கொலைகார வேதாந்தாவும் பாசிச பா.ஜ.க-வும் கூட்டு – அம்பலப்படுத்திய ஓ.சி.சி.ஆர்.பி அறிக்கை

வேதாந்தாவின் துணை நிறுவனத்துடன் தொடர்புடைய இரண்டு நிறுவனங்கள், 2016 மற்றும் 2020-ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் பா.ஜ.க-வுக்கு ரூ. 43.5 கோடி நிதி வழங்கியுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க தாக்கல் செய்துள்ள பங்களிப்பு அறிக்கை (contribution reports) கூறுகிறது.

ண்மையில் கட்டமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கைத் திட்டம் (OCCRP) என்ற உலகளாவிய புலனாய்வு பத்திரிகையாளர்கள் நிறுவனம் ஒன்று வேதாந்தா நிறுவனத்திற்கும் பா.ஜ.க-விற்கும் உள்ள தொடர்பு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை மோடி அரசுக்கும் கொலைகார கார்ப்பரேட் நிறுவனமான வேதாந்தாவிற்கும் இடையிலான கள்ளகூட்டை அம்பலப்படுத்தியுள்ளது.

ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2022-ஆம் ஆண்டின் முற்பகுதியில், பொது மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தாமலேயே சுரங்க நிறுவனங்கள் உற்பத்தியை 50% வரை அதிகரித்துக்கொள்ள அனுமதியளிக்கும் விதத்தில் விதிமுறைகளை தளர்த்தியது. 2021-ஆம் ஆண்டு கோவிட் -19 தொற்றால் நாடு முடங்கியிருந்தபோது, வேதாந்தா குழுமம் விதிமுறைகளைத் தளர்த்துவதற்கான லாபியிங் (lobbying) செய்ததாக ஓ.சி.சி.ஆர்.பி அறிக்கை கூறுகிறது. லாபியிங் (lobbying) என்பது கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசாங்க பிரதிநிதிகளை ஊழல்படுத்தி தாங்கள் விரும்பியதை சட்டரீதியாக நிறைவேற்றிக்கொள்வதாகும்.

ஒவ்வொரு திட்ட விரிவாக்கமும் தங்கள் வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களையும் எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து உள்ளூர் மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு கருத்துக் கேட்பு கூட்டங்கள் வழிவகை செய்யும் என்று கூறப்படுகிறது. பல நேரங்களில் கருத்துக் கேட்பு கூட்டங்கள் கண்துடைப்புக்காகவே நடத்தப்படுகிறது என்பதே எதார்த்தம். ஆனால், அதைக்கூட கார்ப்பரேட்கள் தடையாகக் கருதுகிறார்கள்.


படிக்க: சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டு 2022 : 180 நாடுகளில் இந்தியா கடைசி இடம் !


சுற்றுச்சூழல் அமைச்சகம் 2020-ஆம் ஆண்டின் முற்பகுதியில் நாட்டின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) சட்டத்தில் ஒரு திருத்தத்தை மேற்கொண்டது. அத்திருத்தம் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு திட்டங்களுக்கு கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்துவதிலிருந்து விலக்கு அளித்தது. இந்த திருத்தம், சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் உள்ள வல்லுநர்கள் ஆராய்ந்து அனுமதி அளிப்பதற்கு பதிலாக மாநில அதிகாரிகளே அனுமதியளிக்கும் நிலையை ஏற்படுத்தியது. அண்மையில், வனப்பாதுகாப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களும் ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் காட்டுப் பகுதிகளை நில அதிர்வு கணக்கெடுப்புக்காக (seismic surveys) ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்திக்கொள்வதற்கு அனுமதி வழங்கியது.

கட்டுப்பாடுகள் ஏன் நீக்கப்பட்டன?

சுரங்க நிறுவனமான வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் 2021-ஆம் ஆண்டு ஜனவரியில் அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு எழுதிய கடிதத்தில், ”சுரங்க நிறுவனங்கள் புதிய சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெறாமல் உற்பத்தியை 50% வரை அதிகரிக்க அனுமதிப்பதன் மூலம் இந்தியாவின் விரைவான பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் உத்வேகம் சேர்க்க முடியும்” என்று கூறியிருந்ததாக ஓ.சி.சி.ஆர்.பி அறிக்கை கூறுகிறது. புதிய சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெறாமல் சுரங்கத் தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரித்துக் கொள்வதற்குத் தடையாக உள்ள விதிமுறைகளை அகற்ற அந்நிறுவனங்கள் கொரோனா தொற்றுக்கு பல ஆண்டுகள் முன்பிருந்தே அரசை வலியுறுத்தி வருகின்றன.

சுரங்கத் தொழிலுக்கான சுற்றுச்சூழல் விதிமுறைகளை தளர்த்துவதில் மட்டும் வேதாந்தா நிறுவனம் வெற்றிகரமாக லாபியிங் செய்யவில்லை. அந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றான கெய்ர்ன் ஆயில் அண்ட் கேஸ் நிறுவனமும் (Cairn Oil & Gas), எண்ணெய் ஆய்வு திட்டங்களுக்கான கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்படுவதை ரத்து செய்ய லாபி செய்துள்ளது. சுரங்கத் தொழிலுக்குச் செய்ததைப் போலவே, பொதுமக்களைக் கலந்தாலோசிக்காமல் எண்ணெய் ஆய்வு திட்டங்களுக்குச் சாதகமாக சட்டம் திருத்தப்பட்டுள்ளது. அதற்குப் பின்னர், ராஜஸ்தானின் வடக்கு பாலைவனங்களில் கெய்ர்ன் நிறுவனத்தின் ஆறு எண்ணெய் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கூறுவது என்ன?

அரசு பொதுமக்களைக் கலந்தாலோசிக்காமல் இந்த மாற்றங்களைச் செய்துள்ளதாக சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கூறுகின்றனர். சுற்றுச்சூழல் அமைச்சகம், அலுவலகங்களுக்கு இடையிலான தகவல்தொடர்புக்கு அலுவலக குறிப்பை (office memo) பயன்படுத்தும். அப்படி ஒரு அலுவலக குறிப்பைத் தனது வலைத்தளத்தில் வெளியிட்டு சுரங்க விதிமுறைகளை மாற்றியுள்ளது. எந்தவொரு பொது விவாதமும் இல்லாமல் முக்கியமான விதிமுறைகளை இவ்வாறு மாற்றியமைப்பதானது சட்டத்திற்கு எதிரானது என்று சிந்தனைக் குழாம் ஒன்று தனது ஆய்வில் கூறியுள்ளது.

வேதாந்தாவின் லாபியிங் ஏன் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது?

வேதாந்தா பா.ஜ.க-வுக்கு ஒரு முக்கியமான நன்கொடையாளராக இருந்ததாக ஓ.சி.சி.ஆர்.பி அறிக்கை கூறுகிறது. வேதாந்தாவின் துணை நிறுவனத்துடன் தொடர்புடைய இரண்டு நிறுவனங்கள், 2016 மற்றும் 2020-ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் பா.ஜ.க-வுக்கு ரூ. 43.5 கோடி நிதி வழங்கியுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க தாக்கல் செய்துள்ள பங்களிப்பு அறிக்கை (contribution reports) கூறுகிறது. இதில், பத்ரம் ஜன்ஹித் ஷாலிகா (Bhadram Janhit Shalika) என்ற ஒரு அறக்கட்டளை மட்டும் 2016-2017 முதல் 2021-2022 வரையிலான நிதியாண்டுகளில் பா.ஜ.க-வின் நன்கொடையாளர்களில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. வேதாந்தா நிறுவனம் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் நன்கொடைகளை வழங்கியுள்ளதால் இந்தத் தொகை இன்னும் கூடுதலாகத்தான் இருக்கும்.

பருவநிலை மாற்றத்தில் இந்தியாவின் இலக்குகள் என்ன?

பசுமைக்குடில் வாயுக்களை வெளியேற்றும் உலகின் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. இதன் காரணமாக, சுரங்கள் போன்ற கனரக தொழில்களை ஒழுங்குபடுத்துவது என்பது காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் உலகளாவிய ’முயற்சி’க்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவ்வாறு ஒழுங்குபடுத்தி சேதத்தின் அளவைக் குறைப்பதற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) ஒரு முக்கிய கருவி என்று கூறப்படுகிறது. ஈ.ஐ.ஏ-வை மதிக்காமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்பட்டாலும் அது ஒரு தடையாக இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் பாசிச பா.ஜ.க-வுடன் கூட்டுவைத்துக் கொண்டு சுற்றுச்சூழல் சட்டங்களையும் விதிகளையும் நீர்த்துப்போகச் செய்கிறார்கள்.


கார்மேகக்குழலி

செய்தி ஆதாரம்: தி இந்து



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க