ஒடிசா மஜிங்மாலி மக்களின் இயற்கை வளங்களை சூறையாட துடிக்கும் கார்ப்பரேட்டுகளும் – அரசும்

அக்டோபரில் சிஜிமாலியில், ஏராளமான போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் முன்னிலையில் அரசாங்கத்தால் நடத்தப்பட்ட கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு எதிராக உள்ளூர்வாசிகள் இடைவிடாத போராட்டங்களை நடத்தினர்.

டந்த நவம்பர் 4-ஆம் தேதி காலை 10 மணியளவில், ஒடிசா மைனிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (OMC) ஊழியர்கள், இரண்டு போலீசு படை பிரிவுகள் ஆகிய கார்ப்பரேட் குண்டர் படைகள் இரண்டு ஜே.சி.பி வாகனங்களுடன், மஜிங்மாலி பாக்ஸைட் மலை உச்சியில் உள்ள மக்களை விரட்டி அடித்து இயற்கை வளங்களை ஒட்டச்சுரண்டி சூறையாடுவதற்காக வந்தன.

கலகான் மற்றும் அதன் பக்கத்து கிராமங்களான காடெல்ஜோலா, ருகபோதர் மற்றும் மஜிங்மாலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள்  ஒன்றுகூடி, ஜே.சி.பி-களுக்கு முன்பாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு கார்ப்பரேட் கைக்கூலி குண்டர் படைகளை விரட்டியடித்தனர். மண் பரிசோதனை மற்றும் பாக்சைட் ஆய்வு செய்யும் நிறுவனத்தையும், போலீசுத்துறை அடியாள்படையையும் மஜிங்மாலிக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் கிராமவாசிகள் உறுதியாக இருந்தனர்.

படிக்க: நிலப்புதைவு நகரில் ஆன்மீக சுற்றுலா! – 10 நாட்களாகியும் மீட்கப்படாதத் தொழிலாளர்கள்! | தோழர் அமிர்தா

கார்ப்பரேட்கள் ஒன்றிய பாசிச பாஜக அரசுடன் இணைந்து இந்தியா முழுவதும் இயற்கை வளங்களையும், மனித வளங்களையும் ஒட்டச் சுரண்டி கொழுக்கின்றன. அரசின் ஒடுக்குமுறை கருவிகளான போலீசுத்துறையும் இராணுவமும் ஒருங்கிணைந்து மக்கள் மீது திட்டமிட்டு அனைத்து விதமான வன்முறைகளையும் ஏவுகின்றன.

ஒடிசாவில் உள்ள மாலிபர்பாத்தில் ஹிண்டால்கோ (Hindalco), ஆதித்யா பிர்லா குழுமத்திற்கு ஆதரவாக பாக்சைட் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து நின்ற உள்ளூர் ஆதிவாசி பழங்குடியின மக்களை மிருகத்தனமாக போலீசு விரட்டி அடித்தது.

மாலி பர்பாத் சுரங்கத் திட்டத்திற்கு, ஒடிசா நீதிமன்றத்தின் ஒப்புதல் பெறுவதற்காக அரசு‌ ஆயுதம் ஏந்திய போலீசு மற்றும் துணை இராணுவத்தின் துப்பாக்கி முனையில் கிராம சபைகளை கூட்டியது. பொய் வழக்குகள் சுரங்க எதிர்ப்பு ஆர்வலர்கள் (மாலி பர்பாத் சுரக்ஷா சமிதி) மீதும் மக்களின் மீதும் போட்டது. போலி என்கவுண்டர்கள் கூட மேற்கொள்ளப்பட்டன.

இதுபோன்று, தூத்துக்குடி ஸ்டெர்லைடின் தாய் நிறுவனமான “வேதாந்தா லிமிடெட்” மூலம் நியம்கிரி மலையின் இயற்கை வளத்தை கொள்ளையடிப்பதற்கு எதிராக அப்பகுதியில் உள்ள ஆதிவாசி பழங்குடியின மக்களின் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். போராடியதின் விளைவாக சுரங்கத் திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இருந்தாலும் கூட, நியம்கிரியில் சுரங்கத் திட்டத்தை மீண்டும் மேற்கொள்ளும் முயற்சியில் வேதாந்தா குழுமம் ஈடுபட்டு வருகிறது.

ஜார்கண்டில், கார்ப்பரேட் கொள்ளையை எதிர்க்கும் “விஸ்தாபன் விரோதி ஜான் விகாஸ் அந்தோலனின்” என்ற சமூக செயல்பாட்டாளர்களுக்கு எதிராகவும் இது போன்ற பல்வேறு அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

மஜிங்மாலியில் காணப்படுவது போல், ராணுவக் குவிப்பு மற்றும் இயற்கை வளங்களின் கொள்ளைக்கு எதிரான எதிர்ப்பு ஜார்க்கண்டிலும் தொடர்கிறது.

அக்டோபரில் சிஜிமாலியில், ஏராளமான போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் முன்னிலையில் அரசாங்கத்தால் நடத்தப்பட்ட கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு எதிராக உள்ளூர்வாசிகள் இடைவிடாத போராட்டங்களை நடத்தினர். இதை தடுக்க வேதாந்தா நிறுவனம் தனது சிஜிமாலி சுரங்கத்தை குத்தகைக்கு எடுப்பதற்கு எதிராகப் போராடிய பல்வேறு ஆர்வலர்கள், உழைக்கும் மக்கள் மற்றும் தலைவர்களை போலீசு குண்டர் படையை வைத்து கைது செய்தது. ஆப்பரேஷன் சமதன் – பிரஹாரின் ஒரு பகுதியாக, பெரிய அளவிலான துணை ராணுவக் குண்டர் படையையும், போலீசுத் துறையின் மிருகத்தனமான படையையும் பயன்படுத்தி, பழங்குடிகளை அவர்களின் கிராமங்களை விட்டு விரட்டியடிப்பதை நோக்கமாகக் கொண்டு, பாசிச அரசும் கார்ப்பரேட் கொள்ளைக் கூட்டங்களும் கைகோர்த்துக்கொண்டு பழங்குடி ஒடுக்கு முறைகளை கட்டவிழத்துள்ளனர்.

படிக்க : மழை நீரில் மூழ்கிய பயிர்கள் – குமுரும் திருவாரூர் விவசாயிகள்

மஜிங்மாலியில் சுரங்க நடவடிக்கைகளைத் தொடங்கக் கூடாது என்று ஒடிசா மைனிங் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் போலீசுத்துறையை கார்ப்பரேட்மயமாக்கல் மற்றும் ராணுவ மையமாக்கலுக்கு எதிரான கூட்டமைப்பு (Forum Against Corporatization and Militarization – FACAM) கண்டிக்கிறது.

மஜிங்மாலியில் இருந்து அனைத்து போலீசு அடியாள் படைகளையும், துணை ராணுவக் குண்டர் படைகளையும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும் இயற்கை வளங்களை கொள்ளை அடிக்கும் கார்ப்பரேட் சேவையில் ராணுவத்தைக் குவிப்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் FACAM கோருகிறது.

கார்ப்பரேட் சுரண்டலுக்காக உழைக்கும் மக்கள் சொந்த இடத்தை விட்டு விரட்டியடிக்கப் படுகின்றனர். பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். கை, கால்கள் சிதைக்கப்படுகின்றன. பல நேரங்களில் போராட்டக்காரர்கள் கொலையும் செய்யப்படுகிறார்கள்.

இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, நாம் நாடு முழுவதும் ஒரே குடையின் கீழ் நின்று, உழைக்கும் மக்களாக ஒன்றிணைந்து போராட‌ வேண்டும்.

தென்றல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க