மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி கிராமத்தில் நவம்பர் 7 ஆம் தேதி வேதாந்தா துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் டங்ஸ்டன் கனிம வளம் எடுக்க ஏலம் விடப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் கனிமம் மற்றும் சுரங்கம் அமைச்சகம் சில தினங்களுக்கு முன் கனிம வளங்களை எடுப்பதற்காக நாடு தழுவிய அளவில் ஏலம் விட்டிருந்தது. அதில் ஸ்டெர்லைட் வேதாந்தா துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் டங்ஸ்டன் கனிமத்தை எடுக்கும் உரிமத்தைப் பெற்றுள்ளது. இதன்படி ஆந்திரா மாநிலம் பாலே பாளையம் மற்றும் தமிழ்நாட்டில் மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமம் எடுக்கப்பட உள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது.
அரிட்டாபட்டி கிராமத்தை 5000 ஏக்கர் (193.215 ஹெக்டேர்) பரப்பளவில் பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த கிராமத்தைச் சுற்றி ஏழு சிறிய குன்றுகள் உள்ளன. 250 வகையான பறவைகளுக்கு வாழ்விடமாக இப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்களும் உள்ளன. விவசாயத்தினை அடிப்படையான கொண்ட பகுதியாகவும் உள்ளது. மேற்கண்ட குளம், ஏரி மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதியானது 2200 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்து கல்வெட்டுகள், சமணர் படுகைகள், குடைவரை கோயில்கள் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும் உள்ள பகுதியாக உள்ளது.
டங்ஸ்டன் சுரங்கம் அமைந்தால் அரிட்டாபட்டி பகுதியில் உள்ள பல்லுயிர் வாழிடங்களும் புராதன பெருமைமிக்க சின்னங்களும் விவசாய நிலங்களும் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தால் அழிக்கப்படும். இப்பகுதி மக்களுக்கு மிகவும் ஆபத்தான, மக்கள் வாழ முடியாத பகுதியாக மாறும்.
இதனால் தெற்கு தெரு, முத்துவேல்பட்டி, மீனாட்சி புரம், நடுவளவு, தெற்கு வளவு, சண்முகநாதபுரம், அ.வல்லாளப்பட்டி, கூலானிப்பட்டி, கிடாரிப்பட்டி, எட்டி மங்கலம், செட்டியார் பட்டி, நாயக்கர் பட்டி போன்ற கிராமங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.
மேற்கண்ட கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கிராமங்கள் என்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலையும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலையும் சுரங்கம் அமைப்பதால் புவியியலில் ஏற்படும் அபாயமும் உள்ளதால் மக்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும். இதனால், கனிம வள கொள்ளைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஜனநாயக சக்திகள், அரசியல் கட்சிகள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் வருவது போல டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு ஹைட்ரோகார்பன் திட்டம், கன்னியாகுமரியில் அணுகனிமசுரங்கம், கல்குவாரிகள் என சுற்றுச்சூழலை அழிக்கும் வகையில் ஒன்றிய அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளது.
மதுரை மேலூர் அரிட்டாபட்டி கிராமத்தில் பல்லுயிர் பெருக்கமான பகுதியை அழிக்க வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் களமிறங்கியுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் 15 பேரைச் சுட்டுக் கொன்ற வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு மீண்டும் மக்கள் வாழ்வாதாரங்களை அழிப்பதற்கான அனுமதியை அளித்திருக்கிறது பாசிச மோடி அரசு.
மதுரை மேலூரில் பல்லுயிர் பெருக்கமான சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து போராட்டங்களையும் ஒருங்கிணைந்து மக்கள் எழுச்சியாகக் கட்டியமைப்போம்.
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.
9791653200
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram