காக பரிசளிக்கலாம் (gift) அல்லது பரிமாற்றம் (exchange) செய்யலாம் அல்லது விவசாயம், வீடு கட்டுதல், குழந்தைகளின் உயர் படிப்பு, சுயதொழில், வணிகம் அல்லது சிறுதொழில்களை தொடங்குதல் ஆகியவற்றுக்காக பொதுத்துறை நிதி நிறுவனங்களில் அடைமானம் வைத்து கடன் பெறலாம் அல்லது மேற்கூறியவற்றிற்காக பழங்குடியினர் அல்லாதவருக்கு விற்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ”விற்பனைக்குப் பிறகு, நிலத்தை விற்ற பழங்குடியின நபர் நிலமற்றவராகவோ வீட்டு வசதி இல்லாதவராகவோ ஆகிவிடக்கூடாது. நிலத்தை விற்க சப் – கலெக்டர் அனுமதி வழங்காவிட்டால், ஆறு மாதங்களுக்குள் கலெக்டரிடம் மேல்முறையீடு செய்யலாம்; அவரது முடிவே இறுதியானது” என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது, பழங்குடி விவசாயி முற்றிலும் நிலமற்றவராக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உரியதாம். ஆட்டுக்குட்டிக்கு ஓநாய் காவலாம்!


படிக்க: கட்சிரோலி: சுரங்கத்தை எதிர்ப்பவர்களை மாவோயிஸ்டு என்று கூறி ஒடுக்கும் அரசு!


ஒரு பழங்குடி வைத்திருக்க வேண்டிய நிலத்தின் குறைந்தபட்ச வரம்பு என்னவென்பதை வேண்டுமென்றே தெளிவாகக் குறிப்பிடாதது அரசின் யோக்கியதையை அம்பலப்படுத்துகிறது. கார்ப்பரேட்டுகளுக்கு விற்கலாம் என்பதைத்தான் ”பழங்குடியினர் அல்லாதவருக்கு விற்கலாம்” என்று கூறுகிறார்கள்.

தற்போது நடைமுறையில் உள்ள ஒரிசா பட்டியல் பகுதிகள் அசையா சொத்து பரிமாற்றம் (பட்டியல் பழங்குடியினர் மூலம்) ஒழுங்குமுறை, 1956 ஒடிசா மாநிலத்தின் அட்டவணை பகுதிகளில் அமலில் உள்ளது. அப்பகுதிகளில் பழங்குடிகளின் நிலங்களை பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு விற்பது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, 2002-ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன்படி, பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் தனது அசையா சொத்துகளை பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த நபருக்கு மட்டுமே விற்க முடியும். பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் தனது நிலத்தை விவசாய நோக்கத்திற்காக மட்டுமே எந்தவொரு பொதுத்துறை நிதி நிறுவனத்திலும் அடைமானம் வைக்க முடியும்.

ஆனால், தற்போது நவீன் பட்நாயக் அரசு முன்வைத்துள்ள திருத்தமானது கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசும் பழங்குடி மக்களின் நிலத்தைக் கையகப்படுத்துவதை எளிமையாக்கும்.

பழங்குடி மக்களை ஏமாற்றி அவர்களின் நிலங்களைப் பறித்ததற்கு எண்ணிலடங்கா உதாரணங்கள் உள்ளன. மேலும், இந்த சட்டத்திருத்தம் பழங்குடி மக்களின் நிலங்களை ஏற்கெனவே சட்டவிரோதமாக கையகப்படுத்தியுள்ளவர்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கிவிடும்.

2005-06 முதல் 2015-16 வரையிலான பத்தாண்டுகளில் ஒடிசாவில் பழங்குடி மக்கள் வைத்திருக்கும் நிலம் 12 சதவிகிதம் குறைந்துள்ளதாக சிஏஜி வரைவு அறிக்கை ஒன்று கூறுகிறது. பழங்குடி மக்களின் நிலத்தை வாங்குவதோ ஆக்கிரமிப்பதோ தடை செய்யப்பட்டுள்ள போதே 12 சதவிகிதம் பழங்குடி நிலம் மாயமாய் மறைந்துள்ளது. இதற்கு சட்ட ரீதியாக வழிவகை செய்துவிட்டால், பழங்குடி மக்களின் நிலை என்னவாகும்.


படிக்க: ஒடிசா மஜிங்மாலி மக்களின் இயற்கை வளங்களை சூறையாட துடிக்கும் கார்ப்பரேட்டுகளும் – அரசும்


2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒடிசா மாநிலத்தின் மக்கள் தொகையில் 95.91 இலட்சம் பழங்குடிகள் உள்ளனர். மொத்த மாநில மக்கள் தொகையில் இது 22.85 சதவிகிதம் ஆகும். அங்கு, 13 குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் (Particularly Vulnerable Tribal Groups) உட்பட 62 தனித்துவமான பழங்குடியின மக்கள் குழுக்கள் வாழ்கின்றனர். ஒடிசாவில் மொத்தமுள்ள 314 வட்டாரங்களில் 121 வட்டாரங்கள் பட்டியல் பகுதிகளாக (Scheduled Area) அறிவிக்கப்பட்டுள்ளன; மாநிலத்தின் புவியியல் பரப்பில் சுமார் 44.70 சதவிகிதம் பட்டியல் பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு ஒடிசாவின் 44.70 சதவிகித நிலம் பட்டியல் பகுதியாக இருப்பது கார்ப்பரேட்கள் இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்கு இடையூறாய் இருக்கிறது. அந்த இடையூற்றை நீக்கத்தான் நவீன் பட்நாயக் தற்போது முயற்சி செய்கிறார்.

சிஜிமாலியில் (Sijimali) வேதாந்தா நிறுவனத்தின் சுரங்கம், குற்றாலியில் (Kutrumali) அதானி நிறுவனத்தின் சுரங்கம், பாப்ளிமாலியில் (Baphlimali) ஆதித்யா பிர்லா குழுமத்தின் சுரங்கம், கோடிங்கமாலியில் (Kodingamali) ஒடிசா சுரங்கக் கழகத்தின் (Odisha Mining Corporation) சுரங்கம் என பல சுரங்கங்கள் மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் இயங்கி வருகின்றன.

ஒடிசாவில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் புதிய சுரங்கங்களை அமைப்பதற்கும், தற்போது இயங்கிவரும் சுரங்களை விரிவுபடுத்துவதற்கும் ஏதுவான சூழலை உருவாக்கத்தான் நவீன் பட்நாயக் அரசு இந்த சட்டத்திருத்தத்தை முன்வைத்தது. ஆனால், பழங்குடி மக்கள் மற்றும் பழங்குடி அமைப்புகளின் கடும் எதிர்ப்பினால் தற்போது தற்காலிகமாக ஓரடி மட்டும் பின்வாங்கியுள்ளது.

ஒடிசாவின் இயற்கையையும் கனிமவளங்களையும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் பழங்குடி மக்களை விரட்டியடித்துவிட்டு, கனிம வளங்களை கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க வழிவகை செய்வதற்குத் தான் நவீன் பட்நாயக் அரசு மேற்கொள்ள முயலும் இந்த சட்டத்திருத்தம்.

எனவே, கொடிய கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் நவீன் பட்நாயக் அரசிடமிருந்து இயற்கை மற்றும் கனிமவளங்களைப் பாதுகாத்து நிற்கும் போர்க்குணமிக்க ஒடிசாவின் பழங்குடி மக்களுக்கு ஆதரவாக ஜனநாயக சக்திகள் களமிறங்க வேண்டியது அவசியம்.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க