மதுரை: வேதாந்தாவிற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழலையும் மக்களின் உயிரையும் காவு வாங்கிக்கொண்டிருந்த கொலைகார வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையை, தங்களது இன்னுயிரை ஈந்து மூடிய தமிழ்நாடு மக்களின் போராட்டம், தற்போது அதே வேதாந்தாவின் டங்கஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக மதுரையிலிருந்து தொடங்கியிருக்கிறது.

நேற்றைய தினம் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் மதுரையில் நடத்திய பிரம்மாண்ட பேரணி பாசிச மோடி அரசுக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் கிலியூட்டுவதாக அமைந்துள்ளது. டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப்பெற வலியுறுத்தியும் முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன விவசாயப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் நாயக்கர்பட்டி, அரிட்டாப்பட்டி உள்பட 48 கிராம மக்கள் நடத்திய இப்பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு மதுரை மாவட்டத்தை அதிர வைத்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் நாயக்கர்பட்டியில் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் (Tungsten) சுரங்கம் அமைப்பதற்கு வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் (Hindustan Zinc) நிறுவனத்திற்கு பாசிச மோடி அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டம், ஹைட்ரோ கார்பன், எட்டு வழிச் சாலை, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்கள் உள்ளிட்ட போர்க்குணமிக்க போராட்டங்களின் மூலம் தமிழ்நாடு மக்களின் கார்ப்பரேட் எதிர்ப்புணர்வை உணர்ந்துள்ள பாசிசக் கும்பல், மக்கள் அதிகளவில் வசிக்காத நாயக்கர்பட்டி கிராமத்தில் மட்டும் சுரங்கம் அமைக்கப்படும் என்று அறிவித்ததன் மூலம் மக்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்திவிடலாம் என எண்ணியது.

ஆனால், சுரங்கத் திட்டத்தால் நாயக்கர்பட்டி கிராமம் மட்டுமின்றி, அதனைச் சுற்றியுள்ள கிராமங்களின் இயற்கை வளங்களும் மக்களின் வாழ்வாதாரமாக உள்ள மலைகளும், பல்லுயிர் சுற்றுச்சூழல் தளமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாப்பட்டி கிராமத்தின் மலைகளிலுள்ள அரியவகை உயிரினங்களும் கல்வெட்டுகள் மற்றும் பழங்கால நினைவுச் சின்னங்களும் இயற்கை நீரூற்றுகளும் அழிந்து போகும் என்பதை மக்கள் அறிந்துள்ளனர். மேலும், கிரானைட் கொள்ளையால் மதுரையின் பல பகுதிகள் பேரழிவிற்கு உள்ளானதை நேரடியாகக் கண்டுள்ள மதுரை மாவட்ட மக்கள், மதுரையில் மீண்டும் ஒரு பேரழிவு நிகழ்வதை அனுமதிக்கத் தயாராயில்லை.

எனவே, சுரங்கத் திட்டத்திற்கான அறிவிப்பு வெளியான 2024 நவம்பர் மாத தொடக்கம் முதலே டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி சாலை மறியல், ஆர்ப்பாட்டம், கும்மியடி போராட்டம் என வெவ்வேறு வகையில் டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு போராட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். தங்களின் போராட்டத்தின் ஐந்தாண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவரும் டங்கஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக மூச்சுகூட விடாத தி.மு.க. அரசையும் பணியவைத்து, டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி டிசம்பர் 8 அன்று சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற வைத்துள்ளனர்.


படிக்க: டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை எதிர்த்து 2000 பேர் ஆர்ப்பாட்டம்!


டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு நாள்தோறும் ஆதரவு பெருகிவருவதைக் கண்டு அதிர்ந்துபோன தமிழ்நாடு பா.ஜ.க. சங்கி கூட்டம், தாங்கள் தனிமைப்பட்டுவிடுவோம் என்ற அச்சத்தில் சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதற்காக ஒன்றிய அரசிடமும் அக்கோரிக்கை வைப்பதாகவும் நாடகமாடியது. களச்சூழலை புரிந்துகொண்ட பாசிச மோடி அரசும் சுரங்கம் அமைப்பதற்கான இடத்தை மறுபரிசீலனை செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அதன்மூலம் மக்கள் போராட்டங்களை ஒடுக்கிவிடலாம் என கணக்குப் போட்டது.

ஆனால், கொலைகார வேதாந்தாவை ஒருகாலும் தமிழ்நாட்டிற்குள் அனுமதிப்பதில்லை என்பதிலும் தாய் போல் பார்க்கும் நிலங்களை அழிக்க விடுவதில்லை என்பதிலும் உறுதியாக உள்ள தமிழ்நாடு மக்கள் இந்த தகிடுத்தத்தங்களுக்கு எல்லாம் மயங்காமல் தங்களது போராட்டங்களை முன்னைக் காட்டிலும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையிலேயே நேற்று மதுரை மாவட்டமே ஸ்தம்பித்துப் போகும் வகையிலான பிரம்மாண்ட பேரணி மக்களால் நடத்தப்பட்டது.

சிட்டமபட்டி சுங்கச்சாவடியில் ஆயிரக்கணக்கில் திரண்டு சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக மதுரை தல்லாகுளத்தில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையத்தை நோக்கி 18 கி.மீ. தொலைவிற்கு மாபெரும் பேரணியை நடத்தினர். இளைஞர்கள், சிறுவர்கள், விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், வணிகர்கள் பலதரப்பட்ட மக்களும் இப்பேரணியில் பங்கேற்றனர். முதியவர்களும் பெண்களும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் பேரணியாகச் சென்றனர். பேரணி கடந்த சென்ற வழிநெடுகிலும் உள்ள கிராம மக்கள் போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, தங்கள் கிராமத்தின் சார்பாக மோர், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட், உணவு பொட்டலங்கள் போன்றவற்றை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஆனால், மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கிறோம் என்கிற பெயரில் 2,000-த்திற்கும் மேற்பட்ட போலீசை குவித்து மக்கள் போராட்டத்தைத் தடுக்கப் பார்த்தது தி.மு.க. அரசு. பல இடங்களில் தீயணைப்பு வாகனங்களையும் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் மக்களைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட வஜ்ரா வாகனங்களையும் ஆங்காங்கே நிறுத்தி மக்களுக்குப் பீதியூட்ட முயன்றது. மக்களைக் கைது செய்து அடைப்பதற்காக மண்டபங்களை போலீஸ் ஏற்பாடு செய்திருந்ததோடு பல பேரை போலீஸ் வாகனத்தில் ஏற்றியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


படிக்க: அரிட்டாபட்டி டங்ஸ்டன் கனிம சுரங்கம்: மற்றொரு ஸ்டெர்லைட்!


மேலும், இப்போராட்டத்தைத் தடுப்பதற்காக தமிழ்நாடு போலீசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அலைகடலெனத் திரண்ட மக்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசு வெள்ளரிப்பட்டி அருகே மக்களை முன்னேற விடாமல் தடுத்தது. அதேபோல், மதுரைக்குச் செல்வதற்கு அனைவரையும் அனுமதிக்க முடியாது, குறிப்பிட சில நிர்வாகிகள் மட்டும் வாகனங்களில் ஏறி மதுரைக்கு செல்லலாம் என்றது. அதன்படி விவசாய சங்க நிர்வாகிகளைப் போலீசு வாகனத்தில் ஏற்றிப் பேச வைத்தது. ஆனால், “நாங்கள் பேரணியாகச் சென்றுதான் போராட்டத்தை நடத்துவோம்” ஒருமித்த குரலில் முழங்கிய மக்கள் தடைகளை உடைத்துக்கொண்டு முன்னேறினர். போலீசுடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளுகளையும் மீறி வெற்றிகரமாக தல்லாகுளம் தபால் நிலையத்தைச் சென்றடைந்தனர்.

மதியம் ராஜா முத்தையா மன்றம் அருகே பேரணியைப் போலீசு தடுத்தபோது, மக்கள் வாகனங்களிலிருந்து இறங்கி தமுக்கம் மைதானத்திற்குள் அமர்ந்து டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி ஒன்றிய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

தென்மண்டல ஐ.ஜி. உள்ளிட்ட போலீசு அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மக்கள் தற்காலிகமாகக் கலைந்து சென்றாலும், “திட்டத்தைக் கைவிடவில்லையெனில் ஜனவரி 26-ம் தேதி மேலூர் பகுதியில் உள்ள வீடுகளில் கருப்பு கொடியேற்றி எதிர்ப்பை பதிவு செய்வோம்” என்று ஒன்றிய, மாநில அரசுகளுக்கு மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் “நாங்கள் யாருடைய ஆதரவையும் எதிர்பார்க்கவில்லை. டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிய தி.மு.க. அரசு மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எங்களின் இயற்கை வளங்களைப் பாதுகாக்க நாங்கள் போராடுகிறோம்” என்று தெரிவித்திருப்பது உழைக்கும் மக்களுக்கே உரித்தான போராட்ட உணர்வை வெளிப்படுத்துகிறது.

மேலும், “ரத்தம் சிந்தி நாங்கள் உருவாக்கிய எங்கள் பூமியை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டோம். இழப்பீடு எங்களுக்கு வேண்டாம். எங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று உணர்வுப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.


படிக்க: மதுரை: டங்ஸ்டன் சுரங்கம் அமைத்து அரிட்டாபட்டியை அழிக்கத் தயாராகும் வேதாந்தா


புதுசுக்காம்பட்டி வழக்கறிஞர் ஜெகதீசன் கூறுகையில், “இத்திட்டத்தால் பெரியாறு பாசன விவசாயம் அழிக்கப்படும். திட்டத்துக்காக விளைநிலங்களில் சுமார் 3 கி.மீ. ஆழத்துக்கு டங்ஸ்டன் எடுக்கக் குழிகள் தோண்டப்படும் என்கின்றனர். இதன்மூலம் மேலூர் பகுதியில் வறட்சி ஏற்படும். நிலத்தடி நீர் பாதிக்கும். பெரிய பள்ளங்கள் தோண்டினால் பெரியாறு தண்ணீரைப் பிற பகுதிக்குக் கடத்த முடியாது. இப்பகுதியிலுள்ள 3 லட்சம் ஏக்கர் விவசாய பூமி பாழாகும். இதை மாநில அரசு உறுதியாக இருந்து தடுக்க வேண்டும்” என்றார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழலையும் மக்களின் உயிரையும் காவு வாங்கிக்கொண்டிருந்த கொலைகார வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையை, தங்களது இன்னுயிரை ஈந்து மூடிய தமிழ்நாடு மக்களின் போராட்டம், தற்போது அதே வேதாந்தாவின் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக மதுரையிலிருந்து தொடங்கியிருக்கிறது.

பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசோ, ஒருபுறம் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவது போல் நாடகமாடிவிட்டு மறுபுறம் பாசிசத் திட்டத்திற்கு எதிராகப் போராடும் மக்களை ஒடுக்கி, அரசு என்ற தனது கோரமுகத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது.

எனவே, மதுரை மாவட்ட மக்களுக்குத் தோளோடு தோள் நிற்பது தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் கடமையாகும். அத்தகைய ஆதரவின் மூலம் மட்டுமே போராடும் மக்கள் மீதான அரச பயங்கரவாதங்களைத் தடுத்து இப்போராட்டத்தை வெற்றியடையச் செய்ய முடியும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க