மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கத் திட்டமிட்டுள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், இத்திட்டத்தை ரத்து செய்யும்படி தமிழ்நாடு அரசையும் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த நவம்பர் 7 ஆம் தேதி கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் 7வது ஏலம் நடத்தப்பட்டது. அதில் மேலூர் நாயக்கர்பட்டியில் உள்ள டங்ஸ்டன் (tungsten) கனிமத்தைத் தோண்டி எடுப்பதற்கு 5,000 ஏக்கர் பரப்பளவில் சுரங்கம் அமைப்பதற்கான அனுமதியை வேதாந்தாவின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் (Hindustan Zinc) நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.
வெளிப்படையாக அறிவித்தால் கனிம சுரங்கம் அமைக்கப்படுவதற்கு எதிராக மக்கள் போராடுவார்கள் என்பதால் ஒன்றிய அரசின் கீழ் உள்ள கனிம சுரங்கம் அமைச்சகம் மக்கள் அதிகம் வசிக்காத நாயக்கர்பட்டி கிராமத்தில் மட்டும் சுரங்கம் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆனால் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அ. வல்லாளப்பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்கலம் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் சுரங்கம் அமைக்கப்படும் பகுதிக்குள் வருகின்றன.
கனிம சுரங்கம் அமைக்கப்படவுள்ள அரிட்டாபட்டி கிராமம் இயற்கை வளங்கள் மிகுந்த பகுதி என்பதால் இங்கு வாழும் மக்கள் மலைக்குன்றுகளில் இருந்து வரும் மழைநீரை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சுரங்கம் அமைக்கப்பட்டால் நீர் ஆதாரமான 7 மலைக்குன்றுகள், 200 இயற்கை நீர்ச்சுனைகள் அழிந்து போகும்.
மேலும் 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் சுற்றுச்சூழல் தளமாக அறிவிக்கப்பட்ட இப்பகுதியில் உள்ள மலைகளில் வெள்ளை வல்லூறு, செம்மார்பு வல்லூறு, ராஜாளி கழுகு போன்ற 250க்கும் மேற்பட்ட உயிரினங்களும் அழுங்கு மலைப் பாம்பு, தேவாங்கு போன்ற அரியவகை உயிரினங்களும் அழிந்து போகும்.

அத்துடன் இப்பகுதியில் 2200 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுக்கள், குடைவரைக் கோவில்கள், சமணர்ப் படுக்கைகள் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் சான்றுகள் இத்திட்டத்தால் அழிக்கப்படுவதோடு அருகில் உள்ள பெருமாள் மலையில் உள்ள உயிரினங்களும் அழிக்கப்படும் என்பதால் சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
படிக்க: மதுரை: டங்ஸ்டன் சுரங்கம் அமைத்து அரிட்டாபட்டியை அழிக்கத் தயாராகும் வேதாந்தா
எதிர்ப்பின் ஒரு பகுதியாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் முகிலன் தலைமையில் 30 கிராம் மக்கள் இணைந்து நவம்பர் 18 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் சங்கீதாவிடம் அரிட்டாபட்டி கிராமத்தில் கனிம சுரங்கம் அமைப்பதற்குத் தடை விதிக்க கோரிய மனுவை அளித்தனர்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய முகிலன் “மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தபோது இத்திட்டம் பற்றி தனக்குத் தெரியாது என்று அவர் தெரிவிக்கிறார். சுரங்கம் அமைக்க உள்ள வேதாந்தா நிறுவனம் எங்கு சென்றாலும் அங்குள்ள இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு மக்கள் கொல்லப்படுவார்கள். 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியின் காற்று, தண்ணீரை மாசுபடுத்திய ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில் 13 பேரைச் சுட்டுக் கொன்ற மக்களின் ரத்தக்கரை படிந்த மோசமான வரலாறே இதற்குச் சான்று.
அத்தகைய நிறுவனத்தை இங்கு அனுமதித்தால், அங்கு நடந்தது போன்று இங்கும் மக்கள் போராடுவார்கள்; பின்னர் நிறுவனத்தால் சுட்டுக் கொல்லப்படுவார்கள். எனவே கனிம சுரங்கம் அமைப்பதற்குத் தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மதுரை இயற்கை பண்பாட்டு அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் தமிழரசன் கூறுகையில், “கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால் இங்குள்ள 2300 ஆண்டுகள் பழமையான மாங்குளம் கல்வெட்டுகள், 2000 ஆண்டுகள் பழமையான தமிழி கல்வெட்டுகள் என ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வரலாற்றுச் சின்னங்களாக இருக்கின்ற தொல்லியல் சின்னங்களின் நிலை; பல்லுயிர்களின் வாழ்விடமாக உள்ள பெருமாள் மலை மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டியின் நிலை என்னவாகும் என்பதை மத்திய மாநில அரசுகள் தெளிவாக விளக்க வேண்டும்.
ஏனென்றால் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் 5000 ஏக்கர் பரப்பளவு என்பதோடு இது நிற்கப்போவதில்லை. அதனால் டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை உடனடியாக ரத்து செய்து மதுரை மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு சமூக ஆர்வலர் செல்வராஜ் கூறுகையில், “எங்கள் பகுதியில் டங்ஸ்டன் கனிமம் இருக்கிறதா என்று 5 வருடங்களாக மறைமுகமாக ஆய்வு செய்த ஒன்றிய அரசு கனிம சுரங்கம் அமைப்பதற்கான அனுமதியை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டிய வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
இங்குள்ள உயிரினங்களைப் பாதுகாப்பதற்குத் தமிழ்நாடு அரசு பாரம்பரிய பல்லுயிர் தளமாக அறிவித்தது. ஆனால் கனிம சுரங்கம் அமைக்கப்படவுள்ள இடம் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வருவதால் மக்கள் திமுக அரசின் மீது சந்தேகம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசால் துரிதமாகச் செயல்படுத்தப்பட்ட 72 ரிங்ரோடு திட்டம், காவிரி வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம் போன்றவை சுரங்கம் அமைக்கும் நிறுவனத்திற்குச் சாதகமாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இப்பகுதியில் சுரங்கம் அமைப்பதற்கு வேதாந்தா நிறுவனம் தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள 15 துறைகளிடம் அனுமதி பெற வேண்டும். எனவே, தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை அனுமதிக்கக் கூடாது” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கிராம மக்கள் கூறுகையில், “ஏற்கெனவே கல்குவாரிகளால் மலைகள் வெட்டி எடுக்கப்படுவதற்கு மாபெரும் போராட்டம் நடத்தியதன் மூலமே தமிழ்நாடு அரசு குவாரி ஏலத்தை ரத்து செய்தது.
இந்நிலையில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால் மலைகள், விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதுடன் வாழ்வாதாரம் அழிந்து வேறு பகுதிகளுக்கு அகதிகளாகச் செல்லும் நிலை ஏற்படும் என்பதால் இந்நிறுவனத்திற்குச் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது” என்று தெரிவித்துள்ளனர்.
கனிம சுரங்கம் அமைப்பது தொடர்பாக எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்த திமுக அரசு தொடர்ச்சியான மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் எதிர்ப்பிற்குப் பிறகு சுரங்கம் அமைப்பது தொடர்பாக வேதாந்தா நிறுவனம் தமிழ்நாடு அரசிடம் இன்னும் விண்ணப்பிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
அப்படியென்றால் விண்ணப்பித்தால் அனுமதி வழங்கி விடுவார்களா என்கிற கேள்வி மக்கள் முன் எழுந்துள்ளது. கனிம சுரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும் என்பதே மதுரை மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram