எண்ணூர் அனல்மின் நிலையம்: கருத்துக் கேட்பு என்னும் பெயரில் கண்துடைப்பு நாடகம்!

”இதுநாள் வரை காற்றுமாசுவை தடுக்காதவர்கள், இனிமேல் தடுப்பார்கள் என இவர்கள் மீது நம்பிக்கை இல்லை. 2019-ல் தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை அடிப்படையில் இப்போது கருத்துக் கேட்பது தவறு. இத்திட்டத்தைச் செயல்படுத்தவே கூடாது”

ண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னை எர்ணாவூரில் டிசம்பர் 20 அன்று நடைபெற்றது. நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தின் பாதியில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தலைமை தாங்கி நடத்தியது, கூட்டம் முடிவதற்குள் மாவட்ட ஆட்சியர் சென்றது என கூட்டத்திற்கான அடிப்படையே மீறப்பட்டு கண்துடைப்பு கூட்டமாகவே இக்கூட்டம் நடந்துள்ளது.

வடசென்னையில் எண்ணூர், எர்ணாவூர் பகுதியில் ஏற்கெனவே அமைந்துள்ள இரண்டு அனல்மின் நிலையங்களால் காற்றின் மாசுக் குறியீடு மிகவும் மோசமடைந்துள்ளது. ஒரு 500MW அனல்மின் நிலையத்திலிருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 105 டன் சல்பர் டை ஆக்சைடு, 24 டன் நைட்ரஜன் ஆக்சைடு, 2.5 டன் நுண்துகள்கள், மற்றும் 3500 டன் அளவிற்கு சாம்பல் உள்ளிட்ட காற்று மாசு வெளியேறுகிறது.

இதனால் அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்களுக்கு மூச்சு பிரச்சினை மற்றும் தோல் நோய்களும் ஏற்படுகின்ற நிலையில் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் அப்பகுதியில் 40 ஆண்டுகளாக இயங்கிவந்த 450 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையத்தை 5,421 கோடி செலவில் 660 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையமாக விரிவாக்கம் செய்வதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை அறிவித்திருந்தது.

அதன்படி கடந்த 20 ஆம் தேதியன்று எர்ணாவூரில் மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமையில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர், சுற்றுச்சூழல் பொறியாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மின்வாரிய பொறியாளர்கள் அதிநவீன உற்பத்தித் திறன் கொண்ட அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டம் ரூபாய் 5,421 கோடி செலவில் மேற்கொள்ளப்படுவது குறித்து பின்வருமாறு மக்களுக்கு விளக்கினர்.

”புதிதாக அமைய உள்ள அனல் மின் நிலையத்தில் நிலக்கரி எரியும் கொதிகலன், ஜெனரேட்டர், புகைபோக்கி உள்ளிட்டவை நிறுவப்பட உள்ளன. மேலும், கடலோரம் அனல் மின் நிலையத்தை அமைப்பதன் மூலம் உற்பத்தி செலவு குறையும், கடலிலிருந்து நேரடியாக நிலக்கரி தொழிற்சாலைக்குக் கொண்டு செல்லப்படுவதால் காற்று மாசுபாடு தடுக்கப்படும். குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முடியும். இத்திட்டத்தால் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும்” என்று மக்களிடம் நயவஞ்சகமாகப் பேசி இத்திட்டத்திற்கு ஆதரவான கருத்துகளைப் பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.


படிக்க: திமுக அரசே! எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தை இரத்து செய்!


ஆனால் கருத்துக் கேட்புக் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த மக்கள் “இவர்கள் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறுவது ஏமாற்று வேலை. கடை நிலை வேலை வாய்ப்பு மட்டுமே உள்ளூர்க்காரர்களுக்கு வழங்கப்படுகிறது. சாம்பல் கழிவை ஆற்றில் கொட்டாமல் இவர்களால் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாது. இதுநாள் வரை காற்றுமாசுவை தடுக்காதவர்கள், இனிமேல் தடுப்பார்கள் என இவர்கள் மீது நம்பிக்கை இல்லை. 2019-ல் தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை அடிப்படையில் இப்போது கருத்துக் கேட்பது தவறு. இத்திட்டத்தைச் செயல்படுத்தவே கூடாது” என்று தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இத்திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பூவுலகின் நண்பர்கள் “பொதுமக்களைக் கட்சியினர் மிரட்டியது, பாதி கூட்டத்திற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.வே தலைமை தாங்கி நடத்தியது, உரிய பாதுகாப்பு வழங்காத காவல்துறை, கூட்டத்தை சட்டப்படி முடிக்காமல் மாவட்ட ஆட்சியர் வெளியேறியது என எண்ணூர் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அப்பட்டமான விதிமீறலாக நடந்துள்ளது. மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிய சென்ன மாவட்ட ஆட்சியர், மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோருகிறோம். நேற்று நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தைச் செல்லாது என  அறிவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

கருத்துக் கேட்புக் கூட்டத்திற்குப் பின்பு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் “வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றைச் சொல்லியே திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்கின்றனர். இத்திட்டத்தால் நீர் மாசும், காற்று மாசும் ஏற்படும். அதன் பிறகு, இத்திட்டத்தை ஆதரிப்பவர்கள் வெளிச்சத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறார்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்படிப் பல கட்சித் தலைவர்களும் அமைப்புகளும் அனல்மின் நிலையத் திட்டத்திற்கு எதிராகவும் கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு எதிராகவும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ள நிலையில் சி.பி.எம் போன்ற சில கட்சிகள் அனல்மின் நிலைய விரிவாக்கத்தின் போது மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைக்குட்பட்டு உரிய பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து உற்பத்தியைத் தொடங்குமாறு வலியுறுத்தியுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

எனவே தி.மு.க அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக உறுதியான மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். அதன் மூலம்தான் அத்திட்டங்களைத் தடுக்க முடியும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க