ஒடிசா: வேதாந்தாவின் நலன் காக்க துப்பாக்கி முனையில் கருத்துக்கேட்பு கூட்டம்!

கூட்டத்தில் பேசிய ஒரு பெண்மணி, ”வேதாந்தாவின் ஊழியர்களும் அரசு அதிகாரிகளும் எங்கள் கிராமத்திற்கு வந்து சுரங்க திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு மிரட்டினார்கள்” என்று குற்றம்சாட்டினார்.

டிசா மாநிலத்தின் சிஜிமாலி மாவட்டத்தில் கொலைகார வேதாந்தாவின் பாக்சைட் சுரங்க திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக அக்டோபர் 18-ஆம் தேதி மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டம் கலாகந்தி மாவட்டம் கெர்பை உயர்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஏறக்குறைய 1500 மக்கள் கலந்துகொண்டனர்.

பெயரளவிலான இந்த கருத்துக்கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் துப்பாக்கி முனையில் நடத்தப்பட்டது. போலீசும் துணை ராணுவமும் அனைத்து இடங்களிலும் நிரம்பியிருந்தது. கூட்டம் நடக்கும் இடத்தில் மட்டும் 600 – 700 துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

கூட்டம் நடக்கும் இடத்திற்கு வருவதற்கே ஐந்து சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் 20 போலீசார் இருந்தனர்.  கூட்டம் நடக்கும் இடத்தைச் சுற்றிலும் மின்கம்பிகளை வைத்து அடைத்திருந்தது போலீசு.

ஆதார் அடையாள அட்டை இல்லாதவர்களை போலீசும் துணை ராணுவமும் மிரட்டி அனுப்பியது. ஆனால், பாக்சைட் சுரங்கத் திட்டத்திற்கு ஆதரவாக கூட்டத்தில் கருத்து தெரிவிக்க நுழைக்கப்பட்டிருந்தவர்கள் மட்டும் போலீசின் கண்களுக்குப் புலப்படவில்லை.

வேதாந்தாவால் நுழைக்கப்பட்டவர்களையும் கடந்து மக்கள் தங்கள் எதிர்ப்புகளைk கூட்டத்தில் பதிவு செய்தனர். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) அறிக்கையோ சுரங்கத் திட்டத்தால் உள்ளூர் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றொரு பச்சைப்பொய்யைக் கூறியுள்ளது. மலைச் சரிவுகளில் விளையும் பல்வேறு தினை வகைகள் சுரங்கத்தால் பாதிக்கப்படாது என்ற முடிவுக்கு எப்படி வர முடிந்தது என்று அரசாங்கத்திடம் கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் கேள்வியெழுப்பினர்.


படிக்க: கொலைகார வேதாந்தாவும் பாசிச பா.ஜ.க-வும் கூட்டு – அம்பலப்படுத்திய ஓ.சி.சி.ஆர்.பி அறிக்கை


மேலும் கூட்டத்தில் பேசிய ஒரு பெண்மணி, ”வேதாந்தாவின் ஊழியர்களும் அரசு அதிகாரிகளும் எங்கள் கிராமத்திற்கு வந்து சுரங்க திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு மிரட்டினார்கள்” என்று குற்றம்சாட்டினார். இக்கூட்டத்தில் பலருக்கும் கருத்து தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஊடகங்களுக்கும் அதே நிலைதான்! வேதாந்தாவின் லாபவெறிக்காக துணை ராணுவத்தை நிறுத்தி கருத்துக்கேட்பு என்ற நாடகம் அரங்கேறியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய அலுமினிய உற்பத்தி நிறுவனம் வேதாந்தா. கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் காலகந்தியில் வேதாந்தாவின் ஆண்டிற்கு 6 மில்லியன் டன் (Million Tonnes Per Annum – MTPA) உற்பத்தி திறன்கொண்ட அலுமினிய சுத்திகரிப்பு ஆலை இயங்கி வருகிறது.  அலுமினியத்தின் மூலப்பொருளான பாக்சைட்டை வேதாந்தா பெருமளவு இறக்குமதி செய்து தான் சுத்திகரிக்கிறது.

தற்போது 311 மில்லியன் டன் பாக்சைட் கனிமங்கள் சிஜிமாலியில் இருக்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கிருந்து ஆண்டுக்கு 9 டன் பாக்கசைட்டை எடுக்கத் திட்டமிட்டு இருக்கிறது வேதாந்தா. இத்திட்டத்தில் ₹792 கோடி முதலீடு செய்ய இருக்கிறது.

சிஜிமாலி பழங்குடி மக்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் கருத்துக்கேட்பு கூட்டம் என்ற நாடகம் ’சட்ட’ப்படி அவசியமாகிறது. இதனால் தான் துப்பாக்கி முனையில் மக்களை அச்சுறுத்தி இப்படியொரு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

வேதாந்தாவின் கொடிய கரங்கள் எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் மரண ஓலத்தைத் தவிர வேறு ஏதும் மிஞ்சுவதில்லை. அதற்குச் சிறந்த சான்று ஸ்டர்லைட் ஆலைதான்!


ஹைதர்

செய்தி ஆதாரம்: countercurrents

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க