16.12.2024
திமுக அரசே!
எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்ட
கருத்துக் கேட்பு கூட்டத்தை இரத்து செய்!
பத்திரிகை செய்தி
டிசம்பர் 20ம் தேதி எர்ணாவூரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் (TANGEDCO) எண்ணூரில் அமைத்து வரும் 1×660MW நிலக்கரி அனல்மின் நிலையம் அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு இரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
20 சதுர கிலோமீட்டரில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழும் அப்பகுதியில் மூன்று துறைமுகங்கள், இரண்டு அனல் மின் நிலையங்கள் , பெட்ரோ கெமிக்கல், சிமெண்ட் ஆலை போன்ற 40க்கும் மேற்பட்ட அபாயகரமான தொழிற்சாலைகள் நிரம்பி கிடக்கின்றன.
மேற்கண்ட அபாயகரமான நிறுவனங்களால் அம்மக்கள் தோல் மற்றும் மூச்சு பிரச்சனைகளிலும் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்.
ஏற்கனவே அமைந்துள்ள இரண்டு அனல் மின் நிலையங்களால் காற்றின் மாசுக் குறியீடு மிகவும் மோசமடைந்துள்ளது. ஒரு 500MW அனல் மின் நிலையத்திலிருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 105டன் சல்பர் டை ஆக்சைடு, 24 டன் நைட்ரஜன் ஆக்சைடு , 2.5 டன் நுண்துகள்கள், மற்றும் 3500 டன் அளவிற்கு சாம்பல் உள்ளிட்ட காற்று மாசு வெளியேறுகிறது. இப்படி அந்தப் பகுதி முழுவதையுமே பாழாக்கியுள்ள அரசு மற்றும் தனியார் அபாயகர தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் விதிகளை மதிப்பது கிடையாது. கடந்த வருடம் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது எண்ணெய்க் கழிவுகள் ஊருக்குள்ளும் கடலிலும் சென்று மிகப்பெரிய சேதத்தை உருவாக்கியதை நாம் அறிவோம்.
அப்படிப்பட்ட இடத்தில் தான் எண்ணூரில் புதிய அனல்மின் நிலையத்தை அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள்.
2009ஆம் இந்த அனல்மின் நிலையம் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்ட 10 ஆண்டுகளில் மிக குறைவான அளவே கட்டுமானம் நிறைவேறியது. கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதற்கு விலக்களிக்க வேண்டும் என்று தொடர்ந்து ஒன்றிய அரசை வற்புறுத்தி மீண்டும் சுற்றுச்சூழல் அனுமதியை 2020ஆம் ஆண்டு பெற்றது. இதற்கு எதிராக தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் ஒருவர் மனு செய்ததன் விளைவாகவே தற்போது கருத்து கேட்புக்கூட்டம் நடத்தப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு முதல் கருத்து கேட்புக் கூட்டம் நடத்த திமுக அரசு பலமுறை முயற்சி செய்தது. இதற்கு எதிராக மக்கள் போராடியதால் ஒவ்வொரு முறையும் பின்வாங்கி சதித்தனமாக மீண்டும் மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் நடத்த முயல்கிறது.
அதன் ஒரு அங்கமாகவே வருகின்ற 20ஆம் தேதி எர்ணாவூரில் இக்கூட்டம் நடைபெறுகிறது. மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒருபோதும் அடைய முடியாது. கார்ப்பரேட் நலனுக்காக பாசிச பிஜேபியும் திமுகவும் மாறி மாறி இயற்கை வளங்களை அழிப்பதை தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது.
எர்ணாவூரில் நடைபெற உள்ள இந்த கருத்து கேட்பு கூட்டம் உடனடியாக தமிழ்நாடு அரசால் இரத்து செய்யப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram