ந்தமான் சிறையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு ஆங்கிலேயர்களில் கால்களில் மண்டியிட்டு, கடிதங்களாக எழுதித் தள்ளிய தொடைநடுங்கி சாவர்க்கரை, ‘வீர சாவர்க்கர்’ ஆக்கி இந்துத்துவ கும்பல் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. பாஜக தான் ஆட்சிக்கு வரும் மாநிலங்களில் எல்லாம் சாவர்க்கர் உள்ளிட்ட இந்துத்துவாக்களின் வரலாறுகளை பாடநூல்களில் திணிப்பதை திட்டமிட்டுச் செய்து வருகிறது.

ஆட்சிகள் மாறினாலும் இந்தத் திணிப்புகள் பெரும்பாலும் மாற்றப்படாது. ஆனால், இராஜஸ்தானில் அண்மையில் ஆட்சியமைத்த காங்கிரஸ் தலைமையிலான அரசு, முந்தைய பாஜக அரசில் செய்யப்பட்ட திணிப்புகளை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கியுள்ளது. மாட்டரசியலில் பாஜக -வின் கருத்தோடு ஒத்துப்போகும் காங்கிரஸ், துணிச்சலாக இந்த முடிவை எடுத்துள்ளது.

ஆறு மாதத்துக்கு முன் அசோக் கெய்லாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்தவுடன் பள்ளிப் பாடப் புத்தகங்களில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளது. வரலாற்றுத் தகவல்கள், தலைவர்களைப் பற்றிய தகவல்கள் என முந்தைய பாஜக அரசு திணித்த பலவற்றை பாடநூல்களிலிருந்து நீக்கியுள்ளது காங்கிரஸ் அரசு.

இராஜஸ்தான் மேனிலை கல்வி வாரியத்துக்காக, இராஜஸ்தான் மாநில பாடநூல் கழகம் வெளியிட்ட புதிய நூல்கள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. அரசியல் நோக்கத்தோடு வரலாற்றை சிதைக்கும் பகுதிகள் பாடநூல்களில் இடம்பெற்றிருந்த நிலையில், அதை சீரமைக்க பிப்ரவரி மாதம் பாடநூல் திறனாய்வு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டி கொடுத்த பரிந்துரைகளின்படி மாற்றப்பட்ட புதிய நூல்கள் தற்போது, மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

12-ம் வகுப்பு வரலாறு பாடநூலில் சாவர்க்கர்

பழைய நூலில் : விடுதலை இயக்கம் என்ற பகுதியின் கீழ் இருந்த சாவர்க்கர் பற்றிய குறிப்பில் அந்தப் பெயருக்கு முன்னாள் ‘வீர’ என்ற அடைமொழி தரப்பட்டிருந்தது. இந்திய சுதந்திர இயக்க காலக்கட்டத்தில் சாவர்க்கரின் பங்கு குறித்து அந்தப் பகுதியில் விவரிக்கப்பட்டிருந்தது.

புதிய நூலில் : சாவர்க்கர், ‘விநாயக் தாமோதர் சாவர்க்கர்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறார். பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் அந்தமானின் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்ட சாவர்க்கர் அங்கே எத்தகைய சித்ரவதைகளை அனுபவித்தார் என அந்தப் பகுதி விவரிக்கிறது.

மேலும், நவம்பர் 11, 1911-ம் ஆண்டு எழுதப்பட்ட இரண்டாவது மன்னிப்புக் கடிதத்தில் தன்னை போர்ச்சுகலின் மகன் என அவர் அழைத்துக்கொண்டதும் அதில் எழுதப்பட்டுள்ளது. முக்கியமாக, பிரிட்டிஷாருக்கு சாவர்க்கர் நான்கு மன்னிப்பு கடிதங்கள் எழுதியதையும் அந்தப் பகுதி கூறுகிறது.

“தன்னுடைய விடுதலைக்குப் பின், சாவர்க்கர் இந்தியாவை ‘இந்து நாடாக’ மாற்ற பணியாற்றியதாகவும் இந்துக்கள் ஆயுதம் வைத்துக்கொள்ளவும் அழைப்பு விடுத்தார். 1942-ல் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தையும் 1946-ம் ஆண்டில் பாகிஸ்தான் உருவாக்கத்தையும் சாவர்க்கர் எதிர்த்தார். ஜனவரி 30, 1948-ம் ஆண்டு காந்தி படுகொலைக்கு பின், அவருடைய கொலையில் சதி திட்டம் தீட்டியது, கோட்சேவுக்கு உதவியது உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைதாகி, பின்பு விடுவிக்கப்பட்டார்” போன்ற தகவல்கள் பாடநூலில் சேர்க்கப்பட்டுள்ளன.

படிக்க:
♦ இந்திய சாதி ஒடுக்குமுறை வரலாற்றை பாடநூல்களிலிருந்து நீக்கும் மோடி அரசு !
♦ கஜினி முகமது : கல்வெட்டு உண்மைகள் ! பாடநூல் புரட்டுகள் !

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ஹால்திகாட்டி போர்

பழைய நூலில் : மொகலாய மன்னர் அக்பரால், மகாரானா பிரதாப்பை பிடிக்கவோ, கொல்லவோ, முழு ராஜாங்கத்தையும் கைப்பற்றவோ முடியவில்லை என்றும்; ஹால்திகாட்டி போர் மகாரானா பிரதாப்புக்கு சாதகமாக முடிந்ததாகவும்; மொகலாய படை அவர்களைக் கண்டு பயந்து நடுங்கியதாகவும் எழுதப்பட்டிருந்தது.

புதிய நூலில் : ஹால்திகாட்டி போர், மகாரானா பிரதாப்பின் குதிரை இறந்துவிட்ட நிலையில், பிரதாப் போர்க்களத்தை விட்டுச் செல்வதில் முடிகிறது. அக்பருக்கும் பிரதாப்புக்கும் நடந்த போர், மதரீதியிலான போர் அல்ல என்றும், அது இரண்டு அரசியல் சக்திகளுக்கிடையேயான போர் என்றும் கூறுகிறது. போர் முடிவு குறித்து தெரிவிக்கப்படாத நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் அக்பருக்கு எதிரான பிரதாப்பின் கொரில்லாப் போரை மட்டும் குறிப்பிட்டிருக்கிறது.

12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் பணமதிப்பழிப்பு

பழைய நூலில் : பயங்கரவாதம், அரசியலை குற்றமயமாக்குதல் மற்றும் ஊழல், இந்திய வெளியுறவுக் கொள்ளையின் பண்புகள் குறித்த பகுதியில் பணமதிப்பிழப்பு என்பது ‘கறுப்புப் பண பிரச்சாரம்’ என குறிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பகுதியில் ஊழல் மற்றும் வெளியுறவு கொள்கையில் பணமதிப்பிழப்பின் தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டிருந்தது.

புதிய நூலில் : பணமதிப்பிழப்பு குறித்த அனைத்து தகவல்களும் நீக்கப்பட்டுள்ளன.

 

12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் அமைப்புகளும் அவற்றின் அரசியலும்

பழைய நூலில் : ‘சாதியமும் மதவாதமும்’ என்ற தலைப்பில் முசுலீம் அமைப்புகளான ஜமாத் இ இசுலாம், சிமி போன்றவை மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தன.

புதிய நூலில் : முந்தைய முசுலீம் அமைப்புகளின் பெயர்களோடு இந்து மகாசபையின் பெயரும் சேர்க்கப்பட்டு, இந்த அமைப்புகள் சுயலாபத்துக்காக பிரித்தாளும் சித்தாந்தங்களை பிரச்சாரங்களைச் செய்வதாக எழுதப்பட்டுள்ளது.

12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் ஜிகாத்

பழைய நூலில் : அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, நேபாளத்துடன் இந்தியாவின் உறவு குறித்த பகுதியில் ஜிகாத் அல்லது இந்தியாவுக்கு எதிரான கொள்கைகள் இந்திய-பாக் உறவை பாதிப்பதாக எழுதப்பட்டிருந்தது.

புதிய நூலில் : ஜிகாத் என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.

படிக்க:
♦ வரலாற்றைக் காவிமயமாக்கும் பாஜக
♦ காஷ்மீர் : பொது பாதுகாப்புச் சட்டத்தின் அத்துமீறல்கள் | அம்னெஸ்டி அறிக்கைக்கு தடை !

12-ம் வகுப்பு வரலாறு பாடத்தில் அலாவுதின் கில்ஜியின் சித்தூர் தாக்குதல்

பழைய நூலில் : முசுலீம் தாக்குதல்கள் – குறிக்கோளும் தாக்கமும் என்ற தலைப்பில் கில்ஜி சித்தூரை தாக்கியது குறித்து எழுதப்பட்டிருந்தது. அதில், சில வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி, சித்தூரின் மேவாரான ரத்தன் சிங்கின் அழகான மனைவி பத்மினிக்காகவே கில்ஜி தாக்குதல் நடத்தியிருக்கிறார். மாலிக் முகமது ஜயாசியின் இலக்கியமான ‘பத்மாவத்’ கில்ஜியின் தாக்குதலுக்கு பத்மினியே காரணம் எனவும் எழுதப்பட்டடிருந்தது.

புதிய நூலில் : பத்மாவத் சொல்லும் காரணத்தை சொல்லியுள்ளது. ஆனால், கே.எஸ். லால், கனூர் கோ மற்றும் ஹபீப் ஆகியோர் உண்மைகளையும் நடந்தவற்றையும் பார்க்கும்போது பத்மாவதி காரணமில்லை என்கிறார்கள் எனவும் ஜயாசி எழுதிய பத்வாத்-இல் சொல்வதுபோல கில்ஜி, சித்தூரை எட்டு ஆண்டுகள் முற்றுகையிட்டிருந்தார் என சொல்வதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை என்றும் திருத்தி எழுதப்பட்டுள்ளது.

பாஜக அரசு செய்த ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த திணிப்பை, காங்கிரஸ் அரசு நீக்கியிருப்பதைக் கண்டு அம்மாநில பாஜகவினர் துள்ளி குதிக்கின்றனர்.  ஆனால், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத் திணிப்பை முற்றிலுமாக நீக்குவோம் என்கிறது அம்மாநில அரசு. இதைப் பாடநூல்களோடு நிறுத்திவிடாமல் மற்ற அனைத்து வகையிலும் செயல்படுத்தினால் மட்டுமே முழுமையான பலன் கிடைக்கும். அதற்குரிய துணிவு காங்கிரசிடம் உள்ளதா?


கலைமதி
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

2 மறுமொழிகள்

  1. அந்த ஆட்சி வந்தவுடன் அப்படி — இந்த ஆட்சி வந்தவுடன் இப்படி …! இந்த கேடுகெட்ட ஓட்டரசியலில் அவவனவனுக்கு ஏற்றவாறு வரலாறுகளையும் — பெயர்களையும் — தம்படிக்கு உதவாத தலைவர்களை பற்றி உயர்த்தியும் — தாழ்த்தியும் — நிறங்களை பூசியும் ..படிக்கின்ற இளம் சிறார்களுக்கு தவறான செய்திகளை கூறுகிறோம் என்கின்ற சூடு — சொரணை ஏதும் இன்றி பாடப் புத்தங்கங்களில் தவறானதை பதிப்பிக்கின்றவர்களை காயடிக்க வேண்டுமா .. வேண்டாமா …? ஓட்டுக்களை பெற ஏகப்பட்ட பொய்களை கூறுவதோடு நிறுத்திக்கொண்டு — படிப்பில் உங்களின் பிரிவினை — மதம் — ஜாதிகளை புகுத்தாமல் இருக்கும் காலம் எப்போது வருமோ ….?

  2. இந்த UNESCO பெரியாருக்கு தென் கிழக்கு ஆசியாவின் சாகிரெடிஸ் என்று விருது கொடுத்ததாக தமிழ் நாட்டில் உங்களை போன்ற ஆட்கள் பெரும் பொய்யை தமிழக பாடப் புத்தகங்களில் வைத்து இருக்கிறீர்களே அதை பற்றி கொஞ்சம் பேசுங்களேன். பொய் என்று தெரிந்தும் ஒரே பொய்யை தொடர்ச்சியாக கோயபல்ஸ் போல் சொல்லும் நீங்கள் பாசிஸ்டுகளா இல்லையே மற்றவர்களோ ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க