Wednesday, June 7, 2023
முகப்புமறுகாலனியாக்கம்கல்விவரலாற்றைக் காவிமயமாக்கும் பாஜக

வரலாற்றைக் காவிமயமாக்கும் பாஜக

-

இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இராஜஸ்தான் பல்கலைக்கழகம்

ஹாராணா பிரதாப் தெரியுமா உங்களுக்கு? ராஜ்புத் இனத்தைச் சேர்ந்த அரசர். தற்போதைய இராஜஸ்தான் மாநிலப் பகுதியை ஆண்டு வந்தவர். இவரது சம காலத்தில் முகலாயப் பேரரசராக அக்பர் ஆண்டு வந்தார். மன்னர்களுக்கிடையிலான நாடு பிடி சண்டையில் முகலாயப் பேரரசு, ராஜ்புத்திரர்கள் மீது போர் தொடுத்தது.

1576-ம் ஆண்டு ஜுன் மாதத்தில் ஹல்திகாட்டி என்ற பகுதியில் நடைபெற்ற இந்தப் போரில் அக்பர் வெற்றி பெற்றார். ராணா பிரதாப் தப்பிச் சென்று காடுகளுக்குள் தலைமறைவானார். அதன் பின்னர் 1585-ம் ஆண்டு அக்பர் வடகிழக்கு மற்றும் பஞ்சாப் பகுதிகளைக் கவனிக்க லாகூருக்குச் சென்றதும் இராஜஸ்தான் பகுதிக்கு திரும்பி வந்து தனது இழந்த இராஜ்ஜியத்தை மீட்டுக் கொண்டார் ராணா பிரதாப்.

வரலாறு இப்படியிருக்க, வசுந்தரா ராஜேயின் தற்கால இராஜஸ்தான் அரசு, வரலாற்றைத் திரித்து தனது வரலாற்றுத் துறை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூன் மாதம் கல்வி வாரியக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை,  மஹாராணா பிரதாப்பின் மற்றும் ஹல்திகாட்டி போர் குறித்த சமீபத்திய “ஆராய்ச்சிகளையும்!!!” கணக்கில் எடுத்துக் கொண்டு பாடத்திட்டம் வகுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அது என்ன சமீபத்திய ஆராய்ச்சி என்று வியக்கின்றீர்களா? சந்திர சேகர் சர்மா என்பவர் எழுதிய “ராஸ்ட்ர ரத்ன மஹாராணா பிரதாப்” என்ற நூலைத் தான் ‘ஆராய்ச்சி’ என இராஜஸ்தான் மாநில பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். அதில் ஹல்டிகாட்டி போரில் அக்பர் தோற்கடிக்கப்பட்டார் என்றும், மஹாராணா வெற்றி பெற்றார் என்றும் வரலாற்றைத் திருத்தி எழுதியிருக்கின்றனர். அப்படி மஹாராணா பிரதாப், வெற்றி பெற்றதாக வரலாற்றில் எந்த ஆதாரமும் இல்லை.

சந்திர சேகர் சர்மா என்பவர் எழுதிய “ராஸ்ட்ர ரத்ன மஹாராணா பிரதாப்” என்ற நூலின் புத்தக மேலுறை

முதுகலை வரலாறு படிக்கும் மாணவர்களுக்கு இரண்டாம் அரையாண்டில் வரும் “பழங்கால இராஜஸ்தான்” எனும் கட்டாயப் பாடத்தில் ஹல்திகாட்டி போரின் விளைவுகளின் மீதான விவாதம் என்ற ஒரு பகுதி பாடத்திட்டத்தில் இருக்கிறது. இப்பாடப் பகுதியில், படிப்பதற்காக சிபாரிசு செய்யப்பட்டிருக்கும் புத்தகங்களில் சர்மாவின் புத்தகமும் ஒன்று.

இவ்வாறு, கல்வியில் கட்டுக்கதைகளை வரலாறாகத் திரிக்கும் வேலையைப் பின்னிருந்து இயக்கியது, பாஜகவைச் சேர்ந்த மோஹன்லால் குப்தா என்ற சட்டமன்ற உறுப்பினர் தான். இராஜஸ்தான் பல்கலையைப் பொறுத்தவரையில் பாடத்திட்டம் மாற்றப்படுவதெனில் அது இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய பாடத்திட்டக் குழுவின் முடிவின் படியே சாத்தியமானதாகும். மஹாராணா பிரதாப்பின் திரிக்கப்பட்ட வாழ்க்கை வரலாற்றை வரலாற்றுத் துறையில் சேர்க்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதமே பாடத்திட்ட கமிட்டியின் கூட்டத்தில் முன் வைத்திருக்கிறார் மோஹன்லால் குப்தா. அதனைத் தொடர்ந்தே, இந்த வரலாற்றுத் திரிப்பு நடைபெற்றிருக்கிறது.

“தி வயர்.இன் (thewire.in )” இணையதளம் இது குறித்து ஜே.என்.யூ.வில் பணியாற்றி ஓய்வுபெற்ற வரலாற்றாசிரியர் ஹர்பன்ஸ் முக்கியாவிடம் கேட்டபோது, “இது போன்று வலிந்து “தயாரிக்கப்படும்” வரலாறுகளுக்குப் பதிலளித்தே சோர்ந்து விடுவோம் என்று கூறியிருக்கிறார். மேலும் பிரித்திவிராஜ் சவுகான் முஹம்மது கோரியை ‘டரயின்’ போரில் வீழ்த்திவிட்டார் (உண்மையில் கோரியிடம் பிரித்திவிராஜ் இராஜ்ஜியத்தை இழந்தார்) என்றும், ஆனால் ஒரு உண்மையான, தாராளமனம் கொண்ட ஹிந்துவாக இராஜ்ஜியத்தை கோரிக்கு விட்டுக் கொடுத்துவிட்டு தாமாகவே சன்யாசம் போய்விட்டார் என்றும் புதிய வரலாற்றை தயாரித்தாலும் தயாரிப்பார்கள். படிக்காத அரசியல்வாதிகள் எந்த அளவிற்குக் கல்வியாளர்களைச் சர்வாதிகாரம் செய்ய முடியும் என்பதையும், கல்வியாளர்கள் எந்த அளவிற்கு அத்தகைய சர்வாதிகாரிகளோடு ஒத்துப் போகின்றனர் என்பதையும் இது காட்டுகிறது” என்று கூறியிருக்கிறார்.

இதற்கு முன்னரே இராஜஸ்தானில், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் பாடங்களில் பாஜக அரசின் ஹிந்துத்துவப் பெருமைகளையும், மோடி அரசின் பெருமையையும் பேசும் பாடங்கள் சேர்க்கப்பட்டன. மாணவர்களுக்கு வரலாற்றைத் திரித்து அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தியாவை ஒரு ஹிந்து தேசமாகவும், முஸ்லீம்களை அதன் எதிரிகளாகவும் உருவகப்படுத்தி மத ஒற்றுமையைச் சீர்குலைப்பது தான் ஆர்.எஸ்.எஸ். பாஜக கும்பலின் முதல் நோக்கம். அதே போல சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வெள்ளைக்காரர்களுக்குச் சேவகம் புரிந்த சாவர்க்கர், வாஜ்பாய் போன்றோரை தேசபக்தர்களாகக் காட்டவும் வரலாற்றைத் திரித்து வருகிறது இக்கும்பல்.

அக்காலகட்டத்தில் மன்னர்களுக்கிடையே சர்வசாதாரணமாக நடக்கும் போர்களில், இந்து மன்னர்களுக்கும், இசுலாமிய மன்னர்களுக்கும் இடையே நடக்கும் போர்களை மட்டும் பெரிதாகப் பேசி, இசுலாமியர்களை இம்மண்ணின் எதிரிகளாகவும், வந்தேறிகளாகவும் உருவகப்படுத்தி ஒரு பிம்பத்தை பெரும்பான்மை மக்களின் மனத்தில் ஏற்கனவே விதைத்திருக்கிறது ஹிந்துத்துவக் கும்பல். வரலாற்றில் எந்தக் காலகட்டத்திலும் மதத்தை அடிப்படையாக வைத்தோ, இந்தியா என்ற தேசத்தை அடிப்படியாக வைத்தோ எந்த “இந்து” மன்னனும் போரிட்டதில்லை. தனது இராஜ்ஜியத்தை விரிவாக்கிக் கொள்ள மட்டுமே போர்கள் நடத்தப்பட்டன.

அனைத்து ‘இந்து’ மன்னர்களும், மக்களிடம் இருந்து கொள்ளையடித்துச் சேர்த்து வைத்த சொத்துக்களை கோவில்களில் தான் பதுக்கி வைத்திருப்பர். ஆகவே வேறு எந்த ஒரு மன்னரும், அது இந்து மன்னராக இருந்தாலும் சரி, முசுலீம் மன்னராக இருந்தாலும் சரி, ஒரு நாட்டின் மீது வெற்றி கொண்டவுடன் கோவிலுக்குள் சென்று அந்த நாட்டின் செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்துச் செல்வது வழக்கமானது. ஆனால் அத்தகைய நிகழ்வுகளில் ஹிந்து மன்னர்கள் கோவிலுக்குள் புகுந்து கபளீகரம் செய்து கொள்ளையடித்ததைப் பற்றி வாய் திறக்காமல், முசுலீம் மன்னர்கள் கோவிலுக்குள் புகுந்து கபளீகரம் செய்து கொள்ளையடித்ததை மட்டும் பெரிதாகப் பேசி முசுலீம்கள் தான் இந்த நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்தவர்கள் என்ற வகையில் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பல் ஏற்கனவே ஒரு கருத்தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.

தகவல் தொழில்நுட்பமும், பெயரளவிற்கு ஜனநாயகமும் இருக்கும் இக்கால கட்டத்திலேயே இப்படி வரலாற்றைத் திரித்திருக்கும் பார்ப்பனக் கும்பல், கடந்த 2000 ஆண்டுகளாக என்னென்ன வகைகளிலெல்லாம் வரலாற்றைத் திரித்து, அழித்திருக்கும்?

செய்தி ஆதாரம்:

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க