கட்சிரோலி: சுரங்கத்தை எதிர்ப்பவர்களை மாவோயிஸ்டு என்று கூறி ஒடுக்கும் அரசு!

சுர்ஜாகர் மலையில் (Surjagarh hills) ஆறு இரும்பு சுரங்கங்கள் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து கட்சிரோலி மாவட்டத்தின் எட்டாபள்ளி தாலுகாவில் அமைந்துள்ள டோட்கட்டா மற்றும் அதைச் சுற்றியுள்ள சுமார் 70 கிராமங்களின் மக்கள் மார்ச் 11-ஆம் தேதி முதல் போராடி வருகின்றனர்.

0

க்நாத் ஷிண்டே – பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் சுரங்கப் பணிகளுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை போலீசு நவம்பர் 20 அன்று கைது செய்தது. போலீசு தாக்கியதால் கைதுசெய்யப்பட்டவர்களில் பலர் கடுமையான காயங்களுக்கு ஆளாகியுள்ளதாக தம்கோந்த்வாஹி பச்சாவோ சங்கர்ஷ் சமிதி (Damkondwahi Bachao Sangharsh Samiti) என்ற பழங்குடி மக்களின் அமைப்பு தெரிவித்துள்ளது.

போராட்டத்தை ஒடுக்குவதற்காக போராட்டத்தை ஒருங்கிணைப்பவர்களை மாவோயிஸ்டுகளுடன் தொடர்புள்ளவர்கள் என வழக்குப் பதிவு செய்து போலீசு மிரட்டிவருகிறது.

கைது செய்யப்பட்ட 21 பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 353-இன் கீழ் (அரசு அதிகாரியை கடமையாற்றவிடாமல் தாக்குவது) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தம்கொண்ட்வாஹி பச்சாவோ சங்கர்ஷ் சமிதி நவம்பர் 22 தெரிவித்துள்ளது. அவர்கள் அருகிலுள்ள சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சுர்ஜாகர் மலையில் (Surjagarh hills) ஆறு இரும்பு சுரங்கங்கள் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து கட்சிரோலி மாவட்டத்தின் எட்டாபள்ளி தாலுகாவில் அமைந்துள்ள டோட்கட்டா மற்றும் அதைச் சுற்றியுள்ள சுமார் 70 கிராமங்களின் மக்கள் மார்ச் 11-ஆம் தேதி முதல் போராடி வருகின்றனர்.


படிக்க: ஒடிசா : ஜிண்டால் எஃகு ஆலைக்கு எதிராக போராடும் பழங்குடி மக்கள் – அடக்குமுறைகளை ஏவும் பாசிச அரசு !


கடந்த மே மாதம் நடைபெற்ற ஏலத்தில், ஓம்சைராம் ஸ்டீல்ஸ் அண்ட் அலாய்ஸ் பிரைவேட் லிமிடெட் (Omsairam Steels and Alloys Private Limited), ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்ஸ் லிமிடெட் (JSW Steels Limited), சன்ஃப்ளாக் அயர்ன் அண்ட் ஸ்டீல் கம்பெனி லிமிடெட் (Sunflag Iron and Steel Company Limited), யுனிவர்சல் இண்டஸ்ட்ரியல் எக்யூப்மென்ட் அண்ட் டெக்னிக்கல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (Universal Industrial Equipment and Technical Services Private Limited) மற்றும் நேச்சுரல் ரிசோர்சஸ் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் (Natural Resources Energy Private Limited) ஆகிய ஐந்து நிறுவனங்கள் 4,684 ஹெக்டேர் பரப்பளவில் சுரங்கங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன.

இந்த நிலங்களைப் புனிதமானவை என்று கருதுவதாலும், சுரங்கங்கள் சுற்றுச்சூழலையும் தங்களின் வாழ்வாதாரமான விவசாயத்தையும் அழித்துவிடும் என்பதாலும் பழங்குடி மக்கள் நீண்ட காலமாக மலைகளில் சுரங்கங்கள் அமைப்பதை எதிர்த்து வருகின்றனர்.

ஏற்கெனவே அப்பகுதியில் உள்ள சுரங்கங்கள் அங்கு கடுமையான மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ளன. ஆறுகளும் விவசாய நிலங்களும் சிவப்பு நிறமாக மாறியுள்ளன.

2007-ஆம் ஆண்டில், பழங்குடி மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, மும்பையை தளமாகக் கொண்ட லாயிட்ஸ் மெட்டல்ஸ் (Lloyds Metals) நிறுவனத்திற்கு சுர்ஜாகர் மலைகளில் 348.09 ஹெக்டேர் நிலத்தில் சுரங்கம் அமைப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. மக்கள் போராட்டங்கள் மூலம் இந்நிறுவனம் சில ஆண்டுக்காலம் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால், 2011-ஆம் ஆண்டில் சுரங்க அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.

அன்று தொடங்கி இன்று வரை, சுரங்கங்களில் இருந்து வெளியேறும் சிவப்பு நிற தூசி சாலைகள், வயல்கள், வீடுகள் என சுற்றியுள்ள பகுதிகள் அனைத்திலும் நிறைந்துவிடுகிறது. சுரங்கத்தின் கழிவுகள் மலைகளில் இருந்து வழிந்தோடி ஆற்று நீரையும், அருகில் உள்ள கிராமங்களின் வயல்களையும் மாசுபடுத்தி வருகின்றன.

ஆனால், இவற்றையெல்லாம் மறைக்கும் விதமாக, போராடும் மக்கள் தங்களைக் கொல்ல முயன்றதாகவும், வெடிபொருட்களை வைத்திருந்ததாகவும், மாவோயிஸ்டுகளிடம் இருந்து நிதி பெறுவதாகவும் போலீசு பொய்யாகக் குற்றம் சாட்டுகிறது.


படிக்க: ஒடிசா: வேதாந்தாவின் நலன் காக்க துப்பாக்கி முனையில் கருத்துக்கேட்பு கூட்டம்!


மகாராஷ்டிரா – சத்தீஸ்கர் எல்லையில் அமைந்துள்ள வாங்கெதூரியில் திறக்கப்படவிருந்த போலீசு நிலையத்திற்குச் செல்லவிருந்த கட்டா (Gatta) கிராமத்தைச் சேர்ந்த போலீசு தரப்பினரையும், நக்சல் எதிர்ப்புப் படையான சி60-யையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதாக நவம்பர் 20 அன்று வெளியிடப்பட்ட தனது அறிக்கையில் போலீசு பொய்யாகக் கூறியுள்ளது.

சுரங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்குமாறு மாவோயிஸ்டுகள் தங்களை கட்டாயப்படுத்தியதாக சிலர் கட்சிரோலி போலீசிடம் புகார் அளித்ததாகவும் அதில் பொய்யாகக் கூறியுள்ளது.

போலீசின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தம்கோந்த்வாஹி பச்சாவோ சங்கர்ஷ் சமிதி, போராட்டக்காரர்களை மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்துவதற்காகத் தான் போலீசு இவ்வாறு கதைகளை இட்டுக்கட்டுவதாக கூறியுள்ளது.

“கலெக்டரும் மாநிலத்தின் பிற பிரதிநிதிகளும் கார்ப்பரேட் நலன் விரும்பிகள். இவர்கள் வளங்கள் நிறைந்த பிராந்தியங்களையும் அதன் மக்களையும் தங்கள் இலாபத்திற்காக சுரண்ட விரும்பும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்கு சேவை செய்பவர்கள்” என்ற உண்மையை மறைப்பதற்காக இவ்வாறு கதைகளைப் புனைகின்றனர் என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

நவம்பர் 20 அன்று, டோட்கட்டாவில் உள்ள குடிசைகளை போலீசு நாசம் செய்ததாகவும், போராட்டக்காரர்களின் ஃபோன்களை பறிமுதல் செய்ததாகவும் தம்கோண்ட்வாஹி பச்சாவோ சங்கர்ஷ் சமிதி சமூக ஊடகங்களில் எழுதியது. கைது செய்யப்படுவதற்கு முன்பு, கண்காணிப்புக்காக ட்ரோன் கேமராக்களைப் போலீசு பயன்படுத்தியதாக அந்த அமைப்பு மேலும் கூறியது.

ஆனால் போலீசோ, 250 நாட்களுக்கும் மேலாக போராட்டம் தொடர்வதால் விரக்தியடைந்த மக்கள் தாங்களே குடிசைகளை அழித்துக் கொண்டுவிட்டதாக இழிவாகச் சித்தரிக்கிறது.

இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகள் சுரண்ட வழிவகுப்பது தான் ’வளர்ச்சி’, ‘தேசபக்தி’. இயற்கை வளங்களைப் பாதுகாக்க நினைத்தாலோ சுரண்டலை கேள்விக்குட்படுத்தினாலோ அவர்கள் ‘தேசவிரோதிகள்’ என்றும் மாவோயிஸ்டுகள் என்றும் முத்திரை குத்தப்பட்டு ஒழித்துக்கட்டப்படுவர் என்பதைத் தான் கட்சிரோலி சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க